வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம்
வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம் என்று பலர் சொல்வார்கள்.
ஆனால், நான் வாழ்ந்து கடந்த ஆண்டுகள் எனக்குக் கற்றுத் தந்த உண்மை என்னவென்றால், வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம் மட்டுமல்ல.
அது ஒவ்வொரு நாளும் நம்மைச் செதுக்கும் ஒரு சிற்பியும் கூட.
அது நமக்குப் பாடங்களைப் புத்தகங்களின் வழியாக மட்டும் கற்றுத் தருவதில்லை.
மனிதர்களின் வழியாகவும் கற்றுத் தருகிறது.
வெற்றிகளின் வழியாகவும் கற்றுத் தருகிறது.
தோல்விகளின் வழியாகவும் கற்றுத் தருகிறது.
சில நேரங்களில் நாம் சிரிக்கும் தருணங்களிலும் கற்றுத் தருகிறது.
பல நேரங்களில் நாம் அமைதியாகக் கண்ணீர் சிந்தும் தருணங்களில்தான் மிகப்பெரிய பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.
வாழ்க்கை உங்களுக்கு பல்வேறு வடிவங்களில் பாடங்களைக் கற்றுத் தருகிறது.
சில அனுபவங்கள் உங்கள் இதயத்தில் நிலைத்திருக்க வேண்டியவை.
சில அனுபவங்கள் விடுவித்துவிட வேண்டியவை.
எதைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்ற வேறுபாட்டை உணரும்போதுதான் உண்மையான அமைதி உங்கள் மனதில் மலர்கிறது.
இந்த உண்மையை நான் புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை.
வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் பல மனிதர்களைச் சந்தித்தும், பல உறவுகளைக் கடந்து வந்தும், எண்ணற்ற ஏமாற்றங்களையும், மகிழ்ச்சிகளையும் அனுபவித்தும் புரிந்து கொண்டேன்.
இளமையில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்.
எல்லா நட்புகளும் என்றும் தொடரும் என்று நினைக்கிறோம்.
எல்லா கனவுகளும் நாம் நினைத்தபடியே நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆனால் வாழ்க்கை மெதுவாக நமக்குச் சொல்லித் தருகிறது.
சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் தங்குவதற்காக வருவதில்லை.
நமக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்துவிட்டு செல்லத்தான் வருகிறார்கள்.
அதைப் புரிந்து கொள்ளாதபோது நாம் துன்பப்படுகிறோம்.
புரிந்து கொண்ட பிறகுதான் நாம் முதிர்ச்சி அடைகிறோம்.
நான் இன்று உங்களிடம் கூற விரும்புவது இதுதான்.
நல்ல அனுபவங்களை உங்கள் மனதில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களை ஊக்கப்படுத்திய வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள்.
உங்களுக்காக ஒரு சிறிய உதவி செய்தவர்களையும் நினைவில் வைத்திருங்கள்.
நன்றியுணர்வை எப்போதும் உங்கள் இதயத்தில் வாழவிடுங்கள்.
ஆனால் உங்களைப் புண்படுத்திய ஒவ்வொரு நிகழ்வையும், ஏமாற்றிய ஒவ்வொரு மனிதரையும், தோல்வியடைந்த ஒவ்வொரு முயற்சியையும் உங்கள் மனதில் நிரந்தரமாகக் குடியிருக்க அனுமதிக்காதீர்கள்.
காயம் ஆற வேண்டுமென்றால் அதை எப்போதும் கீறிக் கொண்டிருக்கக் கூடாது.
நினைவுகள் இருக்கட்டும்; ஆனால் அவை உங்கள் எதிர்காலத்தைச் சங்கிலியால் கட்டிப் போடக் கூடாது.
வாழ்க்கையில் மிகப்பெரிய சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் பெற்றுவிடுவதல்ல.
தேவையில்லாதவற்றை மனதிலிருந்து விடுவித்துவிடும் ஆற்றலைப் பெறுவதுதான்.
ஒரு மரம் பழைய இலைகளை உதிர்க்காமல் புதிய தளிர்களைப் பெற முடியாது.
அதுபோல நாமும் பழைய கசப்புகளை விடாமல் புதிய மகிழ்ச்சிகளை முழுமையாக வரவேற்க முடியாது.
இளைய நண்பர்களே!
உலகம் இன்று மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிறரின் வாழ்க்கையைப் பார்த்து உங்கள் வாழ்க்கையை அளவிடாதீர்கள்.
ஓப்பீடு என்பது மகிழ்ச்சியை மெதுவாகக் கொள்ளையடிக்கும் ஒரு திருடன்.
உங்களுடைய பயணம் உங்களுக்கே உரியது.
மற்றவர்கள் எவ்வளவு வேகமாகச் சென்றாலும், உங்கள் பாதையில் நீங்கள் அமைதியாக முன்னேறுங்கள்.
தவறுகள் நடக்கும். தோல்விகள் வரும்.
சிலர் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
சிலர் உங்கள் அன்பிற்கு அன்பைத் திருப்பித் தர மாட்டார்கள்.
சிலர் உங்களுடைய நம்பிக்கையையே உடைத்துவிடுவார்கள்.
அதற்காக மனிதர்கள்மீது நம்பிக்கையை இழக்காதீர்கள்.
ஒரு சிலரின் தவறுகளுக்காக உலகம் முழுவதையும் குற்றவாளியாக மாற்றிவிடாதீர்கள்.
ஒவ்வொரு அனுபவமும் உங்களை உடைப்பதற்காக வருவதில்லை.
சில அனுபவங்கள் உங்களை வலிமையாக்குவதற்காகவே வருகின்றன.
இன்று நான் எழுதுகின்ற இந்தப் பதிவு, நான் எல்லாவற்றையும் அறிந்தவன் என்ற எண்ணத்தில் எழுதப்படவில்லை.
வாழ்க்கை என்னும் பல்கலைக்கழகத்தில் இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவனாகவே எழுதுகிறேன்.
ஆனால் என்னைவிட நீண்ட பாதையை நீங்கள் இன்னும் நடக்க வேண்டியிருப்பதால், நான் தடுமாறிய இடங்களில் நீங்கள் தடுமாற வேண்டாம் என்ற அக்கறையோடும், நான் காலம் தாழ்ந்து புரிந்து கொண்ட சில உண்மைகளை நீங்கள் இளமையிலேயே புரிந்து கொண்டால் உங்கள் பயணம் இன்னும் அழகாக இருக்கும் என்ற நம்பிக்கையோடும் எழுதுகிறேன்.
என் சொந்த வாழ்க்கையில் நான் கண்டவைகளும், கற்றுக் கொண்டவைகளும், இழந்தவைகளும், மீண்டும் எழுந்து நடந்த அனுபவங்களும் எனக்குக் கற்றுத் தந்த சில சிறிய உண்மைகளையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இவை கட்டளைகள் அல்ல.
இவை என் வாழ்க்கைப் பயணத்தில் சேகரித்த அனுபவங்களின் விதைகள்.
அவற்றில் ஏதேனும் ஒரு விதை உங்கள் மனதில் விழுந்து, ஒரு நல்ல சிந்தனையாக முளைத்து, உங்கள் வாழ்க்கையை இன்னும் அழகாகச் செதுக்க உதவுமானால், அதுவே இந்தப் பதிவின் வெற்றி.
ஏனெனில் நான் நம்புவது ஒன்றைத்தான்...
ஒரு நல்ல வார்த்தை ஒருவரின் நாளை மாற்றலாம்.
ஒரு நல்ல சிந்தனை ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம்.
உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மனதை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
எதைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதையும், எதை விட்டுவிட வேண்டும் என்பதையும் வாழ்க்கை கற்றுத் தரும்.
அந்தப் பாடத்தை மனதார ஏற்றுக் கொண்ட நாளிலிருந்து உங்கள் உள்ளத்தில் அமைதி பிறக்கும்.
அந்த அமைதிதான் உங்கள் வாழ்வின் மிகப் பெரிய செல்வம்.
வாழ்க்கை உங்களை வெல்ல வரவில்லை.
உங்களை வளப்படுத்தவே வந்திருக்கிறது.
அதைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் உங்களை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கிக் கொள்ளுங்கள்.
ஒருநாள் உலகம் உங்களைப் பார்த்து வியக்கும் முன்பே, நீங்கள் உங்களைப் பார்த்து பெருமைப்படுவீர்கள்.
உங்களால் முடியும்.
அன்பன்


0 Comments:
Post a Comment
<< Home