Tuesday, August 04, 2026

நன்றியுணர்வு என்பது செல்வத்தால் அல்ல, விழிப்புணர்வால் மட்டுமே மேலும் வலுப்பெறுகிறது."

வாழ்க்கையின் மிகப்பெரிய அற்புதங்களில் ஒன்று என்னவென்றால், நன்றியுணர்வு என்பது செல்வத்தால் அல்ல, விழிப்புணர்வால் மட்டுமே மேலும் வலுப்பெறுகிறது."
    
இந்தச் சிந்தனை, மனித வாழ்வின் மிக ஆழமான ஆன்மீக உண்மையை மிக எளிமையாக எடுத்துரைக்கிறது.

நாம் வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்தோம், எவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்தோம், எவ்வளவு சொத்துக்களைச் சேர்த்தோம் என்பவை மனநிறைவை நிர்ணயிப்பவை அல்ல.

மாறாக, ஏற்கனவே நமக்குக் கிடைத்திருக்கும் அருட்கொடைகளை உணர்ந்து நன்றியுடன் வாழும் மனப்பக்குவம்தான் வாழ்க்கையை உண்மையான செல்வமாக மாற்றுகிறது.

நன்றியுணர்வு என்பது வெளியுலகில் வாங்கப்படும் பொருள் அல்ல.

அது உள்ளத்தில் மலரும் ஒரு விழிப்புணர்வு.

அந்த விழிப்புணர்வு மலரும்போது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு பரிசாகத் தெரிகிறது.

நமது அன்றாட வாழ்க்கையை சற்று உற்றுப் பார்த்தால், நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர முடியும்.

அதிகாலையில் விழித்தெழ முடிகிறது.

சுவாசிக்க முடிகிறது.

கண்களால் உலகைக் காண முடிகிறது.

காதுகளால் பறவைகளின் கீதத்தை கேட்க முடிகிறது.

நம்மை அன்பாக அழைக்கும் ஒருவர் இருக்கிறார்.

நம்மைப் பற்றிக் கவலைப்படும் ஒருவர் இருக்கிறார்.

இவை அனைத்தும் விலைமதிப்பற்ற பரிசுகள்.

ஆனால் மனித மனம் இயல்பாகவே இல்லாததை நோக்கிப் பயணிப்பதால், இருக்கின்றவற்றின் மகத்துவத்தை மறந்துவிடுகிறது.

அதனால் தான் நிறைய இருப்பவர்களும் வெறுமையை உணர்கிறார்கள் குறைவாக இருப்பவர்களும் சில நேரங்களில் பேரின்பத்துடன் வாழ்கிறார்கள்.

ஒரு விவசாயியை நினைத்துப் பாருங்கள்.

பல மாதங்களாக உழைத்து விதைத்த பயிர் மழையால் செழித்து வளர்ந்தால், அவனது கண்களில் தோன்றும் மகிழ்ச்சி வெறும் விளைச்சலுக்காக அல்ல.
    
இயற்கை தந்த அருளை உணர்ந்த நன்றியுணர்வுக்காகத்தான்.
    
அதேபோல், ஒரு தாய் தனது குழந்தையின் முதல் சிரிப்பைக் காணும்போது அனுபவிக்கும் ஆனந்தம் பணத்தால் வாங்க முடியாத ஒன்று.

ஒரு முதியவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது நண்பரைச் சந்திக்கும்போது ஏற்படும் நெகிழ்ச்சி, ஒரு நோயாளி குணமடைந்து முதல் முறையாக நடக்கும்போது தோன்றும் மகிழ்ச்சி இவை அனைத்திற்கும் அடிப்படை நன்றியுணர்வே.

ஆன்மீகப் பார்வையில்,ஜ்க் நன்றியுணர்வு என்பது இறைவனின் இருப்பை உணரும் முதல் படியாகும்.

இறைவன் வெளியில் மட்டும் இல்லை நமது ஒவ்வொரு மூச்சிலும், ஒவ்வொரு இதயத் துடிப்பிலும், ஒவ்வொரு நல்ல எண்ணத்திலும் இருக்கிறான் என்பதை உணரும்போது, வாழ்க்கை குறைகளின் பட்டியலாக இல்லாமல் அருட்கொடைகளின் தொகுப்பாக மாறிவிடுகிறது.

அப்போது குறை கூறும் மனம் மெதுவாக மறைந்து, ஏற்றுக்கொள்ளும் மனம் வளர்கிறது.

ஏற்றுக்கொள்ளும் மனம் வளரும்போது அமைதி பிறக்கிறது.
    
அமைதி பிறக்கும் இடத்தில்தான் ஆன்மீகத்தின் விதை முளைக்கிறது.

இன்றைய உலகம் மனிதனுக்கு எப்போதும் இன்னும் வேண்டும் என்ற எண்ணத்தையே கற்றுக்கொடுக்கிறது.

புதிய வீடு வேண்டும், புதிய கார் வேண்டும், இன்னும் அதிக வருமானம் வேண்டும், மற்றவரைவிட உயர்ந்த நிலை வேண்டும் என்ற முடிவில்லாத ஓட்டத்தில் மனிதன் தன்னைத் தானே இழந்து விடுகிறான்.

இந்த ஓட்டத்தில் அவன் பெற்றிருப்பவற்றை ரசிக்க மறந்து விடுகிறான்.

அதனால் தான் வெற்றி அதிகரித்தாலும் மனஅழுத்தமும் அதிகரிக்கிறது.

வசதிகள் பெருகினாலும் மனநிம்மதி குறைகிறது.

காரணம், வாழ்க்கையை அனுபவிப்பதைவிட ஒப்பிடுவதில் நாம் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம்.

ஒரு சிறிய குழந்தையை கவனித்துப் பாருங்கள்.

ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து அது மகிழ்கிறது.

ஒரு மழைத்துளியைத் தொட்டு சிரிக்கிறது.

ஒரு சிறிய பலூன் கிடைத்தாலும் ஆனந்தத்தில் துள்ளுகிறது.

ஏன்?

அதன் மனம் நிகழ்காலத்தில் வாழ்கிறது.

அது ஒப்பிடுவதில்லை.

அது எதிர்பார்ப்புகளால் நிரம்பியிருக்கவில்லை.

அது கிடைத்ததை முழுமையாக அனுபவிக்கிறது. வயது அதிகரிக்கும்போது இந்த இயல்பை நாம் இழக்கிறோம்.

ஆன்மீகம் என்பது புதிய ஒன்றைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல;

நாம் இழந்த இந்த இயல்பான நன்றியுணர்வை மீண்டும் கண்டுபிடிப்பதுமாகும்.

நமது குடும்ப வாழ்க்கையிலும் இதே உண்மை பொருந்துகிறது.
.    
பல நேரங்களில் நாம் குடும்ப உறுப்பினர்களின் குறைகளையே அதிகமாகப் பார்க்கிறோம்.

ஆனால் அவர்கள் நமக்காகச் செய்த எண்ணற்ற தியாகங்களை மறந்துவிடுகிறோம்.

ஒரு தந்தையின் உழைப்பு, ஒரு தாயின் அன்பு, ஒரு சகோதரனின் ஆதரவு, ஒரு நண்பனின் நம்பிக்கை.

இவற்றை தினமும் நினைத்து நன்றி கூறும் பழக்கம் வந்துவிட்டால், உறவுகள் தானாகவே மலரத் தொடங்கும்.

அன்பு அதிகரிக்கும். மனக்கசப்புகள் குறையும்.
    
ஏனெனில் நன்றியுணர்வு இருக்கும் இடத்தில் அகங்காரத்திற்கு இடமில்லை.

எமது உடலே நமக்கு மிகப்பெரிய பரிசு. ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கும் வரை அதன் மதிப்பை உணருவதில்லை.

ஒரு நாள் சிறிய நோய் வந்தால்தான் ஆரோக்கியத்தின் அருமை புரிகிறது.

அதுபோல பார்வையை இழந்தவரைப் பார்த்தால்தான் கண்களின் அருமை தெரிகிறது.
    
பசியால் வாடுபவரைப் பார்த்தால்தான் ஒரு வேளை உணவின் மதிப்பு புரிகிறது.

எனவே வாழ்க்கை நமக்குக் எற்றா மிகப்பெரிய பாடம் என்னவென்றால், இழந்த பிறகு நன்றி சொல்லாதீர்கள்

இருக்கும்போதே நன்றி சொல்லுங்கள் என்பதாகும்.

எதிர்பார்ப்புகள் மனித வாழ்வில் இயல்பானவை.

ஆனால் அவை அளவுக்கு மீறும்போது ஏமாற்றங்களாக மாறுகின்றன.

அதற்கு மாறாக பாராட்டும் மனப்பான்மை வளரும்போது, வாழ்க்கை மெதுவாக மாறத் தொடங்குகிறது.

ஓர் ஊர் இது கப் தண்ணீருக்கும் நன்றி சொல்லும் மனம், ஒரு நல்ல வார்த்தைக்கும் நன்றி சொல்லும் இதயம், ஒரு சிரிப்பிற்கும் நன்றி சொல்லும் பண்பு   இவை மனிதனை உள்ளிருந்து செல்வந்தனாக மாற்றுகின்றன.
    
வெளிப்புறச் செல்வம் ஒருநாள் குறையலாம்.

ஆனால் நன்றியுணர்வால் கிடைக்கும் உள்ளச் செல்வத்தை யாராலும் பறிக்க முடியாது.

எனது நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்களில் ஒன்றும் இதுவே. வாழ்க்கை எனக்கு எல்லாவற்றையும் கொடுக்கவில்லை.

நான் நினைத்த அனைத்தும் நடந்துவிடவும் இல்லை.

ஆனால் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் என்னை ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுத்தது.

சில மனிதர்கள் அன்பைக் கற்றுக்கொடுத்தார்கள். சிலர் பொறுமையைக் கற்றுக்கொடுத்தார்கள். சிலர் வலியைத் தந்தார்கள்; ஆனால் அந்த வலியே என்னைக் வலிமையாக்கியது.

இவற்றை நினைத்துப் பார்க்கும்போது, வாழ்க்கையில் எதுவும் வீணாக நிகழவில்லை என்பதை உணர்கிறேன். அந்த உணர்வே இன்று என் உள்ளத்தில் நன்றியுணர்வாக மலர்ந்திருக்கிறது.

நன்றியுணர்வு என்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும். ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும் முன், இன்று என்னென்ன அருட்கொடைகள் எனக்குக் கிடைத்தன என்று நினைத்து சில நிமிடங்கள் அமைதியாக அமருங்கள். அந்த நாளில் கிடைத்த ஒரு சிரிப்பு, ஒரு நல்ல சந்திப்பு, ஒரு நல்ல உணவு, ஒரு பாதுகாப்பான பயணம், ஒரு நல்ல உடல்நிலை – இவற்றை நினைத்து மனதார நன்றி கூறுங்கள். சில நாட்களிலேயே உங்கள் மனம் மாறத் தொடங்கும். சூழ்நிலை மாறாமல் இருந்தாலும் உங்கள் பார்வை மாறிவிடும். பார்வை மாறும்போது வாழ்க்கையின் அர்த்தமும் மாறிவிடும்.

இறுதியாக, வாழ்க்கையின் உண்மையான வளம் என்பது நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதில் இல்லை; நாம் வைத்திருப்பவற்றை எவ்வளவு ஆழமாக உணர்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. எதிர்பார்ப்புகள் குறைந்து பாராட்டுகள் அதிகரிக்கும் அந்த நொடியில்தான் உள்ளம் இலகுவாகிறது. அந்த இலகுவான மனமே இறையருளை உணர்கிறது. அந்த உணர்வே அமைதியாக மலர்கிறது. அந்த அமைதியே ஆனந்தமாக விரிகிறது. அந்த ஆனந்தம்தான் மனித வாழ்வின் உண்மையான செல்வமும், உயர்ந்த ஆன்மீக சாதனையுமாகும்.

"உங்களால் முடியும்."

அன்பன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home