சாட்சியின் அமைதியும் அகந்தையின் சத்தமும்
அகந்தை என்பது நமக்குள்ளே எழும் ஒரு குரல் அல்ல.
அந்தக் குரல் தான் “நான்” என்று நாம் தவறாக நம்பிக் கொள்ளும் ஒரு மாயை.
மனிதனின் உளவியல் வாழ்வை ஆராய்ந்தால், இந்தச் சிறிய தவறான அடையாளமே அவன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமாக இருப்பதை உணரலாம்.
உண்மையான “நான்” என்பது அமைதியான சாட்சியாக உள்ளது.
அகந்தை என்றது தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்.
ஆனால் அந்தக் கதாபாத்திரத்தின் குரலைத்தான் நாம் நம்முடைய உண்மையான குரலாக ஏற்றுக் கொள்கிறோம்.
இந்த அடையாளப் பிழையே மனித வாழ்க்கையின் மையப் பிரச்சினையாகிறது.
ஒரு சாதாரண மனிதனின் தினசரி வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அவன் காலை எழுந்த தருணத்திலிருந்து இரவு உறங்கும் வரை உள்ளேயே ஒரு தொடர்ச்சியான உரையாடல் நடந்து கொண்டே இருக்கும்.
“இன்று என்ன செய்வேன்?”, “அவன் என்ன நினைப்பான்?”, “நான் இதை சாதிக்க வேண்டும்”, “நான் தோற்றுவிட்டேன்” போன்ற எண்ணங்களின் ஓட்டம் ஓய்வதில்லை.
இந்த எண்ணங்களின் குரல் அவனுக்குள் கேட்கும் போது, அவன் அதை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக, அதுவே தானாக மாறிவிடுகிறான்.
இதனால் அவன் சுதந்திரமாக வாழ்வதை மறந்து, எண்ணங்களின் அடிமையாக மாறுகிறான்.
அகந்தையின் குரல் எப்போதும் ஒப்பீட்டிலும் மதிப்பீட்டிலும் இயங்குகிறது. “நான் மற்றவர்களைவிட மேல்”, “அவன் என்னைவிட சிறந்தவன்”, “என்னை யாரும் மதிக்கவில்லை” போன்ற எண்ணங்கள் இதன் இயல்பான வெளிப்பாடுகள்.
ஒரு வேலை இடத்தில் ஒரு மனிதன் பாராட்டைப் பெறாமல் விட்டால், அவன் உணர்வது வேலைக்கான துக்கமல்ல.
“என்னை கவனிக்கவில்லை” என்ற அகந்தையின் வேதனை. அதேபோல், ஒருவன் சிறிய வெற்றியை அடைந்தால், அது ஒரு சாதாரண மகிழ்ச்சி அல்ல; “நான் பெரியவன்” என்ற அகந்தையின் பெருமை.
இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தையும் அகந்தை தன் கதைக்குள் இழுத்து விடுகிறது.
குடும்ப உறவுகளிலும் இந்த அகந்தையின் தாக்கம் மிக ஆழமாக உள்ளது.
கணவன்-மனைவி இடையே ஏற்படும் பல சண்டைகள் உண்மையான பிரச்சினைகளால் அல்ல.
“நான் சரி”, “நீ தவறு” என்ற அகந்தையின் மோதலால் உருவாகின்றன.
ஒரு சொல், ஒரு பார்வை, ஒரு சிறிய தவறு கூட பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு காரணம்,
அந்தச் சம்பவத்தை அகந்தை தன் அடையாளத்துடன் இணைத்துக் கொள்வதுதான்.
“என்னை அவமதித்தார்” என்ற உணர்வு உருவானவுடன், உண்மையான நிகழ்வு மறைந்து, அகந்தையின் கதை மட்டும் மேலெழுகிறது.
சமூகத்தில் மனிதன் தன் நிலையை நிரூபிக்க முயல்வதும் இதே அகந்தையின் விளைவு.
பதவி, பணம், புகழ், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அவன் உள்ளே இருக்கும் அந்தக் குரலுக்கு உணவு அளிப்பவை.
ஒரு மனிதன் ஒரு புதிய வீட்டை வாங்கினால், அது வசதிக்காக மட்டுமல்ல; “நான் முன்னேறிவிட்டேன்” என்று அந்தக் குரல் சொல்லிக் கொள்ளும் ஒரு வழி.
ஆனால் இந்த நிறைவு தற்காலிகமானது.
சில நாள்களில் அந்தக் குரல் மீண்டும் ஏதோ ஒன்றை தேடத் தொடங்கும்.
இதனால் மனிதன் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருப்பான்.
அகந்தையின் முக்கியமான பண்பு அதன் தொடர்ச்சியான எதிர்ப்பு.
அது நிகழ்காலத்தை ஏற்காது.
எப்போதும் கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ பற்றிக் கவலைப்படும்.
“அப்போது இப்படிச் செய்திருக்கலாம்”, “நாளை என்ன ஆகும்?” போன்ற எண்ணங்கள் மனிதனை தற்போதைய அமைதியிலிருந்து பிரிக்கின்றன.
ஒரு மனிதன் ஒரு அழகான மாலையை பார்த்தாலும், அதனை முழுமையாக அனுபவிக்க முடியாமல், அவன் மனம் வேறு எங்கோ அலையக் காரணம் இதுவே.
அவன் அந்தக் காட்சியைப் பார்க்கவில்லை.
அதை பற்றிய எண்ணங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
ஆன்மீக பார்வையில், இந்த அகந்தை குரலைப் பார்ப்பதே விழிப்புணர்வு.
அந்தக் குரல் பேசும் போது, “இது நான் அல்ல; இது என் மனத்தின் ஓர் இயக்கம்” என்று அறிந்து கொள்ளும் தருணம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதன் மூலம் மனிதன் அந்தக் குரலின் அடிமையாக இல்லாமல், அதைக் கவனிக்கும் சாட்சியாக மாறுகிறான்.
இந்த மாற்றம் மெதுவாக அவனுக்கு உள்ளார்ந்த அமைதியையும் தெளிவையும் அளிக்கிறது.
வாழ்க்கையில் பல்வேறு சோதனைகள் வரும் போது, அகந்தையுடன் அடையாளம் கொண்டிருக்கும் மனிதன் எளிதில் சிதறிப்போகிறான்.
தோல்வி வந்தால் அவன் உடைந்து போகிறான்.
வெற்றி வந்தால் அவன் அளவுக்கு மீறி உயர்கிறான்.
ஆனால் அந்தக் குரலிலிருந்து ஒரு தூரம் வைத்திருக்கும் மனிதன், நிகழ்வுகளை சமநிலையுடன் பார்க்க முடியும்.
அவன் அனுபவிக்கிறான் .
ஆனால் அதில் மூழ்கி விடவில்லை.
இது வாழ்க்கையை ஒரு வேறு பரிமாணத்தில் அனுபவிக்க உதவுகிறது.
அகந்தை என்பது முற்றிலும் அழிக்க வேண்டிய ஒன்றல்ல.
அது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
அது ஒரு கருவியாக இருக்கலாம் ஆனால் அது நம்முடைய அடையாளமாக மாறக் கூடாது.
ஒரு நடிகர் மேடையில் ஒரு வேடம் ஏற்றுக்கொள்வது போல, மனிதன் வாழ்க்கையில் பல வேடங்களை ஏற்கிறான்.
ஆனால் அந்த வேடமே தான் என்று நம்பும் போது தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.
இந்த உண்மையை உணர்ந்தால், மனிதன் தன் வாழ்க்கையை இலகுவாகவும் விழிப்புணர்வுடனும் வாழ முடியும்.
“அகந்தை என்பது நமக்குள்ளே கேட்கும் குரல் அல்ல.
அந்தக் குரல் தான் நாம் என்ற போலியான நம்பிக்கை” என்ற கருத்து ஒரு தத்துவ வாக்கியம் மட்டுமல்ல.
அது ஒவ்வொரு மனிதனின் தினசரி அனுபவத்தில் உயிருடன் செயல்படும் ஒரு உண்மை.
அதை உணர்ந்து கொள்ளும் போது, வாழ்க்கையின் சிக்கல்கள் மெதுவாக அவிழத் தொடங்கும்.
வெளியில் மாற்றம் தேவைப்படாமல், உள்ளே ஒரு தெளிவு பிறக்கிறது.
அந்தத் தெளிவே மனிதனை உண்மையான சுதந்திரத்திற்கும் அமைதிக்கும் வழிநடத்துகிறது.
அன்பன்

0 Comments:
Post a Comment
<< Home