உள்ளத்தின் ஓலம்
உள்ளத்தின் ஓலம் உண்மையைத்தான் பேசுகிறது .
ஆனால் அதற்கு ஓசை இல்லை.
உண்மைகள் உள்ளத்தின் சுவர்களோடு முட்டி மோதிக் கொள்கின்றன.
ஆனால் அதை உடைத்துக் கொண்டு வெளியே வரக்கூடிய விசை கிடையாது .
எதையும் அசை போட்டுப்பார்த்த பின்னால் அதன் எடை புரிகிறது .
பல சமயங்களில் உண்மையைச் சொல்ல வேண்டும் எனும் ஆதங்கம் ஏற்படுகிறது ஆனால் சொல்லும் உண்மை எதிரே அதை ஏற்றுக்கொள்பவரின் உள்ளத்தில் என்ன தாக்கத்தை விளைவிக்கப் போகிறது எனும் ஆதங்கம் அதைத் தடுத்து விடுகிறது.
மிகவும் அழகாக அடுத்தவருக்கு அறிவுரை கூற எம்மால் முடிகிறது .
ஆனால் அதே அறிவுரையை எமது வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததிற்கு மிகவும் அழகான காரணங்களை எமக்கு நாமே கூறிக்கொள்கிறோம்.
நடந்து முடிந்த பின்னால் விளைகிற ஞானம் வெகு இலகுவாகக் கிடைக்கிறது.
ஆனால் அதே நிலைமையில் மீண்டும் அதே முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அந்த ஞானத்தின் மூலம் கிடைத்த அனுபவம் உள்ளத்தின் மூலையில் முடங்கி விடுகிறது.
இதற்கான விளக்கங்களோ மிகவும் ஆடம்பரமான வார்த்தைகளால் அழகுபடுத்தப்பட்டு எமது மனமெனும் மேடையில் அரங்கேற்றப்படுகிறது..
எது உண்மை ?
விளைவு எதுவாக இருந்தாலும் கவலைப்படாமல் எமது மனதுக்குத் தெரிந்த உண்மையை அப்படியே அப்பட்டமாகப் பேசுவதா ?
அன்றி நாம் கூறப்போகும் செய்தியால் அல்லது வார்த்தைகளால் உண்டாகப் போகும் விளைவுகள் , மற்றும் இதைச் சொல்லுவதால் யாருக்காவது ஏதாவது பாரிய நன்மைகள் உருவாகப் போகிறதா ?
இல்லை நடக்கவிருக்கும் ஒரு பயங்கரத்தைத் தடுத்து நிறுத்தப் போகிறோமா ?
என்று தீர ஆலோசித்த பின்னால் சொல்ல வேண்டிய விஷயத்தின் ஆழத்தைக் கூட்டி அல்லது குறைத்துச் சொல்லுவதா?
உண்மை பேசியதால் அரிச்சந்திர மகராஜாவுக்கு விளைந்ததாகக் கூறப்படும் நிகழ்வுகள் எமக்கு உண்மை பேசவேண்டியதின் அழுத்ததைப் புரியவைக்கக் கூறப்பட்டிருந்தாலும் , இப்போதைய 21ம் நூற்றாண்டிலே இளைய தலைமுறை அதை வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்துடன் பார்க்கிறதா ?
அதாவது , உண்மை பேசியதால் நாடிழந்து , வீடிழந்து , குடும்பத்தையிழந்து அவலப்பட்ட அந்த மன்னனுக்கு நடந்ததைப்போல் எமக்கும் நடக்கக்கூடாது என்றால் நாம் எப்படி நடக்கக்கூடாது என்ற ஒருவகையான விளக்கத்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்திலேயா நாமிருக்கிறோம் ?
கேள்விகள் இதயத்தில் ஓயாத ஓலங்களாக எழுந்த வண்ணம் தான் இருக்கிறது.
இன்றைய சமுதாயம் ஒரு அவசர சமுதாயம்.
இதில் சம்பிரதாயங்கள் உலக்கப்பட்டுக்கொண்டு , சரித்திரங்கள் மறக்கப்பட்டுக் கொண்டு மனித இனம் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு எதையோ தேடி ஓடிக்கொண்டேயிருக்கிறது.
அந்த ஓட்டத்தின் முடிவில் அவை அடையும் இலக்கு என்ன ?
அது எதிர்காலச் சந்ததிக்கு ஒரு எடுத்துக் காட்டாக , சமுதாய முன்னேற்றத்திற்கு வழிகோலுகின்றனவா?
இனப்பற்று , மொழிப்பற்று என்பன பற்றி எமக்குள் நாமொவ்வருவரும் தனித்தனியான வரைவிலக்கணங்களை , அளவுகோல்களைக் கொண்டு மற்றவரைப் பற்றிய அபிப்பிராயங்களை வகுத்துக் கொண்டே செல்கிறோம்.
எமது செயற்பாடுகள் சமகால இளம் சந்ததியினரின் தேவைகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறதா ?
நாம் நடந்து கொண்டிருக்கும் பாதையிலே எத்தனையோ விதமான , வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டவர்களைச் சந்திக்கிறோம் .
மற்றவர் வாயிலிருந்து வரும் உண்மையை வெகு இலகுவாக ஏற்றுக்கொள்ள எமது மனம் ஏனோ மறுக்கிறது .
எமக்கு வசதியான , மனதுக்கு இதமானவைகளை மட்டும் வலுக்கட்டயமாக வரவழைத்து எம்மனதுக்குள் நுழைய விடுகிறோம்.
ஒருவர் சொல்லும் கருத்தை எதிர்க்கும் போது வரும் விரைவான வேகம் , ஆதரிக்கும் போது கொஞ்சம் தடைப்படுகிறது .
கேள்விகள் நெஞ்சத்தில் எழுப்பப்பட்டு அதற்கு சரியான , உளசுத்தியான பதில்களை அறிவதன் மூலம் தான் எமது மத்தியில் ஒரு கருத்துச் சுதந்திரமிக்க , செழிவான இளைய சந்ததியை உருவாக்க முடியும்.
பாரதி ,பாரதிதாசன்,கண்ணதாசன் என கருத்துக்களில் பதிந்திருக்கும் இந்த மனிதத்துவம் மிக்கவர்கள் , தம்மை நினைவு கூறுவதன் செயற்பாடு எமது தமிழ்ச்சமுதாயத்தை , உலகச்சமுதாயங்களில் முன் சமனாக நிற்கக்கூடிய ஒரு முற்போக்குச் சமுதாயமாக எழுச்சி கொள்ள வைப்பதுவே என்றுதான் சொன்னார்கள்.
தமிழை முன்னெடுப்போம் அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தை கொண்ட கட்டுப்பாடு மிக்க , கருத்துச் சுதந்திரம் பறக்கும் ஒரு சமுதாயமாக எமது இளைய சமுதாயம் பரிணமிக்க பணி புரிவோம்.
நண்பர்களே நான் அறிஞனுமல்லன் , புலவனுமல்லன் அன்றாட வாழ்க்கைக்காக அல்லலுறும் ஒரு சாதாரண மனிதன்தான்.
என் இதயத்தின் ஓலத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். தவறிருந்தால் மன்னியுங்கள் , மகிழ்ந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்.
மீண்டும் வருவேன்
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home