Saturday, December 16, 2023

நான் இன்னும் மாணவன் தான்

இன்று 16.12.2023 எனது அம்மாவின் 25வது சிரார்த்த தினம்.

காலை ஆலயம் சென்று வருடாந்தம் நான் செய்யும் ஆலய கிருத்திகைகளைச் செய்வதற்காக கிளம்பினேன்.

தேவையான சில பொருட்கள் வாங்குவதற்காக ஆகயம் செல்லும் வழியில் உள்ள ஒரு தமிழ்க் கடைக்குள் நுழைந்தேன்.

பொருட்களை எடுத்து விட்டு பணம் செலுத்துவதற்காக அங்கு நின்றிருந்த தம்பியிடம் பொருட்களைக் கொடுத்தேன்.

காலையாதலால் அங்கு என்னைத் தவிர ஒரு சில பேர்களே கடைக்குள் நின்றிருந்தார்கள்.

கடையின் முன்னால் நின்றிருந்த ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு தம்பி ஒவ்வொன்றாகப். பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது பணம் செலுத்துமிடத்தில் உள்ள தம்பியிடம் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தவர்,
" சும்மா கையைக் கட்டிக்கொண்டு நிற்காமல் நீயும் பொருட்களை இறக்கலாமே ! கடையில் யாருமே இல்லையே ! " என்று கூறினார்.

அடடா அந்தத் தம்பிக்கு கோபம் வந்து ஏதாவது சொல்லப் போகிறாரே என்று ஒரு வாக்குவாதத்தை எதிர்நோக்கினேன்.

ஆனால் அந்தப் பணம் செலுத்துமிடத்தில் நின்றிருந்த தம்பியோ கோபத்திற்குப் பதிலாக புன்னகையுடன் அங்கு சாமன்களை அடுக்கிக் கொண்டிருந்த மற்றொருவரின் பெயரை அழைத்து
" உனக்கு ஒன்று தெரியுமா ? ஆமை ஆயிரம் முட்டைகளையிட்டு விட்டு.அமைதியாகச் செல்லும் ஆனால் கோழியோ ஒரு முட்டையை இட்டு விட்டு ஊரையே அழைத்து விடும் " என்றார்.

இதைக் கேட்டதும் அவரை நோக்கி வார்த்தைகளை வீசிய அந்தத் தம்பியும் சிரித்து விட்டார்.

அதன் பின்னால் இருந்த அர்த்தம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அதாவது அவரை நோக்கி த்ஜான் கடுமையாக வேலை செய்யும்போது நீ சும்மா நிற்கிறாயே என்று சுட்டிக் காட்டிய தம்பிக்கு " நீ இன்று ஒருநாள் இவ்வேலையைச் செய்து விட்டு ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டது போலச் சொல்கிறாயா ? நான் தான் இதைத் தினமும் செய்கிறேனே என்பதை எத்தனை நாசூக்காகச் சொல்லியிருக்கிறார் என்று புரிந்தது.

சாமான்களைக் கையெலெடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமான நான் அந்தத் தம்பியை நோக்கி " அம்மாவின் சிரார்த்தத்திற்காக பொருட்கள் வாங்க வந்த நான் இதுவரை கேட்டிராத ஒரு அருமையான விளக்கத்தை நெஞ்சில் ஏந்திச் செல்கிறேன் தம்பி " என்றதும் அந்தத் தம்பி சங்கோஜத்துடன் புன்னகத்தார்.

காரில் நான் ஆலயம் செல்லும் வழியெங்கும் என் மனம் ஆழ்ந்த சிந்தனையிலாழ்ந்தது.

எங்கு, எப்போது, எவரிடம் இருந்து எத்தகைய அருமையான தத்துவங்களையும், நிலைமைகளைச் சமயோசித்மாகக் கையாளும் திறமையையும் கற்றுக் கொள்கிறோம் என்று எண்ணும் போது இப்பிரபஞ்சத்தின் மகிமையை உணரக்கூடியதாக இருந்தது.

அவ்வைப்பிராட்டியார் கூறிய " கற்றது கையளவு கல்லாதது கடலளவு " எனும் கூற்றின் உண்மைத்தன்மையை எடுத்துக் காட்டியது.

வாழ்வென்னும் பயணத்தில் 67வது மைல் கல்லைத் தொட்டு நிற்கிறேன்.

அனைத்தும்.ஓரளவு அனுபவங்களாய். உள்ளத்தில் பதிந்து விட்டது என்று ஒரு எண்ணம் உள்ளத்தில் ஒரு ஒரத்தில் உறைந்து விட்டது.

ஆனால் இப்படியான இனிய கணங்களை ரசித்து அதிலுள்ள அர்த்தங்களை உள்வான்கும் போது இல்லை நான் இன்னமும் மாணவனே !

கற்றுக்கொள்ள இப்பிரபஞ்சத்தில் எண்ணற்றவைகள் உள்ளன.

அதைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் போகுமிடமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள் எனும் உள்ளத்துக்கு வெளிச்சமாகிறது.

நூற்றுக்கு நூறு எனும் திரைப்படத்தில் காவியக் கவிஞர் வாலியின் வரிகளில் வி.குமார் அவர்களின் இசையில் ஒரு பாடலுண்டு.

உங்களில் ஒருவன் நான்
இரு கண்களில் பேதம் ஏன் ?
நானும் மாணவன் தான்
நான் கற்றது கையளவு
கல்லாதது உலகளவு
வாழ்க்கை என்பதே சோதனை பாரு
வாங்க வேண்டும் அதில்
நூற்றுக்கு நூறு

என்று அந்தப் பாடல் வரிகள் வரும்.

இன்று என் அன்னையின் நினைவு தினத்தில் அன்னையின் ஆசியோடு இந்த மாணவன் ஒரு புதிய செய்தியை உள்வாங்கிக் கொண்டான்.

" ஆமை ஆயிரம் முடைகளையிட்டு விட்டு அமைதியாகச் செல்லும் ஆனால் கோழியோ ஒரேயொரு முட்டையை இட்டு விட்டு ஊரையே கூட்டி விடும் "

எனக்குள்ளே என் மனம் என்னைக் கேட்டது
நானொரு ஆமையா ? இல்லை கோழியா ?

ஓ ! இதுகூட என்னை அறியும் பயணத்தில் ஒரு மைல் கல்லோ ?

மீண்டும் வருவேன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home