ஆரம்பம் எங்கே ? ஆறாத தேடல்
நான் எழுதும் எழுத்துக்களின் ஆரம்பம் கவிதை.
என்னை யாரென்று எனக்கே
அறிமுகப்படுத்தியது கவிதை.
என்னுள் இருக்கும் குறைகளைச்
சுட்டிக்காட்டியது கவிதை.
அவைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக்
கொடுத்தது கவிதை.
மற்றவர் என்னைப்பார்த்துக் கூறும் கருத்துக்களை அவை
எவ்வகையானவையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள பழக்கியது கவிதை, பழக்கிக் கொண்டிருப்பது கவிதை.
ஆமாம், ஆக மொத்தம் எனது வாழ்க்கையே கவிதை.
ஆனால் கவிதையையே மூலாதாரமாக, அடிப்படையாக ஒரு கவிதை போலவே வழ்ந்து விடுவது யாதார்த்தமான செயலா?
நாம் வாழும் இந்தப் பூமியே ஒரு கவியரங்கமாகவும், அதிலே வாழும் அனைவரும் என்னைப்போலவே கவிதையை நேசிப்பவர்களாக இருந்தால் மட்டுமே, மனதுக்கு விரோதமில்லாத ஒரு உண்மைக் கவிஞனாக வாழ்வது சாத்தியம்.
ஆனால் உண்மையான உலகம் அப்படியில்லையே !
குத்துச்சண்டை போடுபவன், மிகவும் திறமையானவனாக இருந்தாலும் கூட எங்கே அவனது திறமையைக் காட்ட முடிகிறது?
ஒரு குத்துச் சண்டை மேடையிலே தானே ! அதாவது அவனைப்போலவே அவனுடன் போட்டியிடுபவனும் குத்துச் சண்டை விதிகளை மதிப்பவனாகவும், அவர்களை மேற்பார்வை செய்வதற்கு குத்துச் சண்டை விதிகள் தெரிந்த ஒரு மேற்பார்வையாளரின் முன்னிலையில் மட்டுமே அவனால் ஜெயிக்கமுடிகிறது.
நிஜவாழ்க்கையில் அவனால், அவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும்
ஜெயிப்பது மிகவும் கஷ்டமாகிறது ஏனெனில், அவனுடன் சண்டையிடுபவன் குத்துச் சண்டை விதிகள் தெரியாதவனாக இருக்கலாம், பையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அவன் மீது ஏற்றி விடுவான்.
கவிஞர்களும் அப்படியே !
கவிதை தெரிந்தவர்களுடன் வாழும் போது அவர்களால் கவிதையாக வாழ்ந்து விடமுடிகிறது.
கவிதையைப் புரியாதவர்கள் மத்தியில் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்னும் பட்டம் பெறுவதே சாத்தியமாகிறது.
உதாரணமாக எமது பாரதியாரையே எடுத்துக் கொள்ளலாமே !
இதற்கு மற்றுமொரு உதாரணமாக ஏதாவதொரு கவிக் குழுமத்தை எடுத்துக் கொண்டால் இங்கே அனைவரும் கவியுள்ளம் கொண்டவர்களக, ஒரே விதமான மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதால்
முகமறியா வேளைகளில் கூட உண்மை அன்பை தாராளமாகப் பொழியக் கூடியதாக இருக்கிறது.
ஆனால் வெளியே இந்தப் பரந்த உலகில் எத்தனை இடங்களில் உண்மை அன்பைக் கொட்டி துன்பத்தை வாங்கிக் கொள்ளவேண்டிய நிலையில் நாம் இருந்திருக்கிறோம்.
எண்ணிப்பாருங்கள் !
பெரும்பான்மையோருக்கு நிச்சயம் குறைந்தது ஒரு
அனுபவமாவது இருக்கும்.
என் மனதில் நீண்டதொரு யுத்தம் பலகாலமாய் நடந்தது.
நானேன் கவிதைகளில்
இத்தனை நாட்டம் கொண்டேன்?
இன்றுவரை இந்தப் போராட்டம் தொடர்ந்து
கொண்டேயிருக்கிறது. என்னைக் கவிதைபால் ஈர்த்த அந்த ஒரு நிகழ்வைத் தேடித்தேடி என் மனம் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
இடையிடையே மனச்சோர்வு? உனக்கேன் இந்த வீண் தேடல் ? நீ என்ன உலகம்
கண்டிராத மாபெரும் கவிஞனோ? என்று என்னுள்ளமே எனைப்பார்த்து ஒரு அம்பு
தொடுக்கும்.
ஏன் தலைசிறந்த கவிஞனாக இருக்கிறான் என்று அனைவரும், மதிக்கும் போது
மட்டும் தான் அவன் கவிஞனா? இல்லை தான் எழுதும் கவிதைகள் ஒவ்வொன்றிலும்
தன் உணர்வுகள் உயிர் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றன என எண்ணும் எவருமே கவிஞர் தான் என்று மறுமுனையிலிருந்து ஒரு எதிரம்பு வரும்.
மறுபடி மனம் தனது தேடல்களின் வழி ஓடும்.
ஒவ்வொருவரின் வாழ்விலும் பல நிகழ்வுகள் நடந்திருக்கலாம், பல குடும்பச்
சிக்கல்கள் இருந்திருக்கிலாம். சிலருக்கு தமது இளம்பிராயத்து நினைவுகள்
மகிழ்வானவையாக இருக்கலாம், வேறு சிலருக்கு அவை மறந்து போகவேண்டிய துயரமான கனவுகளாக இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை நான் பிறந்தது ஒரு மத்தியவர்க்கக் குடும்பத்திலே.
தந்தை மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர். தாயார் அன்பே உருவானவர்.
ஆனால் எனது கவிதையுணர்வுகள் அவர்களிடமிருந்து ஆரம்பித்தனவா என்றால், இல்லை என்பதுவே எனது மனதுக்குக் கிடைக்கும் விடை.
அப்படியானால் எங்கேயிருந்து வந்தது இக்கவிதையுணர்வுகள். இன்னமும் நான்
என்னுள் தேடிக் கொண்டேயிருக்கிறேன் விடைகாண முடியா வினா இது.
என்னை நானே துருவித் துருவிப் பார்க்கிறேன். எனக்குள்ளே இக்கேள்வி
விஸ்வரூபமாக வியாபித்திருக்கின்றது.
என்ன இது இவன் இந்தக் கேள்விக்கு
விடைகாண இப்படித் தவிக்கின்றானே ! அப்படி என்னதான் கண்டுவிடப் போகிறான் ? என்று உங்களில் சிலர் வினவலாம்.
இந்தக் கேள்விக்கு விடையைக்
கண்டுபிடித்தால் என்னை நானே கண்டு பிடித்ததிற்குச் சமன்.
என்னுள்ளே துடித்துக் கொண்டிருக்கும் பல உணர்வுகளுக்கு விடுதலை கிடைத்து விடும்.
இது ஓரு பூட்டு, இந்தப்பூட்டின் சாவி மட்டும் கைக்கு வந்து விட்டால் … வாராமல் வைத்திருப்பதுதான் அனைவர்க்கும் மேலானவனின் அன்றாடக் கடமையோ ?
எனது குழந்தைப்பருவத்து நினைவுகள், அதாவது எனது நினைவு வடிதட்டில் சிக்கி
நிற்கும் சில எண்ணத்துளிகளைப் புரட்டிப்பார்க்கிறேன்.
கவிதையின் பால் நான் என் மனதைப் பறிகொடுப்பதற்கு முனனல் தமிழ் மேல் காதல் கொண்டு விட்டேன் என்பது மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.
காதலாகிப் போனேன்
தமிழின் பால்
காந்தம் இரும்பைக்
கவர்வது போல
நீச்சலடித்தேன் தமிழ்க்கடலில்
நினைவு தெரிந்த நாள்முதலாய்
அப்போது ஈழத்தில் தற்போதைய சூழலோடு ஒப்பிடுகையில் அமையான சூழல் என்றே சொல்ல வேண்டும்.
எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும் எனது தந்தையுடன் தெருவால் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே ஒலிப்பெருக்கியில் , தமிழரசுக் கட்சித்
தலைவர்களில் ஒருவரான திரு வன்னியசிங்கமென்பவரது பேச்சு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அவரது கணீரென்ற தமிழ்ப் பேச்சு என்னை தடுத்து நிறுத்தியது.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றேன் எனத் தெரியாது, எனது தந்தை வந்து என் கைகளைப் பற்றி அழைத்ததும் தான் நினைவுலகிற்குத் திரும்பினேன்.
அச்சம்பவம் இப்போதும் என் மனதில் அப்படியே பதிந்துள்ளது. அதை என்
தந்தையும் பலமுறை கூறக் கேட்டுள்ளேன்
தமிழின் இனிமை. அதைப் பிரயோகிப்பவர்கள் அதைத் தமது வீச்சுக்கு ஏற்ப உபயோகிக்கக் கூடிய தன்மை.
தமிழ்மொழியில் இருந்த கனிவு. ஒரு உணர்வை விபரிக்க தமிழ் மொழியில் இருந்த ஆளுமை அப்படியே என்னைத் தன்னுள் அமுக்கிக் கொண்டது.
இந்தத் தமிழின் சுவைதான் என்னைக் கவிதையின் பால் திருப்பியதோ ?
அப்போது, இப்போது, எப்போதும் கூட நான் ஒரு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்
ரசிகன்.
எம்.ஜி.ஆர் என்னும் ஒரு தனிமனிதன் சகாப்தமாகியதற்கு பல விமர்சனங்கள்
உண்டு.
அவரை அரசியல் ரீதியில், சினிமா ரீதியில் விமர்சிப்பவர்கள் பலர் உண்டு.
ஆனால் நான் கவரப்பட்டது அவரது கருத்துக்களால். அவரது
சினிமாக்களில் வரும் அவரின் பாத்திரங்களின் விசாலமான மனப்பான்மையினால்.
அது சினிமா, அவர் உண்மையான வாழ்க்கையில் அப்படி இல்லை என்று பலர் என்னுடன் வாதிடக்கூடும்.
ஆனால் அப்படியான வாதங்களில் ஈடுபடுவதல்ல எனது நோக்கம்.
சினிமாக்களிலே அவர் கூறிய கருத்துக்கள் புனிதமானவை. அந்தக்
கருத்துக்களால் கவரபட்டவர்கள் தாம் நல்லவர்களாக நடக்கத் தலைப்படுவதே
சாதாரணமான நிகழ்வு.
அப்படி பலர் அவரைப் பின்பற்றி நல்லவர்களாக, மற்றவர்களுக்கு உதபுவர்களாக வாழத்தலைப்பட்டால் அது சமுதாயத்துக்கு ஒரு சேவை தானே !
சமூகம், ஏழை, வர்க்கபேதம் என்பன மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னைக் கவிதைபால் திருப்பியதோ ?
சிறுவயதிலிருந்தே நான் சினிமாப் பாடல்களை மிகவும் ஆர்வமாகக் கேட்பதுண்டு.
அப்படிக் கேட்கும் போது தமிழின் பால் இருந்த காதல் பாடல் வரிகளை மிகவும்
உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டும்.
அப்படிக் கவனித்து, கவனித்து கவரப்பட்டேன் கவியரசர் கண்ணதாசன் பால்.
அப்பப்பா அப்போதுதான் எனக்குப் புரிந்தது கண்ணதாசன் என்னும்
காவியமனிதனுக்கிருந்த தமிழாற்றல்.
ஒவ்வொருபாடலும் ஒவ்வொரு கோணத்தில் தமிழை ரசிக்கத் தூண்டியது.
இந்த வரிகளுக்கு இருக்கும் சக்திதான் என்ன !
தமிழன்னையின் அழகை, அபூர்வ இனிமையை அந்தக் கவித்தலைவன் கையாண்ட விதம் என்னைக் கிறங்க வைத்தது.
வாலிபப்பருவத்தில் அந்த பருவத்துக்கேயுரிய காதலுணர்வுகள் எந்தன் நெஞ்ச வீணையை மீட்டத்தொடங்கியதும் தான் என் கைகள் கவிதை என்னும் பெயரில்
கிறுக்கத்தொடங்கின.
எமது நெஞ்சத்து உணர்வுகள் வடிந்தோட ஒரு வாய்க்கால் தேவைப்படுகிறது.
அது
சிலருக்கு ஆத்திரமாக இருக்கலாம், சிலருக்குக் கோபமாக இருக்கலாம்,
சிலருக்கு வன்முறையாக இருக்கலாம், சிலருக்குக் கவிதையாக இருக்கலாம்,
சிலருக்கு அழுகையாக இருக்கலாம்.
எது எனது கவிதையின் பிறப்பிடம் என்பதைத் தேடவே இந்த அலசல். காதலென்னும் உணர்வு மேகம் இதயம் என்னும் மலையை உரசும் போது பிறந்த ஊற்றாகவே கவிதையுணர்வுகள் என்னுள் விழித்தன போலும்.
ஆனால் அது காதல் எனும் உணர்வினால் மட்டுமாக இருந்திருந்தால் அது அந்தக் காதல் கணங்களுடன் மரித்துப் போயிருக்குமே !
எப்படி இந்த நரை பூத்த பருவத்திலும் கவிதைகள் அடுக்கடுக்காய் வரும் இசைத்தட்டுகளைப் போல வந்து கொண்டேயிருக்கின்றன?
ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழிலே தொடங்கி, காதலுக்குள் கனிந்து, கவியரசர் கண்ணதாசனுடன் வளர்ந்து இன்றும் என் விரல் இடுக்குகளின் வழியாக ஆன்மீக கடலினுள் நீச்சலடித்து எழுத்துக்களாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் இன்று எண்ணிப்பார்க்கிறேன்.
ஆம் நான் எழுத வேண்டும் , கவிதை பாட வேண்டும், கண்டதைக் கேட்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என் வேட்கையின் ஆரம்பத்தைத் தேடும் படலத்திற்கு ஒரு விடை கிடைத்து விட்டது.
எனது எழுத்து வேட்கை , கவிதை ஊற்று என்னுள் தகித்துக் கொண்டிருக்கும் எம் ஆன்மாவின் நோக்கம்.
அதனையறியாமல் தேடல்களில் என் நேரத்தை செலவழித்து விட்டேன் என்று மட்டும் புரிதல் ஏற்பட்டு விட்டது.
ஆம் என் ஆன்மாவின் தாகம் தீருமட்டும் என் கைவிரல்களுக்கு ஓய்வில்லை என்று மட்டும் புரிகிறது.
மீண்டும் வருவேன்
அன்பன்
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home