நினைத்தது நடக்காததும் ! நடந்ததை நினைக்காததும் !
மனிதரின் வாழ்க்கையில் தோல்வி என்றால் என்ன என்று நினைக்கும் பொழுது அதன் அர்த்தம் பலவ)ப்படுகிறது. அது மனதுக்கு மனம் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது.
நினைத்தது நடக்காதது தோல்வி என்னும் போது, நடந்ததை நினைக்காததும் தோல்வியே என்பதைப் பலசமயங்களில் எமது மனம் ஏற்றுக்கொள்ள மறந்தோ அன்றி மறுத்தோ விடுகிறது.
மனதில் ஒன்றை லட்சியமாக வரித்துக் கொண்டு விடுகிறோம். அது எத்தனை தூரம் சாத்தியமாகக் கூடிய விழுக்காடு உடையது என்பதை சிந்திக்க மறந்து விடுகிறோம்.
அந்த இலட்சியத்தை நோக்கி எமது முழுப்பிரவாகத்தையும் திருப்பி விடுகிறோம்.
அப்போது எமக்கு அருகே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு எமது பிரயாசைகள் வீணாகப் போகப்போகிறது என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.
ஏனெனில் நாம் கொண்ட இலட்சியம் நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் சொற்பமே என்பது அவருக்குத் தெரிகிறது.
அனுவத்திலாழ்ந்த அவர் அறிவுரை கூறுகிறார், ஆனால் தனது இலட்சியம் என்னும் வெறியில் மூழ்கிய இவனுக்கோ அவரது அறிவுரை அவரது ஆற்றாமையின் வெளிப்பாடு என்றோ அன்றித் தான் அடையப் போகும் வெற்றியின் மீது கொண்ட பொறாமையோ என்ற எண்ணம் ஏற்படுவதால். அவரை ஒதுக்கித் தள்ளி விடுகிறான்.
இதுதான் பலசமயங்களில் நடக்கும் யதார்த்தமாகும். இந்த அடிப்படையிலே தம்மைச் சிதைத்துக் கொண்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன்.
எனது இளம் பிராயத்திலே அந்த இளரத்தத்தின் வேகத்திலே நான் கூட அந்தவழிப்பயணத்தில் சில காததூரம் நடந்திருக்கிறேன்.
ஆனால் என் மீது, நான் நம்பும் அந்த எனை மீறிய சக்திக்கு இருந்த அபிமானத்தால் எனது பாதையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி அந்தப் பயணத்தின் இலக்கை மாற்றி என்னை ஓரளவு தேற்றி விட்டது என்றே சொல்லுவேன்
ஆனால் அந்த மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அது நான் மனதில் வரித்திருந்த எனது இலட்சியம் என்னும் இலக்குக்கு முரணாக அமைந்ததால் அவையனைத்துமே எனக்குத் தோல்விகள் போன்றே எனக்குக் காட்சியளித்தன.
வாழ்க்கையின் உண்மையின் யதார்த்த நிலைகள் புரியாத நிலையில் இருந்ததால் அந்த நிகழ்வுகளுக்குள் புதைந்திருந்த வெற்றிகளின் நிழல்கள் என்மீது படியவில்லை.
என் மனத்திரையை மறைத்திருந்த இருளால், கார்மேகம் விலகச் சூரிய ஒளி மீண்டும் வரும் எனும் உண்மை உணரப்படாத நிலையில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.
இதை எதற்கு நான் இங்கே குறிப்பாகச் சுட்டிக்காட்டத் தலைப்படுகிறேன் என்றால், தோல்விகள் என்று நாம் நினைப்பவை எல்லாமே தோல்விகளும் அல்ல.
வெற்றிகள் என நினைத்து தேடி நாம் ஓடும் இலக்குகள் அனைத்தும் வெற்றிகளும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே.
பரீட்சையில் தோல்வி அடையும் போது, பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டோம் என்னும் ஆதங்கம் மனதில் தோன்றாமல் இருந்தால் அந்த மனம் மனித உணர்வுகள் அற்ற மனம்.
ஆனால் அதே மனம் வாழ்க்கையின் பின்னோரு காலத்தில் திரும்பிப் பார்க்கையில் பல சமயங்களில் அந்தப் பரீட்சைத் தோல்வியே.
வாழ்க்கையின் தவறாக வரித்துக் கொண்ட இலட்சியப் பாதையை விடுத்து சரியான பாதைக்கு வழிமாற்றத் தேவைப்பட்ட நிகழ்வு என்பது தெரிய வரும்.
வாழ்க்கையில் தவறான பழக்க வழக்கங்களினால் கேளிக்கைகளில் ஈடுபட்டு தனது பரீட்சையில் தோல்வியடைபவர்களை நான் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை.
ஆனால் தன்னால் இயன்ற மட்டும் முயன்று தன்னை மீறிய சுற்றுப்புற காரணிகளால் பரீட்சையில் தோல்வியுறும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி தோல்வியடையும் போது அதற்குக் காரணம் தெரியாமல் வாழ்க்கையில் விரக்தியுற்று தம்மை வருத்திக் கொள்ளும் பலரைப் பார்க்கிறோம்.
அவர்களுக்கெல்லாம் மனதில் ஒரு புதுத்தெம்பு பிறக்க வேண்டும், உங்களுக்கு விளைந்த தடைக்குக் கூட ஒரு காரணம் இருக்கிறது என்று நம்புங்கள்.
எதைக் கைவிட்டாலும் நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்.
தேடிப்போகும் காதல் பலசமயங்கள் ஓடிப்போகும், ஓடிப்போகும் போது உங்களை உண்மையான காதல் தேடி வரும்.
முதலாவது வகையோ அன்றி இரண்டாவது வகையோ தோல்வியாகாது. உங்களைத் தேடிவரும் வெற்றிகள் அனைத்துக்குமே பெரும்பான்மையாக நீங்கள் தகுதியானவர்களாகவே இருப்பீர்கள்.
அப்போது எனக்கு 17 வயது இருக்கும். குடும்பத்திலே கடைசிப் பிள்ளை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்.
கேட்டதெல்லாம் கிடைக்கும் ஒரு நிலையிருந்தது, நண்பர்களுடன் வாழ்க்கையின் வசந்தங்களை மட்டும் வாழ்ந்து பார்க்கும் வயது.
ஒருநாள் எதிர்காலப் பலன்கள் சொல்லும் ஒருவரை ஆலய மண்டபத்தில் நானும் எனது நண்பனும் சந்தித்தோம்.
எனது நண்பன் அத்தருணத்தில் வெளிநாடு செல்வதிலேயே குறியாக இருந்தான், நானோ அதற்கு எதிர்மாறாக இருந்தேன்.
எனது ஜாதகப்படி நான் வெகு சீக்கிரம் வெளிநாடு போவேன் என்றும், எனக்கு அமையப்போகும் வாழ்க்கைதுணை வடக்கேயிருந்து வரும் என்றும் சொன்னார் அந்தப் பெரியவர்.
நான் இருந்ததோ யாழ்ப்பாணம் எமக்கு வடதிசையில் இருப்பது தமிழகம்.
வெளிநாடு செல்லப்பிரியப்படாதவன், உள்நாட்டிலே எனது வயதொத்த ஒரு நங்கையை மனதினுள் ரகசியமாக விரும்பியவன் என்னைப் போய் …..
அவரைப்பார்த்து நானும் எனது நண்பனும் எள்ளிநகையாடினோம்.
ஆனால் நடந்தது என்ன ?
அடுத்த வருடமே நான் லண்டன் பயணமானேன்.
அது மட்டுமல்ல, லண்டனில் ஒரு தமிழக நங்கையை சந்தித்து என் வாழ்க்கைத்துணையாக்கிக் கொண்டேன்.
இப்போது திரும்பவும் அந்த ஆலய மண்டபத்தில் அந்தப் பலன் சொல்பவரை நினைந்து பார்த்தால் . . . .
அதற்காக நான் ஜாதகம், கைரேகை என்பதெல்லாம் சரி என்று வாதிடுவதற்காக இதைக் கூறவில்லை.
ஒரு காலகட்டத்தில் நம்பமுடியாமல் இருந்தது, அதுவே தோல்வி என நினைத்தது மற்றொரு காலத்தில் வேறுவிதமாக, யதார்த்தமாக, தோல்வியில் வெற்றியாக அமைந்து விடுவதைச் சுட்டிக் காட்டுவதே என் நோக்கம்.
தோல்வி என்பது நாம் நினைத்தது நடக்காமல் போவது அல்ல. நடந்ததை நாம் நினைத்து அதனால் அடைந்த அனுபவத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளாததுவே உண்மையான தோல்வியாகும்.
இதைப்படிக்கும் இளநெஞ்சங்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் தோற்று விட்டோம் என்று ஒரு போதுமே விரக்தி அடைந்து விடாதீர்கள்.
அந்தத் தோல்வியால் கிடைத்த அனுபவத்தை வைத்து மற்றொரு பாதையில் நீங்கள் நிச்சயம் வெற்றி அடைவீர்கள்.
அப்படி வெல்லும் போது முதலில் நீங்கள் தோல்வி என்னும் நிகழ்வு கொடுத்த அனுபவத்தை மட்டும் மறந்து விடாதீர்கள், ஏனேனில் அதை மறப்பதுதான் உண்மையான தோல்வி என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
மீண்டும் வரும்வரை
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home