நான் பேச நினைப்பதெல்லாம். . . .
நம்பிக்கையின் அடித்தளமின்றி நாம் வாழ்ந்துவிட முடியாது.ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடித்தளத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
ஒவ்வொருவருடைய மனங்களிலும் அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்களின் வித்தியாசத்தில் தான் இவ்வுலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
தீமை செய்பவர்கள் இல்லாவிட்டால் நன்மை செய்பவர்களை அடையாளம் காண முடியாது.அதேபோலத் துன்ப நிகழ்வுகள் இல்லாவிட்டால் இன்ப நிகழ்வின் மகத்துவம் புரியாது.
ஆனால் இந்நம்பிக்கை நியாயம் எனும் எல்லைக்கோட்டைத் தாண்டும் போதுதான் வாழ்வில் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக எம்மையறியாமலே வெறியாக மாறத் தொடங்குகிறது.
எல்லை மீறிய இந்நம்பிக்கையே இன்றைய மத, இனப் பூசல்களின் அடிப்படையாக அமைந்து விடுகிறது.இந்நம்பிக்கை அதன் எல்லைக் கோட்டைத் தாண்டாதிருப்பதற்கு அன்பின் அடிப்படையில் அமைந்த புரிதல் அவசியம்.
எம்மைப் போலவே மற்றவர்களும் என்று அவர்களின் நிலையில் இருந்து அவர்களின் நம்பிக்கையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டால் பல பிரச்சனைகளின் தீர்வுக்கு வழி பிறக்கிறது.
நாம் நம்பாத ஒரு விடயத்தை மற்றொருவர் நம்புகிறார் என்றால் எமது அவநம்பிக்கைக்கு நியாயம் கற்பித்து அவரை எம் வழிக்குத் திருப்புவதிலேயே எம்மில் பெரும்பான்மையினரின் கவனம் இருக்கிறது..
எமக்குநடக்கும் நிகழ்வுகள்,எம்மீது வைக்கப்படும் விமர்சனங்கள்அனைத்தையும் எம்மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களாகப் பார்ப்பதால் மனதில் ஆத்திர உணர்வு தலை தூக்குகிறது.
ஒரு நிகழ்வு நடந்து முடிந்த அடுத்த கணத்தில் அந்நிகழ்வைப் பற்றிய எமது நோக்கிற்கும் இரண்டு நாள் அவகாசத்தின் பின்னால் அந்நிகழ்வை மீளாய்வு செய்யும்போது எம்முள் இருக்கும் நோக்கிற்கும் பாரிய வேறுபாடு இருக்கும்.
அதனால்தான் அனுபவம் மிகுந்த பெரியோர் எதையும் அவசரப் பட்டு முடிவு செய்யாதீர்கள் என்று சொல்லி வைத்தார்கள்.
இது ஏதோ ஒரு கட்டுரை வரைவதற்காக நான் உங்களோடு பகிர்ந்துகொள்ளும் என்னால் புரிந்துகொள்ளப்படாத ,அனுபவிக்காத ஒரு விடயமல்ல.
என்வாழ்வில் நான் சந்தித்த பலகணங்கள்.என் வாழ்வில்எனக்கு நேர்ந்த என்னால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள் இவற்றின் அடிப்படையை நான் அசை போட்டுப் பார்க்கும்போது என்னுள் எழும் அதிர்வுகளையே நான் வரிகளாக்கி இவ்வெழுத்துத் தோட்டத்தில் விதைக்கிறேன்.
அப்படி என்ன இவன் ஏதோ பெரிய ஞானியா?போதிக்கவந்து விட்டானே !என்றுஎண்ணாதீர்கள்.
நான்ஞானியுமல்ல ,ஒரு பெரிய எழுத்தாளனுமல்ல. அனைவராலும் மதிக்கப்படும் சாதனைகள் படைத்த படைப்பாளியுமல்ல. வெறும் சாமானிய மனிதனே !
நான்எழுத்து வடிவில் பகிர்ந்துகொள்பவை ஏதாவது உபயோகமான வகையில் அமைந்திருக்குமானால் அதுவே நான் என்னை இத்தனை காலம் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அகிலத்திற்கும், இயற்கைக்கும் நான் எழுதுவதைப் படித்து ரசிக்கும் அன்றி நகைக்கும் என் இனிய அன்பு உள்ளங்களுக்கும் காட்டக்கூடிய நன்றியுணர்வு.
ஒரு கவிஞனாக கற்பனைத் தேரில் பறக்க வேண்டி வருவது உண்டு.ஆனால் எதையுமே கற்பனையின் அடித்தளத்தில் எழுத முடியாது.உள்ளத்தில் உலவும் உண்மைகளுக்கும் ஒரு வடிகால் அமைக்க வேண்டியது அவசியமாகிறது.
வாழ்க்கையின் வாலிப வயதினை நாத்திகத்திலும்,பயனற்ற அரசியலைப் பேசுவதிலும் பயன்படுத்திய என்னை ஆத்திகத்தின் பால் திருப்பிய சம்பவங்கள் ஏராளம்.
அனைத்துக் கருத்துக்களையும்,அனைத்து மதங்களின் சாரம்சத்தையும் அறிந்து கொள்வதே உண்மையானஆத்திகம் என்பதே எனது கருத்து.
“தம்பிஉன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு எழுது"என்றார் எம் முப்பெரும் பாவலர் பாரதி.
உண்மையே கடவுள்.உண்மையே சமயம்,உண்மையே மனிதத்துவம்..
நாமும்வாழ்வோம் மற்றவரையும் வாழவிடுவோம் என்று வாழ்வதே வாழ்க்கையின் அடித்தளமாக இருந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்கு வழிபிறக்கும்.
அமைதியான, தெளிவான உள்ளம் ஒன்றே அன்பான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.எனது இந்த 46 வருட புலம்பெயர் வாழ்க்கையிலே பிரச்சனைகளைக் கண்டு நான் ஓட ஆரம்பித்திருந்தால் எப்போதோ உலகத்தை விட்டே ஓடியிருந்திருக்க வேண்டும்.
பூட்டுகளோடு சாவிகள் தயாரிக்கப்படுவதைப் போல பிரச்சனைகளோடு தீர்வுகளும் வருகின்றன.சில சமயங்களில் அதைக் கண்டு கொள்வதற்கு தாமதமாகி விடுகிறது.
நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்க்கச் சமயங்களில் நாம் தவறி விடுவதால் வாழ்க்கை எமக்களிக்கும் சமபலன்களை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.
ஒரு சிறு உதாரணமாக காலையில் வேலைக்குச் செல்வதற்காக காரில் ஏறி உட்கார்ந்து புறப்பட ஆயத்தமாகும் போதுதான் ஒரு சக்கரத்திற்கு காற்றுப் போயிருப்பதை காண்கிறோம்.மனது எரிச்சலடைகிறது.சரி ஒருவாறு சக்கரத்தை மாற்றிக் கொண்டு ஆபீஸுக்குள் சென்று அமர்கிறோம்.
சிறிது நேரத்தின் பின்னால் மின்னஞ்சலில் சம்பள உயர்வு பற்றிய அறிவித்தல் வருகிறது. சிறிது நேரத்தின் முன்னால் அடைந்த ஒரு எரிசலூட்டும் சம்பவத்தைத் தந்த அதே வாழ்வுதானே இப்போ மகிழ்வையும் தருகிறது என்பதை எண்ணிப்பார்த்து இரண்டு சம்பவங்களையும் கோர்த்துப் பார்க்கத் தவறுவதினாலேயே எம் வாழ்க்கை எமக்கு பல சமயங்களில் எதிர்மறையான தாக்கங்களைத் தருவது போலத் தோன்றுகிறது.
உள்ளத்தின் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் தந்த அனைத்துக்கும் மேலான சக்திக்கு என் நன்றிகளையும், இதைப் பொறுமையாகப் படிக்கும் உங்களுக்கு எனது நன்றியறிதலையும் அன்போடு கூறிக் கொள்கிறேன்.
உங்கள் ஆதரவின்றி நானில்லை ஏனெனில் எழுத்தின்றி இந்தச் சக்தி இல்லை.
மீண்டுமொரு பகிர்வுடன் சந்திக்கும் வரை
அன்பன்
சக்தி சக்திதாசன்

