Sunday, June 14, 2026

மாயைக்கு அப்பால்

மனித வாழ்க்கை இன்று பெரும்பாலும் “பொருள் மயம்” என்ற ஓர் அலைக்குள் மூழ்கிக் கிடக்கிறது. 

பணம், பதவி, புகழ், வசதி, அனுபவம் இவை அனைத்தும் வாழ்க்கையின் இலக்குகளாக மாறி விட்டன. 

இந்த ஓட்டத்தில் மனிதன் தன்னை மறந்து ஓடிக்கொண்டிருக்கிறான்.
    
அவன் நினைப்பது, “இதைப் பெற்றால் சந்தோஷம் கிடைக்கும்”, “அதை அடைந்தால் வாழ்க்கை முழுமை பெறும்” என்பதே. ஆனால் இந்த எண்ணமே மாயையின் முதல் கட்டமாகும்.

மாயை என்றால் என்ன? 

அது வெளியில் காணப்படும் உலகம் அல்ல.
.
அந்த உலகை நாம் எப்படி உணர்கிறோம் என்பதே மாயை.
    
பொருள்களில் நிரந்தரமான சந்தோஷம் இருக்கிறது என்று நம்புவது மாயை. 

ஏனெனில் அந்த சந்தோஷம் காலவரையுடையது. 

ஒரு புதிய பொருள் கிடைத்தால் சில நாட்கள் மகிழ்ச்சி இருக்கும் பின்னர் அது சாதாரணமாகி விடும்.
 
அடுத்த ஆசை பிறக்கும். 

இந்த முடிவில்லா சுழற்சிதான் “மாயையின் தூக்கம்”.

இந்த நிலையில் வாழ்பவர்கள் உண்மையில் தூங்கிக்கொண்டே இருக்கிறார்கள். 

அவர்களுக்கு தாங்கள் தூங்குகிறோம் என்ற உணர்வே இல்லை. 

அந்த தூக்கத்திலேயே அவர்கள் “நாம் சந்தோஷமாக இருக்கிறோம்” என்று நம்புகிறார்கள். 

இது ஒரு கனவில் சிரிக்கும் மனிதனைப் போல. 

கனவில் அவன் அரசன்; ஆனால் விழித்தவுடன் அது வெறும் கற்பனை என்பதை உணர்கிறான்.
    
அதுபோல, பொருளினால் உலகில் நாம் அனுபவிக்கும் சுகம் தற்காலிகமானது. 

ஆனால் அந்த தற்காலிகத்தையே நிரந்தரம் என்று நம்பும் போது அது மாயையாகிறது.

ஆனால் ஒருநாள் சிலருக்கு ஒரு கேள்வி எழுகிறது: “இது  தான் வாழ்க்கையா?” “இந்த ஓட்டத்தின் முடிவு என்ன?” அந்த கேள்வியே ஆன்மீகப் பயணத்தின் தொடக்கம்.
    
இந்த கேள்வி எழும்போது, அவர்கள் மெல்ல மெல்ல மாயையின் தூக்கத்திலிருந்து விழித்தெழ ஆரம்பிக்கிறார்கள். 

விழிப்புணர்வு வந்தவுடன் உலகத்தை அவர்கள் வேறு பார்வையில் காண்கிறார்கள்.
    
முன்பு சுகமாகத் தோன்றியது இப்போது வெறுமையாகத் தோன்றுகிறது.

இந்த விழிப்புணர்வு முதலில் இனிமையாக இருக்காது. 

அது ஒரு வேதனையை தரும். ஏனெனில் நாம் நம்பியிருந்த அனைத்தும் உறுதியற்றவை என்று தெரிகிறது. 

நாம் பிடித்திருந்த உறவுகள், பொருள்கள், ஆசைகள் இவை அனைத்தும் நிலைத்தவை அல்ல என்பதைக் கண்டறியும் போது மனதில் ஒரு கலக்கம் உருவாகிறது.. 

இதுவே ஆன்மீக வேதனை.

இந்த நிலையில் இருப்பவர்கள் மாயையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். 

சிலர் துறவு எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் தியானம் செய்கிறார்கள், சிலர் சாஸ்திரங்களைப் படிக்கிறார்கள்.
    
அவர்கள் போராடுகிறார்கள் மாயையுடன். 

“இதிலிருந்து எப்படி வெளியேறுவது?” என்ற தேடலில் இருக்கிறார்கள். 

இந்த போராட்டம் அவசியமான ஒரு கட்டம். 

அது மனதை சுத்தப்படுத்துகிறது.
    
ஆசைகள் மெதுவாக குறைகின்றன.

ஆனால் இங்கு இன்னொரு ஆழமான உண்மை இருக்கிறது.
    
மாயையுடன் போராடுவது கூட ஒரு பிணைப்பு தான். 

ஏனெனில் போராடுபவன் இன்னும் மாயையை உண்மையென ஏற்றுக் கொண்டிருக்கிறான். 

“இதிலிருந்து விடுபட வேண்டும்” என்ற எண்ணமே மாயையை உறுதிப்படுத்துகிறது.

இங்கே தான் ஞானியின் நிலை வேறுபடுகிறது. 

ஞானி மாயையை மறுக்கவில்லை; அதனுடன் போராடவும் இல்லை.
    
அதே நேரத்தில் அதில் மூழ்கவும் இல்லை. 

அவர் அதை “பார்க்கிறார்” ஒரு சாட்சியாக.

சாட்சி மனோபாவம் என்பது மிக உயர்ந்த ஆன்மீக நிலை. 

அதில் மனிதன் தன்னை உடல் அல்லது மனம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளாமல், அவற்றை கவனிக்கும் ஒருவனாக நிலைநிற்கிறான். 

அவன் சிந்தனைகளைப் பார்க்கிறான், உணர்ச்சிகளைப் பார்க்கிறான், ஆசைகளைப் பார்க்கிறான். 

ஆனால் அவற்றில் எதையும் “நான்” என்று சொல்லிக் கொள்ளவில்லை.

உதாரணமாக, கோபம் வருகிறது என்றால் சாதாரண மனிதன் “நான் கோபமாக இருக்கிறேன்” என்று சொல்வான். 

ஆனால் சாட்சி மனோபாவத்தில் இருப்பவன் “என்னுள் கோபம் எழுகிறது” என்று பார்க்கிறான்.
.   
இந்தச் சிறிய மாற்றமே மிகப்பெரிய ஆன்மீக மாற்றம்.

இவ்வாறு பார்க்கும்போது, மாயை ஒரு பிரச்சினையாக இருக்காது.
    
அது ஒரு நிகழ்வாக மட்டுமே இருக்கும். 

மழை பெய்தால் நாம் அதை நிறுத்த முடியாது ஆனால் அதை பார்த்துக் கொள்ளலாம். 

அதுபோல மாயை நிகழ்கிறது. ஆனால் அதில் சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஞானியின் அமைதி இந்த சாட்சி நிலைமையிலிருந்து வருகிறது.
    
அவர் எதையும் பிடித்துக் கொள்ளவில்லை என்பதால் இழப்பின் பயம் இல்லை. 

அவர் எதையும் தள்ளிப் போடவில்லை என்பதால் எதிர்ப்பு இல்லை. 

அவர் மத்தியிலே நிற்கிறார் அமைதியாக.

இந்த நிலையை சாதாரண மனிதன் எவ்வாறு அணுகலாம்? 

முதலில், வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

எல்லாமே மாறுகிறது என்பதை உணர வேண்டும். 

இரண்டாவது, ஆசைகள் வருவது இயல்பு.

ஆனால் அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம். 

அவற்றைப் பார்க்கத் தொடங்க வேண்டும்.

மூன்றாவது, தினமும் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து தன்னைக் கவனிக்க வேண்டும். 

சுவாசத்தைக் கவனிப்பது ஒரு எளிய வழி. 

சிந்தனைகள் வரும்; அவற்றை தடுக்க வேண்டாம். 

அவற்றை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். 

இந்தப் பயிற்சி மெல்ல மெல்ல சாட்சி மனோபாவத்தை வளர்க்கும்.

நான்காவது, வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை “எனக்கு நடக்கிறது” என்று பார்க்காமல் “இது நடக்கிறது” என்று பார்க்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
    
இது மனதை இலகுவாக்கும்.

இறுதியாக, ஆன்மீகம் என்பது உலகத்தை விட்டு ஓடுவது அல்ல.
    
அதை சரியாகப் பார்க்க கற்றுக் கொள்வது. 

மாயை என்பது எதிரி அல்ல.

அது புரிந்து கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வு.

மனிதன் மாயையில் தூங்கிக்கொண்டிருக்கலாம், அதிலிருந்து விழித்தெழ முயற்சிக்கலாம், அல்லது அதைக் காணும் சாட்சியாக நிலைநிற்கலாம். 

இந்த மூன்றில் கடைசி நிலையே உண்மையான சுதந்திரம். 

அந்த சுதந்திரமே உண்மையான சுகம் பொருள்களில் அல்ல, உள்ளத்தின் அமைதியில் கிடைக்கும் ஆனந்தம்.

அன்பன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home