நாம் கடந்து வந்த பாதையையும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!
நாம் கடந்து வந்த பாதையையும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!
வாழ்க்கையில் நாம் எப்போதும் எதையாவது நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இன்னும் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும், இன்னும் கொஞ்சம் உயர வேண்டும், இன்னும் சில சாதனைகளைச் செய்ய வேண்டும், நம்முடைய குடும்பத்துக்கு இன்னும் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பல எண்ணங்களோடு நம்முடைய பயணம் தொடர்கிறது.
அந்தப் பயணத்தில் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே நம்முடைய கவனம் அதிகமாக இருக்கிறது.
எங்கே போய்ச் சேர வேண்டும், எவ்வளவு தூரம் இன்னும் செல்ல வேண்டும், மற்றவர்கள் எவ்வளவு தூரம் முன்னேறிவிட்டார்கள் என்றெல்லாம் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், இந்த அவசரத்தில் நாம் ஒன்றை மட்டும் அடிக்கடி மறந்துவிடுகிறோம்.
நாம் ஏற்கனவே எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை ஒருமுறையாவது நின்று பார்ப்பதில்லை!
இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்.
இன்று நாம் இருக்கும் இடத்துக்கு வருவதற்கு முன்னால் எத்தனை தடைகளைச் சந்தித்திருப்போம்?
எத்தனை கவலைகளை மனதுக்குள் வைத்துக்கொண்டு வெளியில் சிரித்திருப்போம்?
எத்தனை தோல்விகளைச் சந்தித்துவிட்டு மீண்டும் முயற்சி செய்திருப்போம்?
எத்தனை முறை இனிமேல் முடியாது என்று நினைத்துவிட்டு, மறுநாள் காலையில் மீண்டும் எழுந்து நம்முடைய கடமைகளைத் தொடர்ந்திருப்போம்?
அவற்றையெல்லாம் நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிடுகிறோம்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், அவனுடைய முன்னேற்றம் என்பது பெரிய மேடைகளில் பேசப்படும் சாதனைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
அன்றாட வாழ்க்கையில் அவன் அடைந்திருக்கும் சிறிய மாற்றங்கள்கூட மிகப்பெரிய முன்னேற்றங்கள்தான்.
ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் பயந்துகொண்டிருந்த ஒருவர், இன்று துணிந்து ஒரு முடிவை எடுக்கிறார் என்றால் அதுவும் ஒரு வெற்றிதான்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தயங்கித் தயங்கி வாழ்ந்த ஒருவர், இன்று தனது மனதுக்கு நியாயமானது என்று தோன்றுவதைத் தெளிவாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார் என்றால் அதுவும் ஒரு வளர்ச்சிதான்.
சிறிய பிரச்சினை வந்தாலே கோபப்பட்டு உறவுகளைப் பகைத்துக்கொண்ட ஒருவர், இன்று சில விஷயங்களைப் பொறுமையாகக் கடந்து செல்லக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்றால் அதுவும் ஒரு பெரிய மாற்றம்தான்.
இவற்றுக்கெல்லாம் பதக்கங்கள் கிடைக்காது.
பாராட்டுவதற்காக யாரும் மேடை அமைக்க மாட்டார்கள்.
ஆனால் நம்முடைய வாழ்க்கையை அமைதியாகவும் அழகாகவும் மாற்றக்கூடிய உண்மையான வெற்றிகள் இவைதான்.
நம்முடைய இளமைக்காலத்தை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.
அப்போது நமக்கு இருந்த பயங்கள் வேறு. எதிர்பார்ப்புகள் வேறு. வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் வேறு.
சிறிய தோல்விகூட உலகமே முடிந்துவிட்டதைப்போல் தோன்றியிருக்கலாம்.
ஒருவர் சொன்ன ஒரு வார்த்தை பல நாட்கள் மனதைப் பாதித்திருக்கலாம்.
நமக்குப் பிடித்தமான ஒன்று கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையே நம்மை ஏமாற்றிவிட்டதாக நினைத்திருக்கலாம்.
ஆனால் காலம் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
சிலரை இழந்த பிறகுதான் உறவுகளின் அருமையைப் புரிந்துகொண்டோம்.
சில வாய்ப்புகள் கைநழுவிய பிறகுதான் கிடைத்த வாய்ப்புகளின் மதிப்பை உணர்ந்தோம்.
சில தோல்விகளுக்குப் பிறகுதான் முயற்சியின் அருமையைத் தெரிந்துகொண்டோம்.
ஒரு காலத்தில் நம்மால் தாங்க முடியாது என்று நினைத்த துயரங்களைக்கூட இன்று நினைத்துப் பார்க்கும் அளவுக்கு நாம் கடந்து வந்திருக்கிறோம்.
அப்படியிருக்கும்போது, நாம் சந்தித்த சோதனைகளை மட்டும் நினைத்துக்கொண்டு, அவற்றைக் கடந்து வந்த நம்முடைய மனவலிமையை ஏன் மறந்துவிட வேண்டும்?
வாழ்க்கையில் நமக்கு நாமே கொடுக்க வேண்டிய ஒரு பாராட்டு இருக்கிறது.
அது நம்முடைய திறமைகளைப் பெரிதுபடுத்திக்கொள்வதற்காக அல்ல.
மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்காகவும் அல்ல.
நாம் சந்தித்த சிரமங்களையும், அவற்றை எதிர்கொண்டு இன்றுவரை பயணத்தைத் தொடர்ந்திருக்கும் நம்முடைய மன உறுதியையும் உண்மையாக ஏற்றுக்கொள்வதற்காகத்தான்!
சில நேரங்களில் நம்முடைய முன்னேற்றம் நமக்கே தெரியாமல் போய்விடுகிறது.
இதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்லலாம்.
ஒரு சிறு குழந்தை நடக்கப் பழகும்போது, அது ஒவ்வொரு அடியாகத்தான் முன்னேறுகிறது.
பலமுறை கீழே விழுகிறது. மீண்டும் எழுகிறது. மறுபடியும் முயற்சி செய்கிறது.
அந்தக் குழந்தைக்கு அப்போது தான் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்ற கணக்குத் தெரியாது.
ஆனால் அதன் பெற்றோர் அந்தச் சிறிய முன்னேற்றத்தைக் கூட மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
வளர்ந்த பிறகு நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
நேற்றைவிட இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்கிறோமா?
முன்பு முடியாது என்று நினைத்த ஒரு காரியத்தை இன்று முயற்சி செய்கிறோமா?
மற்றவர்களின் குறைகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த நாம், இன்று அவர்களுடைய சூழ்நிலையையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோமா?
பழைய தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோமா?
அப்படியானால் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
முன்னேற்றம் என்பது எப்போதும் பணத்திலும், பதவியிலும், புகழிலும் மட்டுமே அளவிடப்பட வேண்டிய ஒன்றல்ல.
நம்முடைய எண்ணங்களில் ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றங்களும், நம்முடைய நடத்தையில் ஏற்பட்டிருக்கும் பக்குவமும், மற்றவர்களிடம் நாம் காட்டும் அன்பும், நம்முடைய மனதில் வளர்ந்திருக்கும் அமைதியும்கூட முன்னேற்றத்தின் அடையாளங்கள்தான்.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய நேற்றைய வாழ்க்கையோடு இன்றைய வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.
ஆனால் மற்றவர்களுடைய இன்றைய வாழ்க்கையோடு நம்முடைய வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பது பல நேரங்களில் தேவையற்ற மனக்குறையை உருவாக்கிவிடுகிறது.
ஒருவருக்கு இளம் வயதிலேயே நல்ல வேலை கிடைத்திருக்கலாம்.
இன்னொருவர் விரும்பிய செல்வத்தைச் சம்பாதித்திருக்கலாம்.
வேறொருவர் தனது கனவுகளை மிக விரைவாக நிறைவேற்றியிருக்கலாம்.
அவர்களுடைய பயணம் அவர்களுடையது.
நம்முடைய பயணம் நம்முடையது.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை கொடுக்கும் வாய்ப்புகளும், எதிர்கொள்ள வேண்டிய சோதனைகளும் ஒன்றாக இருப்பதில்லை.
ஒருவருக்கு எளிதாகக் கிடைத்த ஒன்று, இன்னொருவருக்கு பல ஆண்டுகள் போராடிய பிறகுதான் கிடைக்கலாம்.
அதனால் மற்றவர்களுடைய வேகத்தைப் பார்த்து நம்முடைய பயணத்தைத் தாழ்வாக நினைக்க வேண்டியதில்லை.
நாம் நேற்று இருந்த நிலையிலிருந்து இன்று ஒரு படியாவது முன்னேறியிருக்கிறோமா என்பதுதான் முக்கியம்.
சிலருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகச் செய்த போராட்டமாக இருக்கலாம்.
தன்னுடைய ஆசைகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தை உருவாக்கிய பெற்றோரின் வாழ்க்கையாக இருக்கலாம்.
தன்னுடைய ஊரை, உறவுகளை, பழக்கமான சூழலை விட்டுவிட்டு வேறொரு நாட்டுக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவரின் பயணமாக இருக்கலாம்.
அந்தப் பயணங்களில் எத்தனை கண்ணீர்த் துளிகள் மறைந்திருக்கின்றன என்பதை வெளியில் இருப்பவர்கள் அறிய மாட்டார்கள்.
ஆனால் அந்த மனிதருக்கு அது தெரியும்.
தான் எங்கிருந்து புறப்பட்டேன், என்னென்ன சிரமங்களைச் சந்தித்தேன், எத்தனை முறை மனம் உடைந்தேன், இருந்தாலும் எப்படி மீண்டும் எழுந்து நின்றேன் என்பது அவருக்குத் தெரியும்.
அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்த்தால், தாங்கள் சாதாரணமாக நினைத்துக் கடந்து வந்த பல விஷயங்களுக்குப் பின்னால் எவ்வளவு பெரிய மனவலிமை இருந்திருக்கிறது என்பது புரியும்.
அதனால் நம்முடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, செய்த தவறுகளுக்காக மட்டும் நம்மை நாமே குற்றம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.
அந்தத் தவறுகளிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பதையும் பார்க்க வேண்டும்.
நாம் யாரையாவது காயப்படுத்தியிருக்கலாம்.
சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம்.
சில நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறியிருக்கலாம்.
சில உறவுகளின் மதிப்பைச் சரியான நேரத்தில் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்.
அவற்றையெல்லாம் நினைத்து வருந்துவது இயல்புதான்.
ஆனால் அந்த வருத்தத்திலேயே வாழ்நாள் முழுவதையும் கழித்துவிடக் கூடாது.
ஏனென்றால் கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது.
ஆனால் அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு இன்றைய வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும்.
ஒரு காலத்தில் நம்மிடம் இருந்த கோபம் இன்று குறைந்திருக்கலாம்.
முன்பு நம்மை வருத்திய ஒரு நிகழ்வை இன்று அமைதியாக ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கலாம்.
முன்பு நம்மை விட்டு விலகிச் சென்றவர்களை நினைத்து வேதனைப்பட்ட நாம், இன்று அவர்களுக்காக நல்லதை நினைக்கக் கற்றுக்கொண்டிருக்கலாம்.
இவையெல்லாம் நம்முடைய உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள்.
இவற்றை யாரும் நமக்காகக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை.
நாமே அவற்றை உணர்ந்துகொண்டால் போதும்.
வாழ்வின் முதுமை வாசலில் நின்று பின்னோக்கிப் பார்க்கும்போது எனக்கும் ஒரு உண்மை புரிகிறது.
நாம் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையைவிட, இன்னும் கடக்க வேண்டிய பாதையைப் பற்றியே அதிகம் கவலைப்பட்டிருக்கிறோம்.
கிடைத்தவற்றின் மகிழ்ச்சியை அனுபவிப்பதைவிட, கிடைக்காதவற்றின் பின்னால் ஓடியிருக்கிறோம்.
ஆனால் அனுபவம் நமக்குச் சொல்லும் ஒரு செய்தி இருக்கிறது.
வாழ்க்கை என்பது நாம் அடைய வேண்டிய இலக்குகளின் பட்டியல் மட்டுமல்ல.
அந்த இலக்குகளை நோக்கிச் செல்லும்போது நாம் சந்தித்த மனிதர்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், கடந்து வந்த சோதனைகள், நம்மிடம் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றின் தொகுப்பும்தான்.
எனவே அவ்வப்போது நம்முடைய ஓட்டத்தைக் கொஞ்சம் நிறுத்துவோம்.
நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்போம்.
நமக்காக நாம் செய்த தியாகங்களை நினைத்துப் பார்ப்போம்.
நம்மை நாமே தேற்றிக்கொண்ட தருணங்களை நினைத்துப் பார்ப்போம். விழுந்தபோதெல்லாம் மீண்டும் எழுந்து நின்ற நம்முடைய மன உறுதியை நினைத்துப் பார்ப்போம்.
அப்போது நம்முடைய மனதுக்குள் ஒரு சிறிய மகிழ்ச்சி பிறக்கும்.
'நான் நினைத்ததை எல்லாம் இன்னும் சாதிக்கவில்லைதான். ஆனால் இதுவரை நான் கடந்து வந்த பாதையும் சாதாரணமானதல்ல.
எத்தனையோ சிரமங்களைத் தாண்டி இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன்.
அதற்காக என்னை நானே பாராட்டிக்கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் நிச்சயமாக உருவாகும்.
அந்த எண்ணம் நம்மைத் தற்பெருமைக்குள் அழைத்துச் செல்லாது.
மாறாக, நம்முடைய வாழ்க்கையை மதிக்கக் கற்றுக்கொடுக்கும்.
நம்மீது நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.
இன்னும் செய்ய வேண்டியவை நிறைய இருக்கலாம்.
நிறைவேறாத கனவுகள் இருக்கலாம். அடைய வேண்டிய இலக்குகள் இருக்கலாம்.
அவற்றை நோக்கிப் பயணிப்போம். ஆனால் இதுவரை நாம் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டு அல்ல.
நம்முடைய நேற்றைய முயற்சிகளுக்கு நன்றி சொல்வோம்.
இன்றைய வாழ்க்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம்.
நாளைய பயணத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.
ஏனென்றால், இதுவரை நாம் சந்தித்த சோதனைகளைக் கடந்து வந்த அனுபவமே, இனி வரப்போகும் சோதனைகளை எதிர்கொள்ள நமக்குத் தேவையான துணிவைக் கொடுக்கும்.
நாம் எவ்வளவு தூரம் இன்னும் செல்ல வேண்டும் என்பதை மட்டும் கணக்கிடாதீர்கள்.
எத்தனை தடைகளைத் தாண்டி இன்றைய இடத்துக்கு வந்திருக்கிறீர்கள் என்பதையும் கணக்கிடுங்கள்.
சில நேரங்களில் நமக்குத் தேவையான மிகப்பெரிய பாராட்டு, மற்றவர்களிடமிருந்து கிடைப்பதல்ல நம்முடைய மனதிலிருந்து நமக்கே கிடைப்பதுதான்!
இன்றைக்கு ஒரு நிமிடம் ஒதுக்கி உங்களுக்குள் நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்:
'வாழ்க்கையில் எல்லாவற்றையும் நான் வென்றுவிடவில்லை.
சில இடங்களில் தோற்றிருக்கிறேன்.
சில இடங்களில் தவறியிருக்கிறேன்.
ஆனாலும் என்னால் முடிந்தவரை முயற்சி செய்திருக்கிறேன்.
பல சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறேன்.
இன்றும் நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதற்காக என்னை நானே பாராட்டிக்கொள்கிறேன்!'
அந்த மனநிறைவோடு மீண்டும் பயணத்தைத் தொடருங்கள்.
நாம் கடந்து வந்த பாதை நம்முடைய பலத்தைச் சொல்லட்டும். நாம் செல்ல வேண்டிய பாதை நம்முடைய நம்பிக்கையை வளர்க்கட்டும்!
அன்பன்,
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home