Wednesday, August 26, 2026

மன்னிப்பு வலியை மறப்பதல்ல அதன் பிடியிலிருந்து விடுபடுவது

மன்னிப்பு வலியை மறப்பதல்ல அதன் பிடியிலிருந்து விடுபடுவது

மன்னிப்பு என்பது நடந்தது எமக்கு வலி கொடுக்கவில்லை என்று சொல்வது அல்ல.

அது நடந்ததை நியாயப்படுத்துவதும் அல்ல.
    
நம்மை காயப்படுத்தியவரின் செயல்களை சரி என்று ஏற்றுக்கொள்வதும் அல்ல.

மாறாக, அந்த வலி இனிமேலும் எமது மனதை ஆள அனுமதிக்க மாட்டோம் என்று நாம் எடுக்கும் ஒரு ஆழமான முடிவுதான் மன்னிப்பு.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் காயப்படுகிறோம்.

சில காயங்கள் உடலில் தெரியும் சில காயங்கள் மனதில் மட்டும் இருக்கும்.

ஒரு கடுமையான வார்த்தை, ஒரு துரோகம், ஒரு ஏமாற்றம், ஒரு நம்பிக்கை முறிவு, ஒரு உறவின் முறிவு, நமக்கு உரிய மரியாதை மறுக்கப்பட்ட தருணம், நம்மால் மறக்க முடியாத ஒரு அநியாயம் இவை எல்லாமே மனத்தில் தடம் பதிக்கக்கூடியவை.

சில சம்பவங்கள் நடந்த நாள் முடிந்துவிடுகின்றன ஆனால் அவற்றின் நினைவுகள் பல ஆண்டுகளாக நம்முடன் பயணம் செய்கின்றன.

அதுதான் மன்னிப்பின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய இடம்.

ஒருவர் நம்மை காயப்படுத்தியிருக்கலாம்.

அந்த நிகழ்வு கடந்த காலத்தில் நடந்ததாக இருக்கலாம்.

ஆனால் அதை நாம் தினமும் நினைத்துக் கொண்டிருந்தால், அந்த சம்பவம் கடந்த காலத்தில் இல்லை அது நமது இன்றைய வாழ்க்கையிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

நம்மை காயப்படுத்தியவர் ஒருவேளை தனது வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

ஆனால் நாம் மட்டும் அந்த நிகழ்வை மனதில் மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

இங்கேதான் மன்னிப்பு ஒரு ஆன்மீக விடுதலையாக மாறுகிறது.

மன்னிப்பது என்பது, “நீ செய்தது ஒன்றும் இல்லை” என்று கூறுவது அல்ல.

“நீ செய்தது என்னை காயப்படுத்தியது.

அது உண்மை.

ஆனால் அந்த காயம் என் வாழ்நாள் முழுவதையும் ஆள நான் அனுமதிக்கப் போவதில்லை” என்று நம்மிடம் நாமே கூறிக்கொள்வது.

இது சாதாரணமான முடிவு அல்ல.
    
ஏனெனில் மனித மனம் நினைவுகளை வெறும் தகவல்களாக வைத்திருப்பதில்லைஅவற்றோடு உணர்ச்சிகளையும் சேர்த்து வைத்திருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு யாரோ கூறிய ஒரு வார்த்தை, இன்று நினைத்தாலும் நமக்குள் கோபத்தை எழுப்பலாம்.

பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துரோகம், இன்றும் ஒருவரை நம்புவதற்கு நம்மைத் தயங்கச் செய்யலாம்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு தோல்வி, இன்று முயற்சி செய்யவே பயப்படச் செய்யலாம்.

அதனால் சில நேரங்களில் நம்மைத் துன்புறுத்துவது சம்பவம் அல்ல அந்த சம்பவத்திற்கு நாம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் அதிகாரம்தான்.

அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், இதன் உண்மை இன்னும் தெளிவாகத் தெரியும்.
    
கணவன் மனைவிக்குள் ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
    
ஒருவர் கோபத்தில் சில கடுமையான வார்த்தைகளைச் சொல்லிவிடுகிறார்.

சில மணி நேரத்தில் கோபம் குறைந்து விடுகிறது.

ஆனால் அந்த வார்த்தைகளை மற்றவர் மனதில் வைத்துக் கொள்கிறார்.

மறுநாள் நடந்த வேறு ஒரு சிறிய விஷயத்திலும் பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது.
     
“அன்றைக்கு நீ அப்படிச் சொன்னாய் அல்லவா?” என்று பழைய காயம் மீண்டும் திறக்கப்படுகிறது.

இப்படியாக ஒரு சம்பவம் பல வருடங்களுக்கு உறவைத் தொடர்ந்து பாதிக்கிறது.

இங்கே மன்னிப்பு என்பது அந்த வார்த்தைகள் பேசப்படவில்லை என்று மறுப்பதல்ல.

அவை தவறானவை என்பதை ஏற்றுக்கொண்டபடியே, அந்த வார்த்தைகளுக்கு எதிர்கால உறவின் மீது அதிகாரம் கொடுக்காமல் இருப்பது.

பெற்றோர் பிள்ளை உறவிலும் இதே நிலை காணப்படுகிறது.
    
குழந்தைப் பருவத்தில் பெற்றோர் கூறிய ஒரு கடுமையான வார்த்தை, சில நேரங்களில் பெரியவனான பின்னரும் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

“நீ எதற்கும் பயன்படமாட்டாய்” என்று ஒருகாலத்தில் கோபத்தில் கூறப்பட்ட ஒரு வார்த்தை, ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை பல வருடங்கள் பாதிக்கக்கூடும்.
    
ஆனால் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அவன் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்று அந்த வார்த்தை தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அவன் மன்னிக்கலாம்.

அதன் பொருள் பெற்றோர் சொன்னது சரி என்று ஏற்றுக்கொள்வதல்ல.

“அந்த வார்த்தை என்னை காயப்படுத்தியது.

ஆனால் இனி அந்த வார்த்தையின் அடிப்படையில் நான் என்னைப் பார்க்க மாட்டேன்” என்பதே அந்த மன்னிப்பின் ஆழம்.

நண்பர்களுக்கிடையிலும் இதே பிரச்சினை உண்டு.
    
நம்பிக்கையுடன் பகிர்ந்த ஒரு விஷயம் பிறரிடம் சொல்லப்பட்டிருக்கலாம்.
    
நெருங்கிய நண்பர் ஒருவர் ஒரு முக்கியமான தருணத்தில் நம்மை விட்டுச் சென்றிருக்கலாம்.

நமக்கு தேவையான நேரத்தில் உதவாமல் இருந்திருக்கலாம்.

அந்த அனுபவம் நம்மை காயப்படுத்துவது இயல்புதான்.

ஆனால் அந்த ஒருவரின் தவறினால் உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் நம்ப முடியாது என்று முடிவு செய்துவிட்டால், ஒருவரின் தவறுக்கான தண்டனையை நாம் சந்திக்கும் ஒவ்வொரு புதிய மனிதருக்கும் வழங்கத் தொடங்குகிறோம்.
    
இதுவே மன்னிக்காத மனத்தின் மறைமுக விளைவு.

ஒருவர் நம்மை ஏமாற்றியதால், எல்லோரும் ஏமாற்றுவார்கள் என்று நினைப்பது கடந்த காலத்திற்கு எதிர்காலத்தின் கதவை ஒப்படைப்பதாகும்.

மன்னிப்பு அந்த கதவை மீண்டும் நமக்கே ஒப்படைக்கிறது.

அலுவலக வாழ்க்கையிலும் மன்னிப்பின் அவசியம் இருக்கிறது.

ஒரு சக ஊழியர் நமது உழைப்புக்கான பாராட்டைப் பெற்றிருக்கலாம்.

மேலாளர் நம்மை தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம்.

நமக்கு உரிய வாய்ப்பு மற்றொருவருக்குக் கிடைத்திருக்கலாம்.

இத்தகைய சம்பவங்கள் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தலாம்.

ஆனால் ஒரு அநியாயமான சம்பவத்தை மனதில் பிடித்துக்கொண்டு தினமும் கோபத்துடன் வேலை செய்வது, அந்த சம்பவத்தை நிகழ்த்தியவருக்கு நமது மன அமைதியின் சாவியை கொடுத்துவிடுவதாகும்.

அவர் நமது அலுவலகத்தில் இல்லாவிட்டாலும், நமது மனதில் அவர் இருக்கிறார்.

அவர் நம்மைப் பற்றி நினைக்காமல் இருக்கலாம்.ஆனால் நாம் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் மன்னிப்பு என்பது பல நேரங்களில் மற்றவருக்குக் கொடுக்கப்படும் பரிசு அல்ல நமக்கே நாம் வழங்கிக்கொள்ளும் சுதந்திரம்.

இங்கே இன்னொரு முக்கியமான வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

மன்னிப்பதும் மறுபடியும் அதே காயத்தை அனுமதிப்பதும் ஒன்றல்ல.

ஒருவரை மன்னித்துவிட்டோம் என்பதற்காக அவரிடம் மீண்டும் அதே அளவு நம்பிக்கையை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு கதவை மூடிவிட்டு ஒருவரை மன்னிக்கலாம்.

தூரத்தை வைத்துக்கொண்டே மன்னிக்கலாம்.

உறவைத் தொடராமல் கூட மன்னிக்கலாம்.

மன்னிப்பு என்பது எல்லைகளை அழிப்பது அல்ல மனத்தில் இருக்கும் விஷத்தை வெளியேற்றுவது.

ஒருவர் தொடர்ந்து நம்மை அவமதிக்கிறார் என்றால், அவரிடமிருந்து விலகுவது புத்திசாலித்தனம்.

ஒருவர் தொடர்ந்து நம்மை ஏமாற்றுகிறார் என்றால், அவரை நம்பாமல் இருப்பது அனுபவத்தின் பாடம்.

ஒருவர் நம்முடைய அமைதியை தொடர்ந்து குலைக்கிறார் என்றால், அவரிடமிருந்து தூரம் வைப்பது சுயமரியாதை.

ஆனால் தூரத்தில் இருந்தபடியே கோபத்துடன் வாழ்வதற்குப் பதிலாக,

“அவர் அப்படிப்பட்டவர். அவர் செய்தது என்னை காயப்படுத்தியது. ஆனால் இனி என் மன அமைதியை அவரிடம் ஒப்படைக்க மாட்டேன்” என்று முடிவு செய்வதே மன்னிப்பின் முதிர்ச்சி.

சில நேரங்களில் நாம் மற்றவர்களை மட்டுமல்ல, நம்மையே மன்னிக்க வேண்டியிருக்கிறது.

“அப்போது நான் வேறு விதமாக நடந்திருக்க வேண்டுமே…”

“அந்த முடிவை நான் எடுத்திருக்கக் கூடாதே…”

“அந்த மனிதனை நான் ஏன் நம்பினேன்?”

“அந்த வாய்ப்பை ஏன் தவறவிட்டேன்?”

என்று நம்மை நாமே தண்டித்துக் கொண்டிருப்போம்.

கடந்த காலத்தில் இருந்த நமக்கு இன்று இருக்கும் அறிவு இருந்திருக்காது.

இன்று வாழ்க்கை நமக்கு கற்றுத் தந்ததை அன்றைய நமக்கு வாழ்க்கை இன்னும் கற்றுக் கொடுக்கவில்லை.

ஆகவே, இன்றைய அறிவால் நேற்றைய நம்மை நீதிபதி போல விசாரிப்பது நியாயமல்ல.

நாம் செய்த தவறுகளையும் மன்னிக்க வேண்டும்.

மன்னிப்பு இல்லாத வாழ்க்கை மெதுவாக ஒரு சிறையாக மாறிவிடும்.

அந்த சிறைக்கு சுவர்கள் வெளியில் இல்லை நமது நினைவுகளுக்குள் இருக்கும்.

கதவு திறந்தே இருக்கும் ஆனால் வெளியே வர நாம் தயங்குவோம்.

“அவர் என்ன செய்தார் என்பதை நான் மறக்க மாட்டேன்” என்று ஒருவர் சொல்லலாம்.

அது இயல்பானது. மறப்பது மனிதனால் எப்போதும் சாத்தியமில்லை.

ஆனால் மறக்காமல் இருந்தபடியே மன்னிக்க முடியும்.

நினைவில் வைத்துக்கொள்ளலாம்; ஆனால் நஞ்சாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஒரு தீய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் ஆனால் அந்த அனுபவத்தை நமது வாழ்வின் அடையாளமாக மாற்ற வேண்டியதில்லை.

ஒரு தோல்வியை நினைவில் வைத்துக்கொள்ளலாம் ஆனால் நம்மை தோல்வியாளன் என்று அழைக்க வேண்டியதில்லை.

ஒருவர் நம்மை நிராகரித்ததை நினைவில் வைத்துக்கொள்ளலாம் ஆனால் நம்முடைய மதிப்பை அந்த நிராகரிப்பின் அளவுகோலால் அளக்க வேண்டியதில்லை.

இதுதான் மன்னிப்பின் உள்ளார்ந்த சக்தி.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நாம் உணர வேண்டிய மிகப் பெரிய உண்மை என்னவென்றால், ஒவ்வொரு காயத்திற்கும் ஒரு முடிவு தேவை.

இல்லையெனில் காயம் ஒரு நினைவாக மட்டும் இருக்காதுஅது நமது குணமாக மாறிவிடும். ஒருமுறை ஏமாற்றப்பட்டவன் எப்போதும் சந்தேகப்படுபவனாக மாறலாம்.

ஒருமுறை நிராகரிக்கப்பட்டவன் எப்போதும் தன்னைத் தாழ்வாக நினைக்கலாம்.

ஒருமுறை அவமானப்படுத்தப்பட்டவன் எப்போதும் பிறரின் பார்வையைப் பயப்படலாம்.

அப்போது கடந்த காலத்தில் நடந்த சம்பவம் நமது எதிர்காலத்தை எழுதத் தொடங்குகிறது.

அதை நிறுத்துவதற்கான பேனா நம்மிடமே இருக்கிறது.

அந்த பேனாவின் பெயர்  மன்னிப்பு.

மன்னிப்பது எளிதல்ல. குறிப்பாக காயம் ஆழமாக இருந்தால் இன்னும் கடினம். சில காயங்களுக்கு காலம் தேவை.
   
சிலவற்றுக்கு அமைதி தேவை.
   
சிலவற்றுக்கு அழுகை தேவை.
   
சிலவற்றுக்கு மனத்துடன் நேர்மையாக உரையாட வேண்டும்.
    
“ஆம், இது என்னை மிகவும் காயப்படுத்தியது” என்று ஒப்புக்கொள்வதிலிருந்தே மன்னிப்பின் பயணம் தொடங்கலாம்.

மன்னிப்பதற்கு முன் வலியை மறுக்க வேண்டியதில்லை.

அழலாம்.

கோபப்படலாம்.

வருத்தப்படலாம்.

கேள்வி கேட்கலாம்.

ஆனால் ஒருநாள் நம்மிடம் நாமே ஒரு கேள்வியை கேட்க வேண்டும்:

“இந்த சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது அது உண்மை.

ஆனால் இனிமேலும் என் வாழ்க்கையை அது நடத்த வேண்டுமா?”

அந்தக் கேள்விக்கான பதிலில்தான் விடுதலை தொடங்குகிறது.

மன்னிப்பு என்பது கடந்த காலத்தை மாற்றும் சக்தி அல்ல.

ஆனால் கடந்த காலம் நமது நிகழ்காலத்தை ஆளும் விதத்தை மாற்றும் சக்தி.

நாம் நேற்று நடந்ததை மாற்ற முடியாது.

ஆனால் இன்று அதை எப்படி பார்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க முடியும்.

நடந்ததை அழிக்க முடியாது.
  
ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் அதிகாரத்தைத் திரும்பப் பெற முடியும்.

அதனால்தான் உண்மையான மன்னிப்பு என்பது பலவீனத்தின் அடையாளமல்ல அது மனத்தின் வலிமையின் அடையாளம்.

பழிவாங்குவது எளிதாகத் தோன்றலாம்.

கோபத்தை பிடித்துக் கொள்வதும் எளிதாக இருக்கலாம்.

“நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்” என்று சொல்லுவதும் சில நேரங்களில் நமக்கு வலிமையாகத் தோன்றலாம்.

ஆனால் உண்மையான வலிமை வேறு இடத்தில் இருக்கிறது.

“நீ என்னை காயப்படுத்தினாய். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் என் மீதமுள்ள வாழ்க்கையையும் நீ காயப்படுத்த அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்லக்கூடிய அந்த உள்ளார்ந்த அமைதியில்தான் உண்மையான வலிமை இருக்கிறது.

மன்னிப்பு என்பது மற்றவரை விடுவிப்பதற்கு முன் நம்மையே விடுவித்துக்கொள்வது.

நம்மை காயப்படுத்தியவரின் பெயரை நினைத்தபோது இனி மனம் எரியாமல் இருப்பது.

பழைய சம்பவத்தை நினைத்தபோது நெஞ்சு இறுகாமல் இருப்பது.

கடந்த காலத்தைப் பார்த்தபோது, “அது நடந்தது நான் அதிலிருந்து கற்றுக்கொண்டேன்; ஆனால் நான் அங்கேயே நிற்கவில்லை” என்று சொல்ல முடிவது.

அதுவே மன்னிப்பின் வெற்றி.

வாழ்க்கை மிகச் சிறியது.

நமக்குக் கிடைத்த நாட்களை எல்லாம் பழைய காயங்களின் கணக்குப் புத்தகமாக வைத்துக் கொண்டிருக்க முடியாது.

யார் என்ன செய்தார்கள், யார் என்ன சொன்னார்கள், யார் எப்போது ஏமாற்றினார்கள் என்று எண்ணிக்கொண்டே வாழ்ந்தால், நமக்காக வாழ வேண்டிய நேரம் மெதுவாகக் குறைந்து கொண்டே போய்விடும்.

நமது வாழ்க்கை, மற்றவர்கள் செய்த தவறுகளின் நினைவுச் சின்னமாக இருக்கக் கூடாது.

அது நமது அனுபவங்களிலிருந்து பிறந்த ஞானத்தின் சாட்சியாக இருக்க வேண்டும்.

எனவே, மன்னிக்க வேண்டிய ஒருவர் நமது வாழ்க்கையில் இருந்தால், முதலில் அவரை நினைத்து அல்ல நம்மை நினைத்தே மன்னிப்போம்.

அவருக்காக அல்ல.

நமது அமைதிக்காக.

நமது நாளைக்காக.

நமது மனநலத்திற்காக.

நமது மீதமுள்ள வாழ்க்கையை கடந்த காலத்தின் நிழலாக அல்ல, புதிய விடியலின் வெளிச்சமாக வாழ்வதற்காக.

ஏனெனில் மன்னிப்பு என்பது நடந்ததை மறந்து விடுவது அல்ல.

நடந்தது நம்மை காயப்படுத்தியது என்பதை ஏற்றுக்கொண்டு, அந்தக் காயத்திற்கு இனிமேல் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்காமல் இருப்பதே மன்னிப்பு.

ஒருநாள் நாம் பின்னோக்கிப் பார்க்கும்போது, “அவர் என்னை காயப்படுத்தினார்” என்று மட்டும் நினைக்காமல்,

“அந்த காயத்திலிருந்து நான் என்னை மீட்டுக்கொண்டேன்”

என்று சொல்லக்கூடிய நிலையை அடைவதே வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று.

அன்பன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home