கொஞ்சநேரம் என்னை மறந்து .......
கொஞ்சநேரம் என்னை மறந்து .......
காலை 11 மணி குடும்ப டாக்டரின் வேண்டுகோலையடுத்து வழமையான எனது 3 மாத கால இரத்தப் பரிசோதனைக்காக எமது இல்லத்துக்கு அருகாமையிலிருக்கும் பரிசோதனை நிலையத்திற்கு சென்றேன் .
சுமார் எனக்கு முன்னால் வந்தவர்கள் காத்துக் கொண்டிருந்தர்கள்.
ஓ! எனக்கு உட்கார இடமில்லையோ ! சரி எனக்குரிய நம்பரை பெற்றுக் கொண்டு நீண்ட நேரம் நிற்க வேண்டும் உன்னைத் தயாராக்கிக்கொள் என்று என் மனதுக்கு கூறிக் கொண்டேன்.
என்னே ஆச்சரியம் உட்கார்ந்திருந்த வெள்ளையர் ஒருவர் காத்திருப்பில் சலிப்படைந்து தனக்குள்ளே முணுமுணுத்தபடியே எழுந்து சென்று விட்டார்.
அடடா ! பிரபஞ்சம் எனக்கு ஒரு இருக்கை அளித்து விட்டதே எனும் ஆனந்தத்தில் உட்கார்ந்து விட்டேன்.
இதைத்தான் ஒவ்வொரு கணத்தின் சிறு நிகழ்வுகளையும் நேர்மறையாகக் கண்டு மகிழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று ஆன்மீகம் சொல்கிறதோ ?
சரி உட்கார்ந்து கொண்டு என் முன்னால் , சுற்றி அமர்ந்திருப்போரை நோட்டம் விட்டேன் !
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று இதைத்தான் சொல்வார்களோ ?
அமர்ந்திருப்பவர்கள் சுமார் 20 வயதிலிருந்து 85 வயதுவரை இருப்பார்கள் என்பது அனுமானம்.
சிலரின் அமைதி , குழப்பம் , சிலர் சலிப்பு, வெறுப்பு , ஏக்கம் என்று பலவிதமான உணர்வுகளை அவர்களின் முகம் பிரதிபலித்தது.
ஒரு சிலர் அருகிருப்பவருடன் இந்தநாட்டின் சுகாதார சேவை இப்படியாகிவிட்டதென்று ஓயாத அங்கலாய்ப்புடனான சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் அவர்களுடைய மருத்துவர்களினால் ஏதோ ஒரு காரணத்துக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
பின்னே என்ன விடுமுறைக்கா வந்திருக்கிறார்கள் என்று என்மீது பாய்ந்து விடாதீர்கள்.
சும்மா .... சும்மா .... ஒரு பேச்சுக்குத்தான்.....
சிலர் தமக்குள் சில்லறை நோய்களையும் , சிலர் தம்முள் தீர்க்கப்பட முடியாத வியாதியையும் சிலர் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலும் இருப்பார்கள்.
சிலருக்கு தமது வியாதி தீர்க்கப்பட முடியாதது என்பது தெரியாமலே வந்திருப்பார்கள்.
சிலருக்கு பரிசோதனை முடிவை அறியும்வரை உள்ளம் ஏக்கத்தில் துடித்துக் கொண்டிருக்கும்.
ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் பின்னால் ஒரு ஆன்ம திட்டம் இருக்கும்.
அதனை அறிந்திருப்போர் சொற்பமானவர்களே !
ஆனால் வேறும் சிலரோ தாம் அறியாமலே தமது ஆன்ம நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பார்கள்.
நானைவரும் தோட்டமாகிய இந்த பூமியில் வேவ்வேறு செடிகளில் மலர்ந்த மலர்களே !
இனம், மொழி , மதம் , நிறம் வெவ்வேறாக இருப்பினும் முடிவில் அனைவரும் ஆன்ம ஒளிகளே !
நாம் தேடிக்கொண்ட வாழ்வு எனும் வரையறைக்குள் எமது ஆன்மாவின் நோக்கத்தை நிறைவேற்றும் பதையைக் கண்டறிவதே எமது முன்னால் உள்ள சவால்.
வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு எமக்கு கிடைக்கும் பணியைச் செய்வது தவிர்க்க முடியாதது.
அதுவே யதார்த்தம்.
ஆனால் அதுவே எமது ஆன்ம திட்டமாக இருக்க வேண்டும் என்பதல்ல.
அப்படியான சூழலில் எமது ஆன்மாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வழி நிச்சயமாக எம்முன்னே தோன்றும்.
அது தோன்றும்போது அதனைத் தவறவிடாது பற்றிக் கொள்வதே எமது சுய விருப்பின் பரிசு எனக் கொள்ளலாம்.
இதற்கு வாழும் உதாரணமாக நானே இருக்கிறேன்.
வாழ்வாதரத்துக்க்காக பொறியியல் படித்து அத்துறையில் பணியாற்றியிருந்தாலும் எழுத்தே எனது ஆன்ம நோக்கம்.
அதை நோக்கி நேர்மறையாக நான் ஒரு அடி எடுத்து வைத்ததும் அடுத்து ஒரு பத்து அடிகளுக்கான வழியை பிரபஞ்சம் பலரின் ஊடாக , பல வழிகளில் காட்டித் தந்தது.
இதைப் புரிந்து கொள்ள எனக்கு வருடங்கள் 60 பிடித்தது.
சிறு பிள்ளைகள் விளையாடும் அட்டையில் உருவாக்கப்பட்ட புதிரை விடுவிக்க சிறு, சிறு துண்டுகளாக இருக்கும் பகுதிகளை சரியான இடங்களில் பொருத்துவார்கள்.
ஆமாம் எமது வாழ்விலும் பல துண்டுகளாக இருக்கும் அனைத்து அனுபங்களையும் சரியான இடங்களில் பொருத்துவதன் மூலம் வாழ்வின் புதிராக இருக்கும் ஆன்ம திட்டத்தை அறிந்து கொள்ளலாம்.
சரி இதனை சரியான இடங்களில் பொருத்துவது எப்படி என்று கேட்கிறீர்களா ?
" தியானம் " ஆம் அது ஒன்றே இப்புதிர்களை அவிழ்ப்பதற்கான சாவி.
தியானம் என்றால் ஏதோ துறவறம் பூண்டவர்களாலும், யோகிகளாலும், மகான்களினாலும் தான் செய்ய முடியும் எனும் தவறான அபிப்பிராயம் நிலவுகிறது.
இல்லற வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்ந்து கொண்டு நியாயமான தர்ம வரம்புகளுக்குட்பட்ட அற வாழ்க்கையை மேற்கொள்ளும் எவருமே தியானத்திற்காக அன்றாடம் ஒரு அரைமணி நேரமாவது ஒதுக்குவதே போதுமானது.
ஆமாம் தியானம் என்பது அனைவரின் ஆற்றலுக்குட்பட ஒரு எளிய சாதனை முறை.
அதுவே எமது வாழ்வினை எமது ஆன்ம திட்டத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையைக் காட்டக்கூடியது.
" நம்பர் 75 " ஓ இரத்தப் பரிசோதனைக்கான எனக்கான அழைப்பு வந்து விட்டது.
மற்றுமொருமுறை சந்திக்கும் வரை
அன்பன்
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home