நினைப்பததெல்லாம் பேசிவிட்டால் . . . .
நான் எழுதும் எழுத்துகளின் ஆரம்பம் கவிதை. என்னை யாரென்று எனக்கே அறிமுகப்படுத்தியது கவிதை. என்னுள் இருக்கும் குறைகளை எனக்குச் சுட்டிக்காட்டியது கவிதை. அவைகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கியது கவிதை. மற்றவர்கள் என்மீது தூக்கிப்போடும் விமர்சனம் எத்தகையானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள பழக்கியது பழக்கிக் கொண்டிருப்பது கவிதை.
ஆக மொத்தம் என் வாழ்க்கையே ஒரு கவிதை எனலாம்.
கவிதையையே மூலாதாரமாக வைத்து வாழ்ந்து விடுவது யதார்த்தமான காரியமா ?
நாம் வாழும் இந்தப்பூமியே கவியரங்கமாகவும், அதிலே வாழும் அனைவரும் என்னைப் போலவே கவிதையை நேசிப்பவர்களாக இருந்தால் மட்டுமே அப்படி வாழ்வது சாத்தியமாகும். ஆனால் உண்மையான உலகம் அப்படியில்லையே !
குத்துச்சண்டை போடுபவன் எத்தனை
திறமையானவனாக இருந்தாலும் அவ்ன் முறையாக வெற்றி பெற வேண்டுமானல் குத்துச்சண்டை மேடையில் மற்றுமொரு குத்துச்சண்டை விதிகளை நன்கறிந்த ஒரு வீரனுடன் தான் போராடி வெற்றி பெற முடியும்.
நிஜவாழ்க்கையில் அவனால் அப்படிச் செய்ய முடியாது ஏனெனில் குத்துச்சண்டையை மதிக்கத் தெரியாதவன் ஒரு கத்தியை எடுத்து அவனைக் குத்தி விட்டுச் சென்று விடலாம்.
கவிஞர்கள் சாதாரண உலகில் வாழ்வதும் அப்படித்தான்.
கவிதை தெரிந்தவர்கள் மத்தியில் அதனை ரசிக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் கவிஞனாக வாழலாம் ஆனால் மற்றவர்கள்
மத்தியில் பைத்தியக்காரன் என்று கூட எண்ணப்படலாம்.
இதற்கு நாம் மகாகவி பாரதியாரையே எடுத்துக் கொள்ளலாமே !
இன்று அவரின் பெருமைகளைச் சொல்லி தாம் புகழ் தேடும் சமூகம் அன்று அவரது இறுதிச் சடங்குக்கு வெறும் பதின்மூன்று பேரே பங்கு பற்றினார்கள் எனும் செய்தி நிரூபிக்கிறது.
முகநூல் குழுமங்களை எடுத்துக் கொண்டால் ஒத்த மனக்கருத்துடைய பலர் நண்பர்களாக இணையும் போது கவிஞர்களின் படைப்புகள் ஆதரிக்கப் படுகின்றன. கவிஞர்கள் கெளரவிக்கப் படுகிறார்கள். உண்மை அன்பால் முகமறியா உறவுகள் பல அன்பைப் பொழிகின்றன.
ஆனால் வெளியுலகில் எத்தன இடங்களில் உண்மை அன்பின் விலையாகத் துன்பங்களை வாங்கிய அனுபவங்களுக்கு சொந்தக்காரராய் இருந்திருக்கிறோம்.
என் மனதில் நீண்டதோர் கேள்வி பலகாலங்களாய் நிலவுகிறது.
நான் ஏன் கவிதைகளில் நாட்டம் கொண்டேன் ? என்பதே அது.
இன்றுவரை அந்தக் கேள்வி என்னைத் துரத்தி வருகிறது. என்னைக் கவிதையின்பால் ஈர்த்தது ஒரு நிகழ்வா ? இல்லை நிகழ்வுகளின் தொகுப்பா ?
விடையைத் தேடும் படலம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இடையிடையே மனம் சோர்வடைந்து உனக்கேன் இந்த வீண் தேடல் ? நீ என்ன மாபெரும் கவிஞனோ ? என என் மனம் என்னை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கும்.
ஏன் மற்றவர்களால்.தலை சிறந்த கவிஞன் என்று கொண்டாடப்படுபவர்கள் மட்டும் தான் கவிஞர்களா ? இல்லை தாம் எழுதும் கவிதைகளில் தம் உணர்வுகள் உயிர் வாழ்கின்றன என்று எண்ணும் அனைவருமே கவிஞர்கள் தான் எனும் விடையும் கூடவே வரும்.
ஒவ்வொருவர் வாழ்விலும் பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கும். பல குடும்பச் சிக்கல்கள் இருந்திருக்கும். சிலருக்கு தமது இளம்பிராயத்து நினைவுகள் மகிழ்வானவையாக இருந்திருக்கலாம். சிலருக்கோ அது மறந்து போக வேண்டிய துயரமான நினைவுகளாக இருந்திருக்கும்.
நான் பிறந்தது ஒரு நடுத்தர மத்திய வர்க்க குடும்பத்தில் பிறந்தவன்.
எனது தந்தை மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர் எதையும் எம்மீது திணிக்க விரும்பாதவர். அன்னை அன்பே உருவானவர்.
எனது கவிதையுணர்வுகள் அவர்களிடமிருந்து பிறக்கவில்லை.
அப்படியானால் எங்கேயிருந்து இந்தக் கவிதையுணர்வுகள் எங்கிருந்து ஆரம்பித்தன ?
இன்னமும் நான் என்னுள் தேடிக் கொண்டிருக்கும் விடையில்லா வினா இது.
என்ன இவன் இந்தக் கேள்விக்கு விடை காணத் துடியாய்த் துடிக்கிறானே ! அப்படி இதில் என்னதான் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா ?
இந்தக் கேள்விக்கு விடையைக் கண்டு விட்டால் அது என்னை நானே அறிந்து கொண்டதிற்குச் சமனாகும்.
என்னுள்ளே துடித்துக் கொண்டிருக்கும் பல உணர்வுகளுக்கு விடை கிடைத்து விடும்.
இது ஒரு பூட்டு . இந்தப் பூட்டின் சாவி மட்டும் எமது கைக்கு வந்து விட்டால் . . . . .
அது கைக்கு வராமல் வைத்திருப்பதுதான் அனைவர்க்கும் மேலானவனின் லீலையோ ?
எனது குழந்தைப் பருவ நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன். நினைவுகளில் மன வடிதட்டில் சிக்கி நிற்கும் எண்ணத்துளிகளை புரட்டிப் பார்க்கிறேன்.
கவிதைகளின்பால் நான் ஈர்க்கப்படுவதற்கு முன்னால் நான் தமிழின் மேல் காதல் கொண்டு விட்டேன் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
காதலாகிப் போனேன்
தமிழின் மேல்
காந்தம் இரும்பைக்
கவர்வது போல
நீச்சலடித்தேன் தமிழ்க்கடலில்
நினைவு தெரிந்த நாள் முதலாய்
அப்போது ஈழத்தில் ஒரு அமைதியான சூழல் என்றுதான் சொல்ல வேண்டும்.எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும் எனது தந்தையுடன் தெருவால் நடந்து போகும் போது ஒரு அரசியல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
ஒலிப்பெருக்கியில் தமிழரசுக்கட்சித் தலைவர்களில் ஒருவரான வன்னியசிங்கம் என்பவரது பேச்சு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அவரது கணீரென்ற தமிழ்ப்பேச்சு என்னைத் தடுத்து நிறுத்தியது.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றேன் என்று தெரியவில்லை தந்தை என் கைகளைப் பற்றியதும் தான் நினைவுலகிற்குத் திரும்பினேன்.
அச்சம்பவம் இப்போதும் என் மனதில் அப்படியே பதிந்துள்ளது. பின்னாளில் அதை என்தந்தையும் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு.
தமிழின் இனிமை. அதனை உபயோகிப்பவர்கள் அதனைத் தமது வீச்சுக்கு ஏற்ப உபயோகிக்கக்கூடிய தன்மை. தமிழ்மொழியில் இருந்த கனிவு . மொழியில் இருந்த ஆளுமை அப்படியே என்னைத் தன்னுள் அமுக்கிக் கொண்டது.
நான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் ரசிகன். அவரை அரசியல்ரீதியாக, சினிமாரீதியாக விமர்சிப்பவர்கள் பலருண்டு.
இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட வகையில் நான் கவரப்படடது அவரது சினிமாக்களில் அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களேயாகும்.
அக்கருத்துகள் அவரை பின்பற்றும் சிலரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமானால் அதைவிட நல்ல விடயம் எதுவும் இருக்க முடியுமா?
சமூகம், வர்க்கபேதம் , ஏழை உலகம் என்பன என்னைக் கவிதையின் பால் திருப்பியதோ?
சிறுவயதிலிருந்தே பாடல் வரிகளில் நான் மனதைப் பறிகொடுப்பது வழக்கம்.
அப்படியான வகையில் தத்துவப் பாடல்களில் இருந்து வாலிப வயதில் காதல் பாடல் வரிகளென்று கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளிலும் தமிழில் அவர் கொண்ட ஆளுமையிலும் மனதை மயங்க விட்டவன் நான்.
அப்போதுதான் எனக்கு கவியரசர் கண்ணதாசனின் தமிழாற்றல்.
அவர் தமிழின் இனிமையை எனக்குள் மெதுவாக ஊட்டினார் என்றேதாந் சொல்ல வேண்டும்.
தமிழன்னையின் அழகை, அபூர்வ இனிமையை அவர் கையாண்ட விதம் என்னைக் கிறங்க வைத்தது.
வாலிபப்பருவத்தில் அந்த வயதுக்குரிய காதலுணர்வுகள் என் நெஞ்சமெனும் வீணையை மீட்டத் தொடங்கியதும் தான் கைவிரல்கள் கவிதைகளைல் கிறுக்கத் தொடங்கின.
காதலெனும் உணர்வு மேகம் இதயம் எனும் மலை முகட்டை உரசும்போது பிறக்கும் ஊற்றாகவே கவியுணர்வு முகிழ்த்தது போலும்.
தேடல் தொடர்கிறது. பாடல் பிறக்கிறது, கவிதை சுரக்கிறது.
தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ளே ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான்
ஒருவன்
அவனைத் தெரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்
என்ற வரிகளைத் தந்தார் என் கவித்தலைவர்.
அப்படித்தான் எம் கவியுணர்வுகளும் மறைந்திருக்கின்றனவோ ? அதைப் புரிந்து கொள்ளும்போது நான் காற்றோடு கலந்து விட்டால் அவை என் கல்லறை வாசகங்களாகட்டுமே !
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்


0 Comments:
Post a Comment
<< Home