Thursday, August 06, 2026

பயமும் நம்பிக்கையும்


"பயம் எம்மை மோசமானதை எதிர்பார்க்கச் சொல்லும் போதெல்லாம், அதற்குப் பதிலாக ஒரு நல்லதை நம்பத் தேர்ந்தெடுப்போம்.
   
விட்டுக்கொடுக்க மறுப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு அழகான வழி வாழ்க்கைக்கு உண்டு.

பிரகாசமான காலைகள், புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய தொடக்கங்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைப்போம், ஏனெனில் எல்லாமே சரியாக நடக்கும்." என்ற இந்தச் சிந்தனைகள் வெறும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல.

அவை வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பாங்கை மாற்றும் ஆழமான தத்துவங்கள்.
    
மனித வாழ்க்கையில் பயமும், தோல்வியும், ஏமாற்றங்களும் தவிர்க்க முடியாதவை.

ஆனால் அவற்றை எவ்வாறு அணுகுகிறோம் என்பதில்தான் எமது எதிர்காலத்தின் தரம் அமைகிறது.

பயம் என்பது மனிதனின் இயல்பான உணர்வு.

ஆனால் அது பல நேரங்களில் உண்மையைப் பேசுவதில்லை.

அது நிகழாத நிகழ்வுகளையே நிகழப்போவதாக நமக்குள் தோற்றுவிக்கிறது.

"இது முடியாது", "நிச்சயமாக தோற்றுவிடுவாய்", "உன்னை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று பயம் நமது காதுகளில் தொடர்ந்து கிசுகிசுக்கிறது.
    
உண்மையில், பயம் எதிர்காலத்தை அறிந்த ஒன்று அல்ல.

அது கடந்த கால காயங்களின் பிரதிபலிப்பு மட்டுமே.

அதனால் பயம் சொல்வதையே முழுமையான உண்மையாக ஏற்றுக்கொள்வது நம்மையே சிறையில் அடைத்துக்கொள்வதற்கு சமம்.

அதே நேரத்தில் நம்பிக்கை என்பது கண்களால் காணப்படாத ஒன்றை இதயத்தால் காணும் ஆற்றல்.
    
நம்பிக்கை கொண்ட மனிதன் இருளைக் கண்டாலும் விடியலை நினைக்கிறான்.

மழையைக் கண்டாலும் வானவில்லைக் கற்பனை செய்கிறான்.

தோல்வியைச் சந்தித்தாலும் அடுத்த முயற்சிக்கான பாடத்தைத் தேடுகிறான்.

அதனால் பயம் ஒரு கதவை மூட முயற்சிக்கும் போது, நம்பிக்கை இன்னொரு கதவைத் திறக்கத் தயாராக இருக்கும்.

வாழ்க்கையில் பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர்களில் பெரும்பாலோர் பயமற்றவர்கள் அல்ல.

பயத்தை விட நம்பிக்கையைத் தேர்ந்தெடுத்தவர்கள்.

வாழ்க்கை இன்னொரு அற்புதமான உண்மையையும் நமக்குக் கற்றுத்தருகிறது.

அதாவது விடாமுயற்சியை வாழ்க்கை ஒருபோதும் அலட்சியப்படுத்தாது.

பல நேரங்களில் உலகம் நம்மை மதிப்பிடாமல் இருக்கலாம்.

நமது முயற்சிகளை யாரும் கவனிக்காமல் இருக்கலாம்.

சிலர் நம்மை எளிதாகக் கைவிடச் சொல்லலாம்.

சிலர் நம்மை இகழலாம்.

ஆனால் வாழ்க்கைக்கு ஒரு தனித்துவமான நீதி உண்டு.
    
உண்மையாக உழைப்பவரையும், நேர்மையாகக் காத்திருப்பவரையும், மனம் தளராமல் முன்னேறுபவரையும் ஒரு நாள் வாழ்க்கையே ஆச்சரியப்படுத்தும்.

விதை மண்ணுக்குள் புதைக்கப்படும் போது அது இருளுக்குள் சென்றுவிட்டதாகத் தோன்றுகிறது.

ஆனால் அந்த இருளே அதன் வளர்ச்சிக்கான தொடக்கம்.
    
அதுபோலவே மனித வாழ்க்கையிலும் சில காலங்கள் வெளிச்சமில்லாதவை போலத் தோன்றலாம்.

அந்த நாட்களில் பலர் நம்மை முடிந்துவிட்டவர் என்று நினைக்கலாம்.

ஆனால் நமது உள்ளத்தில் நம்பிக்கையின் விதை உயிரோடு இருந்தால், ஒரு நாள் அது முளைத்து மரமாகி நிற்கும்.
    
அப்போது ஒருகாலத்தில் நம்மை நம்பாதவர்களே வியப்புடன் திரும்பிப் பார்ப்பார்கள்.

புதிய காலைகள் என்பது சூரியன் உதிப்பதை மட்டுமல்ல மனித மனம் மீண்டும் எழுந்து நிற்பதற்கான வாய்ப்பையும் குறிக்கிறது.

நேற்று தோல்வியடைந்த ஒருவர் இன்று வெற்றி பெறலாம்.

நேற்று அழுதவர் இன்று சிரிக்கலாம்.

நேற்று வழி தெரியாமல் நின்றவர் இன்று பலருக்கும் வழிகாட்டியாக மாறலாம்.

வாழ்க்கை ஒவ்வொரு காலையிலும் நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றே "மீண்டும் தொடங்கு."

பலர் வாழ்க்கையில் மிகப் பெரிய தவறொன்றைச் செய்கிறார்கள்.
    
ஒரு தோல்வியை முழு வாழ்க்கையின் தீர்ப்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு மனிதரின் நிராகரிப்பை உலகத்தின் நிராகரிப்பாகக் கருதுகிறார்கள்.

ஒரு கதவு மூடப்பட்டால் எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன என்று நம்பிவிடுகிறார்கள்.

ஆனால் வாழ்க்கை அப்படியல்ல. அது தொடர்ந்து நகர்கிறது.

அது ஒவ்வொரு நாளும் புதிய சந்திப்புகளையும், புதிய மனிதர்களையும், புதிய வாய்ப்புகளையும் நமக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறது.
    
நாம் செய்ய வேண்டியது ஒன்றே அவற்றைக் காணும் மனதை இழக்காமல் இருப்பது.

நம்பிக்கை என்பது சோம்பேறித்தனமான காத்திருப்பு அல்ல.

அது செயலோடு இணைந்த மனநிலை.

நல்லது நடக்கும் என்று நம்புகிறவன் அதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்கிறான்.

விவசாயி விதையை விதைத்துவிட்டு மழை பெய்யும் என்ற நம்பிக்கையோடு நிலத்தைப் பராமரிக்கிறான்.

மாணவன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடு தினமும் படிக்கிறான்.

இசைக் கலைஞன் ஒருநாள் தனது இசை மக்களின் இதயத்தைத் தொடும் என்ற நம்பிக்கையோடு தினமும் பயிற்சி செய்கிறான்.
    
ஆகவே நம்பிக்கை என்பது செயலை வலுப்படுத்தும் உயிர்ச்சக்தியாகும்.

எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் என்னவென்றால், வாழ்க்கை அவசரப்படுபவர்களுக்கு எல்லாவற்றையும் உடனே தருவதில்லை.

ஆனால் மனம் தளராமல் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் மிக அழகான பரிசுகளை வழங்குகிறது.

சில ஆசீர்வாதங்கள் நாம் திட்டமிட்ட நேரத்தில் வருவதில்லை.

நாம் தயாராகும் நேரத்தில் தான் வருகின்றன.

அதனால் காத்திருக்கும் காலத்தையும் வீணான காலம் என்று நினைக்காமல், வளர்ச்சிக்கான காலம் என்று எண்ண வேண்டும்.

நம்மைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்மறை எண்ணங்களும் சில நேரங்களில் நம்மை அச்சப்படுத்தலாம்.

ஆனால் மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பது நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில்லை.

நாம் நம்மைப் பற்றி என்ன நம்புகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையின் திசையை மாற்றுகிறது.

தன்னம்பிக்கையும், இறைநம்பிக்கையும், விடாமுயற்சியும் இணைந்துவிட்டால், முடியாதது என்று தோன்றிய பல விஷயங்கள் இயல்பாகவே சாத்தியமாகி விடுகின்றன.

ஆகவே, வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் மிகப் பெரிய தத்துவம் இதுதான்.

பயம் பேசும் மொழியைக் கேட்பதைவிட நம்பிக்கை பேசும் மொழியைக் கேளுங்கள்.

இருளை எண்ணுவதைவிட விடியலை எதிர்நோக்குங்கள்.
    
தோல்வியை எண்ணுவதைவிட அடுத்த வாய்ப்பை நோக்கிப் பயணியுங்கள்.

ஏனெனில் ஒவ்வொரு புதிய காலையும் நமக்காக எழுதப்படாத ஒரு புதிய அத்தியாயம்.

அதில் என்ன எழுதப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது பெரும்பாலும் நமது எண்ணங்களும், நமது செயல்களுமே.

வாழ்க்கை எப்போதும் நமக்குச் சாதகமாக இருக்காது.

ஆனால் வாழ்க்கையை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதே நமக்குச் சாதகமாக மாற முடியும்.
    
பயத்தை விட நம்பிக்கையைத் தேர்ந்தெடுப்போம்.

விரக்தியை விட முயற்சியைத் தேர்ந்தெடுப்போம்.

முடிவுகளை விட புதிய தொடக்கங்களைத் தேர்ந்தெடுப்போம்.

அப்போது ஒரு நாள் திரும்பிப் பார்க்கும்போது, நம்மை வீழ்த்த வந்த சூழ்நிலைகளே நம்மை உயர்த்திய படிக்கட்டுகளாக மாறியிருப்பதை ஆச்சரியத்துடன் உணர்வோம்.

அன்பன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home