வாழ்வில் வெற்றி பெற ......
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதர்கள் மிகக் குறைவு.
ஆனால், வெற்றி என்பது ஒரு இலக்கு மட்டுமல்ல அது ஒரு பயணமும் கூட என்பதை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம்.
நாம் எல்லோரும் வெற்றியின் உச்சியை மட்டுமே பார்க்கிறோம்.
ஆனால், அந்த உச்சிக்குச் செல்லும் பாதையைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை.
உண்மையில், வெற்றிக்கான பாதை எப்போதும் எளிதானதாக இருப்பதில்லை.
பல நேரங்களில் அது அரிதானதாகவும், நேராக இருப்பது போலத் தோன்றினாலும் எண்ணற்ற திருப்பங்களும், தாமதங்களும், தடைகளும் நிறைந்ததாகவே இருக்கும்.
வாழ்க்கையின் பல ஆண்டுகளைக் கடந்த பிறகு நான் புரிந்துகொண்ட ஒரு உண்மை என்னவென்றால், நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தடையும் நம்மை நிறுத்துவதற்காக வருவதில்லை. அது நம்மை இன்னும் வலிமையாக்குவதற்காகவே வருகிறது.
இளமையில் நான் நினைத்தது வேறு.
ஒரு முயற்சி எடுத்தால் உடனே அதன் பலன் கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.
சில நேரங்களில் தாமதம் ஏற்பட்டால் மனம் உடைந்திருக்கிறது.
சில கதவுகள் மூடப்பட்டபோது, என் வாழ்க்கையும் அங்கேயே முடிந்துவிட்டதாக நினைத்த தருணங்களும் உண்டு.
ஆனால், காலம் எனக்கு மிகப் பெரிய ஆசிரியராக இருந்தது.
இன்று திரும்பிப் பார்க்கும்போது புரிகிறது.
அந்த மூடிய கதவுகள் என்னைத் தண்டிக்கவில்லை.
அதைவிடச் சிறந்த கதவுகளுக்குத் தயார்படுத்தின.
அந்தத் தோல்விகள் என்னை அவமானப்படுத்தவில்லை.
அகந்தையை அகற்றி அனுபவத்தை அளித்தன.
அந்தக் காத்திருப்புகள் என் பொறுமையை வளர்த்தன.
அந்தப் போராட்டங்கள் என் மனதைப் பக்குவப்படுத்தின.
அன்பான இளைய தலைமுறையினரே!
நீங்கள் இன்று எதிர்கொள்ளும் சவால்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்.
சவால் இல்லாத வாழ்க்கை வளர்ச்சியற்ற வாழ்க்கையாகிவிடும்.
காற்றை எதிர்த்து பறக்கும் பட்டம்தான் உயரமாகச் செல்கிறது.
அதுபோல சோதனைகளை எதிர்கொள்ளும் மனம்தான் உயர்ந்த மனிதனை உருவாக்குகிறது.
ஒரு விதை மரமாக வேண்டுமென்றால் அது முதலில் மண்ணுக்குள் புதைய வேண்டும்.
இருளைச் சந்திக்க வேண்டும்.
மழையையும் வெயிலையும் தாங்க வேண்டும். அதன் பிறகே அது நிழல் தரும் மரமாக மாறுகிறது.
அதுபோலவே மனித வாழ்க்கையும்.
நீங்கள் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள், நாளை உங்களுக்குள் இருக்கும் வலிமையை உலகிற்கு அறிமுகப்படுத்தும்.
வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பியபடி நடக்காது.
ஆனால், அது நமக்குத் தேவையானதை நிச்சயமாகக் கற்றுத்தரும்.
அந்தப் பாடங்களை ஏற்றுக்கொள்ளத் தெரிந்தவர்கள்தான் வாழ்க்கையில் நிலைத்து நிற்கிறார்கள்.
ஒரு தோல்வி வந்தால் "ஏன் எனக்கு?" என்று கேட்காதீர்கள்.
அதற்குப் பதிலாக "இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?" என்று உங்களையே கேட்டுப் பாருங்கள்.
அந்த ஒரு கேள்வியே உங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றக்கூடியது.
நான் வாழ்ந்து கண்ட அனுபவங்களில் மிக முக்கியமான பாடம் ஒன்று உண்டு.
நமது திறமையைவிட நமது மனப்பக்குவமே நம்மை வெற்றியடையச் செய்கிறது.
அறிவு பலரிடமும் இருக்கும்.
திறமை பலரிடமும் இருக்கும்.
ஆனால், விடாமுயற்சியோடு தொடர்ந்து நடக்கும் மனவலிமை எல்லோரிடமும் இருப்பதில்லை.
அதனால்தான் பல திறமைகள் உலகிற்கு தெரியாமலேயே மறைந்து விடுகின்றன.
உங்களுக்குள் இருக்கும் திறமையை முதலில் நீங்களே நம்புங்கள்.
மற்றவர்கள் நம்புவதற்காகக் காத்திருக்க வேண்டாம்.
உலகம் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும்; ஆனால், வெற்றிக்காக அவர்கள் சிந்திய வியர்வையை பெரும்பாலும் யாரும் காண்பதில்லை.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே.
உங்கள் இலக்கில் உங்கள் கவனத்தை நிலைநிறுத்துங்கள்.
ஒவ்வொரு நாளும் நேற்றைவிட இன்று சிறிதளவாவது முன்னேற முயற்சி செய்யுங்கள்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள்.
நேற்றைய உங்களைவிட இன்றைய நீங்கள் சிறப்பாக இருக்கிறீர்களா என்பதே முக்கியம்.
மிக வேகமாக ஓடுபவன் வெற்றி பெறுவான் என்பது அவசியமில்லை.
நின்றுவிடாமல் தொடர்ந்து நடப்பவன்தான் இறுதியில் இலக்கை அடைகிறான்.
எனவே, தாமதத்தைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்.
தடைகளைக் கண்டு திரும்பிப் போகாதீர்கள்.
விமர்சனங்களைக் கண்டு மனம் தளராதீர்கள்.
உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனை இன்னும் உங்கள் முன்பாகவே காத்திருக்கலாம்.
அன்பு இளைஞர்களே! யுவதிகளே !
இந்தப் பதிவுகளை நான் எழுதுவதன் நோக்கம் உங்களுக்குப் பாடம் நடத்துவதல்ல.
என்னுடைய சொந்த வாழ்வில் நான் கண்டவைகளிலிருந்தும், கற்றுக்கொண்டவைகளிலிருந்தும், காலம் எனக்குக் கொடுத்த அனுபவ அறிவிலிருந்தும் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே.
நான் நடந்த எல்லாப் பாதைகளும் மலர்களால் நிரம்பியவை அல்ல.
முட்களும் இருந்தன.
ஏமாற்றங்களும் இருந்தன.
இழப்புகளும் இருந்தன.
காத்திருப்புகளும் இருந்தன.
ஆனால், அவை ஒவ்வொன்றும் என்னை உடைக்கவில்லை
செதுக்கியது.
அதனால்தான் இன்று உங்களிடம் இந்த வார்த்தைகளை நம்பிக்கையோடு சொல்ல முடிகிறது.
உங்களை நீங்கள் நம்புங்கள்.
உங்கள் கனவுகளை மதியுங்கள்.
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
உங்கள் மனதை எதிர்மறை எண்ணங்களால் நிரப்பாதீர்கள்.
ஒவ்வொரு நாளும் உங்களை இன்னும் சிறந்த மனிதராக உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
வெற்றி என்பது ஒரே நாளில் கிடைக்கும் பரிசு அல்ல.
அது தினமும் ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை வழங்கும் மரியாதை.
இறுதியாக ஒன்று...
உங்கள் விடாமுயற்சி திறக்கப்போகும் கதவுகளை இந்த உலகில் வேறு யாராலும் மூட முடியாது.
உங்கள் மனம் உறுதியாக இருந்தால், உங்கள் கால்கள் தடுமாறினாலும் உங்கள் பயணம் நிற்காது.
நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.
நாளை உங்களைத் தேடி வரும் வெற்றிக்கு, இன்று நீங்கள் உங்களைத் தயார்படுத்துங்கள்.
"உங்களால் முடியும்"
அன்பன்


0 Comments:
Post a Comment
<< Home