Thursday, August 31, 2023

கருவறையும் . . . . கல்லறையும் . . .

எதற்காக இப்படி ஒரு ஆரம்பம் ? என்று நீங்கள் எண்ணலாம். 

மனிதர்களாகப் பிறந்த எம் எல்லோருடைய மனங்களிலும் ஏதோ ஒரு வகையில் எப்போதும் கவலைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. 

கவலைகள் இல்லாமல் மனிதர் வாழும் இடங்கள் கருவறையும், கல்லறையும் தான். 

வாழ்க்கையில் கவலைகள் இருப்பது சகஜம் ஆனால் அந்தக் கவலைகள் தான் வாழ்க்கை என்று மாற்றம் அடைந்து விடாமல் பார்த்துக் கொள்வதே எம்முன்னால் உள்ள சவால். 

எமது தேவைகளை அடுத்தவர் கவனித்துக் கொள்ளும்வரை எமது கவலைகளை அவர்களே தாங்கிக் கொள்கிறார்கள். 

என்று எமது வாழ்வினை எமது கைகளில் எடுத்துக் கொள்கிறோமோ அப்போதே எமது மனதினில் கவலையும் வந்து குடியேறி விடுகிறது. 

கவலையில்லாமல் வாழ்ந்து விடுவது என்பது ஒரு யதார்த்தமான் விடயமா? அப்படி இருப்பதாக யாரும் கூறினால் கூட அது அவர்கள் எமக்காகக் கூறும் ஒரு நாகரீகமான பொய்யாகத்தான் இருக்க முடியும்.

எப்போதும் நாம் காணும் போதெல்லாம் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்கும் ஒருவர் எமது கண்களுக்கு கவலையற்றவராகக் காணப்படலாம். 

ஆனால் எம் கண்களுக்குப் புலப்படாத வகையில் அவர்கள் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு கவலை உரசிக் கொண்டு இருபதைத் தவிர்க்க முடியாது. 

அப்படியானல் எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதே வாழ்க்கை என்று நான் சொல்வதாக யாரும் எண்ணிக் கொள்ளக்கூடாது. 

எம்முன்னே ஒரு எதிர்பாராத நேரத்தில் ஒரு எதிர்பாராத செலவு வந்தால் அதனை ஏதாவது வகையில் நாம் சமாளிக்கிறோம் அல்லவா? 

அதேபோல வாழ்வில் வரும் கவலைகளையும் அதனுள் எம்மை மூழ்க விட்டு விடாமல் சமாளிப்பததையும் அச்சமாளிப்பை எவ்வகையில் ஒரு அனுபவப் பிரயாணமாக எடுத்து பயணிக்கும் வகையைப் பயிற்சி செய்து கொள்வதின் முக்கியத்துவத்தினையும் சுட்டிக் காட்டும் முகமாகவே என் மனதின் இந்த அலசல்.

மற்றைய உயிர்களின் மதிப்பையுணர்ந்து, எம் மனதின் மென்மையை தக்க முறையில் விளங்கிக் கொண்டு எமது தேவைகளை அதற்குட்படுத்தி வாழும் முறையக் கற்றுக் கொள்வது கவலைகளின் பிறப்பை மட்டுப்படுத்தும் காரணியாகிறது.

நாம் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளே அதன் பாதையைத் தீர்மானிக்கின்றன. நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் தவறுகள் தான் துன்பமாக அதன் மூலம் விளையும் கவலைகளாகப் பரிணமிக்கின்றன. 

அந்தத் துன்பங்கள் தந்த கவலைகள் தந்த அனுபவத்தினால் அதே தவறுகளை மீண்டும் இளைக்கக் கூடாது எனும் தெளிவைப் பெற்று வாழமுற்படுவது கவலைகளைக் கட்டுப்படுத்தும் காரணியாகிறது. 

தவறிழைப்பது மனமே !

அதே தவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்பதும் அதே மனமே ! 

அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து அவ்வழியில் நடக்கப் பண்ணுவதும் அதே மனமே ! 

ஆக மொத்தம் கவலைகளுக்குக் காரணமான அதே மனம் தான் கவலைகளைக் கட்டுப்படுத்துகிறது.

எமது மனங்களின் உயர்வு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுதான் மனிதனின் உயர்வும் அமைகிறது. 

இந்த மனதின் உயர்வுக்கு, அதன் மேன்மைக்கு என விசேடமாக எம்மைப் பயிற்றுவிக்க வேண்டுமா ? 

இல்லை நாம் எமை மீறிய ஆன்மீக சித்தாங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமா ? 

இக் கேள்விகளுக்கு இவையனைத்தும் அவசியமில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. 

நாம் நாமாக வாழ்வதற்கென சில பொதுவான விதிமுறைகளை வகுத்துக் கொண்டோமானல் அதுவே எம் மனஉயர்வுக்கு வழி வகுத்துக் கொள்ளும்.

ஒவ்வொருநாள் காலை எழுந்ததும் இந்த நாள் சிறந்தநாளாக அமையப் போகிறது,

நான் யாரோடும் கோபம் கொள்ள மாட்டேன்.

அனைவருடனும் இனிமையாகப் பேசுவேன் என்று நாளைத் தொடங்குவது

எம்மை எதிர்கொள்ளும் பிரச்சனைகளையிட்டு கவலை கொள்ளாது அதனைத் தீர்ப்பதற்கு வழிவகை என்ன என்று தேடுவோம் எனும் மனப்பான்மை

நாம் எதை செய்யப் போகிறோமோ அதை முழு மனநிறைவுடன் செய்வதால் அதனை மகிழ்வுடன் செய்வோம் எனும் நம்பிக்கை.

எம்மிடம் எப்போதும் மகிழ்வான விடயங்கள் இருக்கின்றன. 

நாம் அடுத்தவரின் மகிழ்வுக்குக் காரணமாக இருப்போமேயொழிய துயருக்குக் காரணமாக மாட்டோம் எனும் மன உறுதி.

எம்மைச்சுற்றி எது நடந்தாலும் அது நன்மையாகத்தான் இருக்கும் என்பதிலும், நாம் செய்யும் காரியங்கள் அடுத்தவருக்குப் பயன் தராவிட்டாலும் கெடுதல் விளைவிக்காது என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டிருத்தல்

இந்த எளிமையான விடயங்களைக் கடைப்பிடித்து வாழ எம்மைப் பழக்கிக் கொண்டோமானால், கருவறையில் கவலையின்றி ஆரம்பித்துக் கல்லறையில் கவலையின்றித் தூங்கப் போகும் எமது வாழ்வின் இடைப்பட்ட பயணமும் கவலையைப் படகாகப் பிரயோகித்து மகிழ்வுடன் பயணிக்கும் ஒரு பயணமாக இருக்கும். 

இது என் மனதில் விளையும் தாழ்மையான எண்ணங்கள். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தமடைகிறேன்.

மீண்டும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Sunday, August 27, 2023

என் மன வானிலே !

ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகிலே உள்ளத்தில் அலையாடும் உணர்ச்சி வெள்ளத்திற்கு வடிகால் அமைக்க வேண்டிய தேவையேற்படுகிறது.

அத்தகைய ஒரு வடிகாலின் மூலம் உள்ளத்தின் வெள்ளத்தை அன்பு உள்ளங்கள் எனும் தோட்டத்தை நோக்கிப் பாய்ச்சும் போது அவை விரயமாகிப் போகாமல் இருப்பது போன்ற ஓர் அமைதி ஏற்படுகிறது.

வாழக்கை எனும் சதுரங்கப் பலகையில் நாமனைவரும் வெறும் பகடைக் காய்களே !

போக வேண்டாம் எனும் திசையை நோக்கி உருட்டப் படுகின்றோம்,

போக வேண்டும் எனும் இடமோ கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்து எமைப் பார்த்து கண் சிமிட்டுகிறது.

விரக்தியில் விழுந்து விடுவதால் நாமடையப் போகும் பலன் எதுவுமேயில்லை .

எமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் எம்மால் தடுக்க முடியாமல் எம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் என்று கொள்ளும் ஒரு மனப்பக்குவமே நாம் தேர்ச்சி பெற வேண்டிய சோதனை.

வேண்டாதவை எமது கைகளில் விழும்போது அதை எப்படி எமக்கு வேண்டுபவையாக மாற்றும் யுக்தியை கற்றுக் கொள்வதே வாழ்வில் எம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவாலாகும்.

எமது அருகிலிருக்கும் மிகவும் உகந்த சந்தர்ப்பங்களை அடையாளம் காணத் தவறி எமது வாழ்வுப் பாதையில் பலதூரம் நடந்து விடுகிறோம்.

ஓரிடத்தில் உட்கார்ந்து நாம் கடந்து வந்த பாதையை அசை போடும்போதுதான் நாம் தவற விட்ட சந்தர்ப்பங்களின் அருமை புரிகிறது.

ஆனால் அதைத் திரும்பப் பெறுவது என்பது முடியாத காரியம்.

சந்தர்ப்பம் எம் வீட்டுக் கதவை ஒருமுறைதானே தட்டும் !

அன்பு , அன்னியோன்யம் என்பனவற்றிற்கு நேரம் இல்லாதவாறு வாழ்க்கையின் தேவைகள் மனிதரை அவசரமான ஓட்டத்தில் ஈடுபடுத்தி விட்டுள்ளன.

இது யாருடைய தவறுமல்ல இன்றைய காலத்தின் கட்டாயமாக இது நிகழ்கிறது.

எம்மைச் சுற்றி உள்ள அனைவரும் ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அவர்களின் நடுவே நாம் அகப்பட்டுக் கொண்டால் எம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாமும் அவ்வோட்டப்பந்தயத்தில் இழுக்கப்பட்டுவிடுவது தவிர்க்க முடியாதகிறது போன்றே வாழ்க்கையின் தேவைகளும் சில சமயங்களில் எம்மீது திணிக்கப் படுகிறது.

எமது மனதில் நாம் இலக்குகள் என்று சிலவற்றை வகுத்துக் கொள்கிறோம்.

இவ்விலக்குகளின் நிர்ண்யத்தின் அடிப்படை முக்கியமானது.

எம்மால் நிர்ணயிக்கப்படும் இலக்குகள் அடையக்கூடிய இலக்குகள் தானா என்பது மிகவும் முக்கியமானது.

ஏனெனில் உணர்ச்சிகளின் அடிப்படையில் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளைப் பற்றிய அறிவுபூர்வமான சிந்தனை எமை விட்டு அகன்று விடுகிறது.

அறிவுபூர்வமாக சிந்திக்கப்பட்டு எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் வகுக்கப்படும் இலக்குகளே அவைகளை அடையக்கூடிய சாத்தியக் கூறுகளை எமக்கு அளிக்கிறது.

எமது இலக்குகளை யஉயர்த்திக்கொள்வதோ அன்றி இலட்சியத்தை மென்னேற்றிக் கொள்வதோ தவறில்லை.

உயரப்பாயும் பந்தயத்தைப் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

அதில் ஒரு உயர்ந்த மட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அதைப் பாய்ந்து கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு அதை எவ்விதத் தடையுமில்லாமல் பாய்ந்த பின்னரே அந்த உயரத்தின் அளவைச் சிறிது கூட்டுகிறார்கள்.

எமது இலக்குகளும் அப்படித்தான் அமைத்துக் கொள்ளப்படுவது அவசியம்.

அடையக்கூடிய இலக்கை அடைந்து விட்டு அடுத்த இலக்கை நோக்கி குறி வைக்க வேண்டும்.

போகும் பாதையில் எத்தனையோ தடைகள் ஏற்படும்.

போடும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறாமல் போகும்படியான சந்தர்ப்பங்கள் ஏற்படும் ஆனால் அவற்றினால் மனம் ஒடிந்து போய்விடக்கூடாது.

எதிர்கொள்ளும் தடைகளைத் தற்காலிகத் தடைகளாக மாற்ற வேண்டுமேயொழிய அவை நிரந்தரத் தடைகள் என்று எண்ணி அனைத்தையும் கைவிட்டு விடுவது கூடாது.

பயணம் என்று ஒன்று இருந்தால் பாதை என்று ஒன்று இருக்கத்தான் செய்யும் .

பாதை என்று ஒன்று இருந்தால் அதிலே வளைவுகளும், நெளிவுகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கத்தான் செய்யும்.

பயணம் போவது என்று முடிவுகட்டி அதைத் தொடங்கி விட்டால் பாதையில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டு அப்பயணத்தைக் கைவிட்டு விட முடியுமா?

நாம் போக எண்ணிய இடத்தை அடைவதனால் எதிர்ப்படும் சிக்கல்களைக் கண்டு பயந்து ஒதுங்கி விடுவது சரியா ?

நாம் கேட்டு இப்பூமியில் பிறக்கவில்லை, எங்கே ? எப்போது ?

யாருடைய வயிற்றிலே பிறக்கப் போகிறோம் என்பது எம்மால் நிர்ணயிக்கப்படுவதில்லை.

காற்றில் அகப்பட்ட சருகு எங்கோ அலைந்து ஓரிடத்தில் விழுவதைப் போல நாமும் ஓரிடத்தில் அவதரிக்கிறோம்.

வாழ்க்கை எம்மீது திணிக்கப்பட்டது என்பதனால் அதை நாம் வெறுக்கவா செய்கிறோம் ?

என்னோடு படித்த பல மாணவர்கள் வாழ்வில் என்னை விட வசதி குறைந்தவர்களாக இருந்தும் தம்முடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் நன்றாகப் படித்து வாழ்வில் என்னை விட உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

அவர்களைப் பற்றி எண்ணும் போதும் ,
அவர்களைக் காணும் போதும் என் மனம் பெருமிதத்தால் பூரிக்கிறது.

கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களின் முக்கியத்துவத்தைச் சரியாக உணர்ந்து கொள்ளாமல் காலத்தை விரயமாக்கியதினால் தாய்நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்தேன்.

தன் நான்கு பிள்ளைகளில் ஒருவர் கூட தன் கனவின் படி இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டாதாரியாகவில்லை என்பதைத் தனது தோல்வியாகவோ அன்றி எமது தோல்வியாகவோ எனது அன்பான தந்தை கருதவில்லை.

தான் எம்மீது பொழிந்த அன்பில் எதுவித மாற்றமுமின்றி நாம் வாழ்வில் அடையும் மிகச்சிறிய வெற்றிகளைக் கூட மிகப்பெரிய வெற்றிகளாகக் கொண்டாடினார்.

அவரது இந்தப் பண்பே எனது பல மனமாற்றங்களுக்கு வித்தாக அமைந்தது.

தோல்விகள் என்று வாழ்வில் எதுவுமேயில்லை அவையனைத்துமே வெற்றி எனும் இலக்கை நோக்கிய எமது பயணத்திற்குக் காலம் அமைத்துக் கொடுக்கும் படிகளே அன்றி வேறேதுமில்லை.

இன்று தமிழன்னை தந்த இத்தனை அரிய சொந்தங்களின் மத்தியில் என் மனதில் சிந்துபவைகளை சாரலாகக் கொட்டிக் கொண்டிருப்பேன் என்று ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் நான் எண்ணிக்கூடப் பார்த்ததில்லை.

வாழ்க்கை ஒரு நதியைப் போன்றது இதிலே எமது படகினை வரும் வளைவுகளைச் சந்தித்து அதற்கேற்றவகையில் செலுத்திச் செல்வதற்காகவே பல தடவைகள் நாம் பாறைகள் மீது மோதுகிறோம்.

அவையே எமது அடுத்த கட்டப்பயணத்திர்கு எம்மைத் தயார் படுத்தும் அனுபவங்கள் ஆகும்.

ஒருவகையில் பார்த்தால் நாமனைவருமே தெரிந்த ஒரு முடிவை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

முடிவு தெரிந்திருந்தும் அம்முடிவினை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்காமல் இடையில் நடத்தும் பயணத்தை மகிழ்வாகக் கழிக்க எத்தனிப்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும்.

அம்மகிழ்ச்சியை எப்படி அடைகிறோம் ?

மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்வது எனும் கலையை எமக்குள் வளர்த்துக் கொண்டுள்ளோமா ?

“ பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் "

என்றார் காவியக் கவிஞர் வாலி .

நாளை என்பது நாமனைவரும் அறியாத ஒரு புது அத்தியாயம்.

அதனுள் நுழையும் போது அங்கே எவை எமக்காகக் காத்திருக்கின்றன என்பது ஒரு புரியாத புதிர்,அது புரியாத புதிராக இருக்கும் வரைதான் வாழ்க்கை சுவையாக இருக்கும்.

மனதில் நிரம்பிய உணர்வு வெள்ளத்தின் ஒரு சில துளிகளை என் இனிய அன்பு உள்ளங்களின் உள்ளம் எனும் தோட்டத்தை நோக்கி வடிகாலமைத்துப் பாய்ச்சி விட்டேன்.

இதனால் உங்கள் உள்ளம் சிறிதளவாவது செழிக்குமானால் அதுவே எனது எழுத்துக்கு அக்கலைவாணியும், தமிழன்னையும் கொடுத்த வெற்றி எனக் கொள்வேன்.

மீண்டும் பேசுவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Saturday, August 26, 2023

துணிவுகள் பலவிதமோ ?

உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகள் தொடுத்திடும் போரின் புழுதிகளாய்  எண்ணங்கள் மேலெழுந்து தவழ்கிந்றன.

எதையும் தாங்கும் இதயம் ஏனோ இதையும் தாங்க வேண்டுமா ? எனத் துவண்டு போகிறது.

ஆமாம் வாழ்க்கை எனும் களத்தினில் ஏந்திய விழுப்புண்களின் வடுக்கள் மாறி,மாறி விடையிலா வினாக்களை தொடுத்த வண்ணம் . . . .

என்னுடைய சக்தியின் விரல்களில் இருந்து விளங்க முடியா வியாக்கினங்கள் விழுந்த வண்ணம் இருக்கிறதே என்று நீங்கள் எண்ணுவது சகஜமே !

தத்துவங்கள் எப்போதும் காயமடைந்த இதயங்களுக்குக் களிம்பு தடவுவதைப் போலாகும்.

எப்போதும் , எங்கும் , எல்லோருக்கும் நன்மையையே எண்ணுவோருக்கு தொடர்ந்து இன்னல்கள் விளைப்போரின் செய்கைகள் மனதை வருத்தத்தான் செய்கிறது.

அதற்காக நாம் போகும் பாதையையும், நாம் கொண்டிருக்கும் கொள்கைகளையும் கைவிட்டு விடுமா ?

இல்லையே !

கேள்விகள் ஆயிரம்.

அவையனைத்துக்கும் விடைகள் உடனடியாக முளைத்து விடுகின்றனவா ?

துணிவே துணை என்கிறோம் !
துணிந்து நில் ! தொடர்ந்து செல் ! என்கிறோம்.

எம்மில் எத்தனை பேர் துணிவு என்பதனைச் சரியாக விளங்கிக் கொள்கிறோம்.

மேல்மாடியில் இருந்து கட்டாந்தரையில் குதிப்பதை துணிவு என்பான் ஒருவன்.

பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாரசூட்டில் குதிப்பதைத் துணிச்சல் என்பான் ஒருவன்.

மூடத்தனத்தைக் கூட மறைப்பதற்கு துணிச்சல் காரணமாக இருக்கிறது.

காரணிகளைச் சரியாக விளங்கிக் கொண்டு நாம் எடுக்கும் நடவடிக்கைகளின் தாக்கங்களை புரிந்து செயற்படுவதும் கூட துணிவாகவே கணிக்கப் படுகிறது.

எம்மால் எதிர்கொள்ள முடியாது என்பதைப் புரிந்து ஒதுங்கிக் கொள்வது கூட ஒருவகை துணிச்சலே !

எம்முன்னே எதிர்ப்படும் சவால்களின் தரத்தைப் புரிந்து கொண்டு அதனைக் கையாள்வதற்கு தேவையான யுக்திகளோடு அவற்றை எதிர்கொள்வது கூட துணிச்சலே !

மகாபாரதத்திலே  ஒரு காட்சி ,

தருமரை அரசராக்கினால் துரியோதனன் வெகுண்டெழுவான் என்பதினால் பாண்டவர்களுக்கு வளம் எதுவுமற்ற காண்டவபிரதஸ்தத்திற்கு அதிபர்களாக்கி அனுப்ப முனைகிறான் திருதராஸ்டிரன்.

நீதிநெறி வழுவாமல் மன்னனுக்கு மதிகூறும் மகாமந்திரி விதுரர்  நீதி மிக்க பாண்டவர்கள் பக்கம் என்பதைச் சகுனியும், துரிதோதனனும் அறிவார்கள்.

விதுரரை அவமதிக்கும் பொருட்டு அவர்கள் அவரையும் பாண்டவர்களோடு வெளியேறச் சொல்கிறார்கள்.

அப்போது விதுரர் தன் மனசாட்சியோடு போராடுகிறார்.

எப்போதும் நீதி வழுவாமல் நடக்கும் பாண்டவரை விட பாசத்துக்கு முதலிடம் கொடுத்து நீதியை வழுவவிடும் திருதராஸ்டிரனுக்கே தனது மதியுகம் தேவைப்படும் என்று முடிவெடுக்கிறார்.

நாட்டு நன்மையைக் கருத்தில் கொண்டு தனக்கு அவமரியாதையைப் பரிசாகக் கொடுக்கும் கெளரவர்களுடன் தங்கி விடுகிறார் விதுரர்.

நிஜமாக நடந்ததோ இல்லையோ என்பதிங்கே கேள்வியில்லை.

சரியான ஒரு முடிவை தெளிந்த மனதுடன் எடுக்கத் தேவையான துணிவைப் பற்றி எமக்குப் புரிய முன்னோர்கள் புதைத்து வைத்த கருத்தே இங்கு கவனிக்கப் பட வேண்டியது.

வாழ்க்கை ஒரு அனுபவப் பட்டறை. அங்கு அடி வாங்கி, வாங்கித்தான் அனுபவங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளது.

அவசரம் அவசரமாக பரபரப்புடன் அல்கல் படும் பலரின் நடுவே அமைதியாக மெளனமாக நிற்பான் ஒருவன்.

அவனைப் புரிந்து கொள்வது கடினம்.

அவனைப் புரிந்து கொள்ளும் மனதை அடைந்து விட்டால் பேரானந்தமே !

மீண்டும் பேசும் வரை
சக்தி சக்திதாசன்
26.08.2023

Tuesday, August 22, 2023

கோபத்தில் வேதனை ! பொறுமையில் சாதனை !

கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்று சொல்வார்கள்.

ஆமாம்! மனதினைக் கோபம் என்னும் உணர்வு கவ்விக் கொள்ளுவதற்கு எம்மிடம் அனுமதி கோருவதில்லை.

ஆனால் அந்தக் கோபம் கிளப்பி விடும்உணர்வலைகளைச் சமாளிக்க,அவற்றின் விளைவுகளை மட்டுப்படுத்த எமக்குத் தேவையான பொறுமையை எம்மிடம் ஏற்படுத்த நாம் அதீத முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது.

பல வாசகர்களின் மனதில் இந்நிமிடம் எழும் கேள்வி என் காதுகளில் மெளன ஒலிகளாக காற்றலைகளின் மூலம் வந்து விழுகிறது.

"என்னடா? இவன் பாட்டுக்கு கோபிக்காதே !பொறுமையாக இரு என்று சொல்கிறானே ! எமக்கு நடந்த விடயங்களை இவன் அனுபவித்திருக்கிறானா? அப்புறம் என்ன பெரிசா  பொறுமையைப் பற்றிப் பேசுறானே " என்ற உங்கள் அங்கலாய்ப்பு புரிகிறது.

பொறுமையைக் கடைப்பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் எனக்கு நன்றாகப் புரிகிறது.

எத்தனையோ சமயங்களில் நான் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல் கைவிட்ட நிகழ்வுகள் உண்டு.

இத்தகைய சிக்கல்களுக்குள் நானும் உளைபவன் என்னும் ஒரே ஒரு காரணத்தினால் தான் இக் கருத்துப் பகிர்தலை ஆரம்பித்தேன்.

பொறுத்துக் கொண்டிருக்கும் போது எம்மீது தான் அனைத்துப் பாரங்களும்,வாழ்வின் சுமைகளும் விழுவது போலும், பொறுமையை எள்ளளவும் கடைப்பிடிக்காமல் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்பவர்கள் தாம் நினைத்ததை நடத்திக் கொண்டு செல்வது போலும் தோன்றுவது வழக்கம்.

வாழ்க்கையில் நாம் நினைத்ததை நடத்துவதற்காகவே வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக பாடுப்பட்டு உழைக்கிறோம் பின்னே எதற்காக பொறுமையின் பெயரால் நாம் அனுபவிக்க நினைக்கும் செயல்களை விட்டுக் கொடுக்க வேண்டும்?இதனால் சாதிப்பது என்ன ?

இந்தக் கேள்விகள் மனதில் சாதாரணமாக எழுவதும் இயற்கையே !

உண்மைதான் வாழ்க்கையில் நாம் நினைப்பது சரியோ,தவறோ அதை நாம் நினைத்த வகையில் நிகழ்த்திக் கொண்டு போவதே வாழ்க்கையின் நோக்கம் எனக் கருதினால் அப்படிப்பட்டவர்கள் எதையோ சாதிப்பது போலத்தான் இருக்கும்,ஆனால் அதுதான் உண்மையா?

அத்தகையவைகளைத் தான் நாம் சாதனை என்கிறோமா?

கோபம் என்னும் அந்த உணர்வு எம் மனதின் வீரியத்தை அப்படியே உறிஞ்சி விடுகிறது. 

கோபம் என்னும் அந்தக் குறுகியஉணர்ச்சி பொங்கி வெளியாகியவுடன் எமது மனங்களில் தோன்றும் வெறுமையின் வெப்பம் எத்தகையது என்பதை அதை அனுபவித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

கோபத்தின் ஆரம்பமே விரக்தியாகும். எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் அளவெடுத்தால் விரக்தியை மிக விரைவாக உண்டு பண்ணக் கூடிய சந்தர்ப்பங்கள் சுற்றி வியாபித்திருப்பதை உணரலாம்.

உதாரணத்திற்கு ஒரு உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்று அமர்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

எம்மை உட்காரவைக்க அந்த வெயிட்டர் எடுக்கும் நேரம், எமது உணவுகளுக்கான ஆர்டரை எடுக்கவரும் பணியாளரின் தாமதமான வருகை, அதன் பின்பு அவர்களின் செய்கையில் இருக்கும் தளர்வு, அருகிலிருப்போரின் உரையாடலின் தொனி இவையனைத்தையுமே எமக்கு விரக்தி உண்டு பண்ணக்கூடிய காரணிகளாகக் கொள்ளலாம்.

அதேபோல சூப்பர் மார்க்க்ட்டிற்கு போகிறோம் என்று வையுங்கள், நாம் மிகவும் அவதானமாக தேவையான பண்டங்களை மட்டும் தெரிவு செய்து கொண்டு விரைவாக பணம் செலுத்துமிடத்திதிற்கு வருகிறோம், அங்கே வரிசையில் நிற்கும் போது எமக்கு முன்னாலிருப்பவர் தமது முறை வரும் போதுதான் தான் வாங்க மறந்த பண்டத்தின் நினைவு வந்தவராக இதோ வந்து விடுகிறேன் என்று ஓடுகிறார் எம்மை ஒரு பத்து நிமிடங்கள் காத்திருக்க வைக்கிறார்.

சரி அதுதான் முடிந்தது என்று கவுண்டருக்கு வந்தால் அதிலே உட்கார்ந்திருக்கும் பெண் மிகவும் ஆறுதலாக ஒவ்வொரு பொருளாக மேலும் கீழும் பார்த்து அதை ஸ்கெனரில் ஸ்கேன் செய்கிறாள்.

நேரத்தை விரயம் செய்யக்கூடாது என்று ஓடி வந்த நமக்கு என்ன நிகழ்கிறது?விரக்தி பொங்குகிறது, இரத்தம் ஜிவு,ஜிவுவென்று சூடேறுகிறது. ஆனாலும் பல்லைக் கடித்துக் கொள்ளவேண்டிய நிலமை.

சரிஇதே நிலைமைகளைத் திரும்பவும் நினைவு படுத்திக் கொள்வோம்.

அதே உணவகத்தில் நாம் நடக்கும் நிகழ்வுகளை ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில்  பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 

அந்த வெயிட்டரின் இடத்தில் எம்மை உட்கார்த்தி நாம் எப்படி.இருந்திருப்போம் என்று ஒரு கற்பனை உலகைச் சிருஸ்டித்துப் பார்த்துக் கொள்வோம் என்று வையுங்கள்.எமக்கு நேரம் போவதே தெரியாது.

விரக்தி என்னும் மனப்பான்மையே அருகில் கூட எட்டிப்.பார்க்காது.

அதேபோல அந்த சூப்பர்மார்க்கெட் நிலையில் கூட அனைத்தையும்.எம்மை மீறி நடக்கும் செயல்கள்.நாம் ஆத்திரப்படுவதால் எதுவும்நடந்து விடாது என்று மனதைச் சாந்தப்படுத்தப் பழகிக் கொண்டால் உள்ளம் அமைதி கொள்ளப்பழகி விடும்.

கோபம் என்னும் கோலம் கொண்டு விட்டால் வாயிலிருந்து உதிரும்.வார்த்தைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க முடியாது. வார்த்தைகள்.வாயிலிருந்து விழுந்து விட்டால் பின்னே அள்ளியெடுத்து உள்ளே திணித்துக் கொள்ள முடியாது.

கோபம் கொள்வதினால் எம்மையே நாம் தாக்கிக் கொள்கிறோம், எமது சக்தியையே நாம் விரயம் செய்து கொள்கிறோம்.நாம் சொல்ல வந்ததை அதைச் செவிமடுப்பவர் புரிந்து கொள்ள முடியாத வகை செய்து விடுகிறோம்.

கோபம் எமது புத்தியையே மழுங்கடித்து விடுகிறது.எதையும் யதார்த்தமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறோம்.

கோபம் மனிதனை மிருகமாக்கி விடுகிறது.அராஜகச் செயல்களுக்கு நியாயம் கற்பித்து விடுகிறது.

ஆனால் பொறுமையோ எம்மை மேம்பட்ட மனிதராக ஆக்கி விடுகிறது. மனதினை மென்மை என்னும் போர்வையால் மூடி விடுகிறது.எம்மையிட்டு நாமே பெருமை கொள்ள வைக்கிறது.

பொறுமையால் அடைந்த வெற்றிக்கு இருக்கும் மதிப்பே தனியானது ஏனென்றால் அது தானென்னும் மமதையின் அடிப்படையில் வந்ததாக இருக்காது.

பொறுமையின் உதாரணங்களை எடுத்துக் கொண்டால் தாய்மை,பூமி,கருணை என இணையில்லாத பல தனிப்பண்புகளின் தரிப்பிடமாக இருப்பதைக் காணலாம்.

பொறுமையின் உச்சகட்டமே பூமியாகும். ஆத்திரத்தாலும், அவசரத்தாலும் தன்னை இழக்கும் மனிதரா இல்லை பொறுமையயே தன் ஆயுதமாகக்கொண்டிருக்கும் பூமி மாதா வாழ்க்கையில் வெற்றியடைவார்கள்?இந்தக்கேள்வியின் விடை அனைவருக்குமேதெரிந்திருக்கும்.

கவிப்பேரரசுவைரமுத்து அவர்களின் பாடலொன்று,

"மண்ணின்மீது மனிதனுக்காசை
மனிதன்மீது மண்ணுக்காசை
மண்தான்கடைசியில் ஜெயிக்கிறது "என்றுவரும்.

எத்தனைஉண்மையான வரிகள்.

நிச்சயமான,உண்மையானவாக்கியம் "கோபத்தில் வேதனை !பொறுமையில் சாதனை !"
சக்தி சக்திதாசன்

Monday, August 21, 2023

அன்பிற்கும் உண்டோ அடையாளம் ?

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பிற்கு அடித்தளத்தைத் தேடுகிறேன்? அன்னையின் அரவணைப்பா ?இல்லை தந்தையின் பாசப்பிணைப்பா ?யார் கொடுத்தார் இந்த அடித்தளத்தை?

உலகம்உருண்டு கொண்டேயிருக்கிறது.இந்தஉருளும் உலகத்தில் அதன்சுழற்சியை அறியாமலே சுயமாகஇயங்குகிறேன் எனும் நினைப்பில்என்னுடைய செயற்பாடுகள்?எள்ளிநகையாடாதா இவ்வுலகம் எனைப்பார்த்து ?

நான்எனும் அந்த என்னை எனக்கேஅடையாளம் காட்டியது அன்புஎனும் புனிதமான மூன்றெழுத்தே! 

இந்த அன்பின் சக்தியே அலாதியானது அதன் வலிமையோ மகத்தானது. எதைச் சாதிப்பதற்கும் அன்பு ஒன்றே திறவுகோலாகிறது.

எதையும் கொடுக்காமல் திரும்பப் பெறமுடியாது என்பதற்கு அன்பே அடையாளம். அன்பை வாரி வழங்குவதன் மூலம் மட்டுமே அதே அன்பு உங்களிடம் கோடிகோடியாகத் திரும்பி வருகிறது.

அன்பு எனும் சொல்லிற்கு ஜாதியில்லை,மதமில்லை, இனமில்லை. அந்த அன்பின் வழியில் எதுவிதமான பிரிவினைகளுக்கும் இடமேயில்லை.

ஆயுதங்கள் எதுவுமில்லாமல் ஆயுதபாணிகளுக்கு முன்னால் தனது நாட்டின் விடுதலைக்காய் குரல் கொடுத்த அண்ணல் காந்தியின் அழுத்தமான கொள்கையின் அடித்தளமே அன்புதான்.

என்னை நோக்கி வீசப்படும் சொற்கணைகளுக்கு அன்பு எனும் தலத்தை தடவும்போது அதை ஏற்பது மிகவும் இலகுவாக இருக்கிறது.

எமை நோக்கி அறியாமையால் மற்றவர்கள் எடுக்கும் அநீதியான செயற்டுகளை அன்பு எனும் கண்ணாடியால் பார்க்கும் போது அதனைத் தாங்கிக் கொள்ளும் சக்திஅற்புதமான வலிமை பெறுகிறது..

அன்பின் வழியினூடாக அனைத்தையும் பார்க்கும் போது அச்செயற்பாடுகளின் உள்ளார்த்தம் பூரணமாகப் புரிகிறது. அதன் தாக்கங்கள் எம்மீது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்து அதனை இலகுவாகக் கையாளும் வழிமுறைகள் தெட்டத்தெளிவாகத் தென்படுகின்றன.

என் அன்னையின் அரவணைப்பில் இருந்த சுகத்தின் கணிப்பே அன்பின் வழிமுறைக்கு வகை செய்ததோ ?

என் தமிழின் இனிமையில் புதைந்திருக்கும் எண்ணற்ற சுவைகளின் அனுபவிப்பே அன்பின் அடிப்படையாகிறதோ ?

அந்த அன்பின் எல்லையைப் புரிந்து கொண்டு நடந்தால் மட்டுமே அன்பு எனும் புனிதமான மூன்றெழுத்து வெறி எனும் அநாகரீமான இரண்டெழுத்தாக மாறுதலடையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அன்பு மனிதனை வாழ வைக்கிறது அவனை நிம்மதியாக துயிலப் பண்ணுகிறது அமைதியாகச் செயற்பட வைக்கிறது ஆனால் வெறி அவனது நிம்மதியைக் குலைக்கிறது, அநீதியான வழிமுறைக்குள் அவனைத் தள்ளுகிறது.

அன்பேசிவம்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Sunday, August 20, 2023

காற்று வீசட்டும் பாய்மரத்தைக் கட்டுப்படுத்துவோம்

பாய்மரக் கப்பல் கடலிலே பயணம் போகிறது. அப்பாய்மரக்கப்பலின் பயணத்துக்கு காற்று இன்றியமையாதது. ஆனால் காற்று அடிக்கிறது பயணம் தானாக நடக்கும் என்று இருந்து விட்டால் விளைவு என்ன? 

காற்றடிக்கும் திசையிலே பயணம் தொடரும் ஆனால் அது நாம் எந்த இடத்தை இலக்கு வைத்து பயணத்தைத் தொடங்குகிறோமோ அந்த இடமாக இருக்காது. 

அப்படியானல் பயணம் எமது இலக்கை நோக்கி நடக்க வேண்டுமானல் அதிலே எமது பங்கு என்ன? 

எமது திறமையால் பாய்மரத்தைக் கட்டுப்படுத்தி அந்தக் காற்றின் வேகத்தின் துணை கொண்டு கப்பலை எமது இலக்கை நோக்கிச் செலுத்துவதே. 

பாய்மரம், கப்பல், காற்று என்ன இவன் உளறுகிறானே என்று சிந்திக்கிறீர்களா ? இல்லை எமது வாழ்க்கைப்பயணத்தை இந்த பாய்மரக் கப்பலின் பயணத்துக்கு கொஞ்சம் சத்தமாக ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன். 

வாழ்விலே கஷ்டங்கள் ஏற்படுகின்றன. அந்த கஷ்டங்களைக் கண்டு மனம் தளர்ந்து உட்கார்ந்து விட்டால் கதி அதோ கதியாகி விடும். பலரின் வாழ்விலே அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது அவர்கள் அடைந்த கஷ்டங்களே. 

வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு விடைதேடும் போதுதான் நமக்குப் புதுவழி பிறக்கிறது. புதிய கதவுகள் திறக்கின்றன. புதிய உணர்வுகள் ஏற்படுகின்றன. புதியதோர் அனுபவம் வாழ்க்கைப் புத்தகத்தில் புதிய அத்தியாயமாக இணைகிறது. 

பலவழிகளால் எமக்கு இடர்கள் ஏற்படுகின்றன, யாரை நாம் எமது சொந்தங்கள் என்று நம்பியிருந்தோமோ அவர்களே இடர்களைப் பிறப்பிக்கும் சம்பவங்கள் ஏற்படும். எப்படி அதை நாம் உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதிலேதான் எமது மனதின் அமைதியும், வாழ்க்கையின் பயணமும் தங்கியுள்ளது. 

இவைகள் எமக்கும் மேலே உள்ள ஒரு சக்தி எமக்கு மற்றவர்களைப் பற்றிப் புரியவைக்கத் தரும் அருமையான சந்தர்ப்பங்கள் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு ஓர் காரணம் தெரிகிறது. மனதுக்கு அமைதியும் கிட்டுகிறது. 

ஆமாம், வாழ்க்கையில் எமக்கு ஏற்படும் துன்பங்கள் துயர்கள், இடர்கள் காற்றைப் போன்றதே, ஜயோ காற்றடிக்கிறதே என்று அப்படியே உட்கார்ந்து விட்டால்……. 

ஆனால் அதே காற்றின் வீச்சுக்கு ஈடுகொடுத்து எமது வாழ்வென்னும் பாய்மரத்தை எமது இலக்கை நோக்கித் திருப்பிக் கொண்டால், அதே துன்பங்கள், துயரங்கள், இடர்கள் எம்மை வாழ்வில் முன்தள்ளி விடும் காரணிகளாக அமைந்து விடுகின்றன. 

இடர்களையும், துயர்களையும் தாங்கிடுவது அத்தனை சுலபமா? என்று எனைப் பார்த்து பல கேள்விகள் எழலாம். இல்லை துயர்களைத் தாங்குதல் அத்தனை சுலபம் அல்ல ஆனால் பக்குவப்பட்ட மனத்தினால் அவற்றை கொஞ்சம் இலகுவாக்க முடியும். 

எனது வாழ்வில் நடந்த பல செயல்கள் இதை அனுபவத்தின் மூலம் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. என் தந்தை உயிரோடிருக்கும் காலங்களில் எனக்கு அழகாய் அளித்த அறிவுரைகள் அப்போது புளிக்கத்தான் செய்தன. ஆனால் அனுபவங்களின் வழி அவற்றை நானே உணரும் பொழுது அவர் சொன்ன வார்த்தைகளின் அடியே கோடிட்டு நின்ற ஆழமான உண்மைகள் எனக்கு நன்றாய் உரைத்தன. 

அதோ வாசல் தெரிகிறது என்று ஓடிப்போகும் போது அந்த வாசலைக் காட்டிய கதவு அடைக்கப்பட்டு விடுகிறது. ஜயோ கதவு மூடிவிட்டதே என்று கலங்கித் திரும்பும் போது சிறியதாய் ஒரு வெளிச்சம் மற்றொரு வாசலைக் காட்டுகிறது. அந்த வாசலினால் வெளியே வருபோது புதிய பல உறவுகள் எம்மை வந்தடைகின்றன. 

தேங்கி நிற்கும் தண்ணீர் நதியாகிவிடாது. ஓடுக்கின்ற நீரே மக்களுக்கு நன்மை பயக்கும் நதியாகி வாழ்கிறது. தேங்கி நின்று குட்டையாகி விடக்கூடாது என்பதற்காகவே சிலநேரங்களில் சிலவழிகள் அடைக்கப்ப்டு, ஓடுவதற்கு எமக்கு நதிப்படுகை கிடைக்கிறது. 

வரும் இடர்களைத் தடைகளைக் கண்டு தளர்ந்து விடாதீர்கள் ஏனெனில் அதுவே உங்கள் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த உதவும் காற்றாகிறது. உங்கள் மனமென்னும் பாய்மரத்தைக் கட்டுப்படுத்தும் அந்தத் தடை என்னும் கற்றைத் துணையாக்கி உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை நோக்கி பயணமாகுங்கள். அதுவே நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும். 

சத்தமில்லாமல் அந்தப் பாய்மரம் காற்றுடன் போடும் ஒரு யுத்தம் தான் அதன் பயணத்துக்கு வழிவகுக்கிறது. 

சக்தி சக்திதாசன்

Saturday, August 19, 2023

கீறல்களின் கூறல்கள்

இதயத்தின் ஓரங்களிலெல்லாம் சின்னச் சின்ன புதையல்களாக சின்னச் சின்ன நிகழ்வுகள் கொடுத்த அனுபவங்கள் பாடங்களாகச் சேகரிக்கப்பட்டு வைக்கப்ப்ட்டிருக்கின்றன,

அச்சிறு புதையல்களை சில சமயங்களில் திறந்து பார்க்கிறோம் சில இன்ப உணர்வுகளினால் தாலாட்டுகின்றன, சில ரணங்களைத் தடவும் போது இன்று கூட வலிக்கத்தான் செய்கிறது.

ஆனால் அதற்காக அவைகளை மட்டும் மறந்து புதைத்து விட முடிகிறதா ? இல்லையே !

அப்படியான ஒரு நினைவை அன்பு உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது மன்ம் கொஞ்சம் இலேசாகிறது, 

அத்தோடு படிக்கும் சில இளம் நெஞ்சங்கள் இவற்றிலிருந்து எதையாவது தமக்கு உபயோகமாக எடுத்துக் கொள்வார்களோ ? எனும் ஒரு நப்பாசையும் கூட.

அப்போது நான் லண்டனுக்கு வந்து ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருக்கும் வயது ஒரு 22 இருக்கலாம்.

இலண்டனில் இரண்டு மூன்று வருடங்கள் வாழ்ந்தும் கூட வாழ்வின் வளைவு நெளிவுகளை அறிந்து கொள்ளாத ஒரு  வாலிபப் பருவம். 

அதற்காக எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள் என்று சொல்ல மாட்டேன். 

நான் வளர்ந்த சூழல் அப்படி. நான் எதையும் ஆழாமாகப் பார்க்கும் தன்மையை வளர்த்துக் கொள்ளவில்லை. 

பெற்றோர் எனும் போர்வையால் போர்க்கப்பட்டு சமுதாய வளைவு, நெளிவுகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை தவற விட்டவன் என்றே நினைக்கிறேன்.

எனக்கு ஈழத்திலே இருந்த நண்பர்களில் நெருங்கிய நண்பன் ஒருவன் இங்கிலாந்து வருவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருந்தான். 

அப்போது இலண்டனிலே மாணவனாக உயர் கல்வி கற்றுக் கொண்டிருந்த என்னிடம்  ஒரு கல்லூரி அனுமதி பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தான்.

நானும் விசாரித்து அதைப்பற்றிய தகவல்களை அவனுக்கு அனுப்பினேன். 

அவனும் அக்கல்லூரியில் தனக்கு அனுமதியை வாங்கிக் கொண்டான். அனுமதிக்கான வருடக் கட்டணத்தை கட்டும்படி என்னிடம் பணத்தை அனுப்பினான். 

இரவுகளில் இரவுக் காவலனாக வேலை, பகலில் கல்லூரி என பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

அக்கல்லூரிக்கு விஜயம் செய்து நேரிடையாகப் பணத்தைக் கட்ட எனக்கு நேரம் ,கிடைக்கவில்லை. 

இரண்டு மூன்று நண்பர்களைக் கேட்டேன். அவர்களோ என்னால் கிடைக்கும் பயன்களை அனுபவிக்கக் காத்திருந்தார்களே ஒழிய எனக்காக உதவ முன்வரவில்லை. 

அதுமட்டுமல்ல அவர்களும் என்னைப் போல வேலை , கல்லூரி என பரபரப்பாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வேறுவழியில்லையாதலால் அக்கல்லூரிக்கு போன் செய்தேன். வங்கியில் இருந்து  ட்ராப்ட் எடுத்து அனுப்பும் படி அறிவுறுத்தினார்கள்.

கல்லூரிக் கட்டணம் கட்ட வேண்டிய இறுதிநாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அவசரமாக நான் வசிக்கும் நகரத்திலுள்ள ஒரு பிரபல வங்கியை அணுகி அவர்களிடம் ட்ராப்ட் எடுக்கும் முறையைக் கேட்டு பணத்தைச் செலுத்தி அக் கல்லூரியின் பெயருக்கு ட்ராப்ட் வாங்கி அனுப்பினேன்.

இரண்டே இரண்டு முக்கியமான விடயங்களை மறந்து விட்டேனா, அல்லது எனது பொறுப்பற்ற தன்மையால் அசாதரணமாக விட்டு விட்டேனா?இன்றும் எனக்கு விடை தெரியவில்லை.

ஆமாம் அந்த ட்ராப்டை நகலெடுக்கவோ அன்றி அக்கடிதத்தைப் பதிவுத் தபாலில் அனுப்பவோ தவறி விட்டேன். 

எனது போதாத காலம் அக்கல்லூரி தமக்கு அக்கடிதம் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டார்கள்.

அவசரமாக அந்த ட்ராப்ட் எடுத்த வங்கிக்கு ஓடினேன், அவர்களோ அந்த வங்கியில் எனக்கு கணக்கு இல்லாததால் எனக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கி உத்தரவாதம் அளிக்காவிட்டால் தாங்கள் நான் செலுத்திய பணத்தை திரும்பத் தரமுடியாது என்று கூறிவிட்டார்கள்.

எனது வங்கியோ நிரந்தரப் பணி இல்லாத ஒரு வெளிநாட்டு மாணவனாகையால் அத்தகைய உத்தரவாதம் தம்மால் அளிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

கலங்கினேன். எதுவுமே செய்ய முடியாதவனாக தூக்கமின்றிச் சில நாட்கள் தவித்தேன். 

என் நண்பனுக்கோ அக்கல்லூரியில் அனுமதி கிடைக்காமல் போய் விட்டது. 

அன்றாடம் இரவினில் காவலாளியாக வேலை செய்து பகலினில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த எனக்கு எனது கல்லூரிக் கட்டணம் கட்டவே அல்லல் படும் நிலை.

என்னால் இழந்த என் நண்பனின் பணத்தை ஈடு கட்ட முடியாது போய் விட்டது.

அந்நண்பனும், அவனது பெற்றோரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். 
அவனது பணத்தை நான் செலவு செய்து விட்டேன் என்று சந்தேகித்து ஈழத்தில் எனது பெற்றோரைத் தேடிச் சென்று என்மீது இருந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொட்டி விட்டார்கள்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் குறளுக்கேற்ப வாழ்வேன் என்று எண்ணியிருந்த என் தாயால் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?

அதற்கீடான தொகையை அவர்களுக்கு கொடுக்குமாறு என் பெற்றோரை வேண்டிக் கொள்வதை விட வேறு வழி தெரியவில்லை (இதுகூட ஒரு பொறுப்பற்ற தன்மை என்றே இப்போது எனக்குப் படுகிறது). 

வாழ்வில் சில கணங்களில் நாம் எடுக்கும் அவசர முடிவுகள் எத்தகைய விபரீத விளைவுகளில் கொண்டு எம்மைத் தள்ளி விடும் என்பதை ஓரளவு படித்துக் கொண்டேன்.

அந்நண்பனினதும், அவனது பெற்றோரினதும் கோபத்தை நான் நன்கு புரிந்து கொண்டேன். 

அது நியாயமானதே ! 

பணத்தை இழந்து விட்டோம் என்பதைத் தவிர எனக்கு இன்றுவரை வேதனையளிப்பது இரண்டு விடயங்கள். 

ஒரு நல்ல நண்பனின் நட்பை இழந்து விட்டேன், என்னத் தமது கண்ணின் மணிபோலக் காத்த எனதருமை பெற்றோரைக் கலங்க வைத்து விட்டேன் என்பவையே அவை.

இன்று அந்த நண்பன் மிகவும் நல்ல நிலையில் வெளிநாடொன்றில் வாழ்ந்து வருகின்றான் என்பதை அறிவேன். 

காலம் ஒருநாள் கண் திறக்கும் போது மீண்டும் அவனது தொடர்பு எனக்குக் கிடைக்கும் என்று  திடமாக நம்புகிறேன்.

பின்னால் எனக்குத் திருமண பின்பு பல சமயங்களில் என் அன்பு மனைவி எனக்கு சுட்டிக்காட்டி எனது  தவறுகளை, பொறுப்பற்ற தன்மையை விளக்கி என்னை வளப்படுத்தினாள். 

அப்படி சொல்லும்போது  உடனடியாக நான் அவள்மீது கோபம் கொண்டாலும் அவளது வழிகாட்டுதலில் உள்ள நியாயங்களைக் கண்டு நான் அதிசயிப்பேன். 

இப்படி ஒரு அருமையான தோழியை எனக்கு மனைவியாக்கிய அந்த இறைவனுக்கு என் மனம் ஆயிரம் நன்றிகளைச் சொல்லிக் கொள்ளும்.

பல வருடங்களின் பின்னால் என் பெற்றோர் லண்டனில் வாழ்ந்து வந்தார்கள்.
 
அப்போது ஒருநாள் என் தந்தையுடன் நான் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கும் போது இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட போது அவர் கூறிய வாசகம் இன்றும் என் நெஞ்சில் அழியாது நிலை பெற்றிருக்கிறது,

" என் மகனை நான் எப்படி வளர்த்தேன் என்று எனக்குத் தெரியும், நீ எப்போதுமே மற்றொருவர் பணத்தை எடுத்துக் கொள்ளும் மனம் கொண்டவனில்லை என்பதை அறிவேன், நானோ அம்மாவோ என்றுமே உன்னைச் சந்தேகித்ததில்லை" என்று அவர் சசொன்னதும் என் கண்களில் இருந்து நீர் சொட்டியது.

இன்றும் இந்த வாசகங்களை எழுதும் போது என் தந்தையின் உருவத்தைக் கண்களில் வைத்துக் கண்ணீர் அபிஷேகம் செய்கிறேன். 

என்ன சக்தி ஒரேயடியாகப் பிதற்றுகிறானே என்று எண்ணுகிறீர்களா?

கவசம் களைதல் என்பார்களே அது இதுதான்.

 ஆம் மனதிலுள்ள கவசத்தைக் கழற்றி எம்மை நாமே அலசிக் கொள்ளும் போது சிலவேளைகளில் அது மற்றவர்களுக்கு உபயோகமான உகந்த அனுபவமாக ஆகும் சந்தர்ப்பம் கிட்டுகிறது.

உள்ளத்தில் அலையாடும் எண்ணங்கள் பல எப்போதும்  இதயத்தின் ஒரங்களை உரசிக் கொண்டுதான் இருக்கும். 

சில நேரங்களில் இவ்வுரசல்கள் இதமாக இருக்கும், சில நேரங்களில் வலியாக இருக்கும்.

உண்மைகள் உதிர்ந்து சருகாகும் போது அது குளிருக்கு இதமூட்டும் தீயை வளர்க்க உதலாம் எனும் ஒரு நப்பாசையே. 

இளவயதுகளில் பொறுப்பற்று நடப்பது பலருக்குப் பொதுவானது. ஆனால் எதையும் ஆழமாகச் சிந்தித்து செயற்படப் பழகிக் கொள்வது மிகவும் முக்கியம்.

மகாகவி பாரதியார் ஒருமுறை ஒரு அறிந்தவருக்கு கடிதம் வரைந்த போது " தம்பி உன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு, எழுது " என்று எழுதியிருந்தார்.

மனதோடு நான் பேசுபவை எல்லாம் உள்ளத்தினுள்ளே உறைந்து கிடக்கும் உண்மைளை என் இதயம் நிறைந்த அன்புள்ளங்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திலேயே.

மீண்டும் பேசுகிறேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Friday, August 18, 2023

வந்தது தெரியும் ! போவது எங்கே ?

"வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது" இது கவியரசரின் பாடல் வரிகள். இதிலே அடங்கியிருக்கும் அர்த்தங்கள் தான் பல்வேறு. 

எந்தக் கோணத்தில் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே இதன் அர்த்தமும் திரிபு படுகிறது. 

கருவானதிலிருந்து உலகில் உருவாவதுவரை ஒரு பத்துமாதம் என்பது இயற்கை எனும் இறை வகுத்து வைத்த நியதி. 

அதே உருவானகாலம் முதல்  நீறாகும் வரை எத்தனை காலம் என்பதை அதே இயற்கை எமக்குப் புலப்படாத வகையில் புதிராக காலம் எனும் சேற்றினுள் புதைத்து வைத்திருக்கிறது என்பதுவே உண்மை.

மற்றொரு கோணத்தில் பார்த்தால் பிறந்து குழந்தையாகி வாழ்க்கையில் எத்தகைய ஒரு பிரஜையாக உருவாகப் போகிறோம் என்பது கூட "போவது எங்கே?” எனும் கேள்வியில் அடங்கலாமல்லவா ?

இறுதியாக எமது போகும் இடம் அல்லது போகும் நிலை என்ன என்பது எம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

அதனைப் பற்றிய ஆன்மீக விளக்கம் இதுவல்ல. 

ஆனால் எத்தகைய ஒரு வாழ்வினினை நாம் எமக்கு வகுத்து வைத்திருக்கிறோம் என்பதைச் சிந்திப்பது எம் அனைவராலும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு செயலே !

உள்ளத்தில் தோன்றும் உணர்வலைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வாழ்வில் நாம் எடுக்கும் பல முடிவுகளுக்குக் காரணமாகின்றன. 

அந்த உணர்வலைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றே எமது முடிவுகளை தெளிவான முடிவுகளாக்கும் வல்லமை கொண்டது. 

நாம் செய்யும் நன்மைகள், அடுத்தவரை நோக்கிய எமது மனிதாபிமானமிக்க உணர்வுகள் எம்மை வாழ்வில் சரியான வழையில் நடைபோட உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நற்பண்புகளும், தீய பண்புகளும் உறைந்து கிடக்கின்றன. நற்பண்புகளை வளர்ப்பதும், தீய பண்புகளை அழிப்பதும் எமது வாழ்வின் தார்மீகப் பண்புகளாகின்றன.

பல சமயங்களில் நல்லதொரு செயலை நாம் புரியும் போது எமைச்சுற்றி எமை உபயோகித்து தம்மை நியாயப்படுத்த எண்னும் பலரால் எமையறியாமலே நாம் உபயோகிக்கப்பட்டு விடுகிறோம். 

நாம் மற்றவர்களின் பார்வையில் தவறிழைத்தவர்களாகச் சித்தரிக்கப்படுகிறோம். அத்தச் சிறு தளர்வுக்காக நாம் மனம் வருந்தி விடக்கூடாது. 

நாம் செல்லும் பாதையில் இருந்து வழுகி விடக்கூடாது. அதுதான் வாழ்க்கை எம்மீது வீசும் சோதனை. 

இது எனது வாழ்க்கையில் நான் அனுபவித்து அறிந்து கொண்ட உண்மை. 

எனை உபயோகித்து தாம் தமது இலக்கை அடைந்து விட்டோம் என்று எண்ணி எனைத் தூக்கி வீசியவர்கள் பலர், அதேநேரம் எனத் தமது உண்மையான துணையாக எண்ணி என்மீது பாசம் பாராட்டுவோர்கள் அதைவிடப் பன்மடங்கு அதிகம். 

உலகம் நல்வர்களாலும், தீயவர்கலாளும் ஆனது அதுதான் யதார்த்தம். 

எப்போது நாம் காணும் காட்சிகளில் இருக்கும் நன்மைகளை மட்டும் வடித்தெடுத்து பார்க்கப் பழகுகிறோமோ அப்போதுதான் வாழ்வின் சூட்சுமத்தை அறிந்தவர்களாக்கிறோம்.

எங்கே போகப் போகிறோம் என்பதைத் தீர்மானித்த பின்பு அவ்விடத்தை அடையும் வழிகளை ஆராய்ந்தால் பலவழிகள் தென்படும். 

அவற்றில் சில நேர்வழியாகவும், மற்றும் சில குறுக்கு வழிகளாகவும் இருக்கும். அவ்வழிகளில் எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது எமது மனதின் தார்மீக அடிப்படையில். தங்கியுள்ளது.

எங்கே , எப்போது எப்படி எமது வாழ்வின் வழிகளை தேர்ந்தெடுத்தாலும் பல சமயங்களில் பாதையில் குறுக்கிடும் இடர்கள் எமை பலவிடங்களில் பின் தங்க வைத்துவிடும். 

அப்பின்னடைவுகள் எமது மனதின் அடிப்படையையே உலுக்கிவிடும் வல்லமை படைத்தவை. 

அப்படியான தருணங்களில் அவ்விடர்களில் எம்மை மேலும் உறுதியாக்க இயற்கை எமக்களிக்கும் ஆயுதங்கள் என்று எடுத்துக் கொண்டால் அவற்றை எமது இலக்கை நோக்கிப் பயணிக்க உதவும் படிக்கற்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

நினைப்பது அனைத்தும் நடப்பது அல்ல , நடப்பவை எல்லாம் நாம் நினைத்தவையும் அல்ல.

ஏதோ அனைத்தும் எமது கையில் என்று எண்ணிக் கொண்டு நாம் வாழ்கிறோம் ஆனால் பல திருப்பங்கள் காலத்தால் எம்மீது தினிக்கப்பட்டு எமது பாதை நாம் போக விரும்பிய பாதையை விட்டு விலகிச் செல்கிறது. 

ஆனால் அம்மாற்றங்களை காலத்தின் கட்டாயம் என்றுணர்ந்து எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளப்பழகிக் கொண்டால் வாழ்க்கையின் நிகழ்வுகள் இலகுவாகின்றது.

இதையேதான் " போவது எங்கே ? “ எனும் கவியரசரின் பாடல் வரிகள் எம்மை வினவுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். 

வாழ்வின் தபோவனப் பகுதியில் வாழ்வோருக்கு இதே " போவது எங்கே ? “ எனும் வரிகள் வித்தியாசமான விளக்கத்தைத் தரலாம் ஆனால் வாழ்வின் ஆரம்ப கட்டத்திலோ அன்றி இல்லறப்பகுதியிலோ இருப்போர் இவ்வரிகளின் அர்த்தத்தை தமது வாழ்வின் குறிக்கோளுக்கு ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம்.

மீண்டும் வரும்வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Monday, August 14, 2023

எண்ணங்களாலே இழைக்கப்படுவதுதான் வாழ்க்கை . . .


உலகினிலே நாம் மனிதனாக உருவெடுப்பதுவும், எந்த இடத்திலே விதையாக விழுகிறோம் என்பதும் எமது வேண்டுதலின் படி நடப்பதல்ல. எங்கோ விழுகிறோம், அங்கே எமக்கான சொந்தங்களும், பந்தங்களும் எம்மீது திணிக்கப்படுகின்றன.

ஆனால் மனிதராக உருவெடுக்கும் போது எந்த வகையில் எப்படிப்பட்ட இலட்சியங்களுடன், கொள்கைகளுடன் உருவாகிறோம் என்பதில் எம் பங்கு நிச்சயமாக இருக்கிறது.

அந்தப் பங்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கெடுப்பது எம்னதிலே விளையும் எண்ணங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஓட்டப்போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஓட்டப்போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது தினமும் அவர்கள் செய்த பயிற்ச்சிகளில் மட்டுமல்ல அந்தக் கணப்பொழுதில் அவர்கள் நெஞ்சங்களில் மிளிர்ந்திருக்கும் எண்ணங்களிலும் தங்கியுள்ளது.

நான் இந்த ஓட்டப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெறப்போகிறேன் என்னும் எண்ண்ம் கொண்ட சிலரும், நாம் எங்கே வெற்றி கொள்ளப் போகிறோம் என்னும் சிலரும் நிச்சயமாக அந்தப் போட்டியின் ஆரம்பக் கோட்டைத் தொட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதுவே உண்மை.

அந்தப் போட்டியின் முடிவும் அவரவர் மனப்பான்மைகளின் வழியே அமையும் என்பதுவும் உண்மை.

வாழ்க்கை என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை. சிலர் வசதியான குடும்பச் சூழல்களின் மத்தியில் அவர்களின் பெற்றோர்களின் உதவியுடன் தமது வாழ்க்கையைச் செழிப்பாக ஆரம்பிப்பார்கள், மற்றும் சிலரோ வாழ்க்கையின் அடிமட்டக் கோட்டில் இருந்து அல்லல்பட்டு மிகவும் கடினமான நிலையில் தமது வாழ்வை ஆரம்பிப்பார்கள்.

ஆனால் பல வருடங்களின் பின்னர் அவர்கள் இருவர்களின் நிலைமையை எடுத்துப்பார்த்தால் இருவருமே ஒருவருக்கொருவர் முரணான வாழ்க்கை வசதிகளைக் கொண்டிருக்கக் கூடும்.

அந்த இருவரின் ஆரம்பத்திற்கும், முடிவிற்கும் இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளை இழைப்பதற்குக் காரணியாக அமைந்தது என்ன? 

அவரவர் மனங்களிலே மிளிர்ந்த எண்ணங்களே அவர்களின் வாழ்க்கையை இழைப்பதற்கு முக்கிய கரணியாக அமைந்தது எனலாம்.

எமது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்திலே மிகவும் முக்கியமாகப் பட்ட விடயங்கள் மற்றொரு கால கட்டத்திலே முக்கியமாகத் தென்படுவதில்லை ஆனால் அந்த இரு காலகட்டங்களில் எம் மனதிலே நிலை கொண்டிருந்த எண்ணங்கள் மாறுபட்டிருந்தனவா? அவைகளின் மாற்றங்கள் அவ்விடயங்களின் முக்கியத்துவத்தின் மாற்றத்துக்கு எவ்வகையில் காரணிகளாக அமைந்துள்ளன?

இக்கேள்விகளுக்கு விடைகாண விளையும் போது மனதில் பல விடயங்கள் தெளிவாகின்றன. உள்ளத்தின் ஓசைகளின் வழி ஓடிய எண்ணங்களின் காரணமாக வாழ்க்கையில் பலமுனைகளில் நாம் எடுத்த திருப்பங்களின் காரணங்கள் புரிகின்றன.

ஆனால் நாம் திரும்பச்சென்று அத்திருப்பங்களின் திசையை மாற்ற முடிவதில்லை. ஆனால் அவற்றின் திசை வேறாக இருந்திருந்தால் இப்போதைய வாழ்க்கையின் விளைவு எப்படி இருந்திருக்கும் என்று அசைபோட மட்டுமே முடிகிறது.

அப்படியானல் பின் ஏனிந்த அசைபோடல்? என்னும் கேள்வி எழலாம். உள்ளத்தில் எழும் ஓசைகளின் சத்தம் அடுத்தவருக்கும் கேட்டால் ஒரு திருப்புமுனையில் இருக்கும் ஒருவர் தமது சிந்தையை வேறுபாதையில் தட்டிவிட ஒரு சமயம் அது உதவக்கூடும் என்னும் நப்பாசையே.

நான் நடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்கிறேன். எத்தனையோ தவறுகள் . . .
எத்தனையோ இடங்களில் . . . அப்பப்பா ! 

மாணவனாக, வாலிபனாக, குடும்பஸ்தனாக, இன்று முதுமையின் ஆரம்பத்தில் எத்தனையோ சறுக்கல்கள். மற்றவர்கள் 
வேண்டுமென்றே சறுக்கவைத்த சம்பவங்களை விட நானாக , நான் என்னும் அகந்தையில் ஏற்படுத்திக் கொண்ட சறுக்கல்கள் அதிகம்.

மற்றவர்களின் திறமையை உளமார, மனதார ஏற்றுக்கொள்வது என்னுடைய பெருமைக்கு இழுக்கு என்னும் எண்ணம் நிறைந்ததினால் எத்தனையோ அற்புதமான சந்தர்ப்பங்கள், அறிவை வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் நிறைந்த மனிதர்களின் தொடர்பை இழந்து விட்ட பொழுதுகள் ஆயிரம்.

ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு செயலில் மற்றையோரை விட திறமையுடையவர்களாக இருப்பார்கள் என்பதுவே உலகார்ந்த உண்மை. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள ஆணவம் என்னும் மாயை எமது கண்களை மறைக்கிறது.

இந்த மாயத்திரையினுள் எம்மை மறைத்துக்கொண்டு கண்ணிருந்தும் குருடர்களைப் போல் வாழ்கிறோம்.

மனதின் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் , வரித்துக் கொள்ளும் இலட்சியங்களும், அவற்றை அடைவதற்காக எடுத்துக் கொள்ளும் மார்க்கங்களும் தூய்மையானவைகளாவே அமையும்.

சில வருடங்களின் முன்னால் இங்கிலாந்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. மூன்று இளம் பெண்கள்சுமார் பதினெட்டு வயது மிக்கவர்கள். அதிலே இருவர் ஒன்றாகச் சேர்ந்து மற்றைய பெண்ணை பரிகாசம் செய்து மரணத்தின் விளிம்புவரை தள்ளி, அப்பெண்ணும் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை புரிந்து கொண்டாள்.

நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்ட மற்ற இரு பெண்களுக்கும் மிக நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வழக்கின் முடிவிலே இறந்த பெண்னின் பெற்றோரை தொலைக்காட்சியில் பேட்டி கண்டபோது, அப்பெண்ணின் தந்தை நாம் எமது மகளை இழந்து துயரத்தில் தவித்தாலும், நம்மகளின் இறப்புக்குக் காரணமான அவ்விரு பெண்களின் பாவமன்னிப்புக்காகவும் இறைவனை வேண்டுகிறேன் என்று கூறினார்.

அவரின் பெருந்தன்மையை எண்ணிப்பார்க்கவே மனது அஞ்சியது. அத்தகைய ஒரு மனிதரின் வாழ்வை எத்தகைய எண்ணங்கள் இழைத்தன என்பதை எண்ணிப்பார்க்க மனது ஆவலாய்த் துடித்தது.

இதயத்தின் கனம் அது சுமக்கும் எண்ணங்களின் அழுக்குகளின் சுமை என்பதுவே உண்மை. எண்ணங்களின் அழுக்குகள் வெளியேற, வெளியேற இதயமும் இலேசாகிறது.

தூய, தன்னலமில்லாத எண்ணங்களின் மூலம் இழைக்கப்படும் வாழ்க்கையும் மிகவும் இனிமையாகத்தான் இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை

மீண்டும் வரும்வரை
சக்தி சக்திதாசன்

Saturday, August 12, 2023

இதிகாசங்கள் கட்டுக்கதைகளா ?

இதிகாசங்கள் !

அவை உண்மையில் நடந்த கதைகளா ? கட்டுக்கதைகளா ? எனப்பல்வேறு தர்க்கங்கள் பல்வேறு நிலைகளில் பல்வேறு அறிஞர்களுக்கிடையில் நிகழ்ந்தவண்ணம் தானிருக்கின்றன. அவ்வடிப்படையில் ஆத்திகத்துக்கும், நாத்திகத்துக்கும் இடையில் கூட இவ்விதிகாசங்கள் இழுபட்டுக் கொண்டுதானிருக்கின்றன.

உண்மையிலேயே இதை அவரவர் பார்க்கும் கோணங்களில் தான் அதனைப் பற்றிய புரிதல்களும் அடங்கியிருக்கின்றது என்பதே உண்மை. 

இவ்விதிகாசங்களில் புதைந்துள்ள அறிவினைப் பலப்படுத்தும் சில நிகழ்சுகளை மதமுலாம் பூசாது எடுத்துப் பார்க்கத் தலைப்படும்போது அவை ஆக்கப்பட்டதற்கான ஏமது முன்னோர்களின் நோக்கத்தின் தாக்கம் புரிகிறது. 

குறிப்பாக மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் அதன் பாத்திரப் படைப்புகள் அப்படைப்புகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தன்மையின் அழுத்தங்கள் வாழ்வின் பல நிலைகளைச் சமாளிப்பத|ற்கான வழிவகைகளை நமக்குத் தருவது போலிருக்கும்.
          
மகாபாரதத்திலேயே என்னுள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பாத்திரம் கர்ணன் எனும் பாத்திரப் படைப்பே. 

இப்பாத்திரப்படைப்பின் பின்னே பல வாழ்வின் சூட்சுமங்கள், மனிதராகப் பிறப்பெடுத்தோர் செய்யக்கூடாத பேதப்பிரிவுகள் எனப்பல்வேறு படிப்பினைகளை எம்முள் புகுத்தி விடுகின்றது. 

எமக்கு வாழ்வின் பல நடப்புமுறைகளை விளக்குவதற்காகவே ஆங்காங்கு பல கிளைக்கதைகள் புகுத்தப்பட்டுள்ளன. 

இவற்றில் கர்ணன்னைப் பற்றிய  நிகழ்வொன்று .. 
         
முதியவர் ஒருவர் நடந்து செல்கிறார். நண்பகல் பொழுது.. களைப்பால் தொடர்ந்து நடக்க முடியாத நிலை. எதிரே துரியோதனன் வருகிறான். முதியவர் துரியோதனனிடம் தனக்கு உண்ண ஏதாவது தர கேட்கிறார். உணர்வு விடுபட்ட நிலை முதியவர்க்கு. துரியோதணன் அவரிடம் அருகில் இருந்த உணவு விடுதியை சுட்டிக்காட்டி வயிறார உணவுண்டு செல்ல சொல்கிறான். 

ஆனால் முதியவர்க்கோ எழுந்து நடக்க முடியாத நிலை..

துரியோதனன் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு ரதம் வருகிறது. முதியவர் தன் சக்தி அனைத்தும் திரட்டி தன் நிலையை உணர்த்த முற்படுகிறார். 

கீழே இறங்கிய அந்த மனிதன் முதியவரின் நிலையை நன்கு அறிகிறான். தன் ரதம் தனில் தொங்கிய சில கனிகளை முதியவர்க்கு புகட்டுகிறான். சில இளநீர் குலைகள் அலங்காரமாக ரதமோடு வருகின்றன. அவற்றையும் எடுத்து புகட்டுகிறான். முதிய மனிதர் களைப்பு விடை பெற்றவராய் நீங்கள் கர்ணன் தானே என வினவுகிறார். 

தற்போது முன் சென்ற பாவி உணவிடும் இடத்தை சுட்டிசென்றதாய் வருந்துகிறார் . கர்ணன் தலை அசைத்த படியே நீங்கள் மெதுவாக உணவு விடுதிக்கு சென்று உணவருந்தி செல்லுங்கள் என கூறுகிறான். முதியவர் தன் களைப்பு நீங்கியதை சொல்லி பயணத்தை தொடர்கிறார்..
        
கர்ணன் தேரோட்டி மகன் என்று அவமதிக்கப்பட்ட பொழுது அவனைத் தன் கீழுள்ள சிற்றூர் ஒன்றுக்கு அரசனாக்கி அவனது அவமானத்தைப் போக்கியவன் துரியோதனன். 

தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்த துரியோதனனுக்கு தீராத நன்றிக்கடன் பட்டுள்ளான் கர்ணன்.

இருவருக்குமிடையில் இணக்கம் மிகுந்த நட்புப்பாலம். ஆனால் ஒருவனின் தன்மையோ முதியவரின் இக்கட்டை புரிந்துகொள்ள எத்தனிக்காத சுயநலம், மற்றவனின் தன்மையோ தன்னிடம் இருப்பதைக் கொண்டு அம்முதியவரை வயிறுநிறையச் செய்யும் கருணை உள்ளம். இப்படி இருக்கும் இருவர் நண்பர்களாக இருக்க முடியுமா?

அப்படியான உண்மை நிலையை நாம் வாழ்வில் காணும்போது இப்படியான நிகழ்வுகளின் தாத்பரியத்தை விளக்கவே நம் முன்னோர்களின் இதிகாசப் படைப்பு எனும் எண்ணம் உள்ளத்துக்கு ஒருவகை விளக்கத்தைத் தருகிறது.
        
இதிகாசங்களை நோக்கிய எனது பார்வையை மூன்று காலகட்டங்களூடாக நான் பார்க்கிறேன். 

பாடசாலை நாட்களில் பாட அங்கமாகப் படிக்கும் போது. அது என்மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்ட காலம் . 

விரும்பியோ, விரும்பாமலோ இதிகாசங்களைப் படிக்க வேண்டியது அப்போதைய காலக்கட்டாயமானது. 

அடுத்து எனது வாலிப்பைக் காலம்.

எதையும் கேள்வி கேட்க வேண்டும் எனது இளமையில் எழும் வேகத்துடிப்பு. பாரம்பரியக் கலாச்சாரத் தழுவல்களை எதிர்ப்பது புரட்சிகரமான் செயல் எனும் குறைப்புரிதல், அந்த வயதுக்கேற்ற சமுதாயவரம்புகளுக்கெதிரான கிளர்ச்சி என்தின் ஒரு அங்கமாக இதிகாசப் பரிகாசம் என்பன. 

அதைத்தொடர்ந்த இளவயது இல்லற வாழ்க்கையின் போது கொண்ட அரசியல் கோட்பாடுகளின் நாகரீகம் நாத்திகம் பேசுதல் எனும் விளக்கமற்ற ஒரு தன்மை. , அடுத்து வாழ்க்கையில் அடிவிழ, அடிவிழ விழுந்து , விழுந்து எழும்போது அக்காயங்களின் வலி கொடுத்த ஒரு புரிதல். 

இந்த இதிகாசங்களுள் ஏதாவது புதைந்திருக்குமோ எனும் ஒருவகையான உண்மையான தேடலைக் கொடுத்ததின் காரணம் மதமுலாமைத் தவிர்த்த வாழ்வின் உண்மைகள் எனும் ஒருவகை புரிதல்.
      
இன்றைய நான் நாத்திகனல்ல,

முழுமையான கலாச்சாரத்தில் மூழ்கிய ஆத்திகனுமல்ல. 

ஆனால் எனக்கும் மேலே ஒரு சக்தி உண்டு அதுவே எண்ணிப்பார்க்க முடியாத வகையில் எதிர்பாராத வேளையில், எதிர்பார்க்காத நிகழ்வுகளை எம்மீது திணிக்கிறது எனும் விளக்கம் அல்லலுறும் வேளையில் மனதை இலேசாக வருடிக் கொடுக்கிறது. 

அந்தச் சக்திக்கு ஒரு பெயர் கொடுத்து அது அடுத்தவருக்கு எவ்வகையிலும் இடையூறு விளையாத வகையில் வணங்குவது தான் ஆத்திகம் என்றால் நான்கூட ஆத்திகனே !
     
இதிகாசங்கள் இதயத்தில் ஏற்படுத்திய ஏற்ற இறக்கங்களை இலேசாக உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

மீண்டும் வருவேன்
சக்தி சக்திதாசன்

Tuesday, August 08, 2023

அழியாத நினைவுகள்

எமது இதயத்தில் பலவகையான நினைவுகள் புதைந்து போயிருக்கின்றன. அவர்ரீள் சில இனிமையான ராகங்களை மீட்டுபவையாகவும், வேறு சில சோக முஹாரிகளாகவும் அமைந்திருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை மீளப் பரிசோதிக்கும் போது உணர்வுகள் மீட்டப்பட்டு ஒருவிதமான அமைதி மனதுக்குக் கிடைக்கிறது.

அப்படியாக என் மனதிலே புதைந்து கிடக்கும் ஒருவரின் நினவை சிறிது அலசிப் பார்க்கும் முயற்சிதான் இது.

சுமார் 17 வருடங்களுக்கு முன்பாக எமது வழமையான வருடாந்தச் சென்னைப் பயணத்தின் போது, எமது இல்லத்துக்கு முன்பாக ஒரு ஆட்டோவை வழிமறித்தோம்.

உள்ளே அமர்ந்திருந்த ஆட்டோ சாரதி சாதாரணாமானவராகத்தான் தெரிந்தார். வயது சுமார் அறுபதைத் தாண்டியிருக்கும். முகத்திலே வெள்ளை வெளீரென்று வளர்ந்திருக்கும் தாடி மீசையுடன் ஒருங்கே அமைந்திருந்த அமைதி என்னை ஈர்த்தது.

என் மனைவிக்கு ஒரு நல்ல பண்புண்டு. அதாவது நாம் காரிலோ அன்றி ஆட்டோவிலோ, அன்றி பஸ்ஸிலோ எங்கு பயணம் செய்தாலும், சாரதியுடனோ அன்றி எம்மைச் சூழ்ந்திருக்கும் பயணிகளுடனோ பேச்சுக் கொடுப்பதை மிகவும் விரும்புவாள்.

ஆட்டோவில் அமர்ந்து தி.நகரை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் போது வழக்கம் போல எனது மனைவு சாரதியுடன் பேச்சுக் கொடுத்தாள்.

" நான் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றவன் அம்மா, ஓய்வு பெற்ற பின்னாலும் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் ஆட்டோ ஓட்டுகிறேன்" என்ற அவரை எனது கண்கள் வியப்புடன் நோக்கின.

வியப்புடன் நோக்கிய எனது கண்களில் இருந்த ஆச்சர்யத்தைக் கண்ணுற்ற அந்த மனிதர் " என்னங்க ஜயா? திகைச்சுப் போயிட்டீங்க போலிருக்கே ! ஒரு அரசாங்க ஆபிசரின் டிரைவராக சர்வீஸ் போட்டிருக்கேன் " என்றார்.

பயண முடிவில் தி.நகரில் இறங்கும் போது மிகவும் சதாரணமான ஒரு தொகையை எம்மிடம் கேட்டுப் பெற்றுக்கொண்ட அவர் , எனது மனைவியைப் பார்த்து " கைப்பையை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்கம்மா, இந்த ஏரியாவில திருட்டு அதிகம்" என்று ஒரு அன்பான உறவினருக்குரிய தோரணையில் அறிவுரை சொன்னார்.

அன்று முழுவதும் அந்த மனிதரின் பண்பும், மனிதாபிமானமும் எமது மனங்களை விட்டு அகலவில்லை என்பது அன்றிரவு படுக்கையில் எனது மனைவியுடன் அன்றைய நிகழ்வுகளை அலசும்போதுதான் எமக்குப் புரிந்தது.

அப்படி ஆரம்பித்ததுதான் திரு. ராமானுஜம் அவர்களின் அறிமுகம். அதன் பின்பு நாம் வெளியே எங்காவது போவது என்றால் ஆட்டோவைத் தேடும் எமது கண்கள் அதனுள் அமர்ந்திருக்கும் சாரதியைத் தேடுவது வழக்கமாகி விட்டது.

அப்போது ஒருநாள் " ராமானுஜம் சார் நீங்க ஒரு செல் போன் வாங்கீட்டிங்கன்னா ப்ராப்ளமே இல்லையே ! தேவையான போது உங்களையே நாம கூப்பிட்டுக்கலாமே ! " என்ற என்னைப் பார்த்துச் சிரித்த அவர்,

" அது என்னமோங்கய்யா எனக்கும் அந்த செல் போனுக்கு சரிப்பட்டு வராது என்னு தோணிச்சு .. " என்றார். மீண்டும் ஏதோ நினைத்தவராக " நீங்க அடுத்த வாட்டி வரும்போது நான் ஒரு செல் போன் எடுத்திருப்பேன்" என்று சொன்னார்.

அடுத்த வருடம் நான் லண்டனிலிருந்து சென்னைக்கு வரும் வேளையில் , எனது மாமனாரின் மூலம் நான் வரும் தேதியை அறிந்து கொண்ட அண்ணன் ராமானுஜம், வீடு தேடி வந்து நம்மிடம் தனது செல் போன் நம்பரைக் கொடுத்தார்.

அன்றிலிருந்து எங்கு போவதென்றாலும் அவர்தான் எம்மை அழைத்துச் செல்வார் ( ஏற்கனவே யாரையாவது எங்காவது அழைத்துச் செல்லாமலிருந்தால்). அது மட்டுமல்ல தனக்கு வர முடியாது இருந்தால் நாம் போகும் இடத்துக்கு எவ்வளவு நியாயமான ஆட்டோ கட்டணம் என்பதை எமக்கு அறிவுரையாகச் சொல்லி விடுவார்.

அப்போதுதான் ஒருநாள் " ராமானுஜம் சார் தயவு செய்து என்னை நீங்க ஜயா என்று அழைப்பதை நிறுத்தி விடுங்கள். தம்பி என்று அழையுங்களேன் !" என்ற என்னைப் பார்த்து தனக்கேயுரிய புன்முறுவலோடு " சரி தம்பி" என்றார்.

எனக்கு ஒரு நேர்மையான அண்ணன் கிடைத்த திருப்தி ஏற்பட்டது.

2008 ஆண்டு ஜனவரி மாதம் நாம் சென்னை வந்த போது ஒருமுறை, அப்போது லண்டன் வைத்தியக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த என் மகன் கேட்டிருந்த இரண்டு வைத்திய நூல்களை வாங்குவதற்காக அண்ணன் ராமானுஜம் அவர்களின் ஆட்டோவில் சென்றேன்.

நான் என்ன விடயமாகச் செல்கின்றேன் என்பதை அவரும் கேட்கவில்லை(அவருக்கேயுரிய நாகரீகம்) , நானும் சொல்லவில்லை.

அந்நூல்களைத் தேடி சென்ட்ரல், ஏக்மோர், பாரீஸ் கார்னர் என்று அலைந்து கொண்டிருந்த போது, " தம்பி என்ன தேடுகிறீர்கள்?" என்றார் ராமானுஜம். நான் விடயத்தைக் கூறியதும், " என்ன தம்பி, இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா? " என்று அண்ணனுக்குரிய பாணியில் கடிந்து விட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு அந்நூலகத்தின் பிரதான பொறுப்பாளராகவிருந்த ஒரு அம்மாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்பு அவரே எனது தேவையை அந்த அம்மாளுக்கு எடுத்துக்கூறி அவர் நூலகத்துக்கு கொள்வனவு செய்யும் வழியில் எனக்குக் அந்நூலை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

பின்பு நாம் திரும்புகையில் " தம்பி இதுதான் விஷயமென்று நீங்க சொல்லியிருந்தா, நீங்க இவ்வளவு அலைஞ்சிருக்க வேண்டாமே ! நானே அந்நூல்களை வாங்கியாந்து குடுத்திருப்பேனே !" என்று சொன்ன அந்தத் தூய்மையான உள்ளத்தின் உயர்ந்த குணத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்தமுறை நான் சென்னை புறப்படும்போது வழக்கம் போல அண்ணன் ராமானுஜம் அவர்களை அழைத்தபோது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அண்ணன் பேசும் போது ஜி.எச் ஹாஸ்பிட்டல் வார்ட்டில் இருந்து பேசினார். வயிற்றுப் போக்குடன் இரத்தமும் சேர்ந்ததினால், பலவிதமான பரிசோதனைகளுக்க்ட்படுத்தப்பட்ட நிலையில் அங்கே அனுமதிக்கப் பட்டிருந்தார். ஆட்டோவை விற்று விட்டதாகச் சொன்னார்.

" கவலைப்படாதீர்கள் அண்ணா, ஆண்டவன் கைவிட மாட்டான். வந்து பார்க்கிறேன் " என்று சொல்லி சென்னை போய்ச் சேர்ந்தேன்.

அண்ணாமலையாரின் தரிசனத்தை முடித்துக் கொண்டு மனைவியின் ஊரான கடையநல்லூருக்குச் சென்று திரும்பி வந்தது உங்களை வந்து பார்க்கிறேன் என்று அவருடன் பேசிய எனது செல்பேசி உரையாடல் தான் அவருடனான கடைசிப் பேச்சு.

நான் ஏற்கனவே சிலருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு அவசரமாக சென்னையில் இருக்க முடியாமல் கிளம்பியதால் அவரை உடனடியாகப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

கடையநல்லூரில் இருந்து அவரது மனைவியுடன் பேசும்போது

 சீரியஸான ஆபிரேஷன் முடிந்து, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்" என்ற அவரது மனைவியின் கவலை தோய்ந்த குரலைத்தான் கேட்க முடிந்தது.

நான் லண்டன் திரும்புவதற்கு முதல் நாள் இரவு தான் சென்னைக்குத் திரும்பினேன். அவரிப் பார்ப்பதற்கு ஓடோடிச் சென்ற எனக்கு அவர் தெய்வலோகம் போய்ச்சேர்ந்த செய்திதான் காத்திருந்தது.

நான் அவருக்காக கொண்டு சென்ற சில பொருட்கள் மட்டும் அண்ணணின் இல்லத்தைச் சென்றடைந்தது.

கனத்த இதயத்துடன் ஒரு நல்ல அண்ணனை இழந்த கனத்த மனத்துடன் அவரது இறுதி ஊர்வலத்தைப் பார்த்து விட்டு லண்டன் திரும்பினேன்.

இப்படியான ஒரு நல்ல மனிதனின் உறவை எனக்குச் சிலகாலம் மட்டுமே கொடுத்த அந்தக் காலத்தின் கொடூரத்தை எண்ணி நான் வேதனைப்படாத நாட்களில்லை.

சுயமரியாதை, அன்பு, பண்பு அனைத்துக்கும் ஒரு உதாரணமான ராமானுஜம் அண்ணனின் மறைவின் நினைவுகளின் ராகம் முஹாரியாக இருந்தாலும், அந்த உன்னதமான மனிதரின் பழகிய சில நாட்களின் நினைவுகள் கல்யாணி ராகமாகத்தான் நெஞ்சிலே இசைக்கின்றது.

உலகத்தில் பிறந்தது முதல் இறக்கும்வரை பலரைச் சந்திக்கிறோம். சிலரே எமது நினைவில் நிற்கிறார்கள். என் நினைவில் நிறைந்த மனிதரைப் பற்றி என் இதயக்கதவைக் கொஞ்சம் திறந்து உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

கனத்த இதயத்துடன்
சக்தி சக்திதாசன்