Tuesday, November 21, 2023

இருக்கும் இடத்தை விட்டு . . . .. .

இவ்வுலகினிலே அரும்பாகி, மலராகி, காயாகி, கனியாகி விதையாகும் வகை காண்கிறோம் . 

நாம் கேட்டுப்  பெற்றதல்ல இவ்வாழ்க்கை.
இதுவே சமீப காலம் வரை உள்ளத்தில் பதிந்திருந்தது.

ஆனால் ஆன்மீகத் தத்துவங்கள் பலவற்றை பல மதங்களைக் கடந்த அறிவியல் ஆன்மீகத்தின் அடிப்படையில் விளக்கும்போது பார்வையின் கோணமும் வித்தியாசப்படுகிறது.

ஆமாம் நாமே நமது வாழ்வில் பெற வேண்டிய அனுபவங்களின் அடிப்படையில் ஒரு ஆன்மீகத் திட்டத்துடன் வருகிறோம் எனும் உண்மை புரிய ஆரம்பிக்கிறது.

நாம் விதைக்கப்பட்ட மண்ணை நேசிக்கப் பழகிக் கொண்டோம்.  வாழ்வில் பிடிப்புகள் எம்மை வாழத் தூண்டுகின்றன.

ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு லட்சியக் கனவு. அக்கனவின் எல்லைக் கோட்டை நாம் பார்க்கும் உலகின் வரம்புகளுக்கேற்ப வரைந்து கொள்கிறோம். 

அந்த எல்லை எம்மால் எட்டிப் பிடிக்கப்படக் கூடிய ஒன்றா இல்லையா என்பதை அறியாமலே அவ்வெல்லையை நோக்கி ஓடத் தொடங்குகிறோம்.

எமது மனதின் எதிர்பார்ப்புகள், உணர்வுகள் அவ்வெல்லையை அடையும் கனவுகளின் வழி ஓடத் தொடங்குகின்றன. 

நாம் ஓடிக் கொண்டிருக்கும் போதே எம்முடன் சேர்ந்து வருடங்களும் ஓடத் தொடங்குகின்றன வாழ்வின் முக்கியமான‌ பகுதிகளை  இத்தேடலின் வழி செலவிட்டு விட்டு உடல் களைக்கும் போது அவ்வெல்லையை அடைய முடியாது என்னும் உண்மையை உணர்ந்து கொள்கிறோம்.

"சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்" எனும் நரியின் கதை ஞாபகத்திற்கு வருகிறது. 

வெறும் ஓட்டப் பந்தயமாக இருந்தால் பழையபடி ஆரம்ப நிலைக்குத் திரும்பி வந்து மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம் ஆனால் இது வாழ்க்கைப் பயணம் ஆயிற்றே ! 

மீண்டும் ஆரம்ப நிலைக்கு திரும்ப்பிச் செல்வது முடியாத காரியமாயிற்றே. !

சோர்ந்து போய் விடுகிறோம். மனம் விட்டுப் போய்விடுகிறது. மனழுத்தம் ஆரம்பமாகி விட்டது என்று உணர்கிறோம்.

என்னது இது ? இவன் ஒரே துயர‌ கீதம் பாடுகிறானே ! என்று நீங்கள் உங்கள் புருவங்களை உயர்த்துவதை உணர்கிறேன். 

இது உங்கள் மனோதிடத்தை, நம்பிக்கையை உடைக்க எடுக்கும் முய‌ற்சி அல்ல, வாழ்க்கையில் நானடைந்த பல அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே !

என் வாழ்க்கையில் பல காலங்கள் மற்றையோரின் வெற்றிகளைப் பார்த்து அவர்களைப் போல நடப்பதுதான் வாழ்க்கையில் நானும் வெற்றியடைவதற்குரிய வழி என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். 

நல்ல காரியங்கள் பலவற்றைச் செய்து, நல்ல கொள்கை வாழும் மனிதர்களின் வழி நடப்பது தவறல்ல. அத்தகைய கொள்கைகளை வரித்துக் கொள்வது/ என்றும் தவறாகாது.

வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை, அவர்களின் கொள்கைகள் அவர்களுக்கு வெற்றியளித்ததற்கான உண்மைக் காரணிகளை  நாம் என்றுமே முழுவதுமாக உணர்ந்து கொள்வதோ அன்றி அறிந்து கொள்வதோ முடியாத காரியம்.

அடுத்தவர்களின் வெற்றியின் அனுபவங்கள் என்பது ஓடும் ஓர் நதியைப் போன்றது. 

எமது வீட்டின் நீர்த்தேவைகளுக்காக நதியையே எமது இல்லத்தை நோக்கித் திருப்பினால் எமது தேவைகள் நிவர்த்தி செய்யப் பட‌ மாட்டா, இல்லமே நீரினுள் அமிழ்ந்து விடும். 

பொது அனுபவங்கள் என்னும் நதியிம் ஓரத்தில் நின்று எமது தேவைகளுக்கேற்ப அனுபவ நீரை அள்ளிக் கொள்வதே ஆற்றல் மிக்கோரின் ஆயுதமாகிறது.

/வாழ்க்கையின் வாலிப வயதில் பலருக்கு கிடைக்காத வசதிகள் அனைத்தும் எனக்குக் கிடைத்திருந்தும் அதைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு உபயோகிக்கத் தவறியவன் நான்.

பொன்னான தருணங்கள் பலவற்றை மண்ணாக்கிய மகிமை கொண்டவன் நான். 

அதற்காக நான் வாலிப வயதில் அடைந்த அனுபவங்கள் அனைத்துமே கசந்தவை என்பது என் கருத்தல்ல. 

கரும்பில் அடிக்கரும்புக்கும், நுனிக் கரும்பிற்கும் சுவையில் வித்தியாசம் உண்டல்லவா? அடிக்கரும்ப்பைச் சுவைக்கும் சந்தர்ப்பம் இருந்தும் நுனிக் கரும்பைச் சுவைப்பதில் ஆர்வம் காட்டியவன் நான்.

ஆனால் வழி தவறி ஓடும் நதி தக்க சமயத்தில் சரியான திசை நோக்கி ஓடி ஆழியில் கலக்கும் சந்தர்ப்பத்தை அடையும் .

அது போல என் வாழ்விலும் எனது வாழ்க்கை நதியின்  திசையைச் சரியான வழியில் திருப்ப ஆண்டவனால் அனுப்பப்பட்ட எனது உன்னத‌த் தோழியாக எனது மனைவி அமைந்ததினால் எனது வாழ்க்கை நதி இன்று சீராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நதியின் பாதையை செதுக்கும் பணியில் என்னுடன் வாழ்க்கைப் பயணத்தில் இணைந்த பலரின் அனுபவங்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றன. 

என்னை ஏமாற்றி விட்டதாக எண்ணியவர்கள் என்னை ஏமாற்றவில்லை எனது அனுபவச் செழிப்புக்கு நீரூற்றி இருக்கிறார்கள். 

என்னை அரவணத்து அழைத்துச் சென்ற பல அன்பு உள்லங்கள் என் வேதனைக் கணங்கள் தந்த ரணங்களுக்கு களிம்பாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

சொல்லம்புகள் மூலம் என்னிதயத்தை தாக்குவதாக எண்ணியவர்கள் தொடர்ந்து எறிந்த கணைகளினால் உள்ளம் பஞ்சு போல் மென்மையாக மாற உதவியிருக்கிறார்கள் என்பதுவே உண்மை.

நானொன்று நினைக்கத் தானொன்று நினைக்கும் இறையருள் தந்த எதிர்பாராத் திருப்பங்கள் நிலையில்லா வாழ்க்கையை நிர்ணயிக்கும் நிலையான தத்துவப் பொருளை எனக்கு உணர்த்தியது. 

நம்பிக்கை, கடுமையான உழைப்பு, நேர்மை இவைகளுடன் அனைவருக்கும் பொதுவான,அனைவர்க்கும் மேலான சக்தியின் மீது நம்பிக்கை கொள்வதின் மூலம் மனிதாபிமானத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள‌ வேண்டும் என்பதை புரியும் சந்தர்ப்பமும் கிட்டியது.

பகிரங்க சுயஅலசல் இதைப்படிக்கும் இளம் நெஞ்சங்களுக்கு வாழ்க்கையை நோக்கும் பார்வையில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு.

உள்ளத்தின் உள்ளே உறைந்திருக்கும் உண்மைகளின் உருவே இறைவன் என்னும் உண்மையை இத்தனை வருட கால வாழ்க்கை கொடுத்த அனுபவங்கள் உணர்த்திற்று என்பதைச் சொல்லிக் கொள்வதில் நான் உண்மையில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் நோக்கி அலைந்த காலங்கள் கொடுத்த அனுபவங்களின் வாழ்வின் செதுக்களுக்கு உதவியிருக்கும் உண்மையை பகிர்ந்து கொள்ல கிடைத்த சந்தர்ப்பத்திற்கு அன்பான நன்றிகள்.

மீண்டும் சந்திக்கும் வரை

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Thursday, November 02, 2023

: நண்பனுக்கொரு மடல்

அன்பு நண்பா !

மடல் கண்டு நாளாயிற்று என்றே
மனம் வருந்தி நீ யாத்த
மடல் கண்டு கலங்கினேன்

நம் நட்பு எனும் மூன்றெழுத்து உறவின்
நீளத்தை நானறிவேன் நண்பா !
இருப்பதையும் , இல்லாததையும் கொண்டு
ஈர்த்ததல்ல எம் நட்பு அறிவேன்

பிறப்பும், இறப்பும் , உறவும், சுற்றமும்
நாம் கேட்டு வருவதல்ல நண்பா !
நண்பன் என்று நாம் நெஞ்சில்
நிறுத்திக் கொள்ளும் உறவினில்
எம் தேர்வும் கொஞ்சம் கலந்திருக்கும்

உண்மைகள் என்று நாம் கொண்டவை
உலகில் ஏனோ இன்று விலையாகவில்லை
மாயை எனும் தடாகத்தில் பூக்கும்
பொய்த்தாமரைகள் தான் இன்று
முன்னனியில் திகழ்கின்றன தோழா !

உழைத்து உருக்குலைந்த ஏழையவன்
உருவத்தில் எள்ளளவும் மாற்றமில்லை
ஏழையவன் வாழ்வை மாற்றுவோம் என்போர்
ஏறிவிட்டார் எட்டடுக்கு மாளிகையில்
இதுதான் உலகம் நண்பா ! இதுதான் வாழ்க்கை !
குருடர்கள் உலகத்தில் கண் கொண்டோர் மூடரே
சிந்தையில் ஏற்றிக்கொள்வாய் நண்பா !

பிரிவினையும், இனவாதங்களும் கொடி கட்டும்
பொல்லாத காலமிது புரிந்து கொள்வாய்
மக்களைப் பிரித்திடுவோர் தலைவர்களாய்
மக்கள் மத்தியில் உலாவிடும் வேளையிது
பேதங்களைத் தூண்டி அரசியல் நடத்தும்
பாவிகள் பூமியில் மக்கள் பேதைகளே !

வெள்ளைக் காகித்ததில் உனக்கு மடலாய்
வெறும்பேச்சு வரிகள் தானிவை நண்பா !
உள்ளக்குமுறல்களை உணர்வுகளாய்
உன்னிடம் கொட்டி விட்டேன் கலங்காதே
இரவு  விடிவது போல இவ்வுலகம்
ஒருநாள் விழித்துக் கொள்ளும் நிச்சயம்
இளையோர் உலகம் ஒன்று விரைந்து
புதியதோர் உலகம் படைத்துவிடும்

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்