சுய விழிப்புணர்வு விடுதலையின் வாசல்
சுய விழிப்புணர்வு விடுதலையின் வாசல்
நாம் ஒவ்வொருவரும் ஒரு கதையின் நாயகர்கள்.
ஆனால் அந்தக் கதையை நாமே எழுதுகிறோமா, அல்லது யாரோ எழுதிய கதையில் வெறும் கதாபாத்திரங்களாக நடிக்கிறோமா என்று எத்தனை பேர் யோசித்திருக்கிறோம்?
பிறப்பிலிருந்து நம்மைச் சுற்றியிருக்கும் சூழல், பெற்றோர், சமூகம், அனுபவங்கள் ஆகியவை நமக்குள் ஒரு "தன்னியக்க இயந்திரத்தை" உருவாக்கி விடுகின்றன.
அந்த இயந்திரம் நம் அறிவின் துணையின்றியே நம்மை இயக்குகிறது.
யாரோ ஒருவர் கடுமையாகப் பேசினால் நாம் சுருங்கிக்கொள்கிறோம்.
ஒரு வாய்ப்பு வந்தால் பயந்து விலகுகிறோம்.
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்கிறோம்.
ஏன்?
ஏனென்றால் நம்மை நாமே ஆராய்ந்து அறிந்துகொள்ளவில்லை.
இந்த ஆழமான சுய ஆராய்ச்சியே, நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும்.
சுய ஆராய்ச்சி என்பது வெறும் தத்துவ சிந்தனை மட்டுமல்ல.
அது ஒரு ஆழமான உள்நோக்கு பயணம்.
நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கோபப்படுகிறோம், ஏன் சில உறவுகளில் மட்டும் எம்மையே இழந்துவிடுகிறோம், ஏன் சில கனவுகளை நோக்கி நகர முடியாமல் தயங்கி நிற்கிறோம் என்பதை நேர்மையாக உற்றுநோக்குவதே சுய ஆராய்ச்சியின் ஆரம்பம்.
பல நேரங்களில் நம் நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஒரு பயம் இருக்கும் நிராகரிக்கப்படுவோமோ என்ற பயம், போதுமானவர்களாக இல்லாதோமோ என்ற பயம், தனிமைப்படுத்தப்படுவோமோ என்ற பயம்.
அந்தப் பயத்தை நாம் அடையாளம் காணும்வரை, அது நம்மை அறியாமலேயே ஆட்டிப்படைத்துக்கொண்டே இருக்கும்.
ஒரு மரத்தின் வேரை அறியாமல் அதன் கிளைகளை மட்டும் வெட்டிக்கொண்டே இருந்தால் மரம் மீண்டும் முளைக்கும்.
...
அதுபோலவே, நம் மனத்தின் வேர்களை நம் நம்பிக்கைகளை, காயங்களை, பழக்கங்களை அடையாளம் காணாமல் வெறும் நடத்தையை மட்டும் மாற்ற முயற்சிப்பது வீண் முயற்சியே.
நாம் பாதுகாக்க முயற்சிக்கும் விஷயங்களை ஆழமாக உணரும்போது, நம் வாழ்வின் பல புதிர்கள் விடுவிக்கப்படுகின்றன.
ஒருவர் எப்போதும் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார் என்றால், அவர் உண்மையில் தன் அன்பை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தைப் பாதுகாக்கிறார்.
ஒருவர் எல்லாவற்றையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புகிறார் என்றால், அவர் தன் உள்ளத்தின் ஒழுங்கின்மையை மூடி மறைக்கிறார்.
இந்த உண்மைகளை நாம் நேரில் காணும்போது, அவை நம்மை அவமானப்படுத்துவதில்லை; மாறாக, நமக்கு ஒரு புரிதலை ஒரு இரக்கத்தை நம்மேலேயே தருகின்றன.
தன்னை அறிதல் என்பது தன்னை குற்றம் சொல்வதல்ல.
அது தன்னை அன்போடு புரிந்துகொள்வது.
மீண்டும் மீண்டும் நாம் செய்யும் தவறுகள் நம்மை மிகவும் அலைக்கழிக்கின்றன.
"நான் ஏன் இப்படியே இருக்கிறேன்?" என்று நாம் புலம்புகிறோம், ஆனால் அந்தத் தவற்றின் ஆணிவேரை நோக்குவதில்லை.
ஒரே மாதிரியான உறவுகளில் மீண்டும் மீண்டும் காயப்படுகிறோம் என்றால், நாம் கவர்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் வகையையும், அந்த வகைக்கு நாம் ஏன் ஈர்க்கப்படுகிறோம் என்றும் ஆராய வேண்டும்.
ஒரே மாதிரியான தோல்விகள் தொழில் வாழ்வில் திரும்பத் திரும்ப வருகின்றன என்றால், நாம் மனத்துக்கு ஆழத்தில் கொண்டிருக்கும் "நான் தகுதியற்றவன்" என்ற நம்பிக்கையை கவனிக்க வேண்டும்.
இந்த ஆணிவேர் நம்பிக்கைகள் சிறுவயதில் விதைக்கப்பட்டவை.
ஆனால் நாம் வளர்ந்த பின்னும் அவை நம்மை ஆட்டுவிக்கின்றன நாம் கவனிக்காதவரை.
தன்னியக்க முறையில் வாழ்வது என்பது ஒரு வகையான தூக்கத்தில் நடப்பது போன்றது.
நாம் எழுந்திருக்கிறோம், உண்கிறோம், வேலை செய்கிறோம், தூங்குகிறோம் .
ஆனால் நாம் ஏன் இதை செய்கிறோம், இது நமக்கு உண்மையிலேயே வேண்டுமா, இது நம் சொந்த விருப்பமா என்று கேட்பதில்லை.
சமூகம் சொன்ன பாதையில் நடக்கிறோம், பெற்றோர் விரும்பிய வாழ்வை வாழ்கிறோம், பழக்கத்தினால் தேர்ந்தெடுத்த உறவுகளில் தொடர்கிறோம்.
இந்தத் தன்னியக்கத்தை உடைக்க ஒரே ஒரு கருவி மட்டுமே உதவும் அது விழிப்புணர்வு.
"நான் இப்போது என்ன உணர்கிறேன்? ஏன் உணர்கிறேன்? இந்த உணர்வுக்கு நான் எப்படி எதிர்வினையாற்றுகிறேன்? அந்த எதிர்வினை எனக்கு உதவுகிறதா?" என்று கேட்கும் பழக்கம் ஒரு மனிதனை படிப்படியாக விழிப்பு நிலைக்கு இட்டுச் செல்கிறது.
சுய விழிப்புணர்வு பெறுவதற்கு பல வழிகள் உள்ளன.
தினமும் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து, நம் மனத்தை நோக்குவது .
சுவாசத்தை கவனித்து எண்ணமற்ற நிலைக்கு சென்று ஆன்மாவின் குரலை கேட்பது.
இதை தியானம் என்று சொல்லலாம்.
நாட்குறிப்பு எழுதுவது நம் உள்ளத்தின் குழப்பங்களுக்கு ஒரு வடிகால் தருகிறது.
மேலும், காலப்போக்கில் நம் சிந்தனை முறைகளை நாமே கவனிக்க உதவுகிறது.
நம்பகமான நண்பர்களிடம் அல்லது ஒரு நல்ல ஆலோசகரிடம் நம் மனத்தைத் திறந்துவிடுவதும், நாம் கவனிக்காத கோணங்களை வெளிப்படுத்துகிறது.
நல்ல புத்தகங்கள், மனவியல் கட்டுரைகள் படிப்பது நம் உள் உலகை புரிந்துகொள்ள உதவும் கருவிகளை தருகின்றன.
இவை எல்லாவற்றிலும் மிக முக்கியமானது நேர்மை.
நம்மோடு நாமே நேர்மையாக இருக்காமல், எந்த வழியும் பலன் தராது.
சுய விழிப்புணர்வின் ஆழமான பலன் என்னவென்றால், அது நமக்கு "தேர்வு" செய்யும் சக்தியை திரும்பத் தருகிறது.
விழிப்பின்றி வாழும்போது, நாம் சூழ்நிலைகளுக்கு வெறும் எதிர்வினையாற்றுகிறோம்.
யாரோ ஒரு கல்லை வீசுகிறார்கள், நாம் தானாகவே விழுகிறோம்.
ஆனால் விழிப்போடு வாழும்போது, அதே கல் வீசப்படும்போது,
"இந்த சூழலில் நான் எப்படி நடந்துகொள்ள விரும்புகிறேன்?" என்று ஒரு கணம் நிறுத்தி யோசிக்கிறோம்.
அந்த ஒரு நிறுத்தம் அந்த சிறு இடைவெளி தான் சுதந்திரத்தின் தொடக்கம்.
நாம் நம் கோபத்தின் அடிமையல்ல, நம் பயத்தின் கைதியல்ல என்று உணரும் தருணம் அதுவே.
இறுதியில், எம்மைப் பற்றி நாமே அறிந்துகொள்வது என்பது ஒரு முடிவில்லாத பயணம் ஆனால் மிகவும் அர்த்தமுள்ள பயணம்.
நாம் முழுமையாக ஒருபோதும் "முடிந்துவிட்டோம்" என்று சொல்ல இயலாது, ஏனெனில் மனித மனம் ஒரு ஆழமான கடல்.
ஆனால் அந்தக் கடலில் இறங்கத் தொடங்கும் ஒவ்வொரு தருணமும் நம்மை மேலும் மேலும் நாமாகவே ஆக்குகிறது.
சுய விழிப்புணர்வு பெற்றவன் மட்டுமே உண்மையான அர்த்தத்தில் சுதந்திரமாக வாழ முடியும்.
ஏனென்றால் அவன் தன் வாழ்க்கையை விதியின் கையில் விடவில்லை,
தன்னியக்கத்தில் இழக்கவில்லை.
மாறாக, தன் கரங்களில் எடுத்துக்கொண்டிருக்கிறான்.
"உன்னையே நீ அறி" என்ற சொக்ரட்டீஸின் வார்த்தைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.
ஏனென்றால் அதுவே வாழ்வின் மிக ஆழமான உண்மை.
அன்பன்


0 Comments:
Post a Comment
<< Home