நமக்குள் எரியும் விழிப்புணர்வு விளக்கு!
நமக்குள் எரியும் விழிப்புணர்வு விளக்கு!
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
சிலர் பணத்தைத் தேடுகிறார்கள்.
சிலர் பதவியையும் புகழையும் தேடுகிறார்கள்.
இன்னும் சிலர் பிறரிடம் அன்பையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் தேடுவதில் தவறில்லை.
ஆனால், இவற்றைத் தேடி ஓடும் அவசரத்தில் நமக்குள் இருக்கின்ற ஓர் அரிய செல்வத்தை நாம் மறந்துவிடுகிறோம்.
அதுதான் விழிப்புணர்வு!
விழிப்புணர்வு என்றால் என்ன?
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிவது மட்டுமல்ல நமக்குள் என்ன நடக்கிறது என்பதையும் உணர்வதாகும்.
நாம் என்ன நினைக்கிறோம், என்ன பேசுகிறோம், எப்படிச் செயல்படுகிறோம், நமது செயல்களால் மற்றவர்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதையெல்லாம் உணர்ந்து வாழ்வதே விழிப்புணர்வு.
நமக்குள் ஒரு விளக்கு இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அந்த விளக்கை ஏற்றுவதற்குப் பெரிய செலவு தேவையில்லை. யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை.
கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமுமில்லை.
தனிமையான மலையுச்சியில் அமர வேண்டும் என்ற அவசியமுமில்லை.
நமது மூச்சைக் கவனிப்பதன் மூலமும், நாம் எடுத்து வைக்கும் அடிகளை உணர்வதன் மூலமும், மனதாரப் புன்னகைப்பதன் மூலமும் அந்த விளக்கை ஏற்ற முடியும்.
இந்த எளிய உண்மையை நாம் புரிந்துகொண்டால், நமது வாழ்க்கையிலும் நாம் வாழும் சமூகத்திலும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
மூச்சில் தொடங்கும் விழிப்புணர்வு!
நாம் பிறந்த நாளிலிருந்து இன்றுவரை மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், நம்மில் எத்தனை பேர் ஒரு நாளில் சில நிமிடங்களாவது நமது மூச்சைக் கவனித்திருக்கிறோம்?
காலையில் கண்விழித்ததும் தொலைபேசியைத் தேடுகிறோம். செய்திகள் என்ன வந்திருக்கின்றன என்று பார்க்கிறோம்.
யார் என்ன எழுதியிருக்கிறார்கள், யாருக்கு என்ன நடந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள விரைகிறோம்.
அன்றைய வேலைகளை நினைத்துக் கவலைப்படுகிறோம்.
செய்ய வேண்டியவற்றைப் பற்றிச் சிந்திக்கிறோம்.
இவ்வாறு நமது நாள் தொடங்குவதற்கு முன்பே மனம் பல திசைகளில் ஓடத் தொடங்கிவிடுகிறது.
ஆனால், கண்விழித்ததும் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து நமது மூச்சைக் கவனித்துப் பாருங்கள்.
மூச்சு உள்ளே வருகிறது.
வெளியே செல்கிறது.
அதை மாற்ற வேண்டும் என்றோ, கட்டுப்படுத்த வேண்டும் என்றோ முயற்சி செய்யாமல், அது இயல்பாக நடைபெறுவதை மட்டும் கவனியுங்கள்.
அந்தச் சில நிமிடங்களில் நாம் உலகத்தை மாற்றிவிடப் போவதில்லை.
நமது பிரச்சினைகள் அனைத்தும் மறைந்துவிடப் போவதுமில்லை.
ஆனால், பிரச்சினைகளுக்கு நடுவிலும் அமைதியாக இருப்பதற்கான ஒரு சிறிய இடைவெளி நமக்குள் உருவாகும்.
அந்த இடைவெளிதான் முக்கியமானது.
ஒருவர் நம்மைப் பார்த்துக் கோபமாகப் பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
வழக்கமாக நாம் உடனே பதிலுக்குக் கோபப்படுவோம்.
அவர் பேசியதைவிடக் கடுமையான வார்த்தைகளைப் பேசிவிடுவோம்.
பின்னர் அந்த வார்த்தைகளால் உறவுகள் பாதிக்கப்படலாம்.
மனதில் வருத்தம் ஏற்படலாம்.
ஆனால், அந்தக் கணத்தில் நமது மூச்சைக் கவனித்து ஒரு நொடி அமைதியாக இருந்தால் என்று வைத்துக்கொள்வோம்.
அவரைப் பார்த்துப் பொறாமைப்படுவதற்குப் பதிலாக, அவருடைய முயற்சியைப் பாராட்ட முடியுமா?
நம்மிடம் உதவி கேட்கும் ஒருவரைப் பார்த்து அலட்சியப்படுத்துவதற்குப் பதிலாக, நம்மால் முடிந்த உதவியைச் செய்ய முடியுமா?
நம்முடன் கருத்து வேறுபாடு கொண்ட ஒருவரை எதிரியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அவரது கருத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய முடியுமா?
இத்தகைய கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்ளும்போது, நமது மனத்தில் ஒரு புதிய வெளிச்சம் தோன்றத் தொடங்குகிறது.
அந்த வெளிச்சம் நமது வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
நமது நடத்தையில் தெரிகிறது. நமது உறவுகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு புன்னகை என்பது வெறும் முகபாவனை மட்டுமல்ல.
அது பிறரை மனிதர்களாக மதிக்கத் தெரிந்த மனத்தின் வெளிப்பாடாகவும் அமையலாம்.
நமது மகிழ்ச்சி மற்றவர்களின் மகிழ்ச்சியையும் மதிக்கக் கற்றுக்கொள்ளும்போது, நாம் வாழும் சூழல் மெதுவாக மாறத் தொடங்குகிறது.
இருள் மறைவதென்றால் என்ன?
நமக்குள் விழிப்புணர்வு எனும் விளக்கு எரியும்போது இருள் மறைந்துவிடும் என்று கூறுகிறோம்.
இங்கு இருள் என்பது இரவில் காணப்படும் இருட்டு அல்ல.
நமது வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் மனநிலையைக் குறிக்கிறது.
அறியாமை, அளவுக்கு மீறிய அகந்தை, பொறாமை, பேராசை, வெறுப்பு, பிறரைக் குறை கூறும் பழக்கம், நம்முடைய தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலை ஆகியவை நமது உள்ளத்தில் இருளை உருவாக்குகின்றன.
இந்தக் குணங்கள் ஒரே நாளில் நம்மை விட்டு விலகிவிடப் போவதில்லை. அவற்றை மறைக்க முயற்சி செய்வதால் மட்டும் பயனும் இல்லை.
அவை நமக்குள் தோன்றும் தருணங்களை முதலில் உணர வேண்டும்.
நாம் ஒருவரைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். வழக்கமாக அந்தத் தவறை நியாயப்படுத்துவதற்குப் பல காரணங்களைக் கூறுவோம். அவர் அப்படிச் செய்தார், இவர் இப்படிச் சொன்னார் என்று மற்றவர்களைக் குறை கூறுவோம்.
ஆனால், விழிப்புணர்வு நம்மை வேறொரு கேள்வியைக் கேட்கத் தூண்டுகிறது.
“நான் செய்த செயலால் என்ன விளைவு ஏற்பட்டது? நான் வேறுவிதமாக நடந்துகொண்டிருக்க முடியுமா?”
இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வதற்குத் துணிவு வேண்டும். ஏனெனில், மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எளிது நமது தவறுகளை நேர்மையாகப் பார்ப்பது கடினம்.
ஆனால், நமது தவறுகளை உணர்வது நம்மைத் தாழ்த்துவதற்காக அல்ல. நம்மை மேம்படுத்திக்கொள்வதற்காக.
நாம் தவறு செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம்.
இயன்றால் மன்னிப்புக் கேட்போம்.
பாதிக்கப்பட்டவருக்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம்.
மீண்டும் அதே தவறு நிகழாமல் இருக்க முயற்சி செய்வோம்.
இதுவே உள்ளத்தில் ஏற்றப்படும் விழிப்புணர்வு விளக்கின் பயன்.
விழிப்புணர்வு கொண்ட மனிதர் ஒருபோதும் தவறு செய்யாதவர் அல்லர்.
தவறு செய்தபோது அதை உணர்ந்து திருத்திக்கொள்ள முயற்சி செய்பவர்தான்.
அதேபோல், மனத்தில் கோபம் தோன்றுவதும் பொறாமை எழுவதும் நம்மை மோசமான மனிதர்களாக மாற்றிவிடுவதில்லை.
அந்த உணர்வுகளை உணராமல், அவற்றின் தூண்டுதலுக்கு அடிமையாகிச் செயல்படும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன.
எனவே, நமக்குள் எழும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கவனிக்கக் கற்றுக்கொள்வோம்.
அவற்றை உடனே நல்லது, கெட்டது என்று தீர்ப்பிடுவதற்குப் பதிலாக, அவை எவ்வாறு நமது செயல்களைப் பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வோம்.
இந்தப் புரிதலே மாற்றத்தின் தொடக்கம்.
விழிப்புணர்வைத் தொடர்ந்து மிளிரச் செய்வது எப்படி?
ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் அது தொடர்ந்து எரிய எண்ணெயும் திரியும் தேவைப்படலாம்.
அதுபோல, நமக்குள் விழிப்புணர்வு தோன்றிய பிறகும் அதை வாழ்க்கையில் நிலைநிறுத்தத் தொடர்ந்து பயிற்சி தேவை.
அதற்காக நாம் பெரிய பெரிய செயல்களைச் செய்ய வேண்டியதில்லை.
காலையில் எழுந்ததும் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இயல்பான மூச்சைக் கவனிக்கலாம்.
மனம் வேறு எண்ணங்களுக்குச் சென்றால், அதைத் தவறு என்று கருதாமல் மீண்டும் மூச்சின் மீது கவனத்தைத் திருப்பலாம்.
உணவு உண்ணும்போது தொலைபேசியைப் பார்த்துக்கொண்டே உண்பதற்குப் பதிலாக, உணவின் சுவையையும் அதைத் தயாரித்தவர்களின் உழைப்பையும் உணரலாம்.
யாராவது நம்முடன் பேசும்போது, இடையில் குறுக்கிடாமல் அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்கலாம்.
கோபம் வரும் நேரத்தில் உடனடியாகப் பதிலளிக்காமல் சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம்.
அந்த அமைதி பிரச்சினையிலிருந்து ஓடிப்போவதற்காக அல்ல பிரச்சினையைத் தெளிவாக அணுகுவதற்காக.
இரவு உறங்குவதற்கு முன் அன்றைய நாளை ஒருமுறை நினைத்துப் பார்க்கலாம்.
இன்று நான் யாருக்காவது மகிழ்ச்சியை ஏற்படுத்தினேனா?
யாருடைய மனத்தையாவது புண்படுத்திவிட்டேனா?
என்னால் செய்ய முடிந்த ஒரு நல்ல செயலைத் தவறவிட்டேனா?
நாளை என்னை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றிக்கொள்ள என்ன செய்யலாம்?
இவ்வாறு நம்மை நாமே அமைதியாகக் கேட்டுக்கொள்வது, நமது குறைகளை உணரவும் நல்லவற்றைத் தொடரவும் உதவும்.
இவை அனைத்தையும் ஒரே நாளில் முழுமையாகச் செய்துவிட வேண்டும் என்று நம்மீது அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை.
ப்வ் இன்று ஒரு சிறிய முயற்சி; நாளை இன்னொரு சிறிய முயற்சி. தொடர்ந்து முயற்சி செய்வதே முக்கியம்.
சில நாட்களில் மனம் அமைதியாக இருக்கும்.
சில நாட்களில் கவலைகளும் குழப்பங்களும் அதிகமாக இருக்கும்.
சில நேரங்களில் நாம் பயிற்சி செய்வதையே மறந்துவிடுவோம்.
அதற்காக நம்மை நாமே குறை கூற வேண்டியதில்லை.
மீண்டும் நினைவுக்கு வரும்போது தொடங்கலாம்.
விழிப்புணர்வு என்பது ஒருமுறை
அடைந்துவிட்டால் எப்போதும் மாறாமல் இருக்கும் ஒரு நிலை என்று கருதத் தேவையில்லை.
அது மீண்டும் மீண்டும் நாம் தேர்ந்தெடுத்துப் பழக வேண்டிய ஒரு வாழ்க்கை முறை.
நமது மூச்சு எப்போதும் நமக்கு அருகிலேயே இருக்கிறது.
நாம் எடுத்து வைக்கும் அடுத்த அடி நமது முன்னாலேயே இருக்கிறது.
க்அன்பான ஒரு புன்னகையை வழங்குவதற்கான வாய்ப்பும் நம்மைச் சுற்றியே இருக்கிறது.
இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கான மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வதே நமது பயிற்சி.
தனிமனித விழிப்புணர்விலிருந்து சமூக விழிப்புணர்வுக்கு!
நாம் நம்மை மட்டும் உயர்த்திக்கொண்டால் போதுமா? நம்மைச் சார்ந்த குடும்பமும் சமூகமும் முன்னேற வேண்டாமா?
நிச்சயமாக முன்னேற வேண்டும்.
ஆனால், சமூக மாற்றம் என்பது எங்கோ ஓர் இடத்தில் யாரோ ஒருவர் தொடங்க வேண்டிய பெரிய செயல் மட்டுமல்ல. அது நம்முடைய வீட்டிலிருந்தும் நம்முடைய நடத்தையிலிருந்தும் தொடங்க முடியும்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டால், அந்தக் குடும்பத்தில் தேவையற்ற சண்டைகள் குறையலாம். ஒருவர் மற்றவரின் கருத்தைக் கவனமாகக் கேட்கத் தொடங்கினால், புரிந்துணர்வு வளரலாம். பெற்றோர் தமது பிள்ளைகளிடம் அன்புடன் நடந்துகொண்டு, அவர்களுடைய உணர்வுகளையும் மதித்தால், பிள்ளைகள் தங்கள் எண்ணங்களை அச்சமின்றிப் பகிர்ந்துகொள்ளும் சூழல் உருவாகலாம்.
அதேபோல, ஒரு சமூகத்தில் வாழும் மனிதர்கள் தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரையொருவர் மதிக்கக் கற்றுக்கொண்டால், அந்தச் சமூகம் ஆரோக்கியமான பாதையில் பயணிக்க முடியும்.
நமது மொழி, இனம், மதம், அரசியல் கருத்து, பொருளாதார நிலை எனப் பல வேறுபாடுகள் மனிதர்களிடையே இருக்கலாம். ஆனால், அவற்றின் காரணமாக ஒருவருடைய மனிதநேயத்தை மற்றொருவர் மறந்துவிடக்கூடாது.
நம்முடன் ஒத்த கருத்தைக் கொண்டவர்களை மட்டுமே மதிப்பது உண்மையான பண்பல்ல. நம்மிடமிருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டவர்களிடமும் மனிதநேயத்துடன் நடந்துகொள்வதுதான் நமது உள்ளத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
சமூக ஊடகங்களில் நமக்குப் பிடிக்காத ஒரு கருத்தைக் காணும்போது, உடனே கோபமான வார்த்தைகளால் பதிலளிக்காமல் இருக்க முடியுமா? நமக்குக் கிடைக்கும் ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன் அது உண்மையானதா என்று சிந்திக்க முடியுமா? ஒருவரைப் பற்றிய முழுமையான உண்மை தெரியாமல் அவரைத் தீர்ப்பிடுவதைத் தவிர்க்க முடியுமா?
இவை சிறிய கேள்விகளாகத் தோன்றலாம். ஆனால், இவற்றின் பின்னால் பெரிய சமூகப் பொறுப்பு இருக்கிறது.
நாம் எழுதும் ஒரு வார்த்தை ஒருவருடைய மனதைப் புண்படுத்தலாம். அதேபோல், நாம் எழுதும் ஒரு அன்பான வார்த்தை ஒருவருக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுக்கலாம். நாம் பகிரும் ஒரு தவறான செய்தி பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். நாம் பகிரும் ஒரு பயனுள்ள செய்தி ஒருவருக்கு உதவியாக அமையலாம்.
எனவே, நமது செயல்களுக்கு நாமே பொறுப்பேற்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
சமூகத்தை மாற்ற வேண்டும் என்று பேசுவதற்கு முன், நமது நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். பிறர் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன் நாமும் நேர்மையாக இருப்போம். அனைவரும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவதற்கு முன் நம்மால் முடிந்தவரை அன்பை வெளிப்படுத்துவோம்.
நம்மால் உலகம் முழுவதையும் ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால், நம்மால் ஒருவருக்கு உதவ முடியும். நமது குடும்பத்தில் நல்ல சூழலை உருவாக்க முடியும். நமது அயலவரிடம் அன்பாக நடந்துகொள்ள முடியும். நமது சமூகத்தில் ஒரு நல்ல செயலுக்குத் துணை நிற்க முடியும்.
அந்த ஒரு செயல் இன்னொருவரை ஊக்குவிக்கலாம். அவர் மற்றொருவருக்கு உதவலாம். இவ்வாறு நல்ல மாற்றம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவலாம்.
ஒரு சிறிய விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றுவதால் தனது ஒளியை இழந்துவிடுவதில்லை. அதுபோல, நாம் பிறரிடம் அன்பையும் அறிவையும் பகிர்வதால் நம்முடைய வளர்ச்சி குறைந்துவிடுவதில்லை.
மாறாக, நம்முடைய விழிப்புணர்வு பிறருடைய வாழ்விலும் ஒளி பரப்பும்போது அதன் பயன் விரிவடைகிறது.
நம்மை நாமே அறியும் பயணம்!
வாழ்க்கையில் நாம் பலரையும் அறிந்துகொள்ள முயற்சி செய்கிறோம். பிறர் என்ன நினைக்கிறார்கள், நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள், நமது செயல்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறோம்.
ஆனால், நம்மைப் பற்றி நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம்?
நாம் ஏன் சில விஷயங்களுக்குக் கோபப்படுகிறோம்? ஏன் சில நேரங்களில் பிறருடைய வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறோம்? ஏன் மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? ஏன் சில பழக்கங்கள் நமக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்பதை அறிந்திருந்தும் அவற்றைத் தொடர்கிறோம்?
இத்தகைய கேள்விகளுக்கு நேர்மையாக விடை தேடும்போது, நமது உள்ளத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம்.
இதற்காக நம்மை நாமே வெறுக்க வேண்டியதில்லை. நம்மிடம் குறைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வது பலவீனமல்ல. அவற்றை உணர்ந்து மேம்பட முயற்சி செய்வதுதான் உண்மையான வலிமை.
நமது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மற்றவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் நம்மால் முழுமையாக மாற்ற முடியாது. ஆனால், அவற்றுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைப் பயிற்சியின் மூலம் மேம்படுத்த முடியும்.
இதனை உணர்ந்துகொண்டால், வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினையையும் நம்மை அழிக்க வந்த எதிரியாகப் பார்க்க வேண்டியதில்லை. சில பிரச்சினைகள் நமக்கு எச்சரிக்கையாக இருக்கலாம். சில அனுபவங்கள் நமது தவறுகளை உணர்த்தலாம். சில தோல்விகள் நமது முயற்சிகளைச் சீரமைக்க உதவலாம்.
இதனால் எல்லாத் துயரங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. துயரம் துயரம்தான். இழப்பு இழப்புத்தான். வேதனையை அனுபவிக்கும் ஒருவரிடம் உடனே நேர்மறையாகச் சிந்திக்கச் சொல்வதும் சரியல்ல.
ஆனால், துயரத்தின் நடுவிலும் நம்மை நாமே கவனித்துக்கொள்ளவும், தேவையான உதவியை நாடவும், அடுத்த அடியை மெதுவாக எடுத்து வைக்கவும் விழிப்புணர்வு துணையாக இருக்க முடியும்.
நம்மை நாமே அறியும் இந்தப் பயணத்தில் பொறுமை மிகவும் அவசியம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு நம்முடைய வளர்ச்சியை அளவிடுவதற்குப் பதிலாக, நேற்றைய நம்மைவிட இன்று சிறிதளவாவது மேம்பட்டிருக்கிறோமா என்று பார்த்துக்கொள்வோம்.
நேற்று கோபத்தில் பேசிய இடத்தில் இன்று அமைதியாகப் பேச முடிந்ததா? நேற்று பிறருடைய துயரத்தைப் பொருட்படுத்தாமல் கடந்துசென்ற இடத்தில் இன்று சிறிது நேரம் ஒதுக்க முடிந்ததா? நேற்று நமது தவறை ஏற்றுக்கொள்ள மறுத்த இடத்தில் இன்று அதை நேர்மையாக ஒப்புக்கொள்ள முடிந்ததா?
இத்தகைய சிறிய முன்னேற்றங்களே வாழ்க்கையில் உண்மையான வளர்ச்சிக்கான அடையாளங்களாக அமையலாம்.
நிறைவாக...
அன்பினியோரே!
நமக்குள் விழிப்புணர்வு எனும் விளக்கு ஒன்று இருக்கிறது என்ற எண்ணம் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. ஏனெனில், நமது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தொடக்கம் எப்போதும் பிறரிடமிருந்து வர வேண்டியதில்லை.
அந்தத் தொடக்கம் நம்மிடமிருந்தே வர முடியும்.
நமது மூச்சைக் கவனிப்பதிலிருந்து தொடங்கலாம். நாம் எடுத்து வைக்கும் அடிகளை உணர்ந்து நடப்பதிலிருந்து தொடங்கலாம். நம்மையும் பிறரையும் அன்புடன் அணுகும் ஒரு புன்னகையிலிருந்து தொடங்கலாம்.
நாம் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதல்ல இலக்கு. கோபம் வராத மனிதர்களாக மாற வேண்டும் என்பதுமல்ல. எந்தச் சூழலிலும் தவறிழைக்காதவர்களாக வாழ வேண்டும் என்பதுமல்ல.
என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, நமது எண்ணங்களையும் செயல்களையும் புரிந்துகொண்டு, தவறுகளைத் திருத்திக்கொண்டு, மனிதநேயத்துடன் வாழக் கற்றுக்கொள்வதே விழிப்புணர்வின் உண்மையான பயன்.
இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது, நம்முடைய வாழ்க்கையில் தெளிவு வளரலாம். உறவுகளில் புரிந்துணர்வு அதிகரிக்கலாம். முடிவுகளில் பொறுப்பு உருவாகலாம். பிறருடைய துயரத்தை உணர்ந்து உதவும் மனப்பான்மை வலுப்பெறலாம்.
அந்த மாற்றம் நம்மோடு மட்டும் நின்றுவிடாமல் நமது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், சமூகத்துக்கும் பயனளிக்க வேண்டும்.
நமது வீட்டில் ஏற்றப்படும் ஒரு சிறிய விளக்கு அந்த வீட்டின் இருளை அகற்றுகிறது. அதுபோல, நமது உள்ளத்தில் எரியும் விழிப்புணர்வு நமது வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும். நமது செயல்கள் பிறருடைய வாழ்க்கையிலும் ஒளி பரப்பட்டும்.
வாழ்க்கை முழுவதும் இருளே இருக்கிறது என்று குறை கூறிக்கொண்டிருப்பதைவிட, நம்மால் முடிந்த இடத்தில் ஒரு சிறிய விளக்கை ஏற்றிப் பார்ப்போம்.
அந்த விளக்கு நமது மூச்சில் தொடங்கட்டும். நமது எண்ணங்களில் தெளிவை உருவாக்கட்டும். நமது செயல்களில் அன்பை வெளிப்படுத்தட்டும். நமது சமூகத்தில் மனிதநேயத்தை வளர்க்கட்டும்.
விழிப்புணர்வுடன் வாழ்வது என்பது வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வதல்ல; வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு, நமக்கும் பிறருக்கும் பயனுள்ள மனிதர்களாக வாழ்வதாகும்.
இன்று நம்மிடமிருந்து தொடங்கும் இந்தச் சிறிய மாற்றம், நாளை ஒரு நல்ல குடும்பமாகவும், ஒரு நல்ல சமூகமாகவும், ஒரு நல்ல உலகமாகவும் வளர்வதற்கு விதையாக அமையட்டும்.
நமக்குள் இருக்கும் விழிப்புணர்வு விளக்கை ஏற்றுவோம்.
அதைத் தொடர்ந்து மிளிரச் செய்வோம்.
அதன் ஒளியில் நம்மையும் உயர்த்துவோம் நம்மைச் சார்ந்தவர்களையும் உயர்த்துவோம்.
உங்களால் முடியும்!
அன்பன்
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home