Monday, September 11, 2023

சலனமில்லாத வாழ்க்கை சாத்தியமா ?

"சலனமில்லாதொரு வாழ்க்கை " இது சாத்தியமா? 

சாத்தியம் இல்லை என்பது நம்மில் எல்லோருக்கும் தெரிகிறது. 

இருந்தாலும் அத்தகையதொரு வாழ்க்கையை நோக்கி அனைவரது மனமும் ஏங்குகிறது. 

அதனை அடைவதற்காக நம்மால் எடுக்கக் கூடிய முயற்சிகள் அனைத்தையும் எடுக்கிறோம், எடுக்கத் துடிக்கிறோம்.

சலனமில்லாமல் ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறோம். 
அத்தகைய ஒரு சலனமிலலத நதியை பார்க்கும் போது எம் மனதுக்குள் ஒரு அமைதி பிறக்கிறது. 

ஆனால் அந்நதியின் கோணத்தில் பார்க்கும் போது அந்தச் சலனமில்லாத சமயம்  அதனுடைய வாழ்க்கையிலே ஒரு சில சமயங்களே ! ஒரு சில நிகழ்வுகளே !.

ஏன் என்கிறீர்களா?

நதியின் நடையை எடுத்துக் கொள்ளுங்கள் நாம் அந்நதிக்கரையோரம் வாழும் மனிதராக இல்லாவிட்டால் அதன் சலனமில்லா சமயம் நாம் காணும் அந்தச் சில நிமிடங்களோ அன்றி சில மணிகளோ அன்றி சில நாட்களோ தான்.

அந்த நதி ஊற்றெடுக்கும் மலையில் அடாத மழை பெய்தால் அந்நதியின் சலனத்தில் மாற்றம் ஏற்படுகிறது, அதேபோல அம்மலைச்சாரல் மழையையே காணாத தகிக்கும் கோடையில் வாடும் போது அந்நதி வெறும் கீறாக தானிருக்கும் அடையாளமே இல்லாது வற்றிப் போயிருக்கும்..

ஆக அந்நதியும் இம் மனித வாழ்க்கை போல சலனங்களுக்கு உட்பட்டதுதான்.

முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மையான வாக்கு. ஆனால் விடாமுயற்சி எடுத்தும் எவ்வகையான முன்னேற்றமும் காணமுடியாமல் தவிக்கும் மனிதர்கள் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருக்கிறோம். 

ஏன்? சமயத்தில் நாம் கூட அத்தகையவர்களாக இருந்திருக்கிறோம் இல்லையா?

அப்படியானால் "முயற்சி திருவினையாக்கும்" என்ற வாதத்தின் உண்மை ?

இதற்காகத்தான் எமது முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த பழமொழிகள், கூற்றுக்களிலேயே சில முரண்பாடுகளைக் காண்கிறோம்.

உதாரணமாக   உபதேசங்களை எடுத்துக்கொள்ளுங்கள்,

“தருமம் தலைகாக்கும் " என்று சொல்கிறார்கள் பின்பு "ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு" என்கிறார்கள், “தனக்கு மிஞ்சித்தான் தானமும், தர்மமும்" என்கிறார்கள்.

இதைப்படித்த ஒருவர் "என்ன இது ஒரே குழப்பமாக இருக்கிறதே !” என்று கலங்கலாம். 

ஆனால் இதன் உள்ளார்த்தத்தை, எமது முன்னோர்களின் விவேகத்தை நாம் மேலெழுந்தவாரியாகப் பார்க்காது, அதன் தலைப்பு வரிகளினுள் கொஞ்சம் ஊடுருவிப் பார்க்க வேண்டும்.

இத்தகைய பழமொழிகள், கூற்றுக்கள் முரண்பாடாகச் சொல்லப்படவில்லை. 

நாம் எமது வாழ்க்கையில் யதார்த்ததைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது..

மற்றவர்களுக்கு உங்களால் "முடிந்த" உதவிகளைச் செய்யுங்கள் என்பதுவே இதன் உண்மையான அர்த்தமாகும். 

உங்கள் குடும்பத்தைப் பட்டினி போட்டு விட்டு மற்றொருவரின் "வசதிக்காக" உதவாதீர்கள். 

உங்களைச் சுற்றியுள்ள, உங்களை நம்பியுள்ளவர்களின் நலன்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள் என்பதுவே அதன் மெய் அர்த்தமாகும்.

செல்வந்தர் என்ற நிலைக்கு ஒருவர் தனை உயர்த்திக் கொள்ளவில்லையானால் உதவி செய்வதற்கென்று ஒருவர் உருவாக மாட்டார்.

தனக்கென ஒரு நிலையான செல்வத்தை ஒருவர் தேடிக் கொள்ள முற்படுவது எவ்வகையிலும் தவறாக ஆகாது. 

ஆனால் எங்கே அது தடம் புரள்கிறது என்றால் மற்றவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து தான் முன்னேற முற்படும்போதுதான் முரண்பாடுகள் முன்னுக்குத் தள்ளப்படுகின்றன.

தேவைக்கதிகமாக ஒருவர் செல்வத்தைத் திரட்டி பதுக்கி வைத்துக் கொள்ள முற்படும்போது அச்ச்செல்வம் நோயுற்ற செல்வமாகிறது.

தேவைக்கதிமாக மழை பொழிகிறது என்று வைத்துக் கொள்வோம் அது ஆற்றிலே விழும்போது அது ஊரெல்லாம் பயனளிக்கிறது.

அதுவே ஆங்காங்கே குட்டையாக தேங்கும் போது யாருக்குமே உதவாமல் வெறும் கொசுக்கலின் ஊற்பத்தியினால் நோய்களைத்தானே உருவாக்குகிறது.

அதே போலத்தான் செல்வமும். ஆற்றிலே மழை பொழிவது போல் கருணயுள்ளவர் கரங்களில் அது திரளும்போது உலகிற்கு நன்மை பயக்கிறது, அதுவே பரந்துபட்ட பார்வையற்ற ஒருவரிடம் சிக்கும்போது தவறுகளின் கருவறையாகிறது..

நான் எப்படி இத்துனை தூரம் உயர்ந்திருக்கிறேன், எனது பாதையிலே எனக்குக் கைகொடுத்தவர்கள் யார் யார் என்பதையெல்லாம் மறந்தவர் மனதில் மனிதத்துவம் மங்கிவிடும்.

ஓடிச் சென்று ஒரு ரெயிலிலே தொங்கி எமது பயணத்திற்கு ஒரு இடத்தை எடுத்து விட்டோம், அப்போது நாம் ஓடும் போது எமது வழியில் குறுக்கே வராமல் ஒதுங்கி வழி விட்டவர்கள் இருப்பார்கள். 

வேண்டுமென்றே எமக்கு இடைஞ்சலாக நடுவழியில் வந்து நிற்பவர்கள் இருப்பார்கள். 

ரயிலில் தொங்கிக் கொண்டு எமது பிரயாணம் தொடங்கும் போது எம்முடன் ஓடி வந்து ஏற முடியாமல் ஏக்கத்துடன் எம்மைப் பார்த்துக் கொண்டு நிற்பவர்கள் இருப்பார்கள்.

அட நாம் ஏறவில்லை, நாம் அடுத்த ரயிலைப் பிடிப்போம் அவனாவது ஏறிவிட்டானே என்று எம்மை அறவே தெரியாமல் இருந்தும் கையசைத்து எம்மை வழியனுப்பும் சிலர் இருப்பார்கள்.

எமது பயணத்தில் நாம் இலகுவான நிலையை அடைந்து தொங்கும் நிலையிலிருந்து உட்கார்ந்து கொள்ளும் நிலை வரும் போது நாம் சந்தித்த அத்தனைபேரின் நினைவுகளும் எம் நெஞ்சை விட்டகலாமல் இருக்க வேண்டும். 

அடுத்த ரயில் நிலையத்திலே எம்மைப் போல ஏறத் துடிக்கும் ஒருவனின் கையைப் பிடித்து ஏற்றிவிட முயற்சிக்கும் மனப்பக்குவம் அப்போதுதான் வரும்.

மேலே நான் சொன்ன இந்த ரயில் பயணத்தின் அனுபவத்தை அப்படியே நாம் எமது வாழ்க்கைப் பயணமாக மாற்றிச் சிந்திக்கும் போது அதன் ஆழம் எமக்குப் புரியும்.

ஒரு காலகட்டத்தில் முகவும் முக்கியமாக தென்பட்ட ஒரு விடயம் மற்றொரு காலகட்டத்தில் அறவே பைத்தியக்காரத்தனமான ஒரு எண்ணமாகத் தோன்றும். 

இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்..

பணம், பதவி, அந்தஸ்து இவை எல்லாம் ஒரு மனிதனுக்கு அணிகலனே ! அன்புதான் அவனுக்கு ஆடையாகிறது.

அந்த அன்பு இல்லையானால் அவன் நிலை நிர்வாணமே !

சலனமில்லாத வாழ்க்கை சாத்தியமே ! சபலங்கள் சமுதாய வரம்புகளுக்குள் கட்டுப்படும்போது......

மீண்டும் வருவேன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home