எண்ணங்களாலே இழைக்கப்படுவதுதான் வாழ்க்கை . . .
எண்ணங்களாலே இழைக்கப்படுவதுதான் வாழ்க்கை . . .
உலகினிலே நாம் மனிதனாக உருவெடுப்பதுவும், எந்த இடத்திலே விதையாக விழுகிறோம் என்பதும் எமது வேண்டுதலின் படி நடப்பதல்ல.
எங்கோ விழுகிறோம், அங்கே எமக்கான சொந்தங்களும், பந்தங்களும் எம்மீது திணிக்கப்படுகின்றன.
ஆனால் மனிதராக உருவெடுக்கும் போது எந்த வகையில் எப்படிப்பட்ட இலட்சியங்களுடன், கொள்கைகளுடன் உருவாகிறோம் என்பதில் எம் பங்கு நிச்சயமாக இருக்கிறது.
அந்தப் பங்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கெடுப்பது எம்னதிலே விளையும் எண்ணங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஓட்டப்போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த ஓட்டப்போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது தினமும் அவர்கள் செய்த பயிற்ச்சிகளில் மட்டுமல்ல அந்தக் கணப்பொழுதில் அவர்கள் நெஞ்சங்களில் மிளிர்ந்திருக்கும் எண்ணங்களிலும் தங்கியுள்ளது.
நான் இந்த ஓட்டப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெறப்போகிறேன் என்னும் எண்ண்ம் கொண்ட சிலரும், நாம் எங்கே வெற்றி கொள்ளப் போகிறோம் என்னும் சிலரும் நிச்சயமாக அந்தப் போட்டியின் ஆரம்பக் கோட்டைத் தொட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதுவே உண்மை.
அந்தப் போட்டியின் முடிவும் அவரவர் மனப்பான்மைகளின் வழியே அமையும் என்பதுவும் உண்மை.
வாழ்க்கை என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை.
சிலர் வசதியான குடும்பச் சூழல்களின் மத்தியில் அவர்களின் பெற்றோர்களின் உதவியுடன் தமது வாழ்க்கையைச் செழிப்பாக ஆரம்பிப்பார்கள்.
மற்றும் சிலரோ வாழ்க்கையின் அடிமட்டக் கோட்டில் இருந்து அல்லல்பட்டு மிகவும் கடினமான நிலையில் தமது வாழ்வை ஆரம்பிப்பார்கள்.
ஆனால் பல வருடங்களின் பின்னர் அவர்கள் இருவர்களின் நிலைமையை எடுத்துப்பார்த்தால் இருவருமே ஒருவருக்கொருவர் முரணான வாழ்க்கை வசதிகளைக் கொண்டிருக்கக் கூடும்.
அந்த இருவரின் ஆரம்பத்திற்கும், முடிவிற்கும் இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளை இழைப்பதற்குக் காரணியாக அமைந்தது என்ன?
அவரவர் மனங்களிலே மிளிர்ந்த எண்ணங்களே அவர்களின் வாழ்க்கையை இழைப்பதற்கு முக்கிய கரணியாக அமைந்தது எனலாம்.
எமது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்திலே மிகவும் முக்கியமாகப் பட்ட விடயங்கள் மற்றொரு கால கட்டத்திலே முக்கியமாகத் தென்படுவதில்லை ஆனால் அந்த இரு காலகட்டங்களில் எம் மனதிலே நிலை கொண்டிருந்த எண்ணங்கள் மாறுபட்டிருந்தனவா?
அவைகளின் மாற்றங்கள் அவ்விடயங்களின் முக்கியத்துவத்தின் மாற்றத்துக்கு எவ்வகையில் காரணிகளாக அமைந்துள்ளன?
இக்கேள்விகளுக்கு விடைகாண விளையும் போது மனதில் பல விடயங்கள் தெளிவாகின்றன.
உள்ளத்தின் ஓசைகளின் வழி ஓடிய எண்ணங்களின் காரணமாக வாழ்க்கையில் பலமுனைகளில் நாம் எடுத்த திருப்பங்களின் காரணங்கள் புரிகின்றன.
ஆனால் நாம் திரும்பச்சென்று அத்திருப்பங்களின் திசையை மாற்ற முடிவதில்லை.
ஆனால் அவற்றின் திசை வேறாக இருந்திருந்தால் இப்போதைய வாழ்க்கையின் விளைவு எப்படி இருந்திருக்கும் என்று அசைபோட மட்டுமே முடிகிறது.
அப்படியானல் பின் ஏனிந்த அசைபோடல்? என்னும் கேள்வி எழலாம்.
உள்ளத்தில் எழும் ஓசைகளின் சத்தம் அடுத்தவருக்கும் கேட்டால் ஒரு திருப்புமுனையில் இருக்கும் ஒருவர் தமது சிந்தையை வேறுபாதையில் தட்டிவிட ஒரு சமயம் அது உதவக்கூடும் என்னும் நப்பாசையே.
நான் நடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்கிறேன். எத்தனையோ தவறுகள் . . .
எத்தனையோ இடங்களில் . . . அப்பப்பா !
மாணவனாக, வாலிபனாக, குடும்பஸ்தனாக, இன்று முதுமையின் ஆரம்பத்தில் எத்தனையோ சறுக்கல்கள். மற்றவர்கள்
வேண்டுமென்றே சறுக்கவைத்த சம்பவங்களை விட நானாக , நான் என்னும் அகந்தையில் ஏற்படுத்திக் கொண்ட சறுக்கல்கள் அதிகம்.
மற்றவர்களின் திறமையை உளமார, மனதார ஏற்றுக்கொள்வது என்னுடைய பெருமைக்கு இழுக்கு என்னும் எண்ணம் நிறைந்ததினால் எத்தனையோ அற்புதமான சந்தர்ப்பங்கள், அறிவை வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் நிறைந்த மனிதர்களின் தொடர்பை இழந்து விட்ட பொழுதுகள் ஆயிரம்.
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு செயலில் மற்றையோரை விட திறமையுடையவர்களாக இருப்பார்கள் என்பதுவே உலகார்ந்த உண்மை.
இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள ஆணவம் என்னும் மாயை எமது கண்களை மறைக்கிறது.
இந்த மாயத்திரையினுள் எம்மை மறைத்துக்கொண்டு கண்ணிருந்தும் குருடர்களைப் போல் வாழ்கிறோம்.
மனதின் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் , வரித்துக் கொள்ளும் இலட்சியங்களும், அவற்றை அடைவதற்காக எடுத்துக் கொள்ளும் மார்க்கங்களும் தூய்மையானவைகளாவே அமையும்.
சில வருடங்களின் முன்னால் இங்கிலாந்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. மூன்று இளம் பெண்கள்சுமார் பதினெட்டு வயது மிக்கவர்கள்.
அதிலே இருவர் ஒன்றாகச் சேர்ந்து மற்றைய பெண்ணை பரிகாசம் செய்து மரணத்தின் விளிம்புவரை தள்ளி, அப்பெண்ணும் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை புரிந்து கொண்டாள்.
நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்ட மற்ற இரு பெண்களுக்கும் மிக நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவ்வழக்கின் முடிவிலே இறந்த பெண்னின் பெற்றோரை தொலைக்காட்சியில் பேட்டி கண்டபோது, அப்பெண்ணின் தந்தை நாம் எமது மகளை இழந்து துயரத்தில் தவித்தாலும், நம்மகளின் இறப்புக்குக் காரணமான அவ்விரு பெண்களின் பாவமன்னிப்புக்காகவும் இறைவனை வேண்டுகிறேன் என்று கூறினார்.
அவரின் பெருந்தன்மையை எண்ணிப்பார்க்கவே மனது அஞ்சியது.
அத்தகைய ஒரு மனிதரின் வாழ்வை எத்தகைய எண்ணங்கள் இழைத்தன என்பதை எண்ணிப்பார்க்க மனது ஆவலாய்த் துடித்தது.
இதயத்தின் கனம் அது சுமக்கும் எண்ணங்களின் அழுக்குகளின் சுமை என்பதுவே உண்மை.
எண்ணங்களின் அழுக்குகள் வெளியேற, வெளியேற இதயமும் இலேசாகிறது.
தூய, தன்னலமில்லாத எண்ணங்களின் மூலம் இழைக்கப்படும் வாழ்க்கையும் மிகவும் இனிமையாகத்தான் இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை
மீண்டும் வரும்வரை
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home