தேனுண்ணும் வண்டு
தமிழென்னும் அழகிய தோட்டம். அற்புத மலர்கள் சுகந்தத்தை துல்லியமாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
அம்மலரின் சுகந்தத்தினால் கவரப்பட்டு வண்டொன்று பறந்து சென்று மெதுவாக இதழ்களைச் சிதைக்காமல் தமிழெனும் தேனைச் சுவைத்திட அமர்கிறது.
இதயமெனும் ஊஞ்சலிலே அன்பெனும் தென்றலாக இனிமையான வருடல்களுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இனிய உறவுகளே !
என்னுடைய இந்தச் சிற்றறிவுக்கு எட்டிய வகையிலே தெள்ளிய தமிழ்த் தேனை அள்ளிப்பருகும் ஒரு இனிய மாலை வேளை.
நான் சுவைத்த துல்லிய சுவையின் இனிமையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆவலினால் கைவிரல்கள் கணணியின் விசைப்பலகியுடன் உறவாடி எழுப்பிய இசையில் குதிர்ந்த இப்பகிர்வை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்,
பட்டதெல்லாம் போதுமென்று ஆன்மீக உணர்வின் பால் தன் வாழ்வைத் திருப்பிய திருவெண்காடர் ஒரு மகாமேதை.
அவரின் எண்ணத்தில் புதைந்திருந்த தமிழ்ப்புதையல்கள் தத்துவத்துளிகளாகத் தெறித்து விழுந்த போது ஒவ்வொரு துளியும் இம்மானிட வாழ்க்கையின் அரும்பெரும் தத்துவங்களை விளக்கும் ஒளிகொண்ட முத்துக்களாகத் திகழ்ந்தன.
வாழ்வின் நிலையாமையை நீர்க்குமிழி போன்ற மனித வாழ்க்கையின் உண்மைப் பொருளை உணராமல் மனிதர் மதிகெட்டு வாழ்வதனை அழகாய் அன்னைத்தமிழில் பொருள் பதிய பட்டினத்தார் கூறியவைகளில் மனதைப் பறிகொடுத்தவர்களுள் கவியரசர் கண்ணதாசனும் ஒருவராவார்.
பணத்தை ஈட்டுவதிலே அவருக்கு நிகர் அவரே என்று வாழ்ந்த பட்டினத்துச் செட்டியின் மனதை ஒருநிலைப்படுத்திய இறையருள் அவருக்கு அளவில்லாத ஞானத்தை அள்ளி வழங்கியது.
அது போலவே எமது கவியரசரின் செல்வத்தின் அணைப்பில் கிடந்த காலங்களும் பின் அச்செல்வத்தை கரைத்துக் குடித்த காலங்களும் அவற்றின் விளைவாக அவர் மனதில் எழுந்த ஞான அலைகளையும் அர்த்தமுள்ள இந்துமதமாக நாம் அறிந்திருக்கிறோம்.
செல்வத்தை ஈட்டிவர புறப்பட்ட செல்வமகன் வெறும் தவிட்டு உமியைக் கொண்டு கொட்ட அது தங்கமாக மாறியது.
அதன் வழி அவர் மகன் "காதற்ற ஊசியும் வாராது கடை வழிக்கே " என்று எழுதி வைத்து விட்ட மறைந்த நிகழ்வினால் உதித்த தத்துவஞானத்தினால் முத்து முத்தாய் அவர் வாயிலிருந்து சொட்டிய விலையில்லா தத்துவச் சொட்டுகள் எமை விந்தையிலும் விந்தையெனும் வியப்பினுள் ஆழ்த்தி விடும் அல்லவா?
ஒருவனது வாழ்க்கையிலே சங்கு வகிக்கும் பங்கை மூன்று முக்கிய கட்டங்களாகக் வகுத்து அச்சங்கின் மகத்துவத்தை எமக்கு உணர்த்தி எம்வாழ்க்கையின் உண்மைநிலையுடன் எம்மைச் சங்கமிக்க வைக்கும் பட்டினத்தார் அறிவே அறிவு.
முதற்சங்கம் அமுதூட்டும்
மொய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்
கடைச்சங்கம் ஆம்போது அது ஊதும்
அம்மட்டோ இம்மட்டோ நாம் வாழ்ந்த நலம்
அன்னையின் கருவில் பதுகாப்பாய் நீந்தி மகிழ்ந்து பின் அவள் தன் மடியினிலே தவழ்ந்து அவளின் அன்புச் சுரப்பினை பாலாய் அருந்தி வளர்ந்து மழலையாய்த் தவழும் போது அங்கு முதன்முறையாக எமது வாழ்வோடு சங்கைச் சங்கமிக்க வைக்கிறாரே ! பாருங்கள்.
ஆமாம் , முதற்சங்கு என் செய்யுமாம் எமக்கு அமுதூட்டுமாம் ! எமதன்னையின் கைகளினால் அச்சங்கினுள் உள்வாங்கப்பட்ட வெள்ளை அமுதான பாலை எமக்கு ஊட்டும் உன்னதமான பணியுடன் சங்கு வாழ்வோடு இணைகிறது.
சரி இடையிலே இந்தச் சங்கிற்கென்ன வேலை எனும் கேள்வி எழும்போது,
வாலிப முறுக்கேறிய உடலில் ஓடும் சூடான இரத்தம் கிளப்பும் காதல் உணர்வுகள் கார்மேகமாய் கலைந்தோடும் குழல் கொண்ட இளம் கனிகையரின் வழி ஓடுமல்லவா ? ஓடி ய அக்காதல் உணர்வுகள் அக்கனிகையை கைப்பிடிக்கும் காலமதில் திருமணச்சடங்கில் ஒலிக்கின்றதாம் மீண்டும் அச்சங்கு..
சும்மா ஊதிற்றா அச்சங்கு ? இல்லையே எம்மை நல்லதோர் விலங்கால் பிணைக்கிறதாம். எத்தனை அழகாய்ப் புனைந்திருக்கிறார் கருத்தை ?
திருமணம் என்பது ஒரு ஆணுக்கு விலங்கிடுவது போல என்கிறார். காணும் வனப்பு மிகு கன்னியரின் பின்னே காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்தோடும் மனதினை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில்லையா திருமணம். அப்படியாயின் அது ஒரு விலங்கிடுவது போன்றதுதானே ! ஆனால் அவ்விலங்கு இல்லறம் எனும் நல்லறத்தினுள் எம்மைப் பிணைப்பதினால் அதனை நல்விலங்கு எனப்புனைந்திருக்கிறார் எமது பட்டினத்தார்.
அத்தோடு அச்சங்கின் பணி முடிந்து விடவில்லையே ! காற்றடைத்த இப்பையினுள் உள்ள காற்று வெளியேறும் போது கடைசியாக எமது வாழ்வின் முடிவை அறிவிப்பதற்காக ஊதப்படுகிறதாம் இச்சங்கு.
அச்சங்கிர்கு ஒலியூட்டி வெளியேறும் காற்ரைப் போல நாம் வாழ்ந்த காலம்வரை எமது உடலுக்கு உயிர் எனும் ஒலியூட்டி பின் வெளியேறுகிற மூச்சுக்காற்றின் இயக்க நியதிகளை விளக்கும் வகையாமோ இது ?
இத்தகைய ஒரு நிலையில்லாத வாழ்க்கை, மூன்றே மூன்று சங்கூதல்களில் விளக்கப்பட்டு விடும் வாழ்வை "நாம் இப்படி வாழ்ந்தோம் அப்படி வாழ்ந்தோம் " என்று பறை தட்டி வாழும் எமது அறியாமையைக் கண்டு சிரிக்கிறாரோ பட்டினத்தார்.
எமது வாழ்வின் அடுத்த கணத்திலே என்ன நடக்கும் என்பதையே நிர்ணயிக்கும் வல்லமை அற்ற மனிதர் நாம். ஆனால் ஏதோ நீடித்த வாழ்வை அடைந்து விட்டவர்கள் போல இறுமாப்புடன் வாழ்கிறோம் இல்லையா? எது எமது வாழ்க்கையில் எம்மோடு எப்போதும் அதாவது நூறுசதவிகிதம் பூரணத்துவமாக இணைந்திருக்கக் கூடிய ஒன்றா ?
ஊரா ? உற்றாரா ? பெர்ற பெரும் பேரா ? மனைவியரா? இல்லை பெற்ற பிள்ளைகளா? அன்றிச் சீரா? இல்லைப் பெருஞ் செல்வமா? நாம் பிறந்த தேசத்திலே எது எம்மோடு இறுதிவரை இணைந்திருப்பது ?
தமிழ் பட்டினத்தார் புனைவிலே புதுமைகளைப் புகுத்தி விளையாடுகிறது. பார்ப்போமா ?
ஊரும் சதமல்ல – உற்றார் சதமல்ல – உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல – பெண்டில் சதமல்ல – பிள்ளைகளுஞ்
சீரும் சதமல்ல – செல்வம் சதமல்ல – தேசத்திலே
யாரும் சதமல்ல
அப்பப்பா ? இவரின் புலமையும், வாழ்வின் ஞானத்தையும் வார்த்தைகளில் விபரித்து விட முடியுமா?
வாழ்க்கையின் உண்மை நிலையை அற்புதமாக எதுகை, மோனையுடன் யாத்து அன்னைத்தமிழில் கோர்த்து இப்பட்டினத்துச் செட்டி எம்முடன் பகிர்ந்திருக்கிறாரே அதைப் படித்து மகிழ்வதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா?
சுற்ரத்தை எல்லாம் ஒடுக்குகிறோம் இந்தத் தேகத்தினுள்ளே எமது உயிரை அடக்கி வைத்துக் கொண்டு நூறுவயதுவரை வாழ்ந்து விடலாம் எனக் கனவு கண்டு அரும்பாடுப்பட்டு பொருளைச் சேர்த்து குவித்து வைக்கிறோம். இப்பொருளைச் சேர்த்துக் குவித்து வைப்பதை பொருள் சேர்ப்பதில் வித்தகராக விளங்கிய பட்டினத்தடிகளை விட வேறு யாரால் பூரணமாகப் புரிந்து கொள்ள முடியும் ? அப்பொருளுக்கு என்ன நடக்கிறதாம் ? எமது தேகக் கூட்டினுள்ளே காத்து வைத்திருக்கும் உயிரைக் கொற்றவன் கவர்ந்து செல்கையில் அப்பொருள் எமக்குக் கை கொடுக்குமா? எல்லை எம்கூட வந்து விடுமா ?
அழகுறக் கேட்கிறார் இந்த ஞானச் செட்டி. அவரிடம் இப்போது இருப்பது அழியாச் செல்வமான ஞானமல்லவா?
உடக்கை ஒருக்கி உயிரை அடைத்து வைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே
எத்துணை அழகான சொற்சுவை நிறைந்த நற்றமிழ்க் கோவையிது !
விட்டுவிடப் போகுது உயிர் , விட்டவுடன் சுட்டு விடப் போகுது உடல் . ஆமாம் உடலை விட்டு உயிர் பிரிந்ததும் யார்தான் கூட வரப் போகிறார்கள். பட்டினத்தார் சொன்ன அற்புதக் கருத்தை எளிமையாக பாமர மக்களும் புரிந்து கொள்லக்கூடிய வகையில் தனக்கேயுரிய பாணியில் விளக்கத் தலைப்பட்டார் எமது கவியரசர் கண்ணதாசன்.
பிறந்தது ஒரு பாடலின் முதல் பத்தி. " பாத காணிக்கை " எனும் திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஏ. அசோகனின் நடிப்பில் சிம்மக்குரலோன் டி.எம்.எஸ் இன் குரலில் மிதந்த நெஞ்சை விட்டகலா பாடல்,
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ ?
எத்த்னை எளிமையாக இருக்கிறது இம்முத்துக்களித் தாங்கிய சிப்பி எப்படியிருந்தது பார்ப்போமா ? பட்டினத்தாரின் பக்குவமான வரிகள்,
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே – விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே – விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புணிணிய பாவமுமே !
கவியரசரின் பாடலுக்கும் பட்டினத்தாரின் வரிகளுக்கும் ஒரு சிறிய வித்தியாசம். கடைசி வரை வருவது யார் ? எனும் கெள்வியைத் தூக்கிப் போடவில்லை எமது பட்டினத்தார். கடைசிவரை எது வரும் என்பதை அழகாய்ச் சொல்லியிருக்கிறார். அதாவது கடைசி வரை எம்முடன் கூட வருவது நாம் பண்ணிய பாவமும், செய்த புண்ணியமுமே என்கிறார் பட்டினத்துச் சித்தர்.
ஆனால்; கவியரசரோ தனக்கேயிரிய பாணியில் ஒரு கேள்விக்குறியில் முடித்து விட்டார் போங்கள் ? ஏன் அப்பத்தியின் முடிவை அப்படி யாத்தார் என்று நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக கவியரசர் "செய்த பாவமும் புண்ணியமும் தான் கூட வரும் @ என்று சொல்லும் அருகதை மாமேதையான பட்டினத்தாருக்கே உண்டு என்று அடக்கமாக பதிலளித்தார் எனபது ஒரு செய்தி.
சரி பட்டினத்தாரைப் பார்த்த அடியார் ஒருவர் துறவி என்பதற்கு விளக்கத்தை கேட்டிருக்கிரார் போலும். பாருங்களேன் அஞ்ஞானியின் அழகிய விளக்கத்தை,
பேய் போலத் திரிந்து
பிணம் போலக் கிடந்து
இட்ட பிச்சை எல்லாம்
நாய் போல அருந்தி
நரி போல உழன்று
நன் மங்கையரைத்
தாய் போலக் கருதி
தமர் போல அனைவர்க்கும்
தாழ்மை சொல்லி
இருப்பர் கண்டீர்
உண்மை ஞானம் தெளிந்தோர்
பேய்கள் வசிப்பதற்கென்று ஒரு இடம் இருக்கிறதா?
இல்லையே !
பேய்களுக்கு சொந்தம் கொண்டாட இல்லம், காணி , உடமைகள் ஏதாவது இருக்கிறதா ?
இல்லையே !
அது போலத்தான் துறவியரும் ஏதுமற்று இருக்க வேண்டும் என்கிறார்.
எங்கு தூங்கப் போகும் நேரத்தில் இருக்கிறார்களோ அங்கேயே பிணம் போல அமைதியாக, அடக்கமாக அயர்ந்து விட வேண்டுமாம் அதுதான் துறவியர்க்கு அழகாம்.
நாய் உணவை யார் இட்டார்கள் என்று பாகுபாடு பார்க்குமா?
யார் கையால் கிடைத்தாலும் எதுவித பேதமுமின்றி அதை அருந்தி விடுமல்லவா?
அது போலத்தான் துறவியரும் பிச்சை எவரிடமிருந்து கிடைக்கிறது என்னும் பேதமில்லாமல் கிடைப்பதை உண்டு கிடந்து விட வேண்டும் என்கிறார்.
நரிகள் எங்கே போகிறோம் எனும் நோக்கத்தில் செல்கின்றனவா? இல்லை தமக்குத் தேவையானது எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் அலையும் குணம் கொண்டது அல்லவா நரிகள்.
அது போலத்தான் துறவிகள் இறையருள் எங்கெங்கு கிடைக்கும் என்று எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் உழன்று சென்று வர வேண்டும் என்கிறார் போலும்.
காமத்தை அடக்கி விடு என்று சாதாரணமாகச் சொல்லி இருந்திருக்கலாம்.
ஆனால் பட்டினத்துச் சித்தரோ தனக்கேயுரிய பாணியில் நல்ல பெண்களை நல்ல குணமுள்ள எம் தமிழ் நங்கையரை தமது தாய் போலக் கருதி மதிக்க வேண்டும் என்பதைச் சொல்லி ஒழுக்கத்தின் மேன்மையை விளித்துக் காட்டியிருக்கிறார்.
வயது பேதமின்றி அனைத்து மனிதரின் தாள் வணங்கி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் அதுதான் துறவியரின் பண்பு என்கிறார் பாருங்கள்.
இத்தகையோர் தான் உண்மையான ஞானத்தை தம்முள்ளே கொண்ட ஞானியர் என்பதைத் தெளிபுபட எதுவித திரிபுமின்றிச் சொல்லியிருக்கிறார் பட்டினத்தார்.
பட்டினத்தார் பட்டறிந்து உணர்ந்த ஒரு சித்தர்.
வாழ்வில் சாதாரண மனித வாழ்க்கையில் உழன்று இயல்பான இன்பதுன்பங்களை அடைந்து அதன் வழி தான் பெற்ற அனுபவத்தின் விளைவாக அடைந்தஞானத்தின் வழி இறைவனை நோக்கிய ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டவர்.
கவியரசரும் வாழ்வில் போகக்கூடாத பாதையெல்லாம் போனவர்.
சேரக்கூடாத கூட்டெல்லாம் சேர்ந்தவர்.
கெட்டழிந்த காரணத்தினால் பட்டறிந்த அறிவின் மூலம் அனுபவத்தைச் சேகரித்தவர் அவர் தனது செய்கைகளை தத்துவ நோக்கோடு கூறுவதைப் பாருங்கள்,
தொட்ட பின் பாம்பு என்றும்
சுட்ட பின் நெருப்பு என்றும்
பட்ட பின் உணர்வதே என்
பழக்கமென்று ஆன பின்பு
கெட்டவன் அழுகை தானே
கெடுவதை நிறுத்தல் வேண்டும்
பட்ட பின் தேறல் தானே
பட்டினத்தார்கள் வாழ்க்கை
ஆமாம் பட்டுத் தெளிவதே தனது பழக்கம் அதனால் வந்த அனுபவத்தின் வழி தான் கெட்டதைச் சொல்லி அழுவதினால் வளரும் தலைமுறைக்கு வாழ்வின் நெளிவுசுளிவுகளைச் சுட்டிக் காட்ட விளைந்ததன் பலனே அவரின் "வனவாசம்" , "மனவாசம்" எனும் நூல்கள்.
அன்பினிய வாசக உள்ளங்களே ! நான் படித்தது, கேட்டது, அறிந்தது என்று பல வழிகளின் மூலம் எனது சிர்றறிவுக்குள் சேகரித்த பாமரனின் பார்வையாக இதைப் படைத்தேன் ரசித்திருந்தால் வாழ்த்துங்கள், தவறிருந்தால் மன்னியுங்கள்.
மீண்டும் வரும் வரை
க்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home