Saturday, July 15, 2023

எண்ணங்களாலே பாலம் அமைத்து .....

எண்ணங்களாலே பாலம் அமைத்து .....


உள்ளத்திலுள்ள உணர்ச்சிகள் திவளைகளாக உருண்டு கொண்டிருக்கின்றன. கடந்து போன காலங்கள் கருமையான நிழல்களாக உள்ளத்தின் அடியிலே உறைந்து போயிருக்கின்றன. ஆனால் இடையிடையே மறக்க முடியாத பசுமை நினவுகள் கற்களுக்கு நடுவில் கரையும் கற்கண்டு போல தித்திக்கின்றது.

வரப்போகின்ற எதிர்காலம் தெரியாத ஒரு அடர்ந்த புதருக்குள் மெதுவாக நுழைவது போல ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.

ஆனால் கைகள் மட்டும் எண்ணங்களைத் தாளிலே வரைந்து உள்ளங்களுக்கிடையில் ஒரு பாலத்தை அமைக்கும் முயற்சியில் இடையறாது ஈடுபடுகின்றது.

ஈழத்திலே பிறந்து லண்டனிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நான் ஈழத்தமிழனா ? இங்கிலாந்து ஈழத்தமிழனா ? இலலை இங்கிலாந்துத் தமிழனா ? என எண்னையே நான் அடையாளம் காண முற்படுகிறேன் என்பதைத் தவிர , நான் யார் என்று எனக்கு நான் வாழும் சமுதாயம் முத்திரை குத்த முற்படும் நிகழ்வைப்பார்க்கும் போது, என்னை எந்தத்தேசத்தவன் என்று முத்திரை குத்திக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

வாழ்க்கையில் வசதிதான் முக்கியம் என்பது ஒரு யதார்த்தமான உண்மை . ஆனால் அந்த வசதி அடையுமட்டும் தான் இலட்சியமாக இருக்க முடியும் . எது எமது நெஞ்சுக்கு ஒரு நிம்மதியைக் கொடுக்கிறதோ அதை அடைந்த பின்னால் , நாம் தேடி ஓடும் வசதி ஒரு செயற்கையானதாகவே தென்படும்.

அந்த நிலைக்கு வந்த பின்னால் எமது எமது முகத்தின் முகவரியை அலசத் தொடங்குகிறோம். நமடைந்த வசதியைத் தேடும் வழியில் எனது முகவரியைத் தொலைத்து விட்டேனோ என்றோர் ஏக்கம் நெஞ்சினிலே நெகிழ்கிறது.

ஈழத்தை விட்டு நான் லண்டன் வந்து முப்பது வருடங்களாகி விட்டது . ஒரு மாணவனாக வந்த நான் இன்ரு ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனுக்குத் தந்தை . நண்பர்கள் எண்ணக்கூடும் , ஒரு மாணவனுக்குத் தந்தை என்று சொல்லுவதை விட ஏன் மருத்துவக் கல்லூரி மாணவனுக்குத் தந்தை என்று கூறுகிறான் , கொஞ்சம் தலைக்கனம் கொண்டவனோ என்று. இல்லை அதற்கு ஒரு காரணம் உண்டு.

என் தந்தை நான் படித்து ஒரு டாக்டாராக வேண்டும் எனும் ஆசையை மனதிலே புதைத்துக் கொண்டு , படிக்கமால் என் இளம்பிராயத்தை பாழடித்து எனது சந்தர்ப்பங்களை நழுவவிட்டபோது , பரவாயில்லை அதனால் என்ன என்று ஆறுதல் கூறும் போது அவரது இலட்சியக் கனல் தண்னீர் ஊற்றி அணைக்கப்பட்டு , மனதினுள் புகைந்து கொண்டிருந்தது.

இன்று எனது மகன் மருத்துவக் கல்லூரி மாணவன் என்று நான் சொல்லத் தலைப்பட்டதன் காரணம் , என்னுடைய இளம்பிராயத்தின் வீணடிப்புக்களை ஒருமுறை வெளிகொணர்வதற்கேயன்றி வேறில்லை.

காலங்கள் நமக்குக் கொடுக்கும் சோதனைகள் ஏராளம் .நாம் நாமாக நமக்கு ஏற்படுத்திக் கொள்ளும் சோதனைகள் ஏராளம். எமது எதிர்காலத்தை நோக்கி நாம் எடுத்து வைக்கும் அடிகள் சிலசமயங்களில் எம்மயறியாமலே மற்றவரின் உள்ளங்களயும் மிதித்து விடுகிறது. இது அனைவரது வாழ்விலும் நடைபெறும் ஒன்று . அதை எப்போது புரிந்து கொண்டு அழும் உள்ளங்களுக்கு ஆறுதல் கொடுக்க விளைகிறோமோ , அப்போதே எமது மந்தில் மனிதத்துவம் வேரூன்றத் தொடங்குகிறது.

இலண்டனிலே நான் மாணவனாக வாழும் சமயம் எனக்கு எனக்கு உழைக்கத் தெரிந்ததே தவிர பிழைக்கத் தெரியவில்லை. வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ளத் தெரியவில்லை. அதனைக் கற்றுக் கொண்டவர்கள் என்னைச் சுற்றிக்கொண்டபோது அதனை உணரக்கூடிய வகையில் யதார்த்தம் புரியவில்லை.

லண்டன் கொடுத்த சந்தர்ப்பங்கள் ஆயிரம் , இங்கே உள்ள வசதிகளை உபயோகித்து கற்றவர் சபையினில் தனி இடம் பெறக்கூடிய வசதிகள் ஆயிரம் .அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் மிகவும் சிலரே. நல்லனவற்றை எடுத்துக் கொண்டு அல்லனவற்றை விட்டு விடு என்பதனை முற்றாகவே அறிந்து கொள்ளாத நிலை.

இந்த வகையான சூழ்நிலைகளினுள் படிப்படியாக வாழ்க்கை கொடுத்த பாடங்களின் மூலம் அனுபவம் எனும் பட்டறையினுள் தட்டி எடுக்கப்பட்ட இரும்பாக வெளியே வந்து வாழ்ந்தாலும் கூட , இன்றுவரை எமது முகங்களில் உள்ள வரிகளைத் தேடவேண்டிய துர்ப்பாக்கியம்.

இந்தநாட்டு மக்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் எமக்கும் உண்டு . பிரித்தானியப் பிரஜை எனும் கெளரவம் உண்டு , ஆனாலும் ஏன் எம் அடிமனதில் இன்னும் எமது அடிப்படையைத் தேடி ஓர் ஏக்கம்? ஆங்கிலத்தில் சொன்னால் SriLankan by birth , British by choice . இது சரியான விளக்கமா ? நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து , வளர்ந்தது , வாழ்ந்தது 17 வருடங்கள் தான் , ஆனால் இலண்டனில் வாழ்ந்ததோ முப்பது வருடங்கள் .
கணிதத்தின் படி பார்த்தால் . நான் ஈழத்தவன் என்பதிலும் பார்க்க , பிரித்தானியனாக வாழ்ந்ததுவே கூடிய வருடங்கள் . ஆனாலும் ஏன் இன்னும் இந்தத் தீராத தேடல் ? அந்தப் 17 வருடங்களின் உணர்ச்சிகள் , இந்த 30 வருட உணர்ச்சிகளை விட விலையுயர்ந்தவையா ?


பதினேழு வருடங்களின் அனுபவங்கள் இதயத்தை மென்மையாய் இறகினால் தடவியது போன்றொரு இனிமையான ராகமா ? ஆமாம் அந்தப் பதினெழு வருடங்கள் எனக்கு வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சியைக் கொடுக்கவில்லை .

அந்தக் காலகட்டம் ஒரு விளையாட்டுப் பருவம் போன்றே விரயமாகியது ஆகவே அந்தக் காலப்பகுதியின் அனுபவங்கள் எல்லாம் மிகவும் இனிமையானது போன்ற ஒரு ஆதங்கம் மனதின் அடிப்பாகத்தில் எப்போதும் உண்டு.

ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு "comfort zone" என்று சொல்வார்கள் அப்படியான ஒரு பாதுகாப்பு வட்டத்தினுள் எனது வாழ்க்கை உருண்ட காரணத்தினால் அந்தப் பகுதி எப்போதுமே இனிமையாக இருக்கிறது. லண்டனில் வாழ்ந்த முப்பது வருட காலமும் வெவ்வேறு பொறுப்பு மிகுந்த காலகட்டத்திற்குள்ளால் வெளிவர வேண்டி இருந்ததினால் , அந்தப் பகுதி ஏனோ கொஞ்சம் கசப்பானதாகவே உள்ளது.

இது யதார்த்தம்.

லண்டனில் பலவருடங்கள் வாழ்ந்த ஒரு தமிழன் எனும் கண்ணாடி வழியாக உலகைப் பார்க்கும் ஒரு அனுபவமாகவே இருக்கிறது . பல கால கட்டங்களில் இங்கிலாந்திலே வேற்று இனத்தவன் எனும் ஓர் எண்ணத்துடன் உரிமை கோரும் வாதங்களை முன் வைத்தாலும் கூட மனதைத் தொட்டு உண்மையாக விளக்கப் போனால் இங்கே கிடைக்கும் இந்த ஜனநாயக உரிமை சொந்த நாட்டில் கிடைப்பது கூடக் கடினமே !

எமது கலாச்சாரங்கள , எமது மதவழிமுறைகளைப் பின்பற்ற சமுதாய அமைப்புக்கள் , அரசாங்கம் கொடுக்கும் ஆதரவு பாராட்டப்படவேண்டியது. "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்றோர் பழமொழி உண்டு அதனை நடைமுறையில் கடைப்பிடித்துக் கொண்டிருப்பது இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

முன்னேற வேண்டும் என்ற இலட்சிய நோக்கம் கொண்ட எவருமே தமது இலட்சியப்பாதையில் நடைபயில கிடைக்கும் சந்தர்ப்பங்கள் , உத்தியோகபூர்வமான உதவிகள் என்பன , நிறம் ,மொழி , மதம் என்பனவற்றிற்கு அப்பாற்பட்டவையாக திரமை அடிப்படியிலும் , தேவைகளின் அடிப்படையிலும் நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது என்றே சொல்லுவேன்.

நியாயமான முறையில் என்று சொல்லும்போது , மற்றைய நாடுகள் குறிப்பாக எமது தாய்நாடுகளை விட நன்றாக நடைபெறுகிறது என்றே கூறலாம்.

இது நான் வாழும் லண்டன் மாநகரைப் பற்றிப் பெருமை பேசுவதற்காக எழுதப்படுவது அல்ல , எண்ணம் எனும் கல்லெடுத்து அமைக்கும் பாலம் உண்மை எனும் சாந்து பூசப்பட்டு கட்டப்பட்டிருந்தால் தான் அந்தப்பாலம் பயனுள்ளதாக இருக்கும் எனும் காரணமே.

அதற்காக லண்டனில் நிறவேற்றுமை , மற்றும் இனவெறி இல்லை என்று நான் கூறவரவில்லை . எத்தனையோ இடங்களில் நான் அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவனாயிருந்திருக்கிறேன். ஆனால் சட்டத்தின் பிடியில் அவர்கள் அகப்பட்ட்டார்களேயானால் தப்பிக்க ஒரு வழியுமேயில்லை. இதற்கான சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால் சில அரசியல்வாதிகளும் , சில சுயலாபம் தேடும் பிரமுகர்களும் எந்த நாட்டிலுமே வேற்றுமைகளை பூதாகரமாக்குவது இயற்கையே !

இன்றெனக்கு உலகை வாழ்க்கையின் ஏணியில் ஒரு வசதியான படியில் கால்களை வைத்துக் கொண்டு பார்த்து விமர்சிக்க கூடிய நிலையை அந்த இறைவனும் , இந்த நாடும் கொடுத்திருந்தாலும் , காலாச்சார இடைவெளியை , மனதில் ஓடும் தமிழின் தாகத்தைத் தணிக்க , இலக்கிய சாந்திக்காக தமிழ் நாட்டுக்கு ஓடி வரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதுதான் நாம் பிறக்கும்போதே எமது மனதில் எம்மையறியாமல் விழுந்து விட்ட கலாச்சார விதையா ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home