Sunday, August 18, 2024

உன்னை ஒன்று கேட்பேன் . . . .

சிந்திக்கும் திறன் மனிதனுக்குகிடைத்த வரப்பிரசாதம்.

ஏனைய விலங்கினங்கள் சிந்திக்கும் திறன் பெற்றிருக்கின்றனவா இல்லையா என்பது கேள்விக்குரியவனாகவே இருக்கின்றது.

ஏனேனில் அவர்களின் சிந்திப்பின் பலன்களை செயல்களில் காட்டும் திறன் அவைகளுக்கு குறைவாகவே இருக்கிறது.

இந்தக் கருத்தில் என்னுடன் வேறுபடுபவர்கள் பலர் இருக்கலாம்.

ஆனால் இங்கே நான் சொல்ல விழையும் கருத்தின் உள்ளார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கை எனக்குள்ளது.

இப்படியான சிந்திக்கும் திறன் எத்தனை பேரால் அதனுடைய முழுத்தகமைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி.

சிந்திப்பதனால் ஒரு மனிதன் தன்னைத் தானே ஆய்வு செய்யும் திறமை பெறுகிறான்.

தன்னைத்தானே அறியும் திறன் ஒரு மனிதனுக்கு மற்றவருடைய நிலையை உணரும் சக்தியைக் கொடுக்கிறது.

அந்த உணர்வின் அடிப்படையில் அவனுடைய எதிர்பார்ப்புக்கள்க குறைகின்றன.

விளைவு அவன் வாழ்வில் ஏமாற்றங்கள் தவிர்க்கப்படுகின்றன.

என்ன சக்திதாசன் காலாட்சேபம் செய்வது போல அளந்து கொண்டே போகிறேன் என்று எண்ணுகிறீர்களா?

என்னுடைய அனுபவத்தின் வாயிலில் நின்று நான் என்னை நானே பலமாய்க் கேட்கும் கேள்விகள் தான் உங்கள் காதுகளில் வந்து விழுகின்றன.

பல சமயங்களில் என்னுள் இருந்த புரிந்துணர்வின் பற்றாக்குறையால் மனிதாபிமானம் பலமிழந்து போனதை நான் இப்போது உணர்கிறேன்.

செய்யக்கூடியவை,செய்யக்கூடாதவை என்னும் காரியங்களின் வரைமுறைகள் என்னும் எல்லகளுக்கப்பால் எனது செய்கைகள் ஊர்வலம் சென்றுவிட்டு வந்ததை நான் இப்போது உணர்கிறேன்.

காலங்கடந்து இப்போது உணர்ந்துஎன்ன பயன்?

உங்கள் கேள்வி என் காதுகளில் விழுகிறது. அதில் தொனிக்கும் உண்மையின் வலுவும் எனக்குப் புரிகிறது.

உணர்ந்த உண்மைகளைப் அன்புள்ள நெஞ்சங்களுடன் பலமாகச் சிந்திப்பதற்குக்  காரணம் ஒன்றுண்டு.

என்னுடைய சுயவிமர்சனம் யாராவது ஒருவரின் மனதில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த வழிகோலுமோ? என்னும் ஒரு நப்பாசையே !

இந்தச் சிந்திக்கும் திறனற்ற காரணத்தினால் தான் பல திருமணங்கள் திசையற்றுப் போகின்றன.

பல குழந்தைகளின் வளர்ப்புக்கள் பாதைகளை மாற்றுகின்றன. 

ஏன் பல போர்களுக்கு ஆரம்பமாகக் கூட இவை இருந்திருக்கின்றன.

திருமண வாழ்வில் பலர் (நான்ஆண் என்பதால் ஆண்களின் கோணத்தில்பார்க்கிறேன்) எமது லட்சியங்களையும்,நோக்கங்களையும் கொள்கைகளையும் முதன்மைப் படுத்துகிறார்கள்.

எமது வாழ்க்கைத்துணையின் அபிலாஷைகளையோ, ஆசைகளையோ,லட்சியங்களையோ நினைவில் கொண்டு வரத் தவறி விடுகிறோம்.

ஏன் பல உதாரணங்களில் அப்படி ஒன்று எமது வாழ்க்கைத்துணைக்கு இருப்பதைக் கூட மறந்து விடுகிறோம்.

எம்மை நியாயப்படுத்த எமக்கு முன்னால் வாழ்ந்தவர்களின் வழிமுறைகளையும் (அது சரியோ, தவறோ என்று கூடச் சிந்திக்காமல்) , கலாச்சாரம் என்னும் பெயரால் விதிக்கப்பட்ட நியாயமற்ற கட்டுப்பாடுகளையும் உபயோகப்படுத்திக் கொள்கிறோம்.

எனக்குத் தெரிந்த ஒருவர் 1970களில் ஈழத்தில் திருமணமாகி லண்டனுக்கு வந்தவர். 

தனது மனைவி சேலையைத் தவிர வேறெதுவும் அணியக் கூடாது என்னும் கட்டுப்பாட்டை அவர் மனைவி மீது திணித்தார். (அப்போது அதுதான் சமுதாயப் பார்வையாக இருந்திருக்கலாம்).

ஆனால் அவர் மனைவி வெளியே சென்று வெள்ளை இனத்தவர்களுக்கு மத்தியில்,அவர்களுக்கு நிகராக உழைத்து மாதாமாதம் வீட்டுக்குச் சம்பளம் கொண்டு வருவதை அனுமதித்தார்.

அந்தப்பெண் தனது ஆசிய உடையான சேலையை அணிந்து கொண்டு வெள்ளை இனப் பெண்களுக்கு மத்தியில் பணி புரியும் போது தனது மனதில் தோன்றும் தாழ்வு மனப்பான்மையைப் பற்றித் தனது கணவனுக்கு மணிக்கணக்காக புரியவைக்கப் பாடுபட்டும்,அவர் சிந்திக்கத் தவறிவிட்டார்.

விளைவு அந்தப்பெண் தனது பணிக்காலம் முழுவது மனம் நிறைந்த சுமையுடன் வாழ்ந்து சமீபத்தில் இவ்வுலகை விட்டுமறைந்தார்

ஆனால் அதே நபர் தனது மகள் திருமணத்துக்குப் பின் சில வகையான ஆடைகளை அணிவதைத் தடுத்த தனது மாப்பிள்ளையைப் பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

அவரைப் பார்த்த எனக்கு அவரிடம் இருந்த சிந்திக்கும் தன்மையை அடகு வைத்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றியது.

அவரின் மனைவியின் சிந்திக்கும் மனோபாவமும்,நியாயமான அறிவுரைகளும் இல்லாதிருந்திருந்தால் அவரது மகளின் வாழ்வு விவாகரத்தில் முடிந்திருக்கும்.

அப்போது கூடத் தனது மனைவியின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை,கணவனை மதிக்கும் அருமையான குணாம்சத்தை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

சிந்திப்பின் வலிமை,அது கொடுக்கு நிரந்தர அமைதி அதைப் பரிபூரணமாக உணர்வதிலேதான் உள்ளது.

சிந்திப்பின் மூலம் ஒருமனிதன் தன்னைப் புடம் போட்டுக் கொள்கிறான். 

அது அவனை வாழ்க்கையில் முன்னேற்றப்பாதைக்குத் தள்ளுகிறது.

பின் ஏன் சுயமான சிந்திப்புஎன்று கூறுகிறோம்?

மற்றொருவர் உங்கள் மனதில் தூண்டும் சிந்தனை சில சமயங்களில் ஒருதலைப் பட்சமாக இருக்கலாம்.

அந்தச் சிந்தனையின் பலனாக அவர் இலாபம் அடைபவராக இருக்கலாம்.

எனவே மற்றோருவரின் மூலம் கிளறப்படும் சிந்தனை என்னும் புழுதி அடங்கி, தானே சுயமாக சிந்தித்து ஏற்படுத்தும் ஊதுவத்திக் குச்சியின் இனிய நறுமணம் போன்ற சிந்தனைப் படலமே உபயோகமாகவிருக்கும்.

என்ன சக்திதாசன்? உன்னை நீயே மறுதலிக்கின்றாயே! என்று நீங்கள் கேட்பதுபுரிகிறது.

அதாவது உங்களது பதிவு யாராவது ஒருவருடைய மனதில் சிந்தனையைத் தூண்டினால் போதுமானது என்று கூறும் நீயே,மற்றவர்களால் தூண்டப்படும் சிந்தனை ஆரோக்கியமற்றது என்று கூறுவது போல் தெரிகிறதே என்ற உங்களது சந்தேகம் எனக்குப் புரிகிறது.

ஒருவரது மனதில் சிந்தனையைத் தூண்டுவதற்கும், தனது சிந்தனயைத் திணிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர்வீர்கள் என்பது எனது நம்பிக்கை.

சிந்திக்கும் தன்மையின் குறைவினால் மனத்தளவில் பலரினால் பாதிக்கப் பட்டிருக்கும் நான் என்னை நானே சிந்தித்து விமர்சிக்கும் தன்மையை ஓரளவு கடைப் பிடிப்பதனால் சில நிகழ்வுகளுக்கு விளக்கத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

சுயமான சிந்திப்பின் மூலம் தன்னையும் முன்னேற்றிக் கொண்டு,தான் வாழும் சமுதாயத்தையும் முன்னேற்றும் வல்லமை நான் காணும் அனைத்து இளநெஞ்சங்களிலும் இருக்கிறது.

எமது சமுதாயத்தின் வருங்காலத் தூண்கள் நீங்கள். 

உங்களின் விழிப்புணர்விலே பல மூட நம்பிக்கைகள் தகர்த்தெறியப்பட்டு, பல பொக்கிஷங்களான கலாச்சார நியதிகள் காக்கப்பட வேண்டியது அவடியம்.

ஆனால் அதேசமயம் ஆண்,பெண், இன, மத, மொழி வேறுபாடுகள் களைந்தெறியப்படும் வகை இளநெஞ்சங்களில் உண்டு என்னும் நம்பிக்கை என் நெஞ்சில் அசைக்க முடியாதவாறு நிலை கொண்டுள்ளது.

சக்தி சக்திதாசன்

Friday, August 02, 2024

சிந்தையில் சிதறிய சிறு துளிகள்

நம்பிக்கையின் அடித்தளமின்றி நாம் வாழ்ந்துவிட  முடியாது.ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடித்தளத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஒவ்வொருவருடைய மனங்களிலும் அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்களின் வித்தியாசத்தில் தான் இவ்வுலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

தீமை செய்பவர்கள் இல்லாவிட்டால் நன்மை செய்பவர்களை அடையாளம் காண முடியாது.அதேபோலத் துன்ப நிகழ்வுகள் இல்லாவிட்டால் இன்ப நிகழ்வின் மகத்துவம் புரியாது.

ஆனால் இந்நம்பிக்கை நியாயம் எனும் எல்லைக்கோட்டைத்  தாண்டும் போதுதான் வாழ்வில் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக எம்மையறியாமலே வெறியாக மாறத் தொடங்குகிறது.

எல்லை மீறிய இந்நம்பிக்கையே இன்றைய மத, இனப் பூசல்களின் அடிப்படையாக அமைந்து விடுகிறது.இந்நம்பிக்கை அதன் எல்லைக் கோட்டைத் தாண்டாதிருப்பதற்கு அன்பின் அடிப்படையில் அமைந்த புரிதல் அவசியம்.

எம்மைப் போலவே மற்றவர்களும் என்று அவர்களின் நிலையில் இருந்து அவர்களின் நம்பிக்கையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டால் பல பிரச்சனைகளின் தீர்வுக்கு வழி பிறக்கிறது.

நாம் நம்பாத ஒரு விடயத்தை மற்றொருவர் நம்புகிறார் என்றால் எமது அவநம்பிக்கைக்கு நியாயம் கற்பித்து அவரை எம் வழிக்குத் திருப்புவதிலேயே எம்மில் பெரும்பான்மையினரின் கவனம் இருக்கிறது..

எமக்குநடக்கும் நிகழ்வுகள்,எம்மீது வைக்கப்படும் விமர்சனங்கள்அனைத்தையும் எம்மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களாகப் பார்ப்பதால் மனதில் ஆத்திர உணர்வு தலை தூக்குகிறது.

ஒரு நிகழ்வு நடந்து முடிந்த அடுத்த கணத்தில் அந்நிகழ்வைப் பற்றிய எமது நோக்கிற்கும் இரண்டு நாள் அவகாசத்தின் பின்னால் அந்நிகழ்வை மீளாய்வு செய்யும்போது எம்முள் இருக்கும் நோக்கிற்கும் பாரிய வேறுபாடு இருக்கும்.

அதனால்தான் அனுபவம் மிகுந்த பெரியோர் எதையும் அவசரப் பட்டு முடிவு செய்யாதீர்கள் என்று சொல்லி வைத்தார்கள்.

இது ஏதோ ஒரு கட்டுரை வரைவதற்காக நான் உங்களோடு பகிர்ந்துகொள்ளும் என்னால் புரிந்துகொள்ளப்படாத ,அனுபவிக்காத ஒரு விடயமல்ல.

என்வாழ்வில் நான் சந்தித்த பலகணங்கள்.என் வாழ்வில்எனக்கு நேர்ந்த என்னால் நிகழ்த்தப்பட்ட  நிகழ்வுகள் இவற்றின் அடிப்படையை நான் அசை போட்டுப் பார்க்கும்போது என்னுள் எழும் அதிர்வுகளையே நான் வரிகளாக்கி இவ்வெழுத்துத் தோட்டத்தில் விதைக்கிறேன்.

அப்படி என்ன இவன் ஏதோ பெரிய ஞானியா?போதிக்கவந்து விட்டானே !என்றுஎண்ணாதீர்கள்.

நான்ஞானியுமல்ல ,ஒரு பெரிய எழுத்தாளனுமல்ல. அனைவராலும் மதிக்கப்படும் சாதனைகள் படைத்த படைப்பாளியுமல்ல. வெறும் சாமானிய மனிதனே !

நான்எழுத்து வடிவில் பகிர்ந்துகொள்பவை ஏதாவது உபயோகமான வகையில் அமைந்திருக்குமானால் அதுவே நான் என்னை இத்தனை காலம் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அகிலத்திற்கும், இயற்கைக்கும் நான் எழுதுவதைப் படித்து
ரசிக்கும் அன்றி நகைக்கும் என் இனிய அன்பு உள்ளங்களுக்கும் காட்டக்கூடிய நன்றியுணர்வு.

ஒரு கவிஞனாக கற்பனைத் தேரில் பறக்க வேண்டி வருவது உண்டு.ஆனால் எதையுமே கற்பனையின் அடித்தளத்தில் எழுத முடியாது.உள்ளத்தில் உலவும் உண்மைகளுக்கும் ஒரு வடிகால் அமைக்க வேண்டியது அவசியமாகிறது.

வாழ்க்கையின் வாலிப வயதினை நாத்திகத்திலும்,பயனற்ற அரசியலைப் பேசுவதிலும் பயன்படுத்திய என்னை ஆத்திகத்தின் பால் திருப்பிய சம்பவங்கள் ஏராளம்.

அனைத்துக் கருத்துக்களையும்,அனைத்து மதங்களின் சாரம்சத்தையும் அறிந்து கொள்வதே உண்மையானஆத்திகம் என்பதே எனது கருத்து.

“தம்பிஉன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு எழுது"என்றார் எம் முப்பெரும் பாவலர் பாரதி.

உண்மையே கடவுள்.உண்மையே சமயம்,உண்மையே மனிதத்துவம்..

நாமும்வாழ்வோம் மற்றவரையும் வாழவிடுவோம் என்று வாழ்வதே வாழ்க்கையின் அடித்தளமாக இருந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்கு வழிபிறக்கும்.

அமைதியான, தெளிவான உள்ளம் ஒன்றே அன்பான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.எனது இந்த 49 வருட புலம்பெயர் வாழ்க்கையிலே பிரச்சனைகளைக் கண்டு நான் ஓட ஆரம்பித்திருந்தால் எப்போதோ உலகத்தை விட்டே ஓடியிருந்திருக்க வேண்டும்.

பூட்டுகளோடு சாவிகள் தயாரிக்கப்படுவதைப் போல பிரச்சனைகளோடு தீர்வுகளும் வருகின்றன.சில சமயங்களில் அதைக் கண்டு கொள்வதற்கு தாமதமாகி விடுகிறது.

நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்க்கச் சமயங்களில் நாம் தவறி விடுவதால் வாழ்க்கை எமக்களிக்கும் சமபலன்களை  நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

ஒரு சிறு உதாரணமாக காலையில் வேலைக்குச் செல்வதற்காக காரில் ஏறி உட்கார்ந்து புறப்பட ஆயத்தமாகும் போதுதான் ஒரு சக்கரத்திற்கு காற்றுப் போயிருப்பதை காண்கிறோம்.மனது எரிச்சலடைகிறது.சரி ஒருவாறு சக்கரத்தை மாற்றிக் கொண்டு ஆபீஸுக்குள் சென்று அமர்கிறோம்.

சிறிது நேரத்தின் பின்னால் மின்னஞ்சலில் சம்பள உயர்வு பற்றிய அறிவித்தல் வருகிறது. 

சிறிது நேரத்தின் முன்னால் அடைந்த ஒரு எரிசலூட்டும் சம்பவத்தைத் தந்த அதே வாழ்வுதானே இப்போ மகிழ்வையும் தருகிறது என்பதை எண்ணிப்பார்த்து இரண்டு சம்பவங்களையும் கோர்த்துப் பார்க்கத் தவறுவதினாலேயே எம் வாழ்க்கை எமக்கு பல சமயங்களில் எதிர்மறையான தாக்கங்களைத் தருவது போலத் தோன்றுகிறது.

உள்ளத்தின் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் தந்த அனைத்துக்கும் மேலான சக்திக்கு என் நன்றிகளையும், இதைப் பொறுமையாகப் படிக்கும் உங்களுக்கு எனது நன்றியறிதலையும் அன்போடு கூறிக் கொள்கிறேன்.

உங்கள் ஆதரவின்றி நானில்லை ஏனெனில் எழுத்தின்றி இந்தச் சக்தி இல்லை.

மீண்டுமொரு பகிர்வுடன் சந்திக்கும் வரை

அன்பன்
சக்தி சக்திதாசன்