Sunday, October 25, 2026

உண்மையான அதிகாரம் எங்கே இருக்கிறது?

உண்மையான அதிகாரம் எங்கே இருக்கிறது?

வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அதிகாரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

சிலர் மற்றவர்களைத் தமது விருப்பத்திற்கு ஏற்ப நடத்துவதில் அதிகாரத்தைக் காண்கிறார்கள்.
   
சிலர் தாம் நினைத்தபடியே எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இன்னும் சிலர் தமக்குச் சாதகமாகச் சூழ்நிலைகள் அமையும்போதுதான் தங்களால் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புகிறார்கள்.

ஆனால், வாழ்வின் முதுமையின் வாசலில் நின்று, கடந்த கால அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, உண்மையான அதிகாரம் என்பது நாம் நினைத்ததை எல்லாம் நடத்தி முடிப்பதில் இல்லை என்பதை மெல்ல மெல்ல உணர முடிகிறது.

நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும், நமக்குள் இருக்கும் அமைதியை இழக்காமல் வாழக் கற்றுக்கொள்வதுதான் உண்மையான அதிகாரம்!

இதைப் புரிந்துகொள்வதற்கு நாம் பெரிய தத்துவங்களைப் படிக்க வேண்டியதில்லை.

நமது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறிய நிகழ்வுகளைக் கொஞ்சம் கவனித்தாலே போதும்.

நாம் எதிர்பார்த்தபடி ஒருவர் பேசவில்லை என்றால் மனம் புண்படுகிறது.

நாம் விரும்பியபடி ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது.

நம்மை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒருவர் நம்மைப் புறக்கணித்துவிட்டால் மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டம் தொடங்கிவிடுகிறது.

இவற்றில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.

நிகழ்வு ஒன்று வெளியில் நடக்கிறது. ஆனால், அந்த நிகழ்வால் ஏற்படும் போராட்டம் நமக்குள் தொடர்கிறது.

ஒருவர் நம்மிடம் கடுமையாகப் பேசிவிட்டுச் சென்றுவிடுகிறார்.
   
ஆனால், அவர் பேசிய வார்த்தைகளை நாம் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டு, நடந்த உரையாடலை மனதிற்குள் பலமுறை நடத்திப் பார்க்கிறோம்.
   
அவர் சில நிமிடங்களில் மறந்துவிட்ட ஒரு விஷயத்தை, நாம் சில நாட்களாகச் சுமந்துகொண்டிருக்கிறோம்.

இங்கே நம்முடைய அமைதியைப் பறித்தவர் அந்த மனிதரா?

அல்லது அவர் பேசிய வார்த்தைகளுக்கு நாம் கொடுத்த முக்கியத்துவமா?

சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி இது.

இதற்காக யாராவது நம்மைப் புண்படுத்தினால் அதை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

தவறுகளைத் தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக்கேட்க வேண்டும்.

நம்முடைய சுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டிய இடத்தில் பாதுகாக்க வேண்டும்.
   
தேவையானபோது உறுதியான முடிவுகளையும் எடுக்க வேண்டும்.

ஆனால், அவற்றைச் செய்யும்போது நமது மனநிலையை மற்றவர்களுடைய கைகளில் ஒப்படைத்துவிட வேண்டியதில்லை என்பதைத்தான் அனுபவம் எனக்குச் சொல்லித் தந்திருக்கிறது.

கோபப்படாமல் உறுதியாக இருக்க முடியும்.

வெறுப்பைக் வளர்க்காமல் தவறைச் சுட்டிக்காட்ட முடியும்.
   
பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமின்றி, நமக்குத் தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையிலிருந்து விலகிச் செல்லவும் முடியும்.

அமைதி என்பது பலவீனம் அல்ல.
   
அது நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றின் அடிமையாகாமல் செயல்படும் மனப்பக்குவம்.

நம்மால் கட்டுப்படுத்த முடியாதவற்றுக்காக நம்முடைய மன அமைதியைத் தொலைப்பதைவிட, நம்மால் மாற்றக்கூடியவற்றில் கவனம் செலுத்துவது அறிவுடைமை.

நேரத்தை நம்மால் நிறுத்த முடியாது.

கடந்த காலத்தை மாற்ற முடியாது.
   
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையெல்லாம் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிவிடவும் முடியாது.

நாளை என்ன நடக்கும் என்பதைக்கூட முழுமையாக அறிந்துகொள்ள முடியாது.

ஆனால், இன்றைய நாளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதைத் தீர்மானிக்க முடியும்.
   
ஒரு பிரச்சினைக்கு உடனடியாகக் கோபத்தில் பதிலளிக்காமல், கொஞ்சம் நிதானித்து யோசிக்க முடியும்.

நம்மை வருத்திய ஒரு நிகழ்வைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று சிந்திக்க முடியும்.

ஒரு கதவு மூடப்பட்டுவிட்டால், அதன் முன்னால் நின்றுகொண்டு வாழ்நாள் முழுவதும் அழ வேண்டியதில்லை.

வேறு கதவு திறக்குமா என்று தேடலாம்.

அதுவும் திறக்கவில்லை என்றால், சிறிது நேரம் காத்திருக்கலாம்.

சில நேரங்களில் நாம் செல்ல விரும்பிய பாதையே நமக்கான பாதையாக இல்லாமல் இருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மனப்பக்குவம் தேவை.

அந்தப் பக்குவம் ஒரே நாளில் வந்துவிடாது.

வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் அனுபவங்களிலிருந்தும், அவற்றை அமைதியாகச் சிந்தித்துப் பார்ப்பதிலிருந்தும் அது மெல்ல மெல்ல வளர்கிறது.

வெளிப்புற அமைதிக்கும் அக அமைதிக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது.

நாம் விரும்பிய மனிதர்கள் நம்முடன் இருக்கிறார்கள்.
   
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது.
   
பொருளாதாரத்தில் பெரிய பிரச்சினைகள் இல்லை.
   
உடல்நலமும் நன்றாக இருக்கிறது.
    
எல்லாம் நாம் எதிர்பார்த்தபடி நடக்கிறது.

அப்போது மனம் அமைதியாக இருப்பது இயல்பானதுதான்.

ஆனால், அதுவே உண்மையான அக அமைதியா?

நமக்குப் பிடிக்காத ஒரு செய்தி வந்ததும் மனம் உடைந்துவிடுகிறது என்றால், நமது அமைதி அந்தச் செய்தியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது என்று பொருள்.

நாம் நம்பிய ஒருவர் நம்மை ஏமாற்றிவிட்டால், நம்முடைய உலகமே முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம்.

ஒரு முயற்சி தோல்வியடைந்துவிட்டால், நம்முடைய வாழ்க்கையே தோல்வியாகிவிட்டது என்று முடிவு செய்கிறோம்.

வாழ்க்கையில் ஏற்படும் ஒரு நிகழ்வையும், நம்முடைய முழு வாழ்க்கையையும் ஒன்றாகக் குழப்பிக்கொள்வதுதான் பல நேரங்களில் நமது துயரத்தை அதிகரிக்கிறது.

ஒரு தோல்வி என்பது ஒரு நிகழ்வு. அது நம்முடைய அடையாளம் அல்ல.

ஒருவருடைய நிராகரிப்பு என்பது அவருடைய முடிவு.

அது நம்முடைய மதிப்பிற்கான இறுதித் தீர்ப்பு அல்ல.

ஒரு கடினமான காலம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி.

அது வாழ்க்கை முழுவதும் அப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை.

இந்த வேறுபாடுகளை உணரத் தொடங்கும்போது, நமது மனம் நிகழ்வுகளிலிருந்து சிறிது இடைவெளி பெறுகிறது.

அந்த இடைவெளியில்தான் தெளிவு பிறக்கிறது.

தெளிவு பிறக்கும் இடத்தில் நிதானமான முடிவுகளும் பிறக்கின்றன.

வாழ்க்கையில் நாம் படும் பல துன்பங்களுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமக்குள் சில விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

எல்லோரும் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் அன்பு செலுத்துகிறவர்கள் நமக்கும் அதே அளவு அன்பு செலுத்த வேண்டும்.

நாம் உழைத்தால் அதற்கேற்ற பலன் கிடைக்க வேண்டும்.
   
நம்முடைய நல்ல எண்ணங்களை மற்றவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தேற வேண்டும்.

இவற்றில் தவறான ஆசைகள் எதுவும் இல்லை.

ஆனால், இவை அனைத்தும் நாம் எதிர்பார்த்தபடியே நடந்தால்தான் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நினைப்பதில்தான் சிக்கல் தொடங்குகிறது.

வாழ்க்கை நமக்குச் சொந்தமானது. ஆனால், வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை.

நாம் அன்பு செலுத்தலாம். ஆனால், அந்த அன்பை மற்றவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது.

நாம் கடுமையாக உழைக்கலாம். ஆனால், எல்லா முயற்சிகளும் நாம் விரும்பிய பலனைத் தரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

நம்மால் முடிந்த அளவிற்கு நல்லதைச் செய்யலாம்.

ஆனால், உலகில் எல்லோரும் நியாயமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்வது தோல்வியை ஒப்புக்கொள்வதல்ல.

மாறாக, வாழ்க்கையை அதன் இயல்போடு புரிந்துகொள்ளத் தொடங்குவதாகும்.

ஏற்றுக்கொள்வது என்றால் எதையும் மாற்ற முயற்சிக்காமல் இருப்பதல்ல.

மாற்றக்கூடியதை மாற்றுவதற்குத் தேவையான முயற்சியைச் செய்வதும், மாற்ற முடியாததைப் பற்றித் தேவையற்ற போராட்டத்தில் நம்மை இழக்காமல் இருப்பதும்தான்.

மழை பெய்வதை நம்மால் நிறுத்த முடியாது.

ஆனால், குடையை எடுத்துக்கொள்ளலாம்.

காற்றின் திசையை நம்மால் மாற்ற முடியாது.

ஆனால், அதற்கேற்ப நமது படகின் பாயை மாற்றிக்கொள்ளலாம்.

வாழ்க்கையும் அப்படித்தான்.

சூழ்நிலைகள் எப்போதும் நமக்குச் சாதகமாக இருக்காது.

ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் நம்மால் வளர முடியும்.

இங்கே இன்னொரு முக்கியமான உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அமைதியாக இருப்பது என்பது உணர்ச்சிகள் இல்லாத மனிதராக மாறுவது அல்ல.

துக்கம் வரலாம்.

கோபம் வரலாம்.

ஏமாற்றம் ஏற்படலாம்.

பயம் நம்மைச் சூழலாம்.

இவை எல்லாம் மனித வாழ்வின் இயல்பான உணர்வுகள்.

அவற்றை மறைத்துவிட்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிப்பதில் உண்மையான அமைதி இல்லை.
   
நமக்குள் எழும் உணர்வுகளை அடையாளம் கண்டு, அவற்றை ஏற்றுக்கொண்டு, அவை நம்மை முழுமையாக ஆக்கிரமிக்க அனுமதிக்காமல் இருப்பதில்தான் மனப்பக்குவம் இருக்கிறது.

கடலில் அலைகள் எழுவதை யாராலும் தடுக்க முடியாது.
   
ஆனால், ஒவ்வொரு அலையையும் பார்த்து கடல் தனது ஆழத்தை இழந்துவிடுவதில்லை.

நம்முடைய மனமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

எண்ணங்கள் எழட்டும். உணர்வுகள் வரட்டும். வாழ்க்கை அதன் சவால்களைக் கொடுக்கட்டும்.
   
அவை அனைத்தையும் கவனித்துக்கொண்டே, நமக்குள் இருக்கும் தெளிவை இழக்காமல் வாழப் பழகுவோம்.

சில நேரங்களில் எதற்கும் உடனடியாகப் பதிலளிக்காமல் இருப்பதே சிறந்த பதிலாக இருக்கலாம்.

சில நேரங்களில் ஒரு சிறிய மௌனம், நீண்ட விவாதத்தைவிட அதிகமான நன்மையைத் தரலாம்.
   
சில நேரங்களில் நம்முடைய கருத்தை நிரூபிப்பதைவிட, நமது மன அமைதியைப் பாதுகாப்பது முக்கியமாக இருக்கலாம்.

எல்லா விவாதங்களிலும் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை.
   
எல்லோரிடமும் நம்மை நிரூபிக்க வேண்டிய தேவையுமில்லை.
   
நம்மைப் புரிந்துகொள்ள விரும்பாதவர்களிடம் நம்முடைய உண்மையை மீண்டும் மீண்டும் விளக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

நமது வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்காகவே வாழத் தொடங்கினால், நம்முடைய வாழ்க்கையின் அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம் என்றே சொல்ல வேண்டும்.

வாழ்க்கையின் முதுமையின் வாசலில் நின்று பின்னோக்கிப் பார்க்கும்போது, நான் உணரத் தொடங்கும் உண்மை இதுதான்.
   
எல்லாவற்றையும் நமது விருப்பப்படி மாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் பல நேரங்களில் நமது சக்தியை வீணடிக்கிறோம்.
   
ஆனால், சிலவற்றை அப்படியே இருக்க அனுமதித்துவிட்டு, நம்மால் செய்யக்கூடியவற்றைச் சரியாகச் செய்வதில் கவனம் செலுத்தினால் வாழ்க்கை சற்றே இலகுவாகிறது.

நம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களின் நடத்தையில் மட்டும் தங்கியிருக்க வேண்டியதில்லை.

நமது நிம்மதி சூழ்நிலைகளின் சாதகத்தன்மையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை.
   
நம்முடைய மனநிலையைப் புரிந்துகொண்டு, தேவையான இடங்களில் நம்மை நாமே வழிநடத்தக் கற்றுக்கொள்ளலாம்.

இதுவே உண்மையான சுதந்திரம் என்று நான் கருதுகிறேன்.

அன்பினியோரே!

வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பும் பாதையில் பயணிக்காது. சில நேரங்களில் அது நம்மைத் தடுத்து நிறுத்தும்.

சில நேரங்களில் எதிர்பாராத பாதைகளில் அழைத்துச் செல்லும்.
   
சில நேரங்களில் நம்முடைய நம்பிக்கைகளையே சோதித்துப் பார்க்கும்.

அந்த நேரங்களில் வாழ்க்கையுடன் சண்டையிட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.

இந்தச் சூழ்நிலையில் என்னால் மாற்றக்கூடியது எது?

மாற்ற முடியாதது எது?

இப்போது நான் எவ்வாறு நடந்துகொண்டால், பின்னர் என்னுடைய செயலுக்காக வருந்த வேண்டியிருக்காது?

இந்த மூன்று கேள்விகளும் நம்முடைய மனதிற்குள் சிறிது வெளிச்சத்தை ஏற்படுத்தலாம்.

வெளியுலகில் அமைதியான சூழ்நிலைகள் கிடைப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம்.

ஆனால், வெளியில் புயல் வீசும்போதும் நமக்குள் நிதானமாக நிற்கக் கற்றுக்கொள்வதே வாழ்க்கை நமக்குத் தரும் பெரிய வரம்.

மற்றவர்களை வெல்வதைவிட நமது கோபத்தைப் புரிந்துகொள்வோம்.
   
சூழ்நிலைகளை வெல்ல முயல்வதைவிட, அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வோம்.

ஒவ்வொரு நிகழ்வையும் நமக்குச் சாதகமாக மாற்ற முடியாவிட்டாலும், அந்த நிகழ்வுக்கு நாம் அளிக்கும் பதிலை விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுக்கப் பழகுவோம்.

ஏனெனில், உலகம் முழுவதையும் நமது விருப்பப்படி மாற்றுவதில் உண்மையான அதிகாரம் இல்லை.

உலகம் நமது விருப்பப்படி மாறாதபோதும், நம்மை நாம் இழந்துவிடாமல் இருப்பதில்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறது.

வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதைச் சற்றுக் குறைத்துக்கொண்டு, அது எப்படியிருக்கிறதோ அப்படிப் புரிந்துகொள்ள முயல்வோம்.

அதே நேரத்தில் நம்மால் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வோம்.

நமது மதிப்புகளைக் காப்போம்.
   
நமக்குள் இருக்கும் அமைதியைப் பேணுவோம்.

அப்போது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நமக்குச் சாதகமாக மாறிவிடும் என்று சொல்ல முடியாது.

ஆனால், சாதகமற்ற நாட்களிலும் நம்மை நாம் கைவிடாமல் வாழும் வலிமை நமக்குள் வளரத் தொடங்கும்.

அந்த வலிமையே நமது உண்மையான அதிகாரம்!

அன்பன்,
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home