உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
உள்ளத்தின் அடித்தளத்தில் ஈனமாய்க் கேட்கிறதே ஒரு குரல்.
ஓ! அதுதான் உண்மையோ ?
அது ஏன் இப்படி ஈனஸ்வரத்தில் முனகுகிறது ?
உண்மைகள் அப்படியே உருமாறாமல், உதடுகளின் வழியே வெளிவந்து விட்டால் எத்தனை உள்ளங்களைச் சிதைத்து விடுமோ?
என்ன ?
எதைப்பற்றி பேசுவதற்கு இவன் இந்தப் பீடிகை போடுகிறான் என்று எண்ணுகிறீர்களா?
பெரிதாக ஒன்றுமில்லை ஆனால் இந்த உலகில் உண்மைகள் பேசப்படுவதற்கு எத்தனை தடைகள் இருக்கின்றன என்று எண்ணிப்பார்க்கிறேன்.
அரிச்சந்திர மகாராஜாவின் கதையைக் கூறி உண்மையின் விலையை அழகாக உணர்த்துகிறது எமது புராணம்.
ஆனால் இந்த நூற்றாண்டிலே, இத்தகைய அவசரக் காலகட்டத்திலே, தன்னலம் மிகுந்தசமுதாய அமைப்பிலே உண்மையை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்களால் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்து விட முடிகிறது ?
ஆனாலும் உண்மையின் கூக்குரலை, உண்மையின் அரிச்சலை எமது மனங்களின் அடித்தளத்தில் இருந்து அறவே அகற்றிவிட முடிந்து விடுகிறதா? இல்லையே.
உண்மை என்பது ஒரு குத்தூசி
உள்ளத்தில் குத்தியெமை
பொய்மையெனும் தூக்கத்தினின்றும்
பொழுதோடு விடியவைக்கிறது
உள்ளத்திற்கு உண்மையாக
உலகத்திற்கு பயனுள்ளவராக
ஒருமுறை வாழ்ந்துவிடு
நீ மிதித்த மண்ணை நான்
முத்தமிடுகிறேன் தோழா !
இன்றும் என் மனதில் அழியாத நிகழ்வாக ஒன்று தடம் பதித்து நிற்கிறது. அப்போது எனக்கு வயது பத்திருக்கும்.
அப்போது நான் ஈழத்திலே யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.
சாரணர் இயக்கம் அதாவது ஆங்கிலத்தில் SCOUT ORGANISATION என்று சொல்லுவார்கள். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதன் மணவர்களுக்கான கிளையை " மாணவர் சாரணர் இயக்கம் அல்லது ஆங்கிலத்தில் CUB SCOUTS " என்று சொல்லுவார்கள்.
அந்த மணவர் சாரணர் இயக்கத்தில் நான் ஒரு அங்கத்தினனாக இருந்தேன்.
நான் அப்போது மிகுந்த பயந்த சுபாவம் உடையவன். அன்னை, தந்தை என்னும் வட்டத்துக்குள்ளே மட்டும் ஆடிப்பாடித் திரிபவன்.
இல்லத்தில் இருந்து பாடசாலை செல்வதற்கும், திரும்புவதற்கும் எனது பெற்றோர் வாடகைக்கார் ஏற்பாடு செய்திருந்தனர்.
அது எப்படி என்றால், வாடகைக்கார் பாடசாலை ஓட்டம் காலையிலும், மாலையிலும் நடத்தும்.
ஒரே தடவையில் ஏறத்தாழ பதினைந்து மாணவர்களை(சிறுவர்,சிறுமியரை) அடைத்துக் கொண்டு செல்லும். அப்படியான ஒரு வாடகைக்காரில் தான் நானும் செல்வேன்.
ஒருநாள் மாலையில் எனக்கு பாடசாலை முடிந்ததும் அந்த மாணவர் சாரணர் இயக்கக் கூட்டம் இருந்தது.
ஆகையால் மாலை 5 மணியளவில் தான் நான் வருவேன் என அந்தக் கார்ச்சாரதியிடம் சொல்லியிருந்தேன்.
மாலை ஜந்து மணிக்கு பாடசாலையின் முன்னால் காருக்காகக் காத்திருந்தேன். கார் வரவில்லை,
மணியோ ஜந்து மணி இருபது நிமிடமாகியிருந்தது.
மனம் பயத்தினால் அடித்துக் கொள்ளத் தொடங்கியது. முன்னால் ஒரு கைவிளக்கு
வண்டிக்காரன் பட்டாணி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவன்,
அவனும் தனது வியாபாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பினான்.
அதுவரை அவனது துணிவில் அங்கே நின்றிருந்த நான் பயத்தின் மிகுதியினால் மெதுவாக அவனின் பின்னால் நடக்கத் தொடங்கினேன்.
அந்தச் சமயம் எனது கார்ச்சாரதி என்னைத் தேடி வந்திருக்க வேண்டும், தான் தாமதமாக வந்ததை மறைப்பதற்காய், அவனோ நான் அந்த பட்டாணிச் சுண்டல்காரனின் பின்னால் நடந்து போனேன் அதனால்தான், என்னைக் கண்டுபிடிப்பதற்கு அவனுக்குத் தாமதமாகியது என்றே சாதித்தான்.
அப்படியே சென்று என் தாயாரிடமும் அதை ஒப்புவித்தான். அதைக் கேட்ட தாயார் அவனையே நம்பத் தலைப்பட்டார், அதன் நிலைப்பாடாக எனது சாரணர் இயக்க ஈடுபாடு நிறுத்தப்பட்டது.
என்னை அந்தச் சாரணர் இயக்கத்தில் ஈடுபடாது தாயார் நிறுத்த வேறு காரணம் இருந்தது.
சாரணர் இயக்கத்தின் உச்சியைத் தொட்ட என் மூத்த சகோதரரின் கல்விக்கு அது இடையூறாக இருந்தது என்பது எமது தாயார் கருத்து
இநானும் அவ்வழி போய்விடுவேனோ என அஞ்சிய தாயாருக்கு இந்தக் கார்ச்சாரதியின் பேச்சு மேலும் அச்சத்தை அதிகமாக்கி விட்டது.
பின்னாளில் நான் ஈழத்தில் கல்வியில் ஓகோ எந்று துலங்கவில்லை. அது வேறு விடயம்.
அப்போதுதான் நான் சொன்ன உண்மை எடுபடாமல் போனது எனது நெஞ்சில் ஆழப்பதிந்தது.
இது மிகவும் ஒரு சாதாரண விடயம். ஆனால் இதை நான் குறிப்பிடுவதன் காரணம், உண்மையின் கனம் அது யார் வாயில் இருந்து வருகிறது என்பதைப் பொறுத்தேயுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவே.
ஆனால் இத்தாக்கம் என்னை உண்மை பேசுவதில் இருந்து நீக்கி வைக்கவில்லை.
ஆனால் உண்மை பேசுகிறோம் என்பது மட்டும் ஒரு பலம் அல்ல, அந்த உண்மை நம்பப்பட வேண்டுமானால், அதற்குரிய இடத்தில் இருந்து பேசவேண்டியதின் அவசியத்தை எனக்கு உணர்த்தியது.
கண்மூடித்தனமாக உண்மைதான் பேசுவேன் என்று கூறி , சொல்லப்போகும் அந்த விடயத்தினால் எதுவித நன்மையுமின்றிப் பலரின் மனம் புண்ணணாகக்கூடிய விடயத்தைச் சொல்லுவது எந்தவிதத்திலும் தர்மமாகாது. அதற்காக பொய் பேசவேண்டும் என்பதல்ல என் கருத்து,
ஆனால் ஒரு உண்மை பேசப்படுவதானால் பல பாதகங்கள் ஏற்படலாம் என்று அறிந்திருக்கும் வேளையில் அதைப் பேசாது விடுவது நன்மைபய்க்குமெனில் அதுவே சமோசிதமானது என்றே கூறுவேன்.
மனசாட்சியெனும் தராசில் உண்மையின் எடைக்குச் சமனாக வேறு எதுவுமே இருக்கமுடியாது.
உண்மை உதடுகளை உரசிக்கொண்டு வெளியே வராமல் இருப்பினும், உள்ளத்துக்கு ஒளிவில்லாமல் வாழ்ந்து விட்டால் அதுகூடச் சிறந்த வாழ்க்கையே.
மனத்தைக் கோவிலாகவும், அங்கு உண்மையைத் தெய்வமாகவும் கொண்டு வாழ்ந்தால் வேறு எந்த தெய்வமுமோ அன்றி எந்த மதமுமோ ஒரு மனிதனுக்குத் தேவையில்லை.
ஆக மொத்தம் இங்கே என்ன சொல்ல விரும்புகிறேன்.
உண்மை பேசுங்கள். மற்றவர்கள் பேசுபவற்றில் உண்மையைத் தேடுங்கள்.
ஆனால் நீங்கள் பேசப்போகும் உண்மை யாருக்கும் எதுவிதமான நன்மையும் பயக்காமல், பலரைப் பாதிக்கப் போகிறது என்பது தெரிந்தும், உங்களை மட்டும் ஒரு உண்மை பேசுபவனாக காட்டிக்கொள்ள விரும்பி ஒன்றைப்பேசுவதை விடுத்து அவ்விடத்தில் மெளனம் காத்திடுங்கள்.
ஏனென்றால் சமயத்தில் அந்த மெளனத்தின் மூலம் எத்தனையோ உயிர்களைக் காத்திடக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கிறது.
இது புத்திமதி அல்ல. அறிவுரை அல்ல . இந்த அண்ணனின் அனுபவம்.
அன்பன்
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home