Wednesday, September 27, 2023

உள்ளத்தின் ஓலம்

உள்ளத்தின் ஓலம் உண்மையைத்தான் பேசுகிறது .

ஆனால் அதற்கு ஓசை இல்லை. 

உண்மைகள் உள்ளத்தின் சுவர்களோடு முட்டி மோதிக் கொள்கின்றன. 

ஆனால் அதை உடைத்துக் கொண்டு வெளியே வரக்கூடிய விசை கிடையாது .

எதையும் அசை போட்டுப்பார்த்த பின்னால் அதன் எடை புரிகிறது . 

பல சமயங்களில் உண்மையைச் சொல்ல வேண்டும் எனும் ஆதங்கம் ஏற்படுகிறது ஆனால் சொல்லும் உண்மை எதிரே அதை ஏற்றுக்கொள்பவரின் உள்ளத்தில் என்ன தாக்கத்தை விளைவிக்கப் போகிறது எனும் ஆதங்கம் அதைத் தடுத்து விடுகிறது.

மிகவும் அழகாக அடுத்தவருக்கு அறிவுரை கூற எம்மால் முடிகிறது . 

ஆனால் அதே அறிவுரையை எமது வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததிற்கு மிகவும் அழகான காரணங்களை எமக்கு நாமே கூறிக்கொள்கிறோம்.

நடந்து முடிந்த பின்னால் விளைகிற ஞானம் வெகு இலகுவாகக் கிடைக்கிறது. 

ஆனால் அதே நிலைமையில் மீண்டும் அதே முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அந்த ஞானத்தின் மூலம் கிடைத்த அனுபவம் உள்ளத்தின் மூலையில் முடங்கி விடுகிறது. 

இதற்கான விளக்கங்களோ மிகவும் ஆடம்பரமான வார்த்தைகளால் அழகுபடுத்தப்பட்டு எமது மனமெனும் மேடையில் அரங்கேற்றப்படுகிறது..

எது உண்மை ?

விளைவு எதுவாக இருந்தாலும் கவலைப்படாமல் எமது மனதுக்குத் தெரிந்த உண்மையை அப்படியே அப்பட்டமாகப் பேசுவதா ? 

அன்றி நாம் கூறப்போகும் செய்தியால் அல்லது வார்த்தைகளால் உண்டாகப் போகும் விளைவுகள் , மற்றும் இதைச் சொல்லுவதால் யாருக்காவது ஏதாவது பாரிய நன்மைகள் உருவாகப் போகிறதா ?
 
இல்லை நடக்கவிருக்கும் ஒரு பயங்கரத்தைத் தடுத்து நிறுத்தப் போகிறோமா ? 

என்று தீர ஆலோசித்த பின்னால் சொல்ல வேண்டிய விஷயத்தின் ஆழத்தைக் கூட்டி அல்லது குறைத்துச் சொல்லுவதா?

உண்மை பேசியதால் அரிச்சந்திர மகராஜாவுக்கு விளைந்ததாகக் கூறப்படும் நிகழ்வுகள் எமக்கு உண்மை பேசவேண்டியதின் அழுத்ததைப் புரியவைக்கக் கூறப்பட்டிருந்தாலும் , இப்போதைய 21ம் நூற்றாண்டிலே இளைய தலைமுறை அதை வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்துடன் பார்க்கிறதா ?

அதாவது , உண்மை பேசியதால் நாடிழந்து , வீடிழந்து , குடும்பத்தையிழந்து அவலப்பட்ட அந்த மன்னனுக்கு நடந்ததைப்போல் எமக்கும் நடக்கக்கூடாது என்றால் நாம் எப்படி நடக்கக்கூடாது என்ற ஒருவகையான விளக்கத்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்திலேயா நாமிருக்கிறோம் ?

கேள்விகள் இதயத்தில் ஓயாத ஓலங்களாக எழுந்த வண்ணம் தான் இருக்கிறது.

இன்றைய சமுதாயம் ஒரு அவசர சமுதாயம். 

இதில் சம்பிரதாயங்கள் உலக்கப்பட்டுக்கொண்டு , சரித்திரங்கள் மறக்கப்பட்டுக் கொண்டு மனித இனம் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு எதையோ தேடி ஓடிக்கொண்டேயிருக்கிறது. 

அந்த ஓட்டத்தின் முடிவில் அவை அடையும் இலக்கு என்ன ? 

அது எதிர்காலச் சந்ததிக்கு ஒரு எடுத்துக் காட்டாக , சமுதாய முன்னேற்றத்திற்கு வழிகோலுகின்றனவா?

இனப்பற்று , மொழிப்பற்று என்பன பற்றி எமக்குள் நாமொவ்வருவரும் தனித்தனியான வரைவிலக்கணங்களை , அளவுகோல்களைக் கொண்டு மற்றவரைப் பற்றிய அபிப்பிராயங்களை வகுத்துக் கொண்டே செல்கிறோம். 

எமது செயற்பாடுகள் சமகால இளம் சந்ததியினரின் தேவைகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறதா ?

நாம் நடந்து கொண்டிருக்கும் பாதையிலே எத்தனையோ விதமான , வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டவர்களைச் சந்திக்கிறோம் . 

மற்றவர் வாயிலிருந்து வரும் உண்மையை வெகு இலகுவாக ஏற்றுக்கொள்ள எமது மனம் ஏனோ மறுக்கிறது . 

எமக்கு வசதியான , மனதுக்கு இதமானவைகளை மட்டும் வலுக்கட்டயமாக வரவழைத்து எம்மனதுக்குள் நுழைய விடுகிறோம்.

ஒருவர் சொல்லும் கருத்தை எதிர்க்கும் போது வரும் விரைவான வேகம் , ஆதரிக்கும் போது கொஞ்சம் தடைப்படுகிறது . 

கேள்விகள் நெஞ்சத்தில் எழுப்பப்பட்டு அதற்கு சரியான , உளசுத்தியான பதில்களை அறிவதன் மூலம் தான் எமது மத்தியில் ஒரு கருத்துச் சுதந்திரமிக்க , செழிவான இளைய சந்ததியை உருவாக்க முடியும்.

பாரதி ,பாரதிதாசன்,கண்ணதாசன் என கருத்துக்களில் பதிந்திருக்கும் இந்த மனிதத்துவம் மிக்கவர்கள் , தம்மை நினைவு கூறுவதன் செயற்பாடு எமது தமிழ்ச்சமுதாயத்தை , உலகச்சமுதாயங்களில் முன் சமனாக நிற்கக்கூடிய ஒரு முற்போக்குச் சமுதாயமாக எழுச்சி கொள்ள வைப்பதுவே என்றுதான் சொன்னார்கள்.

தமிழை முன்னெடுப்போம் அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தை கொண்ட கட்டுப்பாடு மிக்க , கருத்துச் சுதந்திரம் பறக்கும் ஒரு சமுதாயமாக எமது இளைய சமுதாயம் பரிணமிக்க பணி புரிவோம்.

நண்பர்களே நான் அறிஞனுமல்லன் , புலவனுமல்லன் அன்றாட வாழ்க்கைக்காக அல்லலுறும் ஒரு சாதாரண மனிதன்தான். 

என் இதயத்தின் ஓலத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். தவறிருந்தால் மன்னியுங்கள் , மகிழ்ந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்.

மீண்டும் வருவேன்
சக்தி சக்திதாசன்

Tuesday, September 26, 2023

கல்வியென்பது . . . .

" கல்வி என்பது ஆடம்பரமான அணிகலனல்ல அது ஒரு அவசியமான ஆடை "

இந்த வாசகத்தை நான் முதன்முறையாகக் கேள்வியுற்றது நான் ஈழத்திலே என் கல்விப்பொதுச் சாதாரண தராதரப் பரீட்ச்சையின் முதல் முயற்சியில் சித்தியடையாத பொழுதே !

எனது பெறுபேறுகளைப் பார்வையுற்ற என் பெற்றோர் அதிர்ந்து விட்டனர்.

தாம் தமது செல்லக்குழந்தையாக வளர்த்த கடைசிப்பிள்ளையும் ஈழத்திலே சர்வகலாசாலையை எட்டிப்பிடிக்க முடியாமல் போகும் வகையில் கல்வியை உதாசீனம் செய்து விட்டானே !
எனும் ஆதங்கம் அவர்களைத் தாக்கியது.

என்னைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பை என் அன்னை என் தந்தையின் மீது சுமத்தி விட்டாள்.

கையில் என் பெறுபேற்றுத்தாளுடன் என் தந்தை கதிரையில் வீற்றிருக்க குனிந்த தலைநிமிராமல் நான் அவர் முன்னே நின்றிருந்தேன்.

பிறந்தநாள் முதல் அன்றுவரை செல்லமாகக் கூட என்னை அடித்திராத,
வன்மையாகக் என்னைக் கண்டித்திராத என் தந்தை என்னை எப்படிக் கண்டிக்கப் போகிறாரோ எனும் அச்சத்துடன் அவர் முன்னே நான் நின்றிருந்தேன்.

அக்கணம்,அச்சமயம் என்னை நான் மிகவும் வெறுத்தேன்.

அந்தச்சூழல் என்னைப் பார்த்து எள்ளி நகையாடியது.

எல்லாமும் எனக்களித்து நான் கேட்ட எதையும் மறுக்காமல் எனக்களித்தனர் அப்பெற்றோர். 

கனவுகளை நனவாக்கும் கடைசிக் கருவியாய் இருந்தவன் நான். 

இப்படி அவர்களின் கனவுகளை உடைத்து நொறுக்கி விட்டேனே எனும் எண்ணம் என்னை வதைத்தது.

மிகவும் கனிவாக " உட்கார் " 
என்றார் என் தந்தை.

அச்சத்துடன் அவர் முன்னே உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து“ தமிழ் , 
இந்து சமயம்,ஆங்கிலம் , கணிதம் இவற்றில் மட்டும் சித்தியடைந்திருக்கிறாயே !
எதிர்காலத்தில் என்ன செய்யப் போவதாக உத்தேசம் ? "
என்றார் இதுவும் கனிவாகவே
“ உங்களைப் போல ஒரு எஞ்ஞினியராக வருவதே நோக்கம் "

என்றேன் கலங்கிய கண்களுடன்

"உன் ஆசை புரிகிறது ஆனால் இத்தகைய பெறுபேறுகளுடன் நீ அத்தகைய நிலையை அடைய முடியுமா? “ 
என்றார் பாசத்துடன்.

அவரது கனிவின் கனம் என் கண்களில் கண்ணீரானது.

“ கல்வி ஒன்றே அழியாத செல்வம் என்பதை மறந்து விடாதே ! 
உன் வாழ்க்கையை நான் வாழப்போவது அல்ல நீ தான் வாழப் போகிறாய் " 
என்றார் இதுவும் பாசத்துடன் தான்.

என்னைக் கனிவாக அணைத்து விட்டு எழுந்து சென்று விட்டார் என் தந்தை.

இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது அவரது முதுகைப் பார்த்துக் கொண்டே நின்ற என் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்தது.

அதன் பின்னமும் திருந்தினேனா என்றால் இல்லை என்பதுவே விடையாகிறது.

வாலிபம் தான் வாழ்க்கை எனும் எண்ணத்தில் நல்ல நண்பர்கள் இருந்தும் ஏனோ என் உள்ளத்தினைப் பதப்படுத்திக் கொள்ள மறந்து விட்டேன்.

பின்பு இலண்டனில் உயர்கல்வி கற்பதற்கான கல்வித் தகமைகளைப் பெற்றதும் லண்டன் வந்ததும் அதுகூட பெருங்கதையே !

இதை எதற்காக என் அன்பு உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று  எண்ணுகிறீர்களா?

ஏன் என்றால் கல்வியின் முக்கியத்துவத்தை அது எமக்கு வாழ்வில் தரப்போகும் உயர் இடத்தை உணர்ந்து கொள்ள தவறி விடக்கூடாதே என்பதற்காகத்தான்.

கல்வி எனும் செல்வத்தைப் பெறுவதற்காக அல்லும் பகலும் பணிபுரிந்து தனியாக நான் லண்டனில் தவித்தேன். 

அப்போதுதான் தம் உடலை வருத்தி என்னை உயர்விக்க உழைத்த என் பெற்றோரின் மகிமையை உணர்ந்தேன்.

கல்வி என்பது இருவகைப்படுகிறது.

ஒன்று இளமையிற் கற்றுச் சிலையில் எழுவதுதைப் போன்றது.

மற்றொன்று வாழ்க்கை எமக்கு அனுபவப் பாடமாகக் கற்றுத்தருவது.

இளமையில் எமது பெற்றோரும்,
உற்றாரும் உகந்த வகையில் எமக்கு உதவி கல்வியைப் புகட்டும் போது அதனை முறையாகப் பயன்படுத்தி கற்றோமானால் பின்பு வரும் அனுபவப் பாடமானது சுவையோடு சேர்ந்ததாக இருக்கும்.

என்னைப் போல முதலாவது சந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டால் பின்பு கசப்பான அனுபவப்பாடங்களின் மூலமே கல்வி பயில முடியும்.

ஏதோ ஆண்டன் கிருபையினாலும் எனைக் கைப்பிடித்த மனையாளின் அன்பான வழிகாட்டுதலினாலும் இன்று அக்கசப்பான அனுபவங்களைச் சுவையாக உங்களுடன் பகிர்ந்து கொள்லக்கூடிய ஒரு நிலையில் அந்த அனைவர்க்கும் பொதுவான இறை என்னை வைத்திருக்கிறான்.

 கல்வி என்பது அதிகமாகப் படித்து எம் அறிவுத்திறமையினால் மற்றையோரைச் சிறுமைப்படுத்த உபயோகிக்கப்படும் ஆயுதமல்ல.

கல்வியின் மகத்துவத்தை மற்றையோருக்கும் உணர்த்தி, 
எமது வாழ்க்கையை நாம் நல்ல வழியில் மகிழ்வாக வாழ்வதோடு அடுத்தவருக்கு உதவுவதில் உள்ள ஆனந்தத்தை புரிந்து கொண்டு வாழும் வகையில் நாமும் வாழ்வதுவே உண்மையான கல்வியின் பயனாகும்.

எம்மை ஈன்றவர்கள் நாம் யாராக இருப்போம் எனும் நம்பிக்கையில் பிள்ளைகளாகப் பெறுவதில்லை.

யார் தமக்குப் பிள்ளைகளாக வாய்த்தாலும் அவர்கள் நல்ல முறையில் பேர் சொல்லி வாழும் வகையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுவே அவர்களது நோக்கமாகவிருக்கும்.

அவ்வினிய தெய்வீக உள்ளங்களில் ஒளிந்திருக்கும் கனவெனும் திரிக்கு வெளிச்சம் கொடுக்கக் கூடியவர்கள் நாமே !

எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவற விடாமல் அவற்றை எமக்கும் மற்றையோருக்கும் பயனுள்ள்ள வகையில் வாழ்வதற்கு ஆதாரமாகத் திகழ்வது கல்வியே.

இன்றைய தலைமுறை கல்வி பயில்வதற்கு பல வழிகள் இருக்கின்றன.

விஞ்ஞானயுகத்தில் இவ்வழிகளைப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ளத் தவறுவது மாபெரும் குற்றமாகும்.

இனிய உள்ளங்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படவேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

மீண்டும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Thursday, September 21, 2023

விரிக்காதவரை சிறகுகள் கூட பாரம் தான் !

சிறகுகளை விரித்துப் பார்க்காதவரை பறவைக்கு அதுகூட பாரமாகத்தான் தெரியும்.

ஆனால் கஷ்டப்பட்டு சிறகுகளை விரித்து விட்டால் வானம் கூட தொடும் தூரத்திலே எனும் நம்பிக்கையைப் பெற்று விடுகிறது.

நாம் முயற்சிக்காதவரை, நம்மால் முடியும் எனும் நம்பிக்கை கொள்ளாதவரை எந்த ஒரு சிறு காரியமும் ஒரு பெரிய சிக்கலாகத்தான் தோன்றும்.

அன்னை தந்தையின் அரவணைப்பிலே வாழ்கிறோம்.

வளர்ந்து பெரியவரானதும் ,எமக்கென்று ஒரு குடும்பம் வந்ததும் நம் அன்னை தந்தை இலகுவாக எமக்காற்றிய பணிகளெல்லாம் இப்போ நாம் எமது குடும்பத்துக்காக ஆற்றும் போது மிகப்பெரும் சிக்கலாகத்தான் தோன்றும்.

திறமை என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டும் ஆண்டவன் கொடுத்தனுப்பும் பரிசல்ல.

அது எம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு மூலதனமாகும் .

என்ன ஒவ்வொருவருக்கும் அது வித்தியாசமான துறைகளிலே மிளிரும்.

ஆனால் எமக்குள்ள திறமையை அதற்குரிய சரியான துறையைக் கண்டெடுத்து அதனை விரிவுபடுத்துவதே எமக்கான சவாலாக அமைகிறது.

சிலருக்கு அது வெகு இலகுவாக அவர்கள் நடந்து கொண்டிருக்கும் பாதையிலேயே அமைந்து விடுகிறது.

மற்றும் பலருக்கோ பல திசைகளில் பயணப் பாதையை மாற்றியமைக்கும் போதுதான் அவர்களது திறமைக்கான சரியான பாதையைக் கண்டெடுக்க முடிகிறது.

இங்கேதான் நம்பிக்கையின் வலு உதவுகிறது.

தன்னம்பிக்கை அற்றோர் வெகு விரைவில் மனம் தளைர்ந்து போய் விரக்தியில் தமது பயணத்தையே கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அப்படி இந்தத் தன்னம்பிக்கையின் விசேடம் தான் என்ன ?

தன்னம்பிக்கைக்கும் ஆணவத்திற்கும் இருப்பது ஒரு துல்லியமான வரம்பே !

தன்னம்பிக்கை தனது வரம்பை மீறும் போது அது ஆணவமாக உருப்பெறுகிறது.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை .

என்னால் மட்டும் தான் முடியும் என்பது ஆணவம்.

என் வாழ்வினில் என்னால் செய்ய முடியாதவற்றை வீண் வீம்பினால் செய்ய முடியும் என்று மூக்குடைபட்ட காலங்களும் உண்டு அதே போல இலகுவாக செய்யக்கூடியவற்றை என்னால் முடியுமா ?
என்று தன்னம்பிக்கையை கைவிட்ட காரணத்தினால் செய்யத்தவறிய காலங்களும் உண்டு.

இது எனது கடந்த கால கசப்பான அனுபவங்கள்.

ஆனால் அப்போது என்கூட சில அறிவுரை கூறக்கூடிய நல்ல நண்பர்களும் இருந்தார்கள்,தாம் அறிவுரை கூறினால் நான் எனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் எங்கே தமக்கு என்னால் கிடைக்கும் அனுகூலங்கள் கிடைக்காமல் போய்விடுமோ எனும் அச்சத்தினால் அறிவுரை கூறாமல் விட்ட சுயநலமிக்க நண்பர்களும் இருந்தார்கள்.

இவைகள் நான் எனது புலம்பெயர் வாழ்க்கையில் கண்ட அனுபவங்கள்.

ஆனால் இவற்றின் தாக்கங்களை சரியாக நான் அறிந்து கொள்ளும் போது வாழ்க்கையின் அரைப்பகுதியைக் கடந்து விட்டேன்.

எல்லாவற்றிற்கும் எது காரணம் என்று பார்த்தால் நான் என்மீது கொண்டிருந்த தன்னம்பிக்கையின் வலு குன்றியிருந்ததே காரணம் எனலாம்.

ஆமாம் சிறகுகள் இருந்து விரிக்கப் பயந்த காரணத்தினால் அந்தச் சிறகுகள் எனக்குப் பாரம் எனும் தப்பபிபிராயத்தோடு இருந்ததன் விளைவே அவை.

ஆனால் அந்தச் சிறகுகள் விரிக்கப்பட்டிருந்தால் வானம் கூட தொடும் தூரத்தில் தான் எனும் உண்மை எனக்குப் புரிந்திருக்கும்.

எதையும் நாம் எப்போதும் முடியாது என்று புறந்தள்ளி வைத்து விடக்கூடாது.

எம்மை நாமே பினவரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய விளைகிறோம் ?

அதை ஏன் செய்ய முடியாது ?

செய்ய முடியாத காரணம் நிவர்த்தி செய்யப்படக்கூடியதா ?

நிவர்த்தி செய்யப்பட முடியாதெனில் அச்ச்செயலை விலக்கி வைத்து விட்டு
அடுத்த நடவடிக்கையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது எமக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று ஒப்புக் கொள்வதற்கான துணிச்சலே !

அதிலே எதுவிதமான அவமானமும் இல்லை.

அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதனால் நாம் எதுவிதத்திலும் குறைந்து போவதில்லை.

தத்துவஞானி சாகிரட்டீஸ் கூறியதாவது 

" உலகத்திலேயே நான் தான் அறிவாளி என்று எனக்குப் புரிந்து விட்டது ஏனெனில் எனக்குத் தெரியாதவற்றை நான் எப்போதும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள முயல்வதில்லை "

இதுவே ஒரு மனிதன் தன்னைத்தானே அறிந்து கொள்வதன் முதற்படியாகும்.

ஆங்கிலத்தில் அழகாக 
" Know your limitations “ 
என்று கூறுவார்கள்.

எது தவறு ?

நாம் எதற்குமே லாயக்கானவர்கள் அல்ல .

எம்மால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விடுவதுதான் தவறு.

ஓட முடியாவிட்டால் ,/நட  அதுவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல் ஆனால் எப்போதும் ஒரு அடியாவது முன்னேறிக் கொண்டேயிரு என்றார்கள் அறிஞர்கள்.

திறமைகளை வெளிக்கொணருங்கள்.

அதன்மூலம் வாழ்க்கையில் முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உலகில் எமது அறிவிற்கெட்டியபடி நாமாக வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பமே தரப்படுகிறது.

அது மீண்டும் எமது கதவைத் தட்டுவதில்லை.

சிறகுகளை விரித்துக் கொள்வோம் ஏனெனில் அந்த வானம் கூட தொடு தூரத்தில் தான் உள்ளது.

மீண்டும் பேசுவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Wednesday, September 20, 2023

ஆன்மா பேசினால் . . .

ஆன்மா பேசினால் அது என்ன பேசும் ?

ஆயிரம் கேள்விகளை அடுக்கடுக்காய் கேட்குமோ ?

தான் அணிந்து வந்திருக்கும் இந்த உடையான உடலின் பாத்திரப் புரிதலை அறிய ஆவலாய் இருக்குமோ ?

நாம் கேட்டு வாங்கி வந்த பிறப்பின் சூட்சுமைத்தைத் தொலைத்து விட்டுத் தேடுகின்ற தேடல்களின் தேவையின் அவசியத்தை ஆழப் பதித்து விடும் ஆவலில் தவிக்குமோ ?

வெள்ளை உள்ளத்துடன், கள்ளமில்லா மனதுடன் குழந்தையாய்த் தவழும் போதிருக்கும் மனதினைக் கொஞ்சம் கொஞ்சமாக மாயை எனும் திரை போட்டு மறைக்கத்.தொடங்குகிறது உலக இயக்கம்.

தேடலுக்கான தேவையை , தேவைகளுக்கான தேடல்களுக்குள் தொலைத்து விடுகிறோம்.

எமது வாழ்வின் ஆன்மத் திட்டத்தைத் தொலைப்பது கூட அத்திட்டத்தின் அங்கமே !

ஏனேனில் தொலைத்து விட்டால் தான் அனுபவ வளவுகளுக்குள் நுழைந்து தேடி வந்த அனுபவங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

உள்ளத்தின் ஆழத்துக்குச் சென்று ஆன்மாவின் அனுபவத் தரிசனத்துக்கு தியானமே வழி காட்டுகிறது.

தியானம், ஆன்மா , சுயஅறிதல் எனும் பதங்களைக் கேட்டதுமே ஏதோ " சாமிப் போக்கு " , " பக்தி மார்க்கம் " என்பனவற்றின் அடையாளங்கள் எனும் தப்பான புரிதல்களுக்குள்ளாகி விடுகிறோம்.

அத்தகைய புரிதல்களை உடையவர்கள் ஏதோ இல்லற சராசரி வாழ்வினைத் துறந்தவர்கள் எனும் கோணத்தில் அவர்களைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது.

இத்தகைய மற்றவர்களை பற்றி நாம் எடுக்கும் தீர்மானங்கள் உண்மைக்குப் புறம்பானவை.

" ஆன்மாவைப் பற்றிப் புரிந்து கொள்வதில் என்ன லாபம் ? " எனும் கேள்வி எனை நோக்கி பலமுனைகளில் எழுவதுண்டு.

விந்தை என்னவெனில் இதே கேள்வியை நானும் கூட ஒரு காலத்தில் கேட்டது மட்டுமல்ல அப்படிக் கேட்பது ஏதோ புரட்சிகரமான செயல் என்று கூட எண்ணியதுண்டு.

ஒரு சராசரி இல்லற வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்.

அன்றாட வாழ்வுப் பிரச்சனைகள் ஒரு புறமிருக்க , பாரிய சில பிரச்சனைகள் உடல்.சம்பந்தமாகவோ மனம் சம்பந்தமாகவோ எமக்கு ஏற்படுவதுண்டு.

எம்மில் பெரும்பான்மையோர் அப்பாரிய பிரச்சனைகள் எமக்கு மட்டும் தான் ஏற்பட்டது போலவும், எமக்குத் தெரிந்த மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் எண்ணி இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறோம்.

எனக்கு மட்டும் இது ஏன் இப்போது நடந்தது எனும் கேள்வி பலரின் மனதில் விடையில்லாமல் வினாவிக் கொண்டிருக்கும்.

இதே நிலை ஆன்மாவின் புரிதல்களை அறிந்து தியானம் என்பதைத் தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கொண்ட ஒருவரின் நிலையில் பார்ப்போம்.

எமது வாழ்க்கை நாம் கேட்டுப் பெற்றதே ! நடக்கும் அனைத்தும் எமக்கான ஒரு அனுபவப் பாடமே ! என்பதை அவர் அறிந்திருப்பது யதார்த்தமே !

இடிந்துபோய் உட்கார்ந்து மனதினை அலைக்கழிப்பதற்கு பதில் இதிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதைத்ஜ் தெரிந்து அப்பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்.

எமக்கு நடக்கும் நிகழ்வுகள் எமது கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதனைச் சரியான வழியில் மாற்றுவதும், எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் எம்மீது நிகழ்த்தப்படும் நிகழ்வுகளை ஏற்றுக் கொள்வதும் சுலபமாகி விடுகிறது.

நான் இவ்வுண்மைகளை.அறிந்து கொள்ளும்போது முதுமையின் வாசலுக்குள் காலடி வைத்து விட்டேன்.

ஆனால் கடந்தவைகளை எண்ணிக் கலங்குவதோ தவறான முடிவுகளை எண்ணி வருந்துவதோ அன்றிக் குற்ற உணர்வுக்குள்ளாவதோ தேவையற்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

நடந்துபோன நிகழ்வுகளின் தாக்கத்தினால் விளைந்தவைகளின் அனுகூலத்தை எண்ணிப்பார்த்து வியக்கு முடிகிறது.

இத்தனை காலமும் நடந்தவைகள் நல்ல முடிவையே ஈந்திருக்கின்றன எனும் எண்ணம் வரப்போகும் காலங்களை நேர்மறையாக எதிர்நோக்க வைக்கின்றன.

புத்த பகவானின் " எண்ணம் போல் வாழ்க்கை " ,சுவாமி விவேகானந்தரின் " நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய் " என்பதின் ஆன்மீகப் புரிதல்களின் அடிப்படை புரிகிறது.

பகவத்கீதையில் கூறப்படும்,

எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.

எது நடக்கிறதோ அது நல்கதாகவே நடக்கிறது.

எது நடக்கப் போகிறதோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.

என்கிற வரிகளின் உண்மை அர்த்தம் புரியும்.

நான் நாத்திகம் பேசுவதை கவர்ச்சிகரமான புரட்சி எனும் வாலிப வனவாசத்தைக் கடந்து ஆத்திகம் என்பது மதவெறியின் பயிலரங்கம் அல்ல அதன் உண்மையான அர்த்தம் மதங்களைக் கடந்த ஆன்மீகம் என்ற உண்மையை உணர்ந்த முதுமையின் வாசலுக்குள் நுழைந்திருக்கிறேன்.

தியானத்தின் வழி சென்று தன்னைத் தானே அறிந்து கொள்ளும் முயற்சியில் உள்ளவர்கள் வாழ்க்கையின் அன்றாட மகிழ்ச்சிகளை அனுபவிப்பதில்லை என்பது தவறான எண்ணமாகும்.

விழிப்புணர்வோடு ஒவ்வொரு கணத்திலும் அக்கணத்துக்குரிய மகிழ்வினை அனுபவிப்பது அனைவரினதும் தார்மீகக் கடமையாகும்.

எங்கே நமது பார்வையை வேறுபடுத்தப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியமாகிறது.

சாதாரண மகிழ்ச்சியை அனுபவித்து விட்டு அடுத்த செயல் நோக்கி நகர்வது முக்கியமாகிறது. அடைந்த மகிழ்ச்சிக்கணத்துக்குள் சிக்கி விடாமல் வெளிவருவதே சிக்கலானது.

இதற்குரிய மனத்தெளிவைத் தியானம் தருகிறது.

உற்றார் , சுற்றம் எனும் சூழலுக்குள் சராசரி இல்லற வாழ்க்கையை வாழும் ஒருவரால் தியான நெறியின் மூலம் நல்வழிப்பாதையில் , நேர்மறை எண்ணங்களோடு மகிழ்ச்சியாக வாழ்வது சாத்தியமே !

இப்போது திரும்பக் கேட்டுப் பாருங்கள்,
" ஆன்மா பேசினால் ? " நிச்சயமாக மகிழ்ச்சியான வாழ்வின் சூத்திரத்தைப் பகிர்ந்து கொள்ளும்.

ஆனால் . . . .

அதன் குரல் எல்லோருக்கும் கேட்குமா ?

மீண்டும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Tuesday, September 19, 2023

உள்ளத்தின் ஓசை

ஏதோபிறந்தோம்,ஏதோவாழ்கிறோம்,எப்படியோ போகப் போகிறோம் என்று எதிலுமே மனதை லயிக்காமல் வாழ்ந்து விட்டுப் போவது இலகுவான செயலல்ல..

நாம் எப்படித்தான் எத்தகைய பற்றற்ற ஒரு நிலையில் எமது வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்ந்தாலும் எம்மைச் சுற்றியுள்ள சமூகத்துடன் ஒட்டாமல் வாழ்வதென்பது இயலாத காரியம்.

அத்தகைய சமூகத்தின் பிணைப்பின் அழுத்தம் பல சமயங்களில் ஈடுபடவேண்டாம் என்று நினைத்து ஒதுங்கும் மனம் கொண்டோரைக் கூட இழுத்து ஈடுபட வைத்து விடுகிறது.

சரியானவழியில் நடக்கிறோம்,மற்றவர்களின் மனதைப் புண்படுத்தாது வாழுகிறோம்என்று எண்ணிக் கொண்டு வாழும்போது எங்கிருந்தோ,யாரோ ஒருவர் எமது செய்கை தம்மைப் பாதித்து விட்டதாக எண்ணிக் கொண்டு எம்மீது மனவருத்தம் கொள்ளுவார்.

ஆமாம் இதுதான் யதார்த்தமான வாழ்க்கை.

அப்படியானல் பின் ஏன் தான் இந்த சித்தாந்தங்கள்,வேதாந்தங்கள்?நியாயமான கேள்விதானே !

எம் வாழ்வில் நிகழும் பல செயல்களுக்கான காரணங்கள் எமக்குத் தெரிவதில்லை.தெரிவதில்லை என்று குறிப்பிடுவதை விடப் புரிவதில்லை என்று சொல்வதே பொருத்தமானது.

பல செயல்கள் எம்மீது நிகழ்த்தப் படுகின்றன. அச்செயல்கள் நிகழ்வதற்கு நாம் எந்த வகையிலும் காரணமாகவில்லை பின் ஏன் அது எமக்கு நிகழ்ந்தது ? எனும் கேள்வி நம் எல்லோருடை ய மனங்களிலும் எப்போதாவதுஎழுந்திருக்கும் என்பதுவே. உண்மை.

அப்போது அதைக் கையாளுவதற்கு இரண்டு வழிகள் இலகுவாக எம்முன்னே தென்படும்.வெறும் விரக்திக்கு ஆட்பட்டு "சே ! முறையாக வாழ்ந்ததால் என்ன பயன் ?“ என்று எண்ணித் தான் தோன்றித்தனமான வாழ்வை முன்னெடுக்கலாம். 

அன்றி எமக்கு நடந்த அந்த நிகழ்விற்கு தத்துவரீதியாக சித்தர்களின் வேதங்களின் வழி ஒரு வழியைக் கண்டு மனதைச் சாந்தப் படுத்திக் கொண்டு நம்பிக்கையுடன் எமது வாழ்வின் நெறிமுறைகளை இன்னும் சீர் படுத்திக் கொண்டு முன்னேறலாம்.

இத்தகைய ஒரு மன ஆறுதலை உள்ளங்களுக்கு வழங்குவது ஒன்றே இந்தச் சித்தாந்த,வேதாந்தங்களின் இருப்பிற்கான காரணம்.

வாழும் முறைகளை மனிதன் சரிவரப் புரிந்து கொள்ளத் தவறுவதாலேயே வாழ்க்கை வெகு சுலபத்தில் பலருக்குச் சலித்து விடுகிறது.

வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளுக்காக நாம் பணத்தைச் சம்பாதிக்கத்தான் வேண்டும். ஆனால் அந்தப் பணம் "எம்மைச்சம்பாதிக்க" விடாமல் பார்த்துக் கொள்வதில் சிரத்தை எடுக்காமல் போகும் போதுதான் மனிதாபிமானத்தின் அடிப்படையை இழக்க வேண்டி நேரிடுகிறது.

தேடல்களின் வழி எழும் தேவைகளுக்கானஉந்துதல்களே பல விஞ்ஞானிகளையும் அறிவாளிகளையும் எமக்குத் தந்திருக்கின்றன.தாம் அந்தத் தேவைகளை அடைந்த பின்பு அதைத் தேடும் மற்றவர்களுக்கு அத்தேவைகளை மறந்து வாழும்படி போதிக்கும் போதுதான் அங்கே வேறுபாடுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

இதனால்தான் அரசியல்வாதிகள் இரட்டைவேடம் போடுவதும், ஆன்மீகவாதிகள் இரட்டை வேடம் போடுவதும் உலகில் அரங்கேறுகின்றன.

பணம் சம்பாதிப்பதும் தமது எதிர்காலத்திற்கான தேவைகளுக்காய் இப்போதே திட்டமிடுவதும் மனிததர்மத்திற்குப் புறம்பானது என்பது தவறான கருத்து என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

அப்போ எதனால் மனித மனம் குழம்புகிறது?

எமது தேவைகளுக்கான தேடல்களின் போது அத்தேவைகளை எண்ணி ஏங்கி வாழ்வின் நிம்மதியை இழப்பதே மனித மனதின் குழப்பத்திற்குக் காரணம்.

இன்று செல்வந்தன் என்று நம் கண்ணில் தென்படும் ஒருவரின் இன்றைய வாழ்க்கையைக் கொண்டு அவரைக் கணிப்பிடுவது தவறு.அவர் தனது நேற்றைய வாழ்வில் எப்படி இருந்தார்?அவரதுbஇன்றைய வாழ்விற்கான உழைப்பின் வேகம் நேற்று எப்படி இருந்தது? என்பனவற்றை ஆழ்ந்து சிந்திக்கும் போது அவர்களின் வாழ்வின் முன்னேற்றம் எமக்கு அனுபவ பாடமாகிறது.

அதேநேரம் குறுக்கு வழியில்,பிறரை ஏமாற்றி மற்றவர்களுடைய வாழ்வின் அழிவில் தமது வாழ்வை உயர்த்திக் கொண்டவர்களின் பாதையை நன்கு புரிந்து கொள்வதும் அவசியமாகிறது.

என்னுடைய வாழ்வில் நான் கற்றுக் கொண்ட பாடம் கண்ணால் காண்பதும்,காதால்கேட்பதும் என்றுமே உண்மை என்று எண்ணக் கூடாது. முன்னோர்களின் வார்த்தைகளின் படி "தீரவிசாரிப்பதே உண்மை".

மகிழ்ச்சியைத் தேடி எமது வாழ்க்கையில் நாம் ஓடுவதை விடுத்து. இன்றைய பொழுதை இன்றைய பொழுதாக எடுத்து அப்பொழுதில் எமக்கு இருக்கும் வசதிகளை ஏற்றுக் கொண்டு நிம்மதியாக வாழ்ப்பழகினால் வாழ்வில் மகிழ்ச்சி தானாக.நிலை கொள்ளும்.

மகிழ்ச்சி என்பது எங்கோ புதைத்து வைக்கப்பட்டிருக்கும் புதையல் அல்ல அன்றாட வாழ்க்கையின் நிம்மதியே மகிழ்ச்சி.

பிறர் உயர்வினிலே எமக்கிருக்கும் பெருமையில் உறைந்திருப்பது மகிழ்ச்சி.

இதற்காகவே எனது எழுத்துக்களின் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன்,

“உனக்கும்கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு "

என்றார்.

என் இனிய உள்ளங்களே !இந்த வாழ்க்கை நாம் கேட்டு பெற்றதல்ல.இது எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த எனக்கு இப்போதைய ஆன்மீக விளக்கம் அது எமது ஆன்மாவின் திட்டம் எனும் உண்மையை புகட்டுகிறது.

இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது பல புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகளுக்கான  விளக்கம் கிடைக்கிறது.

இவ்வாழ்வில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் அதே சமயம் எமது நிம்மதியை இழக்காமல் வாழ்க்கையைரசிக்கத் தேவையான வசதிகளுக்காக நேர்மையாக,நியாயமாகஉழைத்து முன்னேறுவதில் எந்தவிதமான தவறுமில்லை.

வசதி என்னும் ஏணியில் ஏறும் போது உங்களுக்கு மேலே இருக்கும்படியில் இருப்பவரைப் பார்த்து பெருமூச்சு விடாமல் உங்களுக்கு கிழே ஏற முயற்சிக்கும் ஒருவருக்கு கைகொடுத்து உயர்த்திக் கொண்டே முன்னேறுவதில் உள்ள மகிழ்ச்சியும்,நிம்மதியும் வேறு எதிலுமில்லை.

மீண்டும்வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Saturday, September 16, 2023

மனமென்னும் மேடை மேலே . . .

சிந்தை எனும் தடாகத்தில் முத்திரை பதித்திடும் எண்ணங்கள் இத்தரை வாழ்க்கையின் உண்மையை சித்திரமாய் வடித்திடும் ஒரு பொழுது.

எந்தையும் தாயும் கொஞ்சி மகிழ்ந்த என் தாய்மொழியில் விந்தைமிகு உலகின் விசித்திர நிலைகளின் தன்மை நற்திறம் கொண்ட நல் அன்பு உள்ளங்களோடு பகிர்ந்தே பேசிடும் பொழுதில் சிறிதாய் நெஞ்சில் ஓர் நிம்மதி.

உழைத்திட நல்வழியும் தந்து , 
உயர்ந்திட நற்பண்புகளும் ஈந்து முற்பல தியாகங்கள் புரிந்து இகத்தினில் எம்மை ஓர் உன்னத சீலராய் ஆக்க முயன்று தம்வாழ்வை முடித்துக் கொண்ட எம்மினிய பெற்றவர் பாதம் பணிந்தேன்.

எப்படி வாழப் போகின்றார் எம் மக்கள் என்று கனவுகளோடு ஈன்றிட்டாலும் எத்தகை வாழ்வினில் புகுந்தாலும் அவர்களை எப்போதும் தப்பாமல் தம் மக்கள் என்று கூறிடும் உன்னத உள்ளங்களின் சொந்தக்காரர் தாம் எம்மனைவரினதும் பெற்றோர்.

ஏதோ வந்தேன், ஏதோ வாழ்கிறேன் என்று நான் வாழ்ந்த காலங்களும் உண்டு.

இவ்வழி வாழ்ந்து இவ்விடம் ஏக வேண்டுமென்று நான் எண்ணி வாழ்ந்த காலங்களும் உண்டு.

இவ்விரு காலங்களுக்கும் பொதுவானது எது என்று பார்த்தால் இரு வழிப் பாதைகளும் நானிட்டதில்லை எனும் மாபெரும் உண்மையே பொதுவென்பேன்.

“நான்" 

எனும் இந்த இரு சொற்களுக்குள் உழன்ற வேளைகளில் எத்தனை பெரிய முட்டாளகவிருந்தேன் எனும் உண்மை என் உள்ளத்தை இன்று கீறிப்பார்த்து கொக்கரிக்கிறது.

இல்லாததைத் தேடி இருக்கும் கணங்களின் மகத்துவத்தை மறந்து வெற்றியேயில்லாத ,இலக்கு இல்லாத ஒரு ஓட்டப்போட்டியில் ஓடிய காலங்களை எண்ணிப்பார்த்து வியக்கிறேன்.

அர்த்தமில்லாத தேவைகளின் அளவில்லாத ஆசைகளின் வழி ஓடிய தருணங்களில் உள்ளத்தில் வழிந்தோடிய ஏக்கங்களின் நோக்கங்களை எண்ணிப்பார்த்து என்னை நானே பரிகசிக்கிறேன்.

"உன்னுள் உன்னை நீ தேடிப்பார்" 

என அன்றொரு முகவரியில்லாத முகமறியாத காவி தரித்த துறவியொருவர் என்னைப்பார்த்துக் கூறிய சொற்களில் புதைந்துள்ள சீரிய அர்த்தம் சாதுவாகப் புரியத் தொடங்கிய இவ்வேளையில் தான் வாழ்க்கையின் முழு நோக்கத்தின் ஆரம்பவாயிலை எட்டிப்பிடித்திருக்கிறேன். . .

ஒரு துணியை அடித்துப் பிழிவது அதை வெளுக்க வைப்பதற்காகத்தான் எனும் உண்மை அந்தத்துணிக்குப் புரியும் போதுதான் தான் வெண்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அத்துணி புரிந்து கொள்கிறது.

அதுபோலவே என்மீது நிகழ்த்தப்படும் நிகழ்வுகள்,எனக்குள் நிகழும் உணர்வுகள் எனக்கான என்னைப்ப புரிந்து கொள்ளும் பயிற்சிகளே என்பதை உணர்ந்து கொள்ளும் பொழுதில் அனைத்திலுமே ஒரு அர்த்தத்தைக் காணக்கூடியதாக உள்ளது. . .

இது ஒரு தத்துவக் கட்டுரை அல்ல.

தன்னைத் தானெ புரிந்து கொள்ள முயலும் ஒருவனின் சுய அலசல்.

இது அனைவரோடும் பகிரப்படும் போது அங்கே பலரின் எண்ணத்தின் விசைகள் அழுத்தப்படுகின்றன.

நாமனைவரும் மனிதராகப் பிறந்தோம் எம்மால் கடவுளாக மாற முடியாது ஆனால் எம் வாழ்க்கையில் ஒரு சொற்ப காலமாவது மனிதராக வாழ்ந்தோமா?
என்பதுவே கேள்வி.

எம்மனதினுள் தினமும் நடக்கும் போர் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலானதாகும்.

எமக்கு போதிக்கப்பட்ட புராணங்கள்,

தெய்வீகக் கதைகள் என்பன எம்மனதினுள் நடக்கும் போரில் நன்மையின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்துதற்காகவே.

அவை எம்மதத்தின் வழி , எந்நம்பிக்கையின் வழி,
எம்மொழியில் கூறப்பட்டது என்பது முக்கியமல்ல.

அவையனைத்தினதும் சாரமும் ஒரு நோக்கத்திற்காகவே,

ஒரு முடிவை நோக்கியே எம்மை அழைத்துச் செல்கின்றன.

ஆனால் இதற்குள் தாம் எம்முள் எத்தனை பேதங்கள்?

எத்தனை வேறுபாடுகள்?

இவைகளினால் முன்னேடுக்கப்படும் எத்தனை போர்கள் ?

அதனால் ஏற்படும் எத்தனை உயிரிழப்புகள் ?

இவையனைத்தும் மனிதர் மனிதாபிமானத்தை மறந்து போவதினாலேயே நிகழ்கின்றன.

எதுவும் எம் கையில் இல்லை என்பதை மறந்து அனைத்தும் எம்மால் நிகழ்த்தப்படுகின்றன எனும் ஆணவத்தின் பிரகாரமே இவ்வழிவுகள்,சிலவேளைகள் சில நிகழ்வுகள் எம்மை நடத்தும் வழிகள் வித்தியாசமானவையாக விளங்காதவையாக இருக்கலாம் ஆனால் அதற்கான காரணங்களில் வலுவான நியாயம் இருக்கும்.

நாம் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வில் வெவ்வேறு பாத்திரங்களை வகிக்கிறோம்.

அப்பாத்திரங்களுக்கேற்ப எமது கடமைகளை நிறைவேற்றுவது எமது கர்மமாகிறது.

ஆனால் அக்கடமையின் காரணம் அனைவருக்கும் புரிவது என்பது கனவே.

எமது கடமையின் அர்த்தம் யாருக்கோ புரியவில்லை என்பதற்காக எமது கடமையிலிருந்து நாம் வழுவுவது தார்மீகமாகாது.

எப்படியும் வாழலாம் எனும் ஒரு இளைஞனாக இங்கிலாந்துக்குள் காலடி வைத்த நான் எனக்கு என்மீது காலம் நடத்துய நிகழ்வுகளினால் இப்படித்தான் வாழ்வேண்டும் எனும் முதுமைப்பருவத்தின் வாசலினுள் நுழைந்து விட்டேன்.

இவ்விடைக்காலத்தில் நான் கற்றுக் கொண்டது என்ன ?

அன்பே சிவம் !அன்பே வேதம் !அன்பே மதம் !

ஆனால் அன்பு என்பதை எம்மை விழ்த்துவதற்காக அடுத்தவர் உபயோகிக்கும் ஒரு ஆயுதமாகாமல் அது எமது பலவீனமாகாமல் வாழப் பழகிக் கொள்வதே உத்தமமான வாழ்க்கைக்கு உயரிய வழியாகும் எனபதே நான் கற்றுக் கொண்டது !

ஆனால் எனது கல்வி இன்னும் முடியவில்லை ஏனெனில் எனக்கு வாழ்க்கைப் பாடத்தைப் புகட்டும் ஆசிரியர்கள் என எண்ணிக் கொண்டிருப்போர் இன்னும் தம்மத் தாமே புரிந்து கொள்ளவில்லை.

எனவே நான் இன்னமும் மாணவனே !

அது எனக்கு பரம ஆனந்தமே !

மீண்டும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Monday, September 11, 2023

சலனமில்லாத வாழ்க்கை சாத்தியமா ?

"சலனமில்லாதொரு வாழ்க்கை " இது சாத்தியமா? 

சாத்தியம் இல்லை என்பது நம்மில் எல்லோருக்கும் தெரிகிறது. 

இருந்தாலும் அத்தகையதொரு வாழ்க்கையை நோக்கி அனைவரது மனமும் ஏங்குகிறது. 

அதனை அடைவதற்காக நம்மால் எடுக்கக் கூடிய முயற்சிகள் அனைத்தையும் எடுக்கிறோம், எடுக்கத் துடிக்கிறோம்.

சலனமில்லாமல் ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறோம். 
அத்தகைய ஒரு சலனமிலலத நதியை பார்க்கும் போது எம் மனதுக்குள் ஒரு அமைதி பிறக்கிறது. 

ஆனால் அந்நதியின் கோணத்தில் பார்க்கும் போது அந்தச் சலனமில்லாத சமயம்  அதனுடைய வாழ்க்கையிலே ஒரு சில சமயங்களே ! ஒரு சில நிகழ்வுகளே !.

ஏன் என்கிறீர்களா?

நதியின் நடையை எடுத்துக் கொள்ளுங்கள் நாம் அந்நதிக்கரையோரம் வாழும் மனிதராக இல்லாவிட்டால் அதன் சலனமில்லா சமயம் நாம் காணும் அந்தச் சில நிமிடங்களோ அன்றி சில மணிகளோ அன்றி சில நாட்களோ தான்.

அந்த நதி ஊற்றெடுக்கும் மலையில் அடாத மழை பெய்தால் அந்நதியின் சலனத்தில் மாற்றம் ஏற்படுகிறது, அதேபோல அம்மலைச்சாரல் மழையையே காணாத தகிக்கும் கோடையில் வாடும் போது அந்நதி வெறும் கீறாக தானிருக்கும் அடையாளமே இல்லாது வற்றிப் போயிருக்கும்..

ஆக அந்நதியும் இம் மனித வாழ்க்கை போல சலனங்களுக்கு உட்பட்டதுதான்.

முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மையான வாக்கு. ஆனால் விடாமுயற்சி எடுத்தும் எவ்வகையான முன்னேற்றமும் காணமுடியாமல் தவிக்கும் மனிதர்கள் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருக்கிறோம். 

ஏன்? சமயத்தில் நாம் கூட அத்தகையவர்களாக இருந்திருக்கிறோம் இல்லையா?

அப்படியானால் "முயற்சி திருவினையாக்கும்" என்ற வாதத்தின் உண்மை ?

இதற்காகத்தான் எமது முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த பழமொழிகள், கூற்றுக்களிலேயே சில முரண்பாடுகளைக் காண்கிறோம்.

உதாரணமாக   உபதேசங்களை எடுத்துக்கொள்ளுங்கள்,

“தருமம் தலைகாக்கும் " என்று சொல்கிறார்கள் பின்பு "ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு" என்கிறார்கள், “தனக்கு மிஞ்சித்தான் தானமும், தர்மமும்" என்கிறார்கள்.

இதைப்படித்த ஒருவர் "என்ன இது ஒரே குழப்பமாக இருக்கிறதே !” என்று கலங்கலாம். 

ஆனால் இதன் உள்ளார்த்தத்தை, எமது முன்னோர்களின் விவேகத்தை நாம் மேலெழுந்தவாரியாகப் பார்க்காது, அதன் தலைப்பு வரிகளினுள் கொஞ்சம் ஊடுருவிப் பார்க்க வேண்டும்.

இத்தகைய பழமொழிகள், கூற்றுக்கள் முரண்பாடாகச் சொல்லப்படவில்லை. 

நாம் எமது வாழ்க்கையில் யதார்த்ததைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது..

மற்றவர்களுக்கு உங்களால் "முடிந்த" உதவிகளைச் செய்யுங்கள் என்பதுவே இதன் உண்மையான அர்த்தமாகும். 

உங்கள் குடும்பத்தைப் பட்டினி போட்டு விட்டு மற்றொருவரின் "வசதிக்காக" உதவாதீர்கள். 

உங்களைச் சுற்றியுள்ள, உங்களை நம்பியுள்ளவர்களின் நலன்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள் என்பதுவே அதன் மெய் அர்த்தமாகும்.

செல்வந்தர் என்ற நிலைக்கு ஒருவர் தனை உயர்த்திக் கொள்ளவில்லையானால் உதவி செய்வதற்கென்று ஒருவர் உருவாக மாட்டார்.

தனக்கென ஒரு நிலையான செல்வத்தை ஒருவர் தேடிக் கொள்ள முற்படுவது எவ்வகையிலும் தவறாக ஆகாது. 

ஆனால் எங்கே அது தடம் புரள்கிறது என்றால் மற்றவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து தான் முன்னேற முற்படும்போதுதான் முரண்பாடுகள் முன்னுக்குத் தள்ளப்படுகின்றன.

தேவைக்கதிகமாக ஒருவர் செல்வத்தைத் திரட்டி பதுக்கி வைத்துக் கொள்ள முற்படும்போது அச்ச்செல்வம் நோயுற்ற செல்வமாகிறது.

தேவைக்கதிமாக மழை பொழிகிறது என்று வைத்துக் கொள்வோம் அது ஆற்றிலே விழும்போது அது ஊரெல்லாம் பயனளிக்கிறது.

அதுவே ஆங்காங்கே குட்டையாக தேங்கும் போது யாருக்குமே உதவாமல் வெறும் கொசுக்கலின் ஊற்பத்தியினால் நோய்களைத்தானே உருவாக்குகிறது.

அதே போலத்தான் செல்வமும். ஆற்றிலே மழை பொழிவது போல் கருணயுள்ளவர் கரங்களில் அது திரளும்போது உலகிற்கு நன்மை பயக்கிறது, அதுவே பரந்துபட்ட பார்வையற்ற ஒருவரிடம் சிக்கும்போது தவறுகளின் கருவறையாகிறது..

நான் எப்படி இத்துனை தூரம் உயர்ந்திருக்கிறேன், எனது பாதையிலே எனக்குக் கைகொடுத்தவர்கள் யார் யார் என்பதையெல்லாம் மறந்தவர் மனதில் மனிதத்துவம் மங்கிவிடும்.

ஓடிச் சென்று ஒரு ரெயிலிலே தொங்கி எமது பயணத்திற்கு ஒரு இடத்தை எடுத்து விட்டோம், அப்போது நாம் ஓடும் போது எமது வழியில் குறுக்கே வராமல் ஒதுங்கி வழி விட்டவர்கள் இருப்பார்கள். 

வேண்டுமென்றே எமக்கு இடைஞ்சலாக நடுவழியில் வந்து நிற்பவர்கள் இருப்பார்கள். 

ரயிலில் தொங்கிக் கொண்டு எமது பிரயாணம் தொடங்கும் போது எம்முடன் ஓடி வந்து ஏற முடியாமல் ஏக்கத்துடன் எம்மைப் பார்த்துக் கொண்டு நிற்பவர்கள் இருப்பார்கள்.

அட நாம் ஏறவில்லை, நாம் அடுத்த ரயிலைப் பிடிப்போம் அவனாவது ஏறிவிட்டானே என்று எம்மை அறவே தெரியாமல் இருந்தும் கையசைத்து எம்மை வழியனுப்பும் சிலர் இருப்பார்கள்.

எமது பயணத்தில் நாம் இலகுவான நிலையை அடைந்து தொங்கும் நிலையிலிருந்து உட்கார்ந்து கொள்ளும் நிலை வரும் போது நாம் சந்தித்த அத்தனைபேரின் நினைவுகளும் எம் நெஞ்சை விட்டகலாமல் இருக்க வேண்டும். 

அடுத்த ரயில் நிலையத்திலே எம்மைப் போல ஏறத் துடிக்கும் ஒருவனின் கையைப் பிடித்து ஏற்றிவிட முயற்சிக்கும் மனப்பக்குவம் அப்போதுதான் வரும்.

மேலே நான் சொன்ன இந்த ரயில் பயணத்தின் அனுபவத்தை அப்படியே நாம் எமது வாழ்க்கைப் பயணமாக மாற்றிச் சிந்திக்கும் போது அதன் ஆழம் எமக்குப் புரியும்.

ஒரு காலகட்டத்தில் முகவும் முக்கியமாக தென்பட்ட ஒரு விடயம் மற்றொரு காலகட்டத்தில் அறவே பைத்தியக்காரத்தனமான ஒரு எண்ணமாகத் தோன்றும். 

இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்..

பணம், பதவி, அந்தஸ்து இவை எல்லாம் ஒரு மனிதனுக்கு அணிகலனே ! அன்புதான் அவனுக்கு ஆடையாகிறது.

அந்த அன்பு இல்லையானால் அவன் நிலை நிர்வாணமே !

சலனமில்லாத வாழ்க்கை சாத்தியமே ! சபலங்கள் சமுதாய வரம்புகளுக்குள் கட்டுப்படும்போது......

மீண்டும் வருவேன்
சக்தி சக்திதாசன்

Sunday, September 03, 2023

சிந்தித்தால் சிரிப்பு வரும்

மதங்கள் பல அவற்றின் மூலம் மனங்கள் ஒரே பொருளை, அனைவருக்கும் பொதுவான அந்த இறையை வணங்குகின்றன. இறை நம்பிக்கை மனிதனுக்குக் கொடுப்பது அமைதி.

ஆனால் மனச் சுத்தம் இல்லாத வெறும் தெய்வீக நம்பிக்கை மட்டுமே மனதுக்கு அமைதியைத் தந்து விடுகிறதா ?

ஆசைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தெரியாமல் ஆண்டவன் கால்களில் விழுவதனால் பலன் என்ன?

என்னுடைய வாழ்க்கையின் பல நிலைகளை நான் எடுத்துப் பார்க்கிறேன். குழந்தை முதல் என் பதின்ம(teenage) வயதுகள் வரை தெய்வ நம்பிக்கை என்பது என் பெற்றோரால் , நான் வளர்க்கப்பட்ட முறையினால் என்மேல் திணிக்கப்பட்டது.

இறைவனை வணங்கா விட்டால் நினைத்த காரியம் ஈடேறாது என்னும் ஒரு நம்பிக்கையை என்னுள்ளே நாட்டினார்கள்.

பின்பு பதின்ம வயதுகளில் கோவிலுக்குப் போவது நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரைக்குப் போவது போன்ற ஒரு உணர்வினைத் தோற்றுவித்தது. அந்த வயதுக்கேயுரிய வாலிப வயது உணர்ச்சிகள் என்னைத் தாலாட்டின.

பெண்கள் தாய்மார்களாகவோ, அன்றி சகோதரிகளாக(உடன் பிறந்தவர்களாக)வோ இல்லாது போனால்  தோழியராகப் பார்க்க முடியாதவாறு ஒரு வாலிப வேகம்.

உண்மை நட்பு காதலாக அன்றி ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் தோன்றுவது முடியாத ஒன்று என்று மடத்தனமாக எண்ணும் ஒரு பருவம்.

ஒத்த வயதுப் பெண்களைக் கண்டு விட்டாலோ ஏதோ நமக்குள்ளே நாமே ஹீரோ போன்ற ஒரு நினைப்பு.

இந்த நினைப்புக் கொடுத்த வேகத்தை ஈடு கட்ட நண்பர்கள் கோவில் வீதிகளிலே வலம் வருவது ஒரு வாடிக்கை என்பது போல ஆகி விட்டிருந்தது.

அப்போதும் என்ன? மனம் நிறைந்த பெண்ணின் காதலுக்கு அந்த இறைவன் துணை வருவான் என்று ஒரு நப்பாசை. அது தெய்வ நம்பிக்கையா ?

பின் புலம் பெயர்ந்து வந்த பின்னால் இளரத்தத்தின் வேகம் புரட்சிக் கருத்துக்கள் நெஞ்சைக் கவர்ந்திழுத்த காலம், திரைப்படங்களிலே ஹீரோக்கள் பேசும் வசனங்கள் பச்சை மரத்தில் ஆணி ஏறுவது போல் இலகுவாக புகுந்து விடக்கூடிய பருவம்.

இறைநம்பிக்கை கொண்டோர்ளைச் சவாலுக்கு அழைப்பது வாடிக்கை. அதுவும் கூட ஒரு ஆணித்தரமான அடித்தளத்தில் அமைந்தது அல்ல.

திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்பு கூட இந்த இளரத்த வேகம் மனதின் இறுக்கமான பிடியை விட்டபாடில்லை.

மற்றையோரின் உணர்வுகளைப் புண்படுத்துகிறோம் என்னும் எண்ணம் சிறிதளவும் மனதில் இல்லாது நான் கொண்ட கருத்துக்களே சரி என மூர்க்கத்தனமாக வாதிடும் ஒரு மனப்பாங்கு.

இப்படி எத்தனையோ கால கட்டங்களுக்கிடையில் நுழைந்து வெளியே வந்தேன். 

என் பெற்றோர் தமது அந்திம காலங்களில் நோயால் வாடும் நிலைகளைக் கண்டு, பல உற்ற நண்பர்கள் , உறவினர்கள் உலகினை விட்டு அகன்ற பொழுதுகளை எதிர்நோக்கி, அன்று ஜம்பதுகளின் நடுவில் அசதியோடு உட்கார்ந்திருக்கும் போது ஆழாமான கேள்விகள் உள்ளத்தினுள்ளே உருண்டன.

இறைநம்பிக்கை என்னும் ஒன்று ஏதோ ஒரு விதத்தில் என் நெஞ்சில் எப்படியோ தன்னை நியாயப்படுத்திக் கொண்டு விட்டது. 

இறைவன் இருக்கிறானா இல்லையா ? என்பதல்ல கேள்வி. அதைப்பர்றி விவாதிப்பதும் என் நோக்கமல்ல.

ஆனால் உள்ளத்தடுமாற்றங்களை உணர்ந்து கொள்வதற்கு, ஆசைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு ஒரு நம்பிக்கை எமக்கும் அப்பால் உள்ள ஒரு சத்தியைக் கொண்டு விளக்கம் கொடுக்க முற்படுவது இதயத்தைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்துகிறது.

இந்த நம்பிக்கை இறைவன் என்றொருவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை இயற்கையாகக் கூட இருக்கலாம். 

கொடுத்ததைப் பறிப்பது, பறித்ததைத் தருவது, விரும்பியதை கிடைக்க முடியாதவாறு செய்வது, அனைத்தையும் சரியாகச் செய்தும் நாம் எதிர்பார்ப்பது நடக்காது இருப்பது இவையனைத்துமே இயற்கையினால் நடக்கிறது என்று நம்பினால் அந்த இயற்கை என்னும் சக்தியைச் சிலர் இறைவன் என்னும் உருவம் கொடுத்து வணங்குவது தப்பா?

இல்லையென்று தெரிகிறது.

ஆனால் இதைக் காரணமாக வைத்து மக்களைப் பிரித்து, அவர்களுக்கிடையில் வேற்றுமைகளை உருவாக்கி தமக்குச் சுயலாபம் தேடுவோர் பலர் இல்லாமலில்லை.

இதற்குத்தான் புலனடக்கம் இல்லாத பூஜைகள் வீண் என்னும் கருத்தை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அப்படி இவ்வாக்கியம் சொல்ல முற்படுவது என்ன?

மனதை அடக்க முடியாமல், மனதின் உணர்ச்சிகள் கோபம், வெறுப்பு, ஆத்திரம், அவமானம்,கர்வம் இவற்றினை அடக்கி மற்றையோரையும் தனனிப் போலவே எண்ண முடியாதவர்கள் பல பூஜைகளைப் பண்ணியும் என்ன லாபம் ?

அன்பே தெய்வம், அன்பே சிவம், அன்பே கர்த்தர், அன்பே அல்லா இதை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக் கொளாளமல் எத்தனை கோவில் கோவிலாக ஏறி இறங்கினாலும் மனம் அமைதி கொள்ளாது.

இன்று அறுபதுகளைக் கடந்து குழையைக் கடித்த ஆடு ஓரிடத்தில் இருந்து இரைமீட்டு மீண்டும் இலைகுழைகளை நன்றாக அசை போட்டு மெல்லுவதைப் போன்ற நிலை.

உண்மை ஆன்மீகத்தை விளங்கிக் கொள்ள எடுக்கும் பிரயத்தனமான முயற்சி.

அந்தத் தேடலின் வழி கிடைத்த ஆன்மீகத்தின் விளக்கம் மதங்களைக் கடந்த வெறுமையுள் வெளிச்சத்தைத் தேடும் படலம் என்பது புரிகிறது.

அனைவரின் அடித்தளமும் ஆன்மா எனும் உண்மை உரைக்க ஆரம்பிக்கிறது.

அனைவரும் ஆன்மாவால் ஆக்கப்பட்டவர்கள் என்றால் பின்பு பேதங்களின் அடிப்படைதான் என்ன ?

அனைவரும் ஒன்றே எனும் ஒருமையின் தத்துவத்தின் முனைகளை எட்டிப்பார்க்க முடிகிறது.

கண்களை மூடி சுவாசத்தில் லயிக்கும்போது  அங்கு வேற்றுமை தோன்றுவதற்கு இடமேயில்லையே !

சுவாசம் என்பது அனைவருக்கும் பொதுவானதே ! அது இருப்பவர், இல்லாதவர் என்று பார்ப்பது கிடையாது.

எந்த மதத்தை , எந்த இனத்தை, எந்த மொழியைப் பேசுபவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதில்லையே !

ஆன்ம நிலையைப் புரிந்து கொள்வதற்கு எம் மனக் கதவுகளைத் திறந்து எம்முள்ளே செல்ல வேண்டி இருக்கிறது.

அதற்கான சாவிதான் தியானம்.

சாவிதான் எது என்று தெரிகிறதே ! எத்தனை பேரால் அக்கதவைத் திறந்து உள்ளே செல்ல முடிகிறது !

அதற்கான மனத்தெளிவைத் தரக்கூடியது புலனடக்கமே !

என் பயணத்தின் ஆரம்பத்தில் தான் நானிருக்கிறேன்.

இன்னும் கடக்க வேண்டிய தூரம், அடைய வேண்டிய அனுபவங்கள் பலவே !

நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகத்தில் பிறப்பெடுத்ததிற்குக் காரணம் உண்டு.

ஆனால் அதனைக் கண்டு கொள்ளக்கூடிய திறமையை அடைவதே எம்முன்னால் உள்ள சவால்.

அத்தேடலுக்கான சாவி கையிலுள்ளது கதவைத் திறக்கும் தெளிவை அடைந்து விட்டோமா ?

ஆமாம் புலனடக்கம் இல்லாத பூஜை, புனஸ்காரங்கள் வீண் . . . . .


உள்ளத்தின் ஓசையைக் கொஞ்சம் உரக்கச் சொல்லி விட்டேனோ ?

 
மீண்டும் வரும்வரை
சக்தி சக்திதாசன்