Saturday, September 16, 2023

மனமென்னும் மேடை மேலே . . .

சிந்தை எனும் தடாகத்தில் முத்திரை பதித்திடும் எண்ணங்கள் இத்தரை வாழ்க்கையின் உண்மையை சித்திரமாய் வடித்திடும் ஒரு பொழுது.

எந்தையும் தாயும் கொஞ்சி மகிழ்ந்த என் தாய்மொழியில் விந்தைமிகு உலகின் விசித்திர நிலைகளின் தன்மை நற்திறம் கொண்ட நல் அன்பு உள்ளங்களோடு பகிர்ந்தே பேசிடும் பொழுதில் சிறிதாய் நெஞ்சில் ஓர் நிம்மதி.

உழைத்திட நல்வழியும் தந்து , 
உயர்ந்திட நற்பண்புகளும் ஈந்து முற்பல தியாகங்கள் புரிந்து இகத்தினில் எம்மை ஓர் உன்னத சீலராய் ஆக்க முயன்று தம்வாழ்வை முடித்துக் கொண்ட எம்மினிய பெற்றவர் பாதம் பணிந்தேன்.

எப்படி வாழப் போகின்றார் எம் மக்கள் என்று கனவுகளோடு ஈன்றிட்டாலும் எத்தகை வாழ்வினில் புகுந்தாலும் அவர்களை எப்போதும் தப்பாமல் தம் மக்கள் என்று கூறிடும் உன்னத உள்ளங்களின் சொந்தக்காரர் தாம் எம்மனைவரினதும் பெற்றோர்.

ஏதோ வந்தேன், ஏதோ வாழ்கிறேன் என்று நான் வாழ்ந்த காலங்களும் உண்டு.

இவ்வழி வாழ்ந்து இவ்விடம் ஏக வேண்டுமென்று நான் எண்ணி வாழ்ந்த காலங்களும் உண்டு.

இவ்விரு காலங்களுக்கும் பொதுவானது எது என்று பார்த்தால் இரு வழிப் பாதைகளும் நானிட்டதில்லை எனும் மாபெரும் உண்மையே பொதுவென்பேன்.

“நான்" 

எனும் இந்த இரு சொற்களுக்குள் உழன்ற வேளைகளில் எத்தனை பெரிய முட்டாளகவிருந்தேன் எனும் உண்மை என் உள்ளத்தை இன்று கீறிப்பார்த்து கொக்கரிக்கிறது.

இல்லாததைத் தேடி இருக்கும் கணங்களின் மகத்துவத்தை மறந்து வெற்றியேயில்லாத ,இலக்கு இல்லாத ஒரு ஓட்டப்போட்டியில் ஓடிய காலங்களை எண்ணிப்பார்த்து வியக்கிறேன்.

அர்த்தமில்லாத தேவைகளின் அளவில்லாத ஆசைகளின் வழி ஓடிய தருணங்களில் உள்ளத்தில் வழிந்தோடிய ஏக்கங்களின் நோக்கங்களை எண்ணிப்பார்த்து என்னை நானே பரிகசிக்கிறேன்.

"உன்னுள் உன்னை நீ தேடிப்பார்" 

என அன்றொரு முகவரியில்லாத முகமறியாத காவி தரித்த துறவியொருவர் என்னைப்பார்த்துக் கூறிய சொற்களில் புதைந்துள்ள சீரிய அர்த்தம் சாதுவாகப் புரியத் தொடங்கிய இவ்வேளையில் தான் வாழ்க்கையின் முழு நோக்கத்தின் ஆரம்பவாயிலை எட்டிப்பிடித்திருக்கிறேன். . .

ஒரு துணியை அடித்துப் பிழிவது அதை வெளுக்க வைப்பதற்காகத்தான் எனும் உண்மை அந்தத்துணிக்குப் புரியும் போதுதான் தான் வெண்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அத்துணி புரிந்து கொள்கிறது.

அதுபோலவே என்மீது நிகழ்த்தப்படும் நிகழ்வுகள்,எனக்குள் நிகழும் உணர்வுகள் எனக்கான என்னைப்ப புரிந்து கொள்ளும் பயிற்சிகளே என்பதை உணர்ந்து கொள்ளும் பொழுதில் அனைத்திலுமே ஒரு அர்த்தத்தைக் காணக்கூடியதாக உள்ளது. . .

இது ஒரு தத்துவக் கட்டுரை அல்ல.

தன்னைத் தானெ புரிந்து கொள்ள முயலும் ஒருவனின் சுய அலசல்.

இது அனைவரோடும் பகிரப்படும் போது அங்கே பலரின் எண்ணத்தின் விசைகள் அழுத்தப்படுகின்றன.

நாமனைவரும் மனிதராகப் பிறந்தோம் எம்மால் கடவுளாக மாற முடியாது ஆனால் எம் வாழ்க்கையில் ஒரு சொற்ப காலமாவது மனிதராக வாழ்ந்தோமா?
என்பதுவே கேள்வி.

எம்மனதினுள் தினமும் நடக்கும் போர் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலானதாகும்.

எமக்கு போதிக்கப்பட்ட புராணங்கள்,

தெய்வீகக் கதைகள் என்பன எம்மனதினுள் நடக்கும் போரில் நன்மையின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்துதற்காகவே.

அவை எம்மதத்தின் வழி , எந்நம்பிக்கையின் வழி,
எம்மொழியில் கூறப்பட்டது என்பது முக்கியமல்ல.

அவையனைத்தினதும் சாரமும் ஒரு நோக்கத்திற்காகவே,

ஒரு முடிவை நோக்கியே எம்மை அழைத்துச் செல்கின்றன.

ஆனால் இதற்குள் தாம் எம்முள் எத்தனை பேதங்கள்?

எத்தனை வேறுபாடுகள்?

இவைகளினால் முன்னேடுக்கப்படும் எத்தனை போர்கள் ?

அதனால் ஏற்படும் எத்தனை உயிரிழப்புகள் ?

இவையனைத்தும் மனிதர் மனிதாபிமானத்தை மறந்து போவதினாலேயே நிகழ்கின்றன.

எதுவும் எம் கையில் இல்லை என்பதை மறந்து அனைத்தும் எம்மால் நிகழ்த்தப்படுகின்றன எனும் ஆணவத்தின் பிரகாரமே இவ்வழிவுகள்,சிலவேளைகள் சில நிகழ்வுகள் எம்மை நடத்தும் வழிகள் வித்தியாசமானவையாக விளங்காதவையாக இருக்கலாம் ஆனால் அதற்கான காரணங்களில் வலுவான நியாயம் இருக்கும்.

நாம் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வில் வெவ்வேறு பாத்திரங்களை வகிக்கிறோம்.

அப்பாத்திரங்களுக்கேற்ப எமது கடமைகளை நிறைவேற்றுவது எமது கர்மமாகிறது.

ஆனால் அக்கடமையின் காரணம் அனைவருக்கும் புரிவது என்பது கனவே.

எமது கடமையின் அர்த்தம் யாருக்கோ புரியவில்லை என்பதற்காக எமது கடமையிலிருந்து நாம் வழுவுவது தார்மீகமாகாது.

எப்படியும் வாழலாம் எனும் ஒரு இளைஞனாக இங்கிலாந்துக்குள் காலடி வைத்த நான் எனக்கு என்மீது காலம் நடத்துய நிகழ்வுகளினால் இப்படித்தான் வாழ்வேண்டும் எனும் முதுமைப்பருவத்தின் வாசலினுள் நுழைந்து விட்டேன்.

இவ்விடைக்காலத்தில் நான் கற்றுக் கொண்டது என்ன ?

அன்பே சிவம் !அன்பே வேதம் !அன்பே மதம் !

ஆனால் அன்பு என்பதை எம்மை விழ்த்துவதற்காக அடுத்தவர் உபயோகிக்கும் ஒரு ஆயுதமாகாமல் அது எமது பலவீனமாகாமல் வாழப் பழகிக் கொள்வதே உத்தமமான வாழ்க்கைக்கு உயரிய வழியாகும் எனபதே நான் கற்றுக் கொண்டது !

ஆனால் எனது கல்வி இன்னும் முடியவில்லை ஏனெனில் எனக்கு வாழ்க்கைப் பாடத்தைப் புகட்டும் ஆசிரியர்கள் என எண்ணிக் கொண்டிருப்போர் இன்னும் தம்மத் தாமே புரிந்து கொள்ளவில்லை.

எனவே நான் இன்னமும் மாணவனே !

அது எனக்கு பரம ஆனந்தமே !

மீண்டும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home