தனிமையிலே இனிமை !
உள்ளத்தில் குதித்தாடும் உணர்வுகள் வார்த்தைகளாய் வந்து விழத் தவிக்கின்றன.
நெஞ்சத்தில் சதிராடும் நினவலைகள் கரையில் வந்து மோதி நுரைகளாகப் பாதங்களைத் தழுவிச் செல்லத் துடிக்கின்றன.
இதயமெனும் வானத்திலே உலா வரும் ஆசை எனும் வெண்ணிலா தானடைந்த அனுபவங்களின் பிதிபலிப்புக்களை காகிதத் தாளினிலே பிம்பமாகக் காட்டிடத் தாவிக் குதிக்கின்றது.
தலையிலே படியப் படிய வாரி அழகுபார்த்த சிகையின் கருமை நிறம் மாறி வெண் தளிர்களாய் நரைமுடியின் துவக்கம் காலத்தின் ஊடாக நாம் நடந்து வந்த பாதையின் காலத்தைக் காட்டி நிற்கு கண்ணாடியாக மிளிர்கிறது.
ஒரே ஒரு துளி விந்திலே எம்முயிரின் உருவாக்கம்.
இழுத்து விடும் மூச்சிலே கலந்திருக்கும் அந்தக் காற்றுக் கற்றையின் நீளத்திலே உயிர் வாழ்ந்து ஓய்ந்து பின் பெயரில்லாச்
சடலாமய் விழுந்து விடும் வாழ்க்கை. வாழ்க்கையிலே எத்தனையோ விதமான அனுபவங்களை நாம் நடந்து செல்லும் வாழ்க்கைச் சாலையிலே சந்தித்து மீள்கிறோம்.
அவற்றிலே சில இனிப்பானவை, சில கசப்பானவை. சில ஏன் வந்தன? என்று எண்ணச் செய்கிறது, சில இன்னும் வரக்கூடாதா? என்று ஏங்க வைக்கிறது.
தாயின் மடியிலிருந்து ஆரம்பித்து, தவழ்ந்து, நடந்து ஓடியாடி மீண்டும் மெதுவாய் நடக்கும் நிலைக்குத் திரும் போது பல சமயங்களில் எமது மனதில் எமது வாழ்வினை எடை போட்டுப் பார்க்கத் தேவையேற்படுகிறது.
சமயங்களில் தனிமை இனிக்கிறது. ஏதுடா? சக்தி துறவறம் பற்றிப் பேசுகிறானோ என்று எண்ணி விடாதீர்கள். துறவறத்தை நாடும் அளவிற்கு பக்குவமோ அன்றி தேவையோ இன்னும் எனக்கு ஏற்படவில்லை.
ஆனால் தனிமை என்றதும் ஏன் ஒரு மனிதன் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் தனிமையை நாடுகிறான் என்று எண்ணத் தோன்றுகிறது என்று எண்ணிப் பார்த்தேன், அந்த எண்ணத் துளிகள் இதயத்தரையில் விழிந்து தெறித்த போது வரும் துளிகளையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"தனிமை கண்டதுண்டு அதிலே சாரமிருக்குதம்மா" என்றான் மகாகவி பாரதி.
எது ? எப்போது? எங்கிருந்து வருகிறது என்று அறியாமல் எவர்றுகககவோ ஏங்குகிறோம். அது கிடைக்கா விடாலோ ஏமாற்றமடைகிறோம்.
காலை கண்விழித்ததிலிருந்து மாலை திரும்பவும் தன் கூட்டிற்குள் வந்து உறங்கும் வரை ஒரு சின்னக்குருவி தன்னுடைய குஞ்சுகளுக்காக இரை தேடிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும்.
அக்கூட்டினை ஒருநாள் முழுக்க அவதானித்துக் கொண்டிருக்கும் போது பார்த்து அதிசயித்தேன்.
"அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்றாள் ஒளவைப் பிராட்டி.
அனைத்தையும் பகுத்து, ஆராய்ந்து பல கருத்துக்களைக் கூறும் அளவிற்கு ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் தன் வாழ்க்கையில் உள்ள குறைகளைப் பற்றியே சிந்திக்க வேண்டிய தேவையேற்படுகிறது.
கிடைத்த வாழ்க்கையை சுவைக்க மறந்து கிடைக்காத வாழ்க்கைக்காக ஏங்குவதிலேயே எமது வாழ்வின் பெரும் பகுதியை விழுங்கி விடுகிறது.
இங்கேதான் தனிமையின் மகத்துவம் புரிகிறது. "தனிமை" என்றால் என்ன ? ஒருவரும் இல்லாத இடத்தில் தான் மட்டும் தனியாக அமர்ந்து கொள்வதுதான் தனிமையா?
தாமரை இலையை எடுத்துக் கொள்ளுங்கள் அதன் மீது உருளும் தண்ணீர்த்துளி , இலையின் மேலே உருண்டு கொண்டிருந்தாலும் அந்த இலையோடு ஓட்டாமலிருக்கிறதே !
அந்தத் தண்ணீர்த்துளிகூட தனிமையில் தான் இருக்கிறது.
அதாவது தன்னைச் சுற்றியிருக்கும் சூழலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஒரு நிமிடம் தன்னைப் பற்றிய சுயத்தை விசாரித்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் பல நேரங்களில் மனதில் ஏற்படும் ஆத்திர உணர்ச்சிகளையே தடுத்து விடலாம்.
என்னைப் பற்றி நான் பல கோணங்களில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தச் சிந்தனை என்னையே எனக்குப் புரியவைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
என்னைப் பற்றி இத்தனை தூரம், இத்தனை விடயங்களைஅறியாமல் இருந்து கொண்டிருந்தேனா என்று எண்ணும் போது எனக்கு அளவு கடந்த ஆச்சரியம் ஏற்படுகிறது.
தனியார் கம்பெனிகளில் பணிபுரியும் பலர் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு மனேஜரும் தனக்குக் கீழே பணிபுரிவோருடன் தனிமையில் "ஒருவரோடு ஒருவர்" (One to one) எனும் வகையிலான சந்திப்புக்களை நடத்துவார்கள்.
இது பொதுவாக மனேஜர் தனதுகீழ் பணுபுரிபவரைப் பற்றியோ அன்றிப் பணியாளர் மனேஜரைப் பற்றியோ தமக்கிருக்கும் அபிப்பிராயங்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் ஒருவகையான சந்திப்பாகும்.
நான் பணிபுரிந்த நிறுவனத்தில் ஏறத்தாழ 28 வருடங்கள் பணிபுரிந்திருந்தேன்.
எத்தனையோ மனேஜர்களைப் பார்த்து விட்டேன்.
நான் அப்போது ஒருமுறை பணிபுரிந்த பகுதி எனது நிறுவனத்தின் ஒரு அதியுயர்ந்த முக்கியமான பகுதியாகும்.
நிறுவனத்தின் முக்கியமான வாடிக்கையாளர்களுடன் அவர்களது தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் அவர்களுடன் நேரடியாக தொடர்பிலிருக்க வேண்டும்.
மிகவும் அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய பணி. இரவு, பகல் நேரங்களில் பணிபுரிய வேண்டிய நிலை.
எனது அப்போதைய மனேஜருடனான மாதாந்த சந்திப்பின் போது அவர் என்னைக் கேட்ட கேள்வி " நான் சந்திக்கும் பெரும்பாலானோர் மிகவும் ஆத்திர உணர்ச்சியுடன் தமது பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள் உன்னால் மட்டு எப்படி இப்படி அமைதியாகச் சிரித்துக் கொண்டே பேச முடிகிறது? என்பதே
அதற்கு எனது பதில்,
" நீங்கள் உங்கள் பணியைச் செய்கிறீர்கள்? நான் எனது பணியைச் செய்கிறேன் இதிலே கோபிப்பதற்கு என்ன இருக்கிறது? " எனபதே.
அவர் சிரித்துக் கொண்டே "உன்னைப் போன்ற நூறு பேருக்கு மனேஜராக என்னால் பணியாற்ற முடியும் ஏனெனில் எனது பணியை இலகுவாக்கி விட்டாய்" என்றார்.
அவர் அறியாதது என்னவென்றால் நானும் அதே போல மிகவும் கோபம் கொண்டு பேசுபவனாகத்தான் இருந்தேன்.
ஏனெனில் அப்போதுநான் என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்காததினால், எனது பலவீனங்களை நான் உணர்ந்து கொள்ளாமல் இருந்ததினால்.
அதற்காக இப்போது அனைத்தையும் அறிந்து விட்டேன் என்றோ இல்லை என்னை நானே முற்றாக உணர்ந்து கொண்டேன் என்றோ சொல்ல மாட்டேன். அந்த வகையில் நான் இன்னும் மணவன் தான்.
காலதேவன் 24 வருடங்கள் பயணம் செய்த பின்புதான் என் மனதில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினான்.
இவைகளையெல்லாம் எனக்கு உணர்த்தியது சில தனிமைக் கணங்களே.
தனிமைக்கென நான் ஒதுக்கும் சில வினாடிகள் கூட பல புது உணர்வுகளை நெஞ்சத்தில் தோற்றுவித்து, பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகின்றன.
ஒவ்வொருநாளுமே ஒவ்வொரு புது அத்தியாயமாகத் தென்படுகிறது.
பிறந்தோம் , ஏதோ வாழ்ந்து விடுவோம் அதன் பின்பு இறந்து விடுவோம் என்று வகுத்து வைத்துக் கொண்டு அப்படியே வாழ்ந்து விடுவதுதான் வாழ்க்கையா?
அதற்கொரு வாழ்க்கை தேவைதானா ?
மனம் சுயமாக சிந்திக்க பழகிக் கொள்ள வேண்டும். அந்தச் சிந்தனைகளிலே சுகம் பிறக்க வேண்டும்.
அந்தச் சுகம் எங்கே கிடைக்குமோ அங்கே போய் சிலகணங்கள் இளைப்பாறுவதில் என்ன தவறு ?
அத்தகைய ஒரு சுகாபனுவத்தைத் தனிமை கொடுக்குமானல் அந்தத் தனிமையைச் சில கணங்கள் ஸ்பரிசிப்பதில் என்ன தவ்று ?
ஒரு மனதன் வாழும் வரை எத்தனையோ பேர் அவனைத் தேடி வருகிறார்கள். உதவி பெறுகிறார்கள். அவனால் வாழ்கிறார்கள். அவன் மரணமடைந்து மயானத்தில் சம்பலானதும் அவனைத் தேடுவோர்கள் எத்தனை பேர் ?
வாழ்க்கையின் சுகதுக்கங்களைச் சமனாக்கும் பல தத்துவ ஞானங்களைச் சொல்லித் தந்த அதியுயர் மகான்களுக்கு இந்த நிலையானால். ஊர் பேர் தெரியாத இந்த்ச் சக்தி சக்திதாசன் எம்மாத்திரம் ?
"தனிமையிலே இனிமை காண முடியுமா?" அழகாய்க் கேட்டார் கவியரசர்.
காணமுடியும் தனிமை என்பதைத் தண்டனையாகவோ அல்லது மற்றவரைத் தள்ளி வைப்பதற்கு ஒரு காரணமாகவோ பயன்படுத்தாத வரை.
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home