Friday, May 01, 2026

புயலிலும் அசையா மனம்

புயலிலும் அசையா மனம்

ஒரு சாதாரண மனிதனின் உள்ளார்ந்த அமைதிக்கான வழிகாட்டி 

வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் "அமைதி" என்பதை ஒரு குறிப்பிட்ட நிலையாக நினைக்கிறோம். 

'வேலை சரியாக இருந்தால் அமைதியாக இருப்பேன்', 'குழந்தைகள் நன்றாக படித்தால் சந்தோஷமாக இருப்பேன்', 'கடன் தீர்ந்தால் நிம்மதியாக இருப்பேன்' 
 இப்படிப்பட்ட எண்ணங்கள் நம் அனைவரின் மனதிலும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. 

ஆனால் உண்மை என்னவென்றால், இந்த 'காத்திருக்கும் அமைதி' என்பது ஒருபோதும் நிரந்தரமானதாக இருக்காது.

நாம் தேடும் அமைதி வெளிச்சூழல்களின் அனுகூலத்தை மட்டுமே சார்ந்திருந்தால், அது அமைதி அல்ல அது வெறும் கட்டுப்பாடு.
    
நாம் வெளி உலகை நம் விருப்பப்படி அமைத்துக்கொண்டு, அதன் வழியே உள்ளுக்கு ஒரு சிறிய நிம்மதியை இழுத்துக்கொள்கிறோம். 

இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே வெளியே எதாவது மாறிவிட்டால், உள்ளே இருக்கும் அந்த நிம்மதியும் சுக்குநூறாகிவிடும்.

ஒரு சாதாரண உழைக்கும் மனிதனின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். 

காலையில் எழுந்திருக்கும் போதே வீட்டுச் செலவுகளின் கணக்கு, அலுவலகத்தில் மேலதிகாரியின் அழுத்தம், வீட்டில் உறவினர்களின் எதிர்பார்ப்புகள், உடல்நலக் கவலைகள் என்று ஒவ்வொரு நாளும் ஒரு புயலாகவே வருகிறது.
    
இந்தப் புயலை முழுவதும் ஒழித்துக்கட்டிய பிறகுதான் அமைதியாக இருப்பேன் என்று காத்திருந்தால், அந்த நாள் வாழ்நாளில் ஒருபோதும் வராது.
    
ஏனென்றால் வாழ்க்கை என்பதே மாறும் அலைகளின் தொடர்ச்சி.
 
ஒரு அலை அடங்கும்போது மற்றொரு அலை எழும்புகிறது.

"நிச்சயமற்ற சூழ்நிலையிலும் நிலையாக இருக்கக் கற்றுக்கொள்வதே உண்மையான வளர்ச்சி" என்பது, ஆன்மிகத்தின் உச்சத்தை சாதாரண வாழ்க்கையின் மொழியில் சொல்கிறது. 

இங்கே 'வளர்ச்சி' என்பது வங்கி கணக்கில் பணம் பெருகுவதோ, பதவி உயர்வு பெறுவதோ அல்ல.
    
உள்ளத்தில் ஒரு நிலையான அஸ்திவாரம் கட்டிக்கொள்வது.
    
அதுவே இங்கு சொல்லப்படும் வளர்ச்சி.

ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவியை கற்பனை செய்துகொள்ளுங்கள். 

கணவரின் வேலை திடீரென்று போகிறது. 

குழந்தைகளுக்கு தேர்வு நேரம்.
    
வீட்டுக் கடன் அடைக்க வேண்டிய தேதி நெருங்குகிறது.

இந்நிலையில் உடைந்துபோவது இயல்பு. 

ஆனால் அந்த அழுத்தத்திற்கு உள்ளே, ஒரு சின்னஞ்சிறிய நடுவை  ஒரு ஆழமான மூச்சை, ஒரு நிமிடம் தனிமையில் உட்கார்ந்து தன்னை திரும்பி பார்க்கும் பழக்கத்தை கட்டிக்கொண்டவள், அந்தப் புயலில் வழிகாட்டியாக மாறுகிறாள். 

இது விந்தையல்ல.

இது பயிற்சியினால் வருவது.

நிச்சயமற்ற சூழலில் நிலைத்திருப்பதற்கு சில உள் பயிற்சிகள் தேவை. 

முதலில், 'இது தற்காலிகமானது' என்ற உணர்வை வளர்த்துக்கொள்வது. 

ஒவ்வொரு சிக்கலும் என்றும் நிலைக்காது என்ற அறிவு, மனதிற்கு ஒரு தாங்கும் சக்தியை தருகிறது. 

இரண்டாவதாக, நம்மால் மாற்ற இயலாததை கைவிட கற்றுக்கொள்வது. 

மழை பெய்வதை நம்மால் நிறுத்த முடியாது.

ஆனால் குடையை எடுத்துக்கொள்ளலாம்.
    
வாழ்க்கையின் அனைத்து சூழல்களையும் நம் விருப்பப்படி திருப்ப முடியாது.

ஆனால் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை நாமே தேர்வு செய்யலாம். 

இந்த ஒரு புரிதலே மனித மனதிற்கு மிகப் பெரிய விடுதலையை தருகிறது.

"அனைத்தும் சுழன்று கொண்டிருக்கும் போதும் அமைதி உறுதியாக நிற்கும்" என்பது ஒரு கவிதை வரியல்ல இது வாழ்வில் சாத்தியமான ஒன்று. 

இதற்கு சில அன்றாட பழக்கங்கள் தேவை. 

காலை எழுந்தவுடன் சில நிமிடங்கள் மனதை உள்நோக்கி திரும்புவது.

இது தியானமாக இருக்க வேண்டியதில்லை. 

வெறுமனே சாப்பிடுவதற்கு முன் ஒரு கப் தேநீர் குடித்தவாறு, 'இன்று என்ன நடந்தாலும், நான் சரியாக இருப்பேன்' என்று மனதில் சொல்லிக்கொள்வது கூட போதும்.
    
இந்த சிறிய செயல், ஒரு நாளின் ஆரம்பத்தில் மனதிற்கு ஒரு திசை தருகிறது.

மற்றவர்கள் அல்லது சூழல் கொடுக்கும் திசையை அல்ல, நாமே தேர்ந்தெடுக்கும் திசையை.

உணர்வுகளை அடக்குவது அமைதியல்ல. 

கோபம் வரும்போது கோபப்படலாம்.

துக்கம் வரும்போது அழலாம்.
    
ஆனால் அந்த உணர்வே நாம் அல்ல என்று தெரிந்துகொள்வது முக்கியம். 

அலை கடலின் மேல்பகுதியில் உள்ளது.

ஆழத்தில் கடல் அமைதியாகவே இருக்கிறது. 

நம் உணர்வுகள் அலைகள்.

நம் உள்ளமே கடல். 

கடினமான தருணங்களில் 'இந்த உணர்வை நான் உணர்கிறேன், ஆனால் இது என்னை ஆட்கொள்ளாது' என்று தன்னிடமே சொல்லிக்கொள்வது உதவியாக இருக்கும்.

தத்துவங்கள் நூல்களிலும் ஆன்மிக உரைகளிலும் அழகாக இருக்கும்.
   
ஆனால் அவை அன்றாட வாழ்வில் சாதாரண மனிதனின் சாலையில் எவ்வாறு இயங்குகின்றன என்பதே முக்கியம். 

கட்டடத் தொழிலாளி நினைக்கலாம்: 

'இந்த தத்துவம் என் மாதச் சம்பளத்தை அதிகரிக்குமா?' என்று. இல்லை இது சம்பளத்தை அதிகரிக்காது. 

ஆனால் சம்பளம் குறைவாக இருக்கும்போதும் சீர்குலைந்துவிடாமல் சிந்தித்து முடிவெடுக்கும் சக்தியை தரும்.
    
அழுத்தத்தில் கோபமாகி எடுக்கும் தவறான முடிவுகளிலிருந்து காப்பாற்றும். 

மனம் அமைதியாக இருக்கும்போது மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நம் வார்த்தைகள் அன்பாகவும் பொறுமையாகவும் அமைகின்றன.
    
அமைதி என்பது தனிமனித நலனுக்காக மட்டுமல்ல  சுற்றியிருப்பவர்களுக்கும் ஒரு பரிசு.

வாழ்க்கை எப்போதும் நம் விருப்பப்படி அமையாது. 

திட்டங்கள் தவறும், எதிர்பாராத இழப்புகள் வரும், மனிதர்கள் ஏமாற்றுவார்கள். 

இதுதான் வாழ்க்கையின் உண்மை.
  
ஆனால் இந்தச் சூழலில் எவ்வாறு நிற்கிறோம் என்பதை நாமே தேர்வு செய்யலாம். 

ஒரு சாதாரண பாமரன் பெரிய யோகியோ தத்துவஞானியோ ஆக வேண்டியதில்லை. 

ஆனால் அவன் தன் மனதின் உள்ளே ஒரு சிறிய அமைதியான இடத்தை கண்டுபிடித்துக்கொண்டால், அந்த ஒரு கண்டுபிடிப்பே அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வமாக மாறும்.

ஏனென்றால் அந்த அமைதியை எந்த சூழலும் திருட முடியாது, எந்த புயலும் அழிக்க முடியாது.

வாழ்க்கை சீரடையும் வரை காத்திராதே இப்போதே, இந்த நிமிடமே, உனக்குள்ளே அமைதி தேடு.

அன்பன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home