சிந்தித்தால் சிரிப்பு வரும்
உள்ளத்தின் உணர்ச்சிகள் எப்போது உரசத் தொடங்கும் ?
வாழக்கையின் உண்மைகள் எம்மைத் தட்டி எழுப்பும் போது மனதின் கதவுகள் கொஞ்சம் அகலாமாய்த் திரந்து கொள்கின்றன ?
எம் தேவைகள் முடிந்ததும் எம்மைத் தூக்கிப் போடுகிறார்களா ? இல்லை தம்மிடம் தேவைகளை எதிர்பார்த்து விடுவோம் என்று தாமாகவே விலகிக் கொள்கிறார்களா?
என்ன சக்தி சம்பந்தமில்லாமலே உளருகிறானே என்று எண்ணுகிறீர்களா ?
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் தன் உறவை எவ்விதத்தில் நிர்ணயிக்கிறான் என்று எண்ணிப்பார்த்தால் விளக்கம் வினாகாவே முடிகிறது. விடைகள் மனதுக்கு எட்டாமல் தொலைவில் நின்று கொண்டு கண் சிமிட்டுகிறது.
யார் யாரையோ நண்பர்கள் என்று நம்பி வாழ்கிறோம் யார் யாரையோ எதிரிகள் என்று எண்ணி விலகுகிறோம் ஆனால் எமது மனதுக்கு நட்புக்கும், பகைக்கும் முறையான விளக்கம் கிடைக்கிறதா?
நாம் விரும்பியோ, விரும்பாலோ பொழுது புலர்கிறது. நாட்கள் நகருகின்றன. இளமை கரைகிறது முதுமை உறைகிறது. ஆனால் எமது உள்ளம் முதிர்கிறதா?
கள்ளைப் பாலென்று நம்புவதும் அதே அனுபவத்தில் பின்பு பாலைக் கள்லென்று ஒதுக்கி விடுவதும் மனைத வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் நிகழ்வுகளே !
சில நேரங்கள் ! சில வேளைகள் ! திறக்க முடியாத கதவுகளைத் திறந்து விடுகின்றன, அடைக்கக் கூடாத வழிகளை அடைத்து விடுகின்றன. ஆனால் அதற்காக எமது வாழ்க்கைப் பயணத்தை நிறுத்தி விட முடியுமா?
இல்லை !
நம்பிக்கையின் ஆதாரத்தில் பயணத்தை தொடர வேண்டியது எமது ஒவ்வொருவருடைய கடமையுமாகிறது.
வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றது அப்பயணத்தில் எம்முடன் சிலர் ஏறுகிறார்கள், சிலர் இறங்குகிறார்கள்.
சில உறவுகள் ஆரம்பம் முதல் இறுதிவரை தொடர்கிறது. சில உறவுகள் இடையிலே ஏறி இடையிலே இறங்குகின்றன.
வரவு, செலவு என்பது பணத்தில் மட்டுமல்ல உறவிலும் கூடத்தான்.
இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து விட்டோம் இனிக் காண்பதற்கு ஏதுமில்லை என்று ஓய்வு எடுக்கப் போகும் சமயத்தில் மற்றுமோர் புதிய அனுபவம், புதிய கசப்பான நிகழ்வு இனிப்பான அனுபவத்தைத் தருகிறது.
உதிரத்து உறவுகளிலும் சரி, உள்ளத்து நட்புகளிலும் சரி வழக்கின்றி தீர்ப்பு வழங்குவதைப் போல உள்ளத்தை உடைத்து உண்மைகளை உணர்த்துபவரே பலர்.
இந்தப் பிரபஞ்சத்தின் சரித்திரத்தில் எமது வாழ்வு நீர்க்குமிழி போன்றதே !
ஆனால் அந்த நீர்க்குமிழிகளுக்குள் தான் எத்தனை போட்டிகள் ! நீயா, நானா எனும் பொறாமைக்கனல்கள் .......
நாமனைவரும் அணையப் போகும் விளக்குகளே !
ஆனால் அணைவதற்கு முன்னால் எம்மை விட மற்றையோர் வாழ்க்கையில் எத்த்னை பேருக்கு வெளிச்சமாக வாழ்ந்திருக்கிறோம் என்று எண்ணுவதை விடுத்து யாருடைய விளக்கு பிரகாசம் எனும் போட்டியில் காலத்தைக் கழித்து விளக்காய் வாழ்வதன் பொருளையே மறந்து போய் விடுகிறோம் இல்லையா?
சிந்திக்கும் போது விந்தையாக இருக்கும் இம்மனித வாழ்க்கையை மனம் அமைதியடையக்கூடிய விதத்தில் வாழ்ந்து விட வேண்டியது அவசியம்.
மீண்டுமொருமுறை பேச வருகிறேன்
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home