நம்மை மாற்றுவது காலம் அல்ல… வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள்தான்!
நம்மை மாற்றுவது காலம் அல்ல… வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள்தான்!
நம்மை மாற்றுவது
காலம் இல்லை...
நாம் பார்த்துப் பழகிய மனிதர்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள்தான்.
ஒவ்வொரு காயமும் ஒரு பாடம்...
ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு புதிய தொடக்கம்...
ஒவ்வொரு தோல்வியும் நாளைய வெற்றிக்கான ஒரு படிக்கட்டு...
இவற்றையெல்லாம் கடந்து
எம்முடைய பயணங்கள் தொடர வேண்டும்.
இந்த வரிகளை மேலோட்டமாகப் பார்த்தால், வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பற்றிய ஒரு சாதாரண அறிவுரையாகத் தோன்றலாம்.
ஆனால், கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், இதில் ஒரு மிகப்பெரிய ஆன்மீக உண்மை மறைந்திருக்கிறது.
வாழ்க்கை நமக்கு எப்போதும் நாம் விரும்பியவற்றையே கொடுப்பதில்லை.
சில நேரங்களில் நாம் விரும்பிய மனிதர்களை இழக்கச் செய்கிறது.
நமீபியா ஏமாற்றப்படுகிறோம். உழைத்தும் தோல்வியைச் சந்திக்கிறோம். அன்பு கொடுத்தும் அன்பைப் பெறாமல் போகிறோம். நம்முடைய நல்ல எண்ணங்களுக்கே தவறான விளக்கங்கள் கிடைக்கின்றன.
அப்போது நாம் கேட்கிறோம்:
“ஏன் இது எனக்கு மட்டும் நடக்கிறது?”
ஆனால் ஆன்மீகப் பயணம் தொடங்கும் இடம், “ஏன் எனக்கு இது நடந்தது?” என்ற கேள்வியிலிருந்து “இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?” என்ற கேள்விக்குச் செல்லும் இடத்தில்தான்.
அதுதான் மாற்றம்.
ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பலருடைய மனதில் ஒரு தவறான காட்சி உருவாகிறது.
காவி உடை அணிந்த ஒருவர்...
காட்டுக்குச் சென்று தியானம் செய்பவர்...
கோயிலில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்...
உலக வாழ்க்கையைத் துறந்த ஒருவர்...
இவர்கள்தான் ஆன்மீகவாதிகள் என்று நாம் நினைத்துவிடுகிறோம்.
ஆனால் உண்மையில் ஆன்மீகம் என்பது வாழ்க்கையை விட்டு ஓடுவது அல்ல.
வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்வதே ஆன்மீகம்.
குடும்பத்தோடு வாழ்ந்துகொண்டே ஆன்மீகவாதியாக இருக்க முடியும்.
காலையில் எழுந்து குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு தந்தை ஆன்மீகவாதியாக இருக்கலாம்.
குடும்பத்தின் நலனுக்காக தன்னுடைய ஆசைகளைத் தியாகம் செய்யும் ஒரு தாய் ஆன்மீகவாதியாக இருக்கலாம்.
தன்னுடைய வேலையை நேர்மையாகச் செய்யும் ஒரு தொழிலாளி ஆன்மீகவாதியாக இருக்கலாம்.
மற்றவருக்கு தெரியாமல் ஒருவருக்கு உதவும் ஒரு சாதாரண மனிதர் ஆன்மீகவாதியாக இருக்கலாம்.
கோபம் வந்தபோதும் வார்த்தைகளை அடக்கிக் கொள்பவர் ஆன்மீகவாதியாக இருக்கலாம்.
தன்னை ஏமாற்றிய ஒருவரை பழிவாங்காமல், அந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன் பாதையில் நடப்பவர் ஆன்மீகவாதியாக இருக்கலாம்.
ஆகவே,
ஆன்மீகம் என்பது உலகத்தை விட்டு விலகுவதல்ல; உலகத்திற்குள் இருந்துகொண்டு நம்மை நாமே உயர்த்திக்கொள்வது.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் நம்முடைய ஆசிரியர்கள்
நம்முடைய வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு மனிதரும் நம்முடைய நண்பராக இருப்பதில்லை.
சிலர் நம்மை நேசிக்க வருகிறார்கள்.
சிலர் நம்மைச் சோதிக்க வருகிறார்கள்.
சிலர் நம்மை உயர்த்த வருகிறார்கள்.
சிலர் நம்மை விழச் செய்கிறார்கள்.
சிலர் நம்முடைய கையைப் பிடித்து நடத்துகிறார்கள்.
வேறு சிலர் நம்முடைய கையை விட்டுவிட்டு, நாம் தனியாக நடக்கக் கற்றுக்கொள்ளச் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுத்துச் செல்கிறார்கள்.
நம்மை நேசித்தவர் அன்பை கற்றுக் கொடுக்கிறார்.
நம்மை ஏமாற்றியவர் எச்சரிக்கையை கற்றுக் கொடுக்கிறார்.
நம்மை விட்டுச் சென்றவர் சார்பின்மையை கற்றுக் கொடுக்கிறார்.
நம்மை விமர்சித்தவர் தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்ளும் அறிவை கற்றுக் கொடுக்கிறார்.
நம்மைத் தாழ்த்தியவர் சுயமரியாதையின் மதிப்பை கற்றுக் கொடுக்கிறார்.
நம்மை மன்னித்தவர் கருணையை கற்றுக் கொடுக்கிறார்.
அதனால் நம்முடைய வாழ்க்கையில் வந்தவர்களை எல்லாம் நல்லவர், கெட்டவர் என்று இரண்டாகப் பிரித்து முடித்துவிட வேண்டியதில்லை.
சிலர் பரிசு.
சிலர் பாடம்.
இரண்டுமே வாழ்க்கைக்கு தேவையானவை.
ஒவ்வொரு காயமும் ஒரு பாடம்
காயம் ஏற்பட்டபோது வலி இருக்கும்.
உடலில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு காலம் தேவைப்படுகிறது.
அதுபோல மனதில் ஏற்பட்ட காயத்திற்கும் காலம் தேவைப்படுகிறது.
ஆனால் மனக்காயங்களைப் பற்றிய ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
காயத்தை மறப்பது மட்டும் குணமடைவது அல்ல.
அந்தக் காயம் நமக்கு என்ன கற்றுக்கொடுத்தது என்பதைப் புரிந்துகொள்வதே உண்மையான குணமடைதல்.
ஒருவர் நம்மை ஏமாற்றியிருந்தால், இனி யாரையும் நம்பக்கூடாது என்று முடிவு செய்வது ஞானமல்ல.
அதற்கு பதிலாக,
“நம்பிக்கைக்கும் விவேகத்திற்கும் இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும்”
என்று கற்றுக்கொள்வதே ஞானம்.
ஒருவர் நம்மை விட்டுச் சென்றால்,
“என்னை யாரும் நேசிக்கவில்லை”
என்று முடிவு செய்வது தவறு.
அதற்கு பதிலாக,
“என்னுடைய முழுமையை இன்னொருவருடைய இருப்பில் மட்டும் தேடக்கூடாது”
என்பதைப் புரிந்துகொள்வது ஆன்மீக வளர்ச்சி.
ஏமாற்றம் ஒரு முடிவல்ல
ஏமாற்றம் என்பது வாழ்க்கையின் மிகக் கடினமான ஆசிரியர்களில் ஒன்று.
நாம் ஒருவரிடம் உண்மையாக இருக்கிறோம். அவரும் நம்மிடம் உண்மையாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆனால் எதிர்பார்ப்பு உடைந்துவிடுகிறது.
அப்போது மனம் கேட்கிறது:
“நான் ஏன் இவ்வளவு நல்லவனாக இருந்தேன்?”
இங்கே ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப் பாடம் இருக்கிறது.
நாம் நல்லவராக இருப்பது, மற்றவர்கள் நமக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
நன்மை செய்வது நம்முடைய குணமாக இருக்க வேண்டும் அதன் பதிலை எதிர்பார்ப்பது வியாபாரமாகிவிடும்.
அதனால் நல்லதைச் செய்யுங்கள்.
ஆனால் எதிர்பார்ப்பைக் குறையுங்கள்.
அன்பு கொடுங்கள்.
ஆனால் உங்கள் அமைதியை முழுவதுமாக இன்னொருவரிடம் ஒப்படைக்காதீர்கள்.
மன்னியுங்கள்.
ஆனால் அதே தவறை மீண்டும் செய்ய அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை.
இதுதான் ஆன்மீகமான பக்குவம்.
தோல்வி என்பது வாழ்க்கையின் தீர்ப்பு அல்ல
ஒரு தேர்வில் தோல்வி.
ஒரு தொழிலில் தோல்வி.
ஒரு உறவில் தோல்வி.
ஒரு முயற்சியில் தோல்வி.
இவை எதுவும் மனிதனின் முழுமையான மதிப்பைத் தீர்மானிக்க முடியாது.
தோல்வி என்பது,
“நீ தோல்வியடைந்த மனிதன்”
என்று வாழ்க்கை கூறும் தீர்ப்பு அல்ல.
அது,
“இந்த வழியில் இன்னும் ஏதோ கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது”
என்று வாழ்க்கை சொல்லும் ஒரு அறிவிப்பு.
ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்ளும்போது விழுகிறது.
அது விழுந்ததால் நடப்பதை நிறுத்திவிட்டால், அது ஒருபோதும் நடக்காது.
வாழ்க்கையிலும் அதேதான்.
விழுவது தவறு அல்ல.
விழுந்த இடத்திலேயே கிடப்பதுதான் தவறு.
காலம் நம்மை மாற்றுவதில்லை
“காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும்” என்று நாம் அடிக்கடி சொல்கிறோம்.
ஆனால் உண்மையில் காலம் மட்டும் நம்மை மாற்றுவதில்லை.
ஒரே வயதில் இருக்கும் இரண்டு மனிதர்கள், ஒரே அனுபவங்களைச் சந்தித்தும் வெவ்வேறு மனிதர்களாக வளர்கிறார்கள்.
ஏன்?
அனுபவம் ஒரே மாதிரியாக இருக்கலாம்.
ஆனால் அனுபவத்தை நாம் புரிந்துகொள்ளும் விதம் வேறுபடுகிறது.
ஒருவர் துன்பத்தில் உடைந்து போகிறார்.
மற்றொருவர் அதே துன்பத்தில் இருந்து வலிமையைப் பெறுகிறார்.
ஒருவர் ஏமாற்றத்திற்குப் பிறகு அனைவரையும் வெறுக்கிறார்.
மற்றொருவர் ஏமாற்றத்திற்குப் பிறகு மனிதர்களைப் புரிந்துகொள்ள கற்றுக்கொள்கிறார்.
ஒருவர் தோல்விக்குப் பிறகு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார்.
மற்றொருவர் தோல்விக்குப் பிறகு தன்னைத் திருத்திக் கொள்கிறார்.
எனவே நம்மை மாற்றுவது காலம் அல்ல.
காலத்தோடு நாம் கற்றுக்கொண்ட உண்மைகள்தான்.
இல்வாழ்க்கையே ஒரு ஆன்மீகப் பள்ளி
ஆன்மீகத்தைத் தேடி எங்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
நமது வீடே ஒரு ஆன்மீகப் பள்ளி.
கணவன்–மனைவி உறவு நமக்கு பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறது.
குழந்தைகள் நமக்கு பொறுப்பைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
பெற்றோர் நமக்கு நன்றியுணர்வைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
உடன்பிறப்புகள் நமக்கு பகிர்வைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
அயலவர்கள் நமக்கு சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
வேலைத்தளம் நமக்கு ஒழுக்கத்தையும் பொறுப்பையும் கற்றுக்கொடுக்கிறது.
சமூகம் நமக்கு மனிதர்களின் பல்வேறு இயல்புகளைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.
அப்படியானால், ஆன்மீகம் எங்கே இல்லை?
நாம் விழிப்புணர்வுடன் வாழும் ஒவ்வொரு இடத்திலும் ஆன்மீகம் இருக்கிறது.
உயர்ந்த ஒழுக்கமான வாழ்க்கையும் ஆன்மீகமே
கோயிலுக்குச் செல்வது ஆன்மீகம்.
ஆனால் கோயிலிலிருந்து வெளியே வந்து ஒருவரை ஏமாற்றாமல் இருப்பதும் ஆன்மீகம்.
பிரார்த்தனை செய்வது ஆன்மீகம்.
ஆனால் நமக்குத் தீங்கு செய்தவருக்காகக் கூட மனதளவில் தீமை வேண்டாமல் இருப்பதும் ஆன்மீகம்.
மந்திரம் சொல்வது ஆன்மீகம்.
ஆனால் கோபத்தின் நேரத்தில் நாவைக் கட்டுப்படுத்துவதும் ஆன்மீகம்.
தானம் செய்வது ஆன்மீகம்.
ஆனால் நம்மிடம் உதவி கேட்கும் ஒருவரை அவமதிக்காமல் இருப்பதும் ஆன்மீகம்.
தியானம் செய்வது ஆன்மீகம்.
ஆனால் வாழ்க்கையின் குழப்பத்துக்குள் மன அமைதியைத் தேடி வாழ்வதும் ஆன்மீகம்.
உண்மையில்,
நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே நாம் எவ்வளவு ஆன்மீகவாதிகள் என்பதற்கான மிகப்பெரிய சாட்சி.
நமது வழிபாட்டை விட நமது நடத்தை உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
நமது பிரார்த்தனையை விட நமது பண்பு உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
நமது அறிவை விட நமது மனிதநேயம் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம் என்பது தன்னைத்தானே கவனிப்பது
உலகத்தில் அனைவரையும் திருத்த வேண்டும் என்று நினைப்பது மிகவும் எளிது.
ஆனால் நம்மை நாமே கவனிப்பது மிகவும் கடினம்.
“அவன் இப்படிச் செய்தான்.”
“அவள் அப்படிப் பேசினாள்.”
“அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை.”
என்று நாம் வாழ்க்கை முழுவதும் மற்றவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்.
ஆனால் ஒரு நாள் அமைதியாக நம்மிடம் நாம் கேட்க வேண்டும்:
“நான் என்ன செய்கிறேன்?”
என்னுடைய கோபம் எங்கிருந்து வருகிறது?
என்னுடைய எதிர்பார்ப்பு ஏன் இவ்வளவு அதிகம்?
என்னுடைய மனம் ஏன் அடிக்கடி ஒப்பிடுகிறது?
என்னுடைய அஹங்காரம் எப்போது காயப்படுகிறது?
என்னுடைய பயம் எதை மறைக்கிறது?
இந்தக் கேள்விகளுக்குள் நாம் இறங்கத் தொடங்கும்போது உண்மையான ஆன்மீகப் பயணம் ஆரம்பமாகிறது.
மன்னிப்பு என்பது மறப்பது அல்ல
நம்மை காயப்படுத்தியவர்களை மன்னிப்பது பற்றி பேசும்போது, பலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
மன்னிப்பது என்பது நடந்ததை மறந்துவிடுவது அல்ல.
மீண்டும் அதே மனிதரிடம் அதே அளவு நம்பிக்கையுடன் செல்வதும் அல்ல.
மன்னிப்பு என்பது,
“நீ செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் நீ செய்ததன் நஞ்சை என் மனத்தில் என்றும் சுமக்க நான் தயாரில்லை”
என்று நம்முடைய உள்ளத்திடம் சொல்லிக்கொள்வது.
மன்னிப்பு முதலில் மற்றவரை விடுவிப்பதில்லை.
நம்மையே விடுவிக்கிறது.
கடந்த காலத்தின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, நிகழ்காலத்தில் அமைதியாக வாழ முடியாது.
எல்லாவற்றையும் கடந்து பயணம் தொடர வேண்டும்
வாழ்க்கை நின்றுவிடாது.
ஒருவர் வந்தாலும் வாழ்க்கை நகரும்.
ஒருவர் சென்றாலும் வாழ்க்கை நகரும்.
வெற்றி வந்தாலும் வாழ்க்கை நகரும்.
தோல்வி வந்தாலும் வாழ்க்கை நகரும்.
கண்ணீர் வந்தாலும் காலை உதிக்கும்.
இருள் வந்தாலும் சூரியன் மறுநாளில் உதயமாகும்.
இயற்கை நமக்கு ஒரு பெரிய ஆன்மீகப் பாடத்தை தினமும் கற்றுக் கொடுக்கிறது:
எதுவும் நிரந்தரமல்ல.
துன்பமும் நிரந்தரமல்ல.
மகிழ்ச்சியும் நிரந்தரமல்ல.
தோல்வியும் நிரந்தரமல்ல.
வெற்றியும் நிரந்தரமல்ல.
மாற்றமே வாழ்க்கையின் நிரந்தரமான இயல்பு.
அதனால் இன்று நம்முடைய வாழ்க்கையில் இருள் இருந்தால், அது எப்போதும் தொடரும் என்று நினைக்க வேண்டாம்.
இன்று மனம் உடைந்திருந்தால், நாளையும் அதே நிலையில் இருப்போம் என்று முடிவு செய்ய வேண்டாம்.
வாழ்க்கைக்கு இன்னும் பல பக்கங்கள் இருக்கின்றன.
நம்முடைய பயணம் நம்முடையது
மற்றவர்களின் வாழ்க்கையோடு நம்முடைய வாழ்க்கையை ஒப்பிடுவதை நிறுத்திய நாளிலிருந்து ஒரு பெரிய அமைதி நம்முள் பிறக்கிறது.
அவருடைய வெற்றி அவருடைய பாதை.
அவருடைய தோல்வி அவருடைய பாடம்.
அவருடைய வாழ்க்கை அவருடைய பயணம்.
நமக்கென்று ஒரு பாதை இருக்கிறது.
நாம் எவ்வளவு தூரம் சென்றோம் என்பதை விட, நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பதே முக்கியம்.
நேற்றைய நம்மைவிட இன்றைய நாம் கொஞ்சம் நல்லவர்களாக இருந்தால் போதும்.
நேற்றைவிட இன்று கொஞ்சம் பொறுமையாக இருந்தால் போதும்.
நேற்றைவிட இன்று கொஞ்சம் குறைவாகக் கோபப்பட்டால் போதும்.
நேற்றைவிட இன்று ஒருவருக்கு கொஞ்சம் அதிகமாக உதவியிருந்தால் போதும்.
அதுவே ஆன்மீக முன்னேற்றம்.
இறுதியில் நாம் எதை எடுத்துச் செல்கிறோம்?
ஒரு நாள் இந்த வாழ்க்கைப் பயணம் முடியும்.
நாம் சேர்த்த பணம் இங்கேயே இருக்கும்.
நாம் வாங்கிய வீடு இங்கேயே இருக்கும்.
நாம் பெற்ற பதவி இங்கேயே இருக்கும்.
நாம் சேர்த்த புகழும் இங்கேயே இருக்கும்.
ஆனால் நாம் வாழ்ந்த விதம், நாம் பிறரிடம் விட்டுச் சென்ற அன்பு, நாம் செய்த நன்மைகள், நாம் காட்டிய மனிதநேயம் இவைகள்தான் நம்முடைய வாழ்க்கையின் உண்மையான தடயங்களாக இருக்கும்.
அதனால் வாழ்க்கையின் இறுதியில்,
“நான் எவ்வளவு பெற்றேன்?”
என்பதை விட,
“நான் எவ்வளவு நல்ல மனிதனாக மாறினேன்?”
என்ற கேள்வியே முக்கியமானதாகிவிடும்.
அதுவே ஆன்மீகத்தின் சாரம்.
நம்மை நாம் செதுக்கிக் கொள்வோம்
வாழ்க்கையில் உங்களை யாராவது காயப்படுத்தியிருந்தால், அந்தக் காயத்தை வெறுப்பாக மாற்றாதீர்கள்.
அதை அறிவாக மாற்றுங்கள்.
யாராவது ஏமாற்றியிருந்தால், அந்த ஏமாற்றத்தை அவநம்பிக்கையாக மாற்றாதீர்கள்.
அதை விவேகமாக மாற்றுங்கள்.
தோல்வி வந்திருந்தால், அதை தாழ்வு மனப்பான்மையாக மாற்றாதீர்கள்.
அதை அனுபவமாக மாற்றுங்கள்.
யாராவது உங்களை விட்டு சென்றிருந்தால், அந்தப் பிரிவை வெறுமையாக எண்ணாதீர்கள்.
அது உங்களை உங்களோடு சந்திக்கச் செய்த ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.
வாழ்க்கை நமக்கு எல்லாவற்றையும் நாம் விரும்பியபடி கொடுக்காது.
ஆனால் அது கொடுக்கும் ஒவ்வொரு அனுபவத்திலும் ஒரு விதையை வைத்திருக்கிறது.
அந்த விதையைப் புரிந்துகொண்டு வளர்ப்பதுதான் நமது பொறுப்பு.
ஒரு காயத்திலிருந்து கருணை பிறக்கலாம்.
ஒரு தோல்வியிலிருந்து தன்னம்பிக்கை பிறக்கலாம்.
ஒரு ஏமாற்றத்திலிருந்து விவேகம் பிறக்கலாம்.
ஒரு தனிமையிலிருந்து தன்னறிவு பிறக்கலாம்.
ஒரு இழப்பிலிருந்து பற்றின்மை பிறக்கலாம்.
ஒரு மௌனத்திலிருந்து ஞானம் பிறக்கலாம்.
ஆகவே வாழ்க்கை நம்மை உடைக்கும்போது,
“ஏன் என்னை உடைக்கிறது?”
என்று மட்டும் கேட்காமல்,
“என்னை எந்த வடிவத்தில் மீண்டும் உருவாக்குகிறது?”
என்று கேட்போம்.
அதுதான் ஆன்மீகப் பார்வை.
நாம் கோயிலுக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் ஆன்மீகமாக இருக்க வேண்டியதில்லை.
ஆனால் வீட்டில் ஒருவரிடம் அன்பாகப் பேசும் நாள் ஆன்மீகமான நாளாக இருக்கலாம்.
ஒரு கோபத்தை அடக்கிய நாள் ஆன்மீகமான நாளாக இருக்கலாம்.
ஒருவரை மன்னித்த நாள் ஆன்மீகமான நாளாக இருக்கலாம்.
நமக்குக் கிடைத்ததைப் பகிர்ந்த நாள் ஆன்மீகமான நாளாக இருக்கலாம்.
நம்முடைய தவறை ஒப்புக்கொண்ட நாள் ஆன்மீகமான நாளாக இருக்கலாம்.
நேற்றைய நம்மைவிட இன்று சிறிது உயர்ந்த மனிதராக வாழ்ந்த நாள்—அதுவே உண்மையான ஆன்மீக நாள்.
எனவே, வாழ்க்கையை வெறுத்து ஆன்மீகத்தைத் தேட வேண்டாம்.
வாழ்க்கையையே ஆன்மீகப் பாதையாக மாற்றுங்கள்.
குடும்பத்தை ஒரு ஆசிரமமாகப் பாருங்கள்.
வேலையை ஒரு கடமையாகப் பாருங்கள்.
உறவுகளை ஒரு கற்றல் வாய்ப்பாகப் பாருங்கள்.
துன்பங்களை ஒரு ஆசிரியராகப் பாருங்கள்.
மகிழ்ச்சியை ஒரு அருளாகப் பாருங்கள்.
தோல்வியை ஒரு பாடமாகப் பாருங்கள்.
வெற்றியை ஒரு பொறுப்பாகப் பாருங்கள்.
மனிதர்களை தீர்ப்பளிப்பதற்கு முன் புரிந்துகொள்ள முயலுங்கள்.
உங்களை வெறுப்பதற்கு முன் உங்களைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
அப்போது ஒருநாள் நாம் உணர்வோம்—
நம்மை மாற்றியது காலம் அல்ல.
காலத்தின் வழியாக நம்மைச் சந்தித்த மனிதர்களும்,
அவர்கள் தந்த அனுபவங்களும்,
அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்ற பாடங்களும்,
அந்தப் பாடங்களால் நம்முள் ஏற்பட்ட விழிப்புணர்வுமே
நம்மை மாற்றியிருக்கிறது.
அதனால்தான்
ஒவ்வொரு காயமும் ஒரு பாடம்...
ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு புதிய தொடக்கம்...
ஒவ்வொரு தோல்வியும் ஒரு நாளைய வெற்றிக்கான விதை...
வாழ்க்கை எத்தனை முறை நம்மைச் சோதித்தாலும்,
நாம் நின்றுவிட வேண்டியதில்லை.
நாம் உடைந்து போகலாம்...
ஆனால் மீண்டும் நம்மைச் சேர்த்துக்கொள்ளலாம்.
நாம் அழலாம்...
ஆனால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மீண்டும் நடக்கலாம்.
நாம் தோற்கலாம்...
ஆனால் அந்தத் தோல்வியிலிருந்து புதிய நம்மை உருவாக்கலாம்.
ஏனென்றால்,
வாழ்க்கை என்பது நமக்கு நடந்த சம்பவங்களின் தொகுப்பு அல்ல;
அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நாம் எப்படிப்பட்ட மனிதராக மாறினோம் என்பதன் வரலாறு.
அந்த வரலாற்றை அழகாக எழுதுவது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது.
பயணம் தொடரட்டும்...
மனம் தெளியட்டும்...
அனுபவங்கள் அறிவாகட்டும்...
அறிவு அன்பாகட்டும்...
அன்பு ஆன்மீகமாகட்டும்...
ஆன்மீகம் நம் அன்றாட வாழ்க்கையாகட்டும்.
அன்பன்
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home