Saturday, July 15, 2023

அம்மா

அம்மா என்றொரு சொல்


அம்மா என்ற சொல்லின் அர்த்தங்களைத் தேடித் தேடி அகராதிகளே அர்த்தமற்றவையாகப் போய்விட்டன.

காலங்கடந்து என் அன்னையை இப்போ எண்ணிப் பார்க்கின்றேன் . அவள் அன்புக் கடலா? ஆண்டவனா? கனிவின் பிறப்பிடமா , கவிதையின் கருவறையா? கருணையின் மறுபிறப்பா ? அர்த்தங்கள் புரியவில்லை ஆனால் அவள் இன்று என்னுடன் இல்லை.

இருக்கும் பொருளன்றை இழந்துவிட்டுத் தேடிப்பார்ப்போம் , கிடைக்காது , ஏமாற்றத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறோம். சிறிது நேரத்திலேயே மனதைத் தேற்றிக் கொள்கின்றோம் , போனால் போகட்டும் இன்னொன்றை வாங்கி விட்டால் போகிறது . ஜயகோ , அம்மாவை இழந்து விட்டால் எந்த உலகின் எந்த மூலையில் போய் அதற்கு ஒப்பானதாய் ஒரு பெரும் பொருளை வாங்குவோம்?

அன்ரைய காலத்திலே வாலிபத்தின் வேகத்தில் அவளின் பெருமை புரியாமல் போன காலங்கள் உண்டு , அந்தக் காலங்கள் என் வாழ்க்கை ஏட்டில் இருந்து நீங்கிவிட இறைவனுக்கு ஓர் ஆணையிடும் சக்தி மட்டும் எனக்கிருந்தால் , கழித்ததைக் கூட்டலாக்கி என் அன்னையுடன் களித்திருப்பேன்.

எத்தனை தடவைகள் நெஞ்சில் எட்டி உதைத்தலும் சிரித்தபடி தாங்கிடும் அந்த அன்னையர்க்கென ஒரு இதயம் அன்பெனும் நீர் பாய்ச்சி அந்த ஆண்டவன் வளர்த்தெடுப்பான் போலும். பொறுமைக்கு வரைவிலக்கணத்தை இந்தப் பூமாதேவி எமது அன்னையரிடம் இருந்துதான் படித்திருப்பாள் போலும்.

தனக்கென ஒன்றும் வேண்டாது , தன்னைத்தானே தேய்க்கும் அந்த சந்தனத்தின் வாசத்தை மட்டும் நுகரும் எமக்கு அதன் வலி புரிவதில்லை.தன் பிள்ளைகளின் மீது ஏதும் கொடுஞ்சொற்கள் விழுந்திடக் கூடதென்பதற்காக தன்னையே ஒரு கேடயமாக்குவாள்.

இல்லை எனுஞ் சொல் இல்லையாம் கர்ண மகராஜா வீட்டிலே , போங்கப்பா! கர்ணனுக்கே கொடையின் கோட்பாடு கற்றுக் கொடுத்தவரே அன்னையர்தாமென்பேன்.

ஒரு கோவிலிலே "எனக்கு நல்ல வாழ்க்கை கொடு , எனது குடும்பத்தை வாழவை "எனும் கோஷங்கள் ப்ர்ரர்த்தனைகளாய் , இறைவனின் காதுகளில் ஒலித்திருக்க , அவன் கவனம் மட்டும் ஒரே ஒரு கோஷத்தில் இருந்ததாம் , அந்தக் கூட்டத்தில் ஒரு மூலையில் ஒரு அன்னை நிற்கிறாள் என்றான் இறைவன். "என் பயனுக்கு வரும் தீயவைகளாஇயெல்லாம் எனை நோக்கித் திசைமாற்ரி விட்டு , எனக்கு பயக்கும் நன்மையனைத்தையும் அவனுக்கே அளித்துவிடு" என்றோர் பிரார்த்தனை என் காதுகளில் ஒலிக்கிறதே அதனால்தான் என்றானாம்.

அன்னையரை மட்டும் போற்றாதீர் , உமக்கென ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொடுத்து தானும் ஓர் அன்னையான உமது சரிபாதியான மங்கைக்கோர் மரியாதை இந்த அன்னையர் தினத்தினில் செய்யத் தவறிடாதீர்.

பெண்களுக்கோர் தனியிடம் ஏன் என சளைக்காமல் கேள்விகள் கேட்கும் சிலர் உண்டு . புரிந்து கொள்வீர் பெண்மையை மதித்திடும் காரணம் யாதெனில் அன்னையராகும் ஓர் பெருங்குணம் அவர்க்குண்டு. புதுமைப்பெண்ணெனெ அந்த எட்டயப்புரத்துப் பிச்சைக்கவி தன் செல்வத்தமிழால் சீராட்டினானே , அது அன்னயராவோம் அதிலும் புதுமையான அன்னையராவோம் எனும் ஓர் புதுப் பொலிவு கொள்வதற்கே.

அன்னயர் தினத்தைக் கொண்டாடுவோம் !அதுமட்டுமன்றி அன்னையர் அனைவரையும் சமமாய் மதிக்கும் ஒரு கருத்தை முன் வைத்திடுவீர்!

அன்னையருடன் வாழும் புண்ணியம் செய்தோருக்கோர் நட்பான அறிவுரை , இழந்த பின்பு அறியும் பெருமையை இருக்கும்போதே நிலை நாட்டிடுவீர்.

இ - சங்கமம் இதழில் வெளியானது

0 Comments:

Post a Comment

<< Home