Tuesday, September 26, 2023

கல்வியென்பது . . . .

" கல்வி என்பது ஆடம்பரமான அணிகலனல்ல அது ஒரு அவசியமான ஆடை "

இந்த வாசகத்தை நான் முதன்முறையாகக் கேள்வியுற்றது நான் ஈழத்திலே என் கல்விப்பொதுச் சாதாரண தராதரப் பரீட்ச்சையின் முதல் முயற்சியில் சித்தியடையாத பொழுதே !

எனது பெறுபேறுகளைப் பார்வையுற்ற என் பெற்றோர் அதிர்ந்து விட்டனர்.

தாம் தமது செல்லக்குழந்தையாக வளர்த்த கடைசிப்பிள்ளையும் ஈழத்திலே சர்வகலாசாலையை எட்டிப்பிடிக்க முடியாமல் போகும் வகையில் கல்வியை உதாசீனம் செய்து விட்டானே !
எனும் ஆதங்கம் அவர்களைத் தாக்கியது.

என்னைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பை என் அன்னை என் தந்தையின் மீது சுமத்தி விட்டாள்.

கையில் என் பெறுபேற்றுத்தாளுடன் என் தந்தை கதிரையில் வீற்றிருக்க குனிந்த தலைநிமிராமல் நான் அவர் முன்னே நின்றிருந்தேன்.

பிறந்தநாள் முதல் அன்றுவரை செல்லமாகக் கூட என்னை அடித்திராத,
வன்மையாகக் என்னைக் கண்டித்திராத என் தந்தை என்னை எப்படிக் கண்டிக்கப் போகிறாரோ எனும் அச்சத்துடன் அவர் முன்னே நான் நின்றிருந்தேன்.

அக்கணம்,அச்சமயம் என்னை நான் மிகவும் வெறுத்தேன்.

அந்தச்சூழல் என்னைப் பார்த்து எள்ளி நகையாடியது.

எல்லாமும் எனக்களித்து நான் கேட்ட எதையும் மறுக்காமல் எனக்களித்தனர் அப்பெற்றோர். 

கனவுகளை நனவாக்கும் கடைசிக் கருவியாய் இருந்தவன் நான். 

இப்படி அவர்களின் கனவுகளை உடைத்து நொறுக்கி விட்டேனே எனும் எண்ணம் என்னை வதைத்தது.

மிகவும் கனிவாக " உட்கார் " 
என்றார் என் தந்தை.

அச்சத்துடன் அவர் முன்னே உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து“ தமிழ் , 
இந்து சமயம்,ஆங்கிலம் , கணிதம் இவற்றில் மட்டும் சித்தியடைந்திருக்கிறாயே !
எதிர்காலத்தில் என்ன செய்யப் போவதாக உத்தேசம் ? "
என்றார் இதுவும் கனிவாகவே
“ உங்களைப் போல ஒரு எஞ்ஞினியராக வருவதே நோக்கம் "

என்றேன் கலங்கிய கண்களுடன்

"உன் ஆசை புரிகிறது ஆனால் இத்தகைய பெறுபேறுகளுடன் நீ அத்தகைய நிலையை அடைய முடியுமா? “ 
என்றார் பாசத்துடன்.

அவரது கனிவின் கனம் என் கண்களில் கண்ணீரானது.

“ கல்வி ஒன்றே அழியாத செல்வம் என்பதை மறந்து விடாதே ! 
உன் வாழ்க்கையை நான் வாழப்போவது அல்ல நீ தான் வாழப் போகிறாய் " 
என்றார் இதுவும் பாசத்துடன் தான்.

என்னைக் கனிவாக அணைத்து விட்டு எழுந்து சென்று விட்டார் என் தந்தை.

இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது அவரது முதுகைப் பார்த்துக் கொண்டே நின்ற என் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்தது.

அதன் பின்னமும் திருந்தினேனா என்றால் இல்லை என்பதுவே விடையாகிறது.

வாலிபம் தான் வாழ்க்கை எனும் எண்ணத்தில் நல்ல நண்பர்கள் இருந்தும் ஏனோ என் உள்ளத்தினைப் பதப்படுத்திக் கொள்ள மறந்து விட்டேன்.

பின்பு இலண்டனில் உயர்கல்வி கற்பதற்கான கல்வித் தகமைகளைப் பெற்றதும் லண்டன் வந்ததும் அதுகூட பெருங்கதையே !

இதை எதற்காக என் அன்பு உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று  எண்ணுகிறீர்களா?

ஏன் என்றால் கல்வியின் முக்கியத்துவத்தை அது எமக்கு வாழ்வில் தரப்போகும் உயர் இடத்தை உணர்ந்து கொள்ள தவறி விடக்கூடாதே என்பதற்காகத்தான்.

கல்வி எனும் செல்வத்தைப் பெறுவதற்காக அல்லும் பகலும் பணிபுரிந்து தனியாக நான் லண்டனில் தவித்தேன். 

அப்போதுதான் தம் உடலை வருத்தி என்னை உயர்விக்க உழைத்த என் பெற்றோரின் மகிமையை உணர்ந்தேன்.

கல்வி என்பது இருவகைப்படுகிறது.

ஒன்று இளமையிற் கற்றுச் சிலையில் எழுவதுதைப் போன்றது.

மற்றொன்று வாழ்க்கை எமக்கு அனுபவப் பாடமாகக் கற்றுத்தருவது.

இளமையில் எமது பெற்றோரும்,
உற்றாரும் உகந்த வகையில் எமக்கு உதவி கல்வியைப் புகட்டும் போது அதனை முறையாகப் பயன்படுத்தி கற்றோமானால் பின்பு வரும் அனுபவப் பாடமானது சுவையோடு சேர்ந்ததாக இருக்கும்.

என்னைப் போல முதலாவது சந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டால் பின்பு கசப்பான அனுபவப்பாடங்களின் மூலமே கல்வி பயில முடியும்.

ஏதோ ஆண்டன் கிருபையினாலும் எனைக் கைப்பிடித்த மனையாளின் அன்பான வழிகாட்டுதலினாலும் இன்று அக்கசப்பான அனுபவங்களைச் சுவையாக உங்களுடன் பகிர்ந்து கொள்லக்கூடிய ஒரு நிலையில் அந்த அனைவர்க்கும் பொதுவான இறை என்னை வைத்திருக்கிறான்.

 கல்வி என்பது அதிகமாகப் படித்து எம் அறிவுத்திறமையினால் மற்றையோரைச் சிறுமைப்படுத்த உபயோகிக்கப்படும் ஆயுதமல்ல.

கல்வியின் மகத்துவத்தை மற்றையோருக்கும் உணர்த்தி, 
எமது வாழ்க்கையை நாம் நல்ல வழியில் மகிழ்வாக வாழ்வதோடு அடுத்தவருக்கு உதவுவதில் உள்ள ஆனந்தத்தை புரிந்து கொண்டு வாழும் வகையில் நாமும் வாழ்வதுவே உண்மையான கல்வியின் பயனாகும்.

எம்மை ஈன்றவர்கள் நாம் யாராக இருப்போம் எனும் நம்பிக்கையில் பிள்ளைகளாகப் பெறுவதில்லை.

யார் தமக்குப் பிள்ளைகளாக வாய்த்தாலும் அவர்கள் நல்ல முறையில் பேர் சொல்லி வாழும் வகையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுவே அவர்களது நோக்கமாகவிருக்கும்.

அவ்வினிய தெய்வீக உள்ளங்களில் ஒளிந்திருக்கும் கனவெனும் திரிக்கு வெளிச்சம் கொடுக்கக் கூடியவர்கள் நாமே !

எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவற விடாமல் அவற்றை எமக்கும் மற்றையோருக்கும் பயனுள்ள்ள வகையில் வாழ்வதற்கு ஆதாரமாகத் திகழ்வது கல்வியே.

இன்றைய தலைமுறை கல்வி பயில்வதற்கு பல வழிகள் இருக்கின்றன.

விஞ்ஞானயுகத்தில் இவ்வழிகளைப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ளத் தவறுவது மாபெரும் குற்றமாகும்.

இனிய உள்ளங்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படவேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

மீண்டும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home