Monday, July 27, 2026

நீங்கள் நினைப்பதைவிட இலக்கிற்கு மிக அருகில் இருக்கிறீர்கள்

நீங்கள் நினைப்பதைவிட இலக்கிற்கு மிக அருகில் இருக்கிறீர்கள்

வாழ்க்கையில் சில நேரங்கள் நமக்கு எதுவும் நடக்காதது போலத் தோன்றும். 

நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெறும் முயற்சியாகவே முடிந்து விடுகிறது என்று மனம் சொல்லும். 

"நான் சரியான பாதையில்தானா செல்கிறேன்?", "என்னுடைய உழைப்பிற்கு எப்போது பலன் கிடைக்கும்?" என்ற கேள்விகள் நம் உள்ளத்தை அடிக்கடி வந்து தட்டும்.

அப்படிப்பட்ட தருணங்களில் நான் என் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த ஒரு உண்மையை நினைத்துக் கொள்வேன்.

நீங்கள் உங்களுக்கான திருப்புமுனையின் நடுவில் இருக்கிறீர்கள். 

நீங்கள் விதைத்த விதைகள் உங்களையே வியக்க வைக்கும் வகையில் விரைவில் மலரப் போகின்றன. 

நீங்கள் எங்கு இருக்க வேண்டுமோ, சரியாக அங்குதான் இருக்கிறீர்கள்.

இந்த வார்த்தைகள் வெறும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல.
    
வாழ்க்கையை நெருக்கமாக வாழ்ந்து பார்த்த ஒருவனின் அனுபவத்தில் பிறந்த உண்மைகள்.

அன்பான இளைய தலைமுறையினரே!

நான் உங்களுக்கு அறிவுரை சொல்லும் இடத்தில் நிற்பவன் அல்ல. 

ஆனால், காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வயதில் இன்று நிற்கிறேன். 

நான் கண்ட தோல்விகளும், நான் கடந்த ஏமாற்றங்களும், நான் சுமந்த அமைதியான போராட்டங்களும், நான் இறுதியில் உணர்ந்த உண்மைகளுமே இந்தப் பதிவின் அடித்தளம்.

வாழ்க்கை ஒரு மரத்தைப் போன்றது. 

அதன் பழங்களைத்தான் உலகம் பார்க்கிறது. 

ஆனால், அந்த மரத்தின் வேர்கள் எத்தனை ஆண்டுகள் மண்ணுக்குள் யாருக்கும் தெரியாமல் போராடின என்பதை யாரும் கவனிப்பதில்லை.

நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தான்.

இன்று நீங்கள் அமைதியாக உழைத்துக் கொண்டிருக்கலாம்.
     
உங்கள் முயற்சியை யாரும் பாராட்டாமல் இருக்கலாம்.
     
உங்களுடைய திறமையை யாரும் கவனிக்காமல் இருக்கலாம்.
     
உங்களை விடக் குறைவாக உழைப்பவர்கள் முன்னேறுவது போலவும் தோன்றலாம்.

ஆனால் ஒரு விதை மண்ணுக்குள் இருக்கும் போது அது இறந்து கொண்டிருக்கவில்லை. 

அது வளர்ந்து கொண்டிருக்கிறது.

அதேபோல, உங்கள் வாழ்க்கையிலும் வெளியில் எதுவும் நடக்காதது போலத் தோன்றும் காலங்கள்தான், உள்ளுக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகும் காலங்கள்.

நான் வாழ்வில் கற்றுக் கொண்ட இன்னொரு உண்மை என்னவென்றால், எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது.

சில கதவுகள் நாம் தட்டியவுடன் திறக்காது. 

சில மனிதர்கள் நாம் நல்லவர்களாக இருந்தாலும் நம்மைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். 

சில கனவுகள் நாம் நினைத்த வயதில் நிறைவேறாது.

அதற்காக வாழ்க்கை நம்மை மறுத்துவிட்டது என்று அர்த்தமல்ல.

அது இன்னும் நம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி.

இன்று நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சவாலும், நாளை நீங்கள் நிற்கப் போகும் உயரத்திற்கு தேவையான பயிற்சியாக இருக்கலாம்.

ஒரு சிற்பி ஒரு கல்லை உடைப்பதில்லை. அதனுள் மறைந்திருக்கும் சிலையை வெளிக்கொண்டு வருகிறான்.

வாழ்க்கையும் அதைத்தான் செய்கிறது.

சில நேரங்களில் அது நம்மை உடைப்பது போலத் தோன்றும்.
    
ஆனால், உண்மையில் அது நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அன்பான இளைஞர்களே!

மற்றவர்களின் வாழ்க்கையைப் பார்த்து உங்கள் வாழ்க்கையை அளக்காதீர்கள்.

ஒவ்வொரு விதையும் ஒரே நாளில் முளைப்பதில்லை.

ஒவ்வொரு மலரும் ஒரே காலத்தில் பூப்பதில்லை.

ஒவ்வொரு மனிதருக்கும் இறைவன் எழுதிய நேரம் வேறு.

அதனால்தான், உங்கள் பயணத்தை யாருடனும் ஒப்பிடாதீர்கள்.

உங்களுக்கான பாதை தனித்துவமானது.

உங்களுக்கான நேரமும் தனித்துவமானது.

உங்களுக்கான வெற்றியும் தனித்துவமானதாகவே இருக்கும்.

நீங்கள் இன்று இருக்கும் இடத்தை வெறுக்க வேண்டாம்.

அதுதான் உங்களை நாளைய உயரத்திற்கு அழைத்துச் செல்லும் பயிற்சிக் கூடமாக இருக்கலாம்.

நீங்கள் இன்று சந்திக்கும் மனிதர்கள், நீங்கள் அனுபவிக்கும் வலிகள், நீங்கள் சுமக்கும் பொறுப்புகள், நீங்கள் சிந்தும் கண்ணீர்கள்...
இவை எதுவும் வீணாகாது.

ஒரு நாள் திரும்பிப் பார்க்கும்போது, "இதற்காகத்தானா அந்த எல்லா அனுபவங்களும்!" என்று நீங்களே வியப்பீர்கள்.

அதனால்தான் நான் மீண்டும் சொல்கிறேன்...
நீங்கள் உங்களுக்கான திருப்புமுனையின் நடுவில்தான் இருக்கிறீர்கள்.

இன்னும் கொஞ்சம் பொறுமை.
இன்னும் கொஞ்சம் நம்பிக்கை.
இன்னும் கொஞ்சம் முயற்சி.
உங்கள் விதைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

அவை இன்னும் மண்ணுக்கு மேலே தெரியவில்லை என்பதற்காக அவை வளரவில்லை என்று நினைத்து விடாதீர்கள்.

உங்கள் உள்ளத்தை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.

உங்கள் திறமையை தினமும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல மனிதர்களுடன் பழகுங்கள்.
தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

வெற்றி வருவதற்கு முன்பே வெற்றி பெற்ற மனிதனைப் போல உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

ஏனெனில், வெற்றி என்பது முதலில் மனதில் பிறக்கிறது. அதன் பிறகுதான் வாழ்க்கையில் நிகழ்கிறது.

இந்தப் பதிவை நான் எழுதுவதன் நோக்கம், உங்களுக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுப்பது அல்ல.

என்னுடைய சொந்த வாழ்வில் நான் கண்டவைகளிலிருந்தும், கற்றுக் கொண்டவைகளிலிருந்தும் பெற்ற அனுபவ அறிவின் அடிப்படையில், உங்களை நீங்கள் செதுக்கிக் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையை மட்டும் விதைப்பதே.

நான் நடந்த பாதை உங்களுடைய பாதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் நான் கற்றுக் கொண்ட சில உண்மைகள், உங்கள் பயணத்தில் ஒரு சிறிய விளக்காக இருந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

வாழ்க்கை உங்களை மறந்துவிடவில்லை.

உங்கள் கனவுகள் காலாவதியாகவில்லை.

உங்கள் முயற்சிகள் வீணாகவில்லை.

நீங்கள் தவறான இடத்தில் இல்லை.

நீங்கள் எங்கு இருக்க வேண்டுமோ, சரியாக அங்குதான் இருக்கிறீர்கள்.

நீங்கள் விதைத்த விதைகள், உங்களையே வியக்க வைக்கும் வகையில் மலரப் போகின்றன.

அந்த மலர்ச்சியைப் பார்க்கும் வரை மட்டும் நம்பிக்கையை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.

"உங்களால் முடியும்."

அன்பன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home