Sunday, May 03, 2026

வெற்றியும் தோல்வியும் ஒரே பாதையின் இரு முகங்கள்

வெற்றியும் தோல்வியும் ஒரே பாதையின் இரு முகங்கள்

அறிவும் துணிச்சலும்  வாழ்வின் வழிகாட்டிகள்

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். 

அந்தப் பயணத்தில் வெற்றியும் தோல்வியும் தனித்தனி வழியில் வருவதில்லை.

இரண்டும் ஒரே பாதை வழியாகவே நம்மை நோக்கி வருகின்றன.

இதனை உணர்ந்தால் மட்டுமே வாழ்க்கையை சரியான கோணத்தில் பார்க்க முடியும். 

நாம் அந்தப் பாதையில் நிற்கும்போது, எதை உள்ளே அனுமதிப்பது, எதை தள்ளி வைப்பது என்ற விவேகமே நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. 

அந்த விவேகத்திற்கு இரண்டு தூண்கள் தேவை.

தெளிந்த அறிவும், தளராத துணிச்சலும்.

தெளிந்த அறிவு என்றால் என்ன?

தெளிந்த அறிவு என்பது வெறும் புத்தக அறிவு அல்ல. 

அது வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை கூர்ந்து கவனித்து, அனுபவத்தின் வழியாக வடிகட்டப்பட்ட உள்ளுணர்வு. 

ஒரு நிகழ்வு நம் வாழ்வில் நுழையும்போது, அது வெற்றியா, தோல்வியா என்று மேம்போக்காக முடிவெடுக்காமல், அதன் ஆழமான நோக்கத்தை புரிந்துகொள்ளும் ஆற்றலே தெளிந்த அறிவு. 

ஒரு விவசாயி மழையை பார்க்கும் விதம் போல அதிக மழை வெள்ளமாகலாம், சரியான மழை வளமாகலாம். 

அதை அளவிடும் ஞானம் தான் அவனை வாழ வைக்கிறது.
 
அதுபோலவே, வாழ்க்கையில் நம்மை நோக்கி வரும் சூழ்நிலைகளை அளந்து, தக்கதை மட்டும் உள்வாங்கும் அறிவே நம்மை முன்னோக்கி கொண்டு செல்லும்.

தளராத துணிச்சல் என்பதே இரண்டாவது தூண் எனலாம்.

அறிவு மட்டும் போதாது. 

அறிவு வழிகாட்டும், ஆனால் துணிச்சல் மட்டுமே நம்மை நடக்க வைக்கும். 

தெளிந்த அறிவால் புரிந்துகொண்டாலும், செயலில் இறங்க தைரியம் வேண்டும்.
    
தோல்வியை எதிர்கொள்ள தைரியம் வேண்டும். 

வெற்றியை சாதிக்கவும் தைரியம் வேண்டும். 

ஏனெனில் வெற்றியும் சில நேரங்களில் பயத்தை உண்டாக்கும் "இதை தக்கவைத்துக் கொள்ள முடியுமா?" என்ற சந்தேகம் நம்மை உள்ளிருந்தே அரிக்கும். 

இந்த இரண்டு தருணங்களிலும் தளராமல் நிற்கும் மனோதிடமே தளராத துணிச்சல். 

இது பிறவிக் குணம் அல்ல  தோல்விகளை எதிர்கொண்டு, அவற்றிலிருந்து எழுந்து நிற்கும் ஒவ்வொரு முயற்சியாலும் உருவாகும் பயிற்சியின் பலன்.

தோல்வியும் வெற்றியே என்பது எமக்கான ஒரு புரட்சிகரமான உண்மை.

இந்தச் சிந்தனையின் ஆழமான சாரம் இங்கே தான் இருக்கிறது.
    
நாம் ஏற்கனவே தோல்வியை அனுபவித்திருந்தால், அந்தத் தோல்வியே ஒரு வகையில் வெற்றிதான். 

இது வெறும் ஆறுதல் வார்த்தை அல்ல.

இது ஒரு தத்துவார்த்த உண்மை.

தோல்வி நமக்கு என்ன கொடுக்கிறது? 

அது நம் பலவீனங்களை அம்பலப்படுத்துகிறது. 

நாம் எங்கே தவறு செய்தோம் என்று தெளிவாக காட்டுகிறது. 

அந்த வழியில் மீண்டும் அதே தவறை செய்யாமல் இருக்க வேண்டிய அனுபவ அறிவை  அதாவது, அடுத்த முறை வெற்றிக்கு வழிவிடும் தெளிவை  நமக்கு பரிசாக தருகிறது.
    
தோல்வியை அனுபவிக்காத வெற்றி ஆழமற்றது. 

தோல்வியின் வழியாக வந்த வெற்றிக்கு வேர் இருக்கும், நிலைத்திருக்கும்.

அனுபவம் என்பதோ ஞானத்தைப் பெற்றுத்தரும் தாய் எனலாம்.

அனுபவம் என்பது வாழ்க்கையில் நாம் ஞானமடையும்  மிகப்பெரிய பள்ளிக்கூடம். 

எந்தப் புத்தகமும், எந்த ஆசிரியரும் கொடுக்க முடியாத பாடங்களை வாழ்க்கையின் தோல்விகள் நேரடியாக கற்றுத் தருகின்றன. 

ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதை பாருங்கள்.
    
விழுகிறது, எழுகிறது, மீண்டும் முயற்சிக்கிறது. 

அந்த விழுகைகள் இல்லாமல் நடக்கக் கற்றுக்கொள்ள முடியாது.        

அதுவே வாழ்க்கையின் நியதி.
     
ஒவ்வொரு தோல்வியும் நமக்கு ஒரு புதிய மூளை வரைபடத்தை ஒரு புதிய அனுபவ ஞானத்தை  தருகிறது. 

அந்த வரைபடம் தான் அடுத்த வெற்றிக்கான திசைகாட்டி. 

எனவே, தோல்வியிலிருந்து ஓடாதவர்கள், அதிலிருந்து கற்றுக்கொள்பவர்கள்  வாழ்க்கையில் மிகவும் ஆழமான ஞானத்தை சேமிக்கிறார்கள்.

நம் வாழ்வியலில் இந்த ஞானத்தின் பயன்பாடு என்ன ?

இந்தத் தத்துவத்தை நடைமுறை வாழ்வில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதுதான் உண்மையான கேள்வி. 

முதலில், தோல்வியை வந்தவுடன் விரட்டாதீர்கள் அதை உள்ளே வாருங்கள் என்று அழையுங்கள்.
    
அதிலிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று அமைதியாக கேளுங்கள். 

இரண்டாவதாக, வெற்றி வந்தவுடன் செருக்கில் மிதவாதீர்கள் அதுவும் தோல்வியை போலவே ஒரு பாடம் சொல்கிறது, 

அடுத்த சவாலுக்கு தயாராக இருங்கள் என்று கூறுகிறது.

மூன்றாவதாக, தெளிந்த அறிவை வளர்க்க வேண்டும்.

தியானம், வாசிப்பு, சிந்தனை, சரியான மனிதர்களின் நட்பு இவை தெளிவை தரும். 

நான்காவதாக, துணிச்சலை பயிற்றுவிக்க வேண்டும் சிறிய சவால்களை தினசரி ஏற்று, மெள்ள மெள்ள மனோதிடத்தை கட்டியெழுப்புங்கள்.

ஒரு பாதையின் இரு கதவுகளென்று எண்ண வேண்டும்.

வாழ்க்கை என்ற பாதையில் வெற்றி மற்றும் தோல்வி என்ற இரண்டு கதவுகள் இருக்கின்றன.
    
அந்தப் பாதையில் நடப்பதை தவிர்க்க முடியாது ஏனெனில் வாழ்வதே நடப்பதுதான். 

ஆனால் எந்தக் கதவை திறப்பது, எதை உள்ளே அனுமதிப்பது என்ற தேர்வு நம்மிடம்தான் இருக்கிறது.
    
அந்தத் தேர்வை சரியாக செய்ய தெளிந்த அறிவும் தளராத துணிச்சலும் நமக்கு தேவை.
    
தோல்வியை கண்டு அஞ்சி ஓடாமல், அதை ஒரு ஆசிரியனாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவனே உண்மையான வெற்றியாளன். 

ஏனெனில் அவன் தோற்றாலும் ஒரு பாடம் கற்கிறான், வென்றாலும் ஒரு உண்மையை உணர்கிறான். 

இந்த இரண்டு நிலைகளிலும் வளர்கிறான், முதிர்கிறான், ஞானம் பெறுகிறான். 

அதுவே வாழ்க்கையின் உண்மையான வெற்றி!

அன்பன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home